Saturday, 29 November 2008

மாவீரர்கள்

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் உண்மையான மாவீரர்கள் யார் தெரியுமா? கண்டிப்பாக அரசியல்வாதிகள் அல்ல. தங்கள் உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தான் (National Security Guards)உண்மையான மாவீரர்கள்.

இந்த தேசிய பாதுகாப்பு படையில் எல்லோரும் சேர்ந்து விட முடியாது. இதில் சேர வேண்டும் என்றால் ஒருவர் ஏற்கனவே காவல் துறையிலோ அல்லது இராணுவத்திலோ பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். கண்டிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இதில் வீரர்களாக சேர்த்து கொள்ளப்படுவார்கள். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க தாமாகவே முன்வந்து (voluntary) சேருபவர்களுக்காக தான். அதாவது, இதில் ஆள் சேர்ப்பதற்கு எந்த செய்தித்தாளிலும் விளம்பரத்தை நீங்கள் பார்க்க முடியாது.


தேசிய பாதுகாப்பு படையில் கொடுக்கப்படும் பயிற்சி உண்மையிலேயே மிக மிக கடினமானவையாகும். உதாரணத்துக்கு, ஒரு பத்து நாட்கள் அடர்ந்த காட்டுக்குள் விட்டு விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் எதுவுமே தரப்பட மாட்டாது. உணவுக்கு காட்டில் கிடைக்கும் பழங்களையும் பூச்சிகளையும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்தால் தங்கள் சிறுநீரையே குடித்து பிழைத்து கொள்ளவும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. அனைவருக்கும் கராத்தே, ஜூடோ போன்ற சண்டை பயிற்சியில் வல்லுனர்கள். கையில் ஆயுதமே இல்லாமல் இருந்தால் கூட தீவிரவாதிகளை எப்படி சமாளிப்பது என்று இவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்களால் பல விதமான துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் உபயோகிக்க முடியும். அதே போல, பயங்கரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளையும் இவர்களால் எளிதாக செயலிழக்க வைக்க முடியும்.


இவர்களது பணியின் முக்கியமான நோக்கமே பயங்கரவாதிகளை சமாளிப்பது தான். இங்கிலாந்தில் உள்ள எஸ்.ஏ.எஸ். போன்ற கமாண்டோக்கள் போல தான் இவர்கள். குறிப்பாக, விமான கடத்தல்காரர்களை எப்படி சமாளிப்பது போன்ற வித்தைகளில் கை தேர்ந்தவர்கள்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் சில வீரர்களும் உயிரை இழந்துள்ளனர். பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.


தங்களது உயிரையே பணயம் வைத்து நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றிய இந்த அஞ்சா நெஞ்சங்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் இந்த தியாகத்துக்காக நாம் தலை வணங்குவோம். உண்மையிலேயே இவர்கள் மாவீரர்கள் தான், இல்லையா?

4 comments:

Anonymous said...

தம் உயிரைக் கருதாமல் மக்கள் உயிரைக் காக்கும் பணி மகத்தான பணி; இப்பணியின் உயர்