Tuesday, 30 September 2008

எங்கே இருக்கிறீர்கள் தபால்காரரே?

சில வருடங்களுக்கு முன்பு நினைத்து கூட பார்த்திராத அபூர்வமான காட்சியை சமீபத்தில் சென்னைக்கு சென்றிருந்தபோது கண்டேன். அனைவரின் கைகளிலும் ஒரு கை பேசி இருந்தது. நான் "அனைவரின்" என்று கூறுவது பெரிய பணக்காரர்களை பற்றி அல்ல. தெருவில் குப்பை கூட்டும் பையன், காலையில் பால் கொண்டு வந்து தரும் பெண், வீட்டில் வேலை செய்ய வரும் வேலைக்காரி, என்று சாதாரணமானவர்களை பற்றி தான். யாருமே இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோர் கைகளிலும் இந்த கைபேசி வந்து விட்டதால் உட்கார்ந்து யோசித்து மெனக்கெட கடிதம் எழுதும் பழக்கம் அறவே நின்று விட்டதோ என்று எண்ணுகிறேன்.நான் கல்லூரியில் விடுதியில் இருந்த நாட்களை பற்றி யோசித்து பார்த்தேன். வீட்டிலிருந்து கடிதம் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டிருப்போம். நாங்கள் எழுதும் கடிதங்களும் விலாவாரியாக இருக்கும்.
கடிதம் எழுதுவதே ஒரு கலை தான். எனது தந்தை நீண்ட கடிதங்களை எழுத மாட்டார். மொத்தமாகவே மூன்று பத்திகள் தான் இருக்கும் அவர் எழுதும் கடிதங்களில். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு கடிதத்தை முடித்துவிடுவார். ஆனால் இலக்கண பிழைகள் இல்லாமல் தரமானதாக இருக்கும். கடிதத்தின் வலது பக்கத்தின் மேல் கண்டிப்பாக தேதியும் இடமும் இருக்கும். ஆங்கிலத்தில் சில சமயம் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அகராதி கொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன் (Ultimo என்றால் சென்ற மாதம், Proximo என்றால் அடுத்த மாதம், இப்படி இருக்கும் அவருடைய சில ஆங்கில கடிதங்களின் வார்த்தைகள்). இது போன்ற வார்த்தைகள் இன்னும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
தபால்காரரின் வரவை நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருப்போம். அவர் கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்களை படிக்கும் போது வெகு தூரத்தில் இருக்கும் நமது உற்றார் உறவினர்களை நேரே பார்ப்பது போல ஒரு அனுபவம் ஏற்படும். எப்பொழுதாவது தந்தி கொண்டு வந்து கொடுத்தால் தந்தியை பிரிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் வயிற்றை கலக்கி விடும். ஏனென்றால், தந்தி என்றாலே கெட்ட செய்தியாக தான் இருக்கும் என்று ஒரு பரவலான எண்ணம் இருந்த காலம் அது. சில சமயம் 'மணி ஆர்டர்' கொண்டு வந்து தருவார். அப்போது வந்த பணத்தில் அவருக்கு தேனீர் அருந்துவதர்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் சந்தோஷமாக செல்வார்.தீபாவளி, பொங்கல் சமயங்களில் தவறாமல் 'இனாம்' வாங்க வந்துவிடுவார் எங்கள் தபால்காரர். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்த அதே தபால்காரர் தான் இப்போதும் வருகிறார். அவருடைய முடி நரைத்து இப்போது சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளார். முன்பெல்லாம் அவருக்கு 'காக்கி' நிறத்தில் சட்டை, பேண்ட் மற்றும் தொப்பி இருக்கும். சில வருடங்களாக பழுப்பு நிறத்திற்கு அதை மாற்றி விட்டனர்.
வெயிலோ, மழையோ எதுவாக இருந்தாலும் தவறாமல் தனது மிதி வண்டியில் தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார். சில சமயம் முகவரி சரியாக இல்லாமல் போனால் கூட பெயரை வைத்து கொண்டு சரியான வீட்டுக்கு தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
கை பேசியின் வருகையால் இப்போது யாரும் கடிதங்களும் எழுதுவதில்லை, கடிதங்களை படிப்பதும் இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது? நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்கள் கூட கணணியில் அடிக்கப்பட்டு 'கொரியர்' பையன்கள் மூலமாக அனுப்பப்படுகின்றன.
மின் அஞ்சல் யுகத்தில் கையால் எழுதும் கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அதோடு நம் தபால்காரரும் காணாமல் போய்விட்டாரோ? எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை தான் தபால்காரரின் பயணம் கூறுகின்றதோ?

18 comments:

நாமக்கல் சிபி said...

போஸ்ட் மேன்கள் பத்தியே ஒரு போஸ்டா?

நல்ல போஸ்ட்தான்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நல்ல நினைவு கூரல்
ஒரு காலத்தில் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள். நவீனம் தொலைக்க வைத்தவர்கள்.எனினும் குறைந்தபோதும் இன்றும் சேவையில் உள்ளவர்கள். தேவைப்படுபவர்கள். நினைவு கூரப்படுபவர்கள்.
தபாற்காரன் தங்கை எனும் திரைப்படத்தில்(ஜெய சங்கர்) "ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது; வாழ்வை இணைக்கும் பாதையிது" எனும் பாடல்... இவர்கள் முக்கியத்துவத்தைப் பட்டியல் இட்ட பாடல்.

சிவா சின்னப்பொடி said...

http://sivasinnapodi1955.blogspot.com/

Expatguru said...

நாமக்கல் சிபி, யோகன்‍ பாரிஸ், வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Namma Illam said...

நல்ல நினைவு கூறல்... நானும் சவுதியில் தான் இருக்கிறேன்.. உங்களது சவுதி பற்றிய வெப்சைட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
dginnah@gmail.com

Expatguru said...

வருகைக்கு நன்றி தமிழ் பிரியன். செளதியில் எங்கே இருக்கிறீர்கள்? அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

சரவணகுமரன் said...

இப்ப கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட் கொடுக்க வருவாரே? :-)

Namma Illam said...

///Expatguru said...

வருகைக்கு நன்றி தமிழ் பிரியன். செளதியில் எங்கே இருக்கிறீர்கள்? அடிக்கடி வந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.///
நிச்சயமாக.. :)
நான் தாஃயிபில் இருக்கின்றேன்.... நீங்கள் ஜித்தாவில் இருந்தால் வியாழன் சந்திக்கலாம்.
http://majinnah.blogspot.com/2008/09/blog-post_08.html

Aruna said...

முக்கியமான தபால் எதிர்பார்க்கும் நேரம் சில நேரம் என்னவோ உயிரே
அவர்தான்னு நினைச்சுருக்கேன்...
அன்புடன் அருணா

Expatguru said...

உண்மைதான் அருணா. சில சமயம் எனக்கு வர வேண்டிய தபால் வந்ததா இல்லையா என்று தபால்காரரை நச்சரித்த அனுபவம் கூட உள்ளது.

Anonymous said...

என்னதான் கை பேசி வந்தாலும் கிராமங்களில் இன்னும் கூட தபால்காரருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது.

Anonymous said...

படிப்பவர்களைத் தத்தம் பழைய நினைவுகளில் மூழ்கச் செய்கின்றன உங்கள் எழுத்துகள். இந்தக் கலையை எங்குக் கற்றீர்கள்?

Expatguru said...

வருகைக்கு நன்றி நம்பி ஐயா. மனதில் பட்டதை எழுத்து வடிவாக கூறியுள்ளேன், அவ்வளவுதான். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் அதையே நீங்கள் உங்களது கவிதைகளில் எதுகை மோனையோடு, சரியான இடத்தில் சரியான வார்த்தைகளால் மிக அருமையாக எழுதுகிறீர்களே, அது தான் கடவுளின் அருள்.

ஜீவி said...

பலவருடங்களுக்கு முன்னால், (அதற்கு சரியான வார்த்தை: ஒருகாலத்தில்) நான் தபால்-தந்தி அலுவலகத்தில் பணியாற்றியவன் தான். அப்பொழுதெல்லாம், தபால்-தந்தி-தொலைபேசி எல்லா சேவைகளும் ஒரே இலாகாவின் கீழ் இருந்தது. இப்பொழுது தபால் மட்டும் தனியே. கொரியர் போட்டி வேறே.
இருந்தும் தாக்குப் பிடித்துக் கொண்டு பிர்மாண்ட ஆலவிருஷமாக நிற்கிறது.
இந்தியாவின் நாடிநரம்புகளாக சிறிய சிறிய குக்கிராமங்களை இணைப்பது இன்றும் தபால் சேவையே.

naration, கோர்வையாகச் சொல்வதில் தங்கள் பாணி, பிரமாதம். பாராட்டுகள்.

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜீவி. இன்றும் கூட குக்கிராமங்களில் தபால்காரருக்கு என்று ஒரு தனி மரியாதை உள்ளது. தபால்காரர் தான் அரிதாகி வருகின்றாரே தவிர தபால் சேவை அல்ல. என்னுடைய சிறு சேமிப்பு பல வருடங்களாக தபால் துறையிடம் தான் உள்ளது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் நம்முடைய பணத்துக்கு முழு பாதுகாப்பு உள்ளது. பல தனியார் நிதி நிறுவனங்களை போல சுருட்டி கொண்டு ஓட மாட்டார்கள்.

குப்பன்.யாஹூ said...

பழையான கழிதலும் புதியன புகுதலும் நல்லது தானே.

தபால் காரர் போலவே தொலைந்தவர்கள் பலர்:

தட்டச்சர்கள், பாக்ஸ் மச்சின் கடைகாரர்கள், பப்ளிக் பூத்து தொலைபேசி கடை காரர்கள், டேப் காசட் கடை காரர்கள்.. நெட் கபெ கடை காரர்கள் கூட

குப்பன்_யாஹூ

Expatguru said...

வருகைக்கு நன்றி, குப்பன். கிராமபோன் ரிகார்டு பழுது பார்ப்பவர்களையும் இந்த பட்டியலில் சேர்த்துவிடலாம், இல்லையா?

இராஜராஜேஸ்வரி said...

எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு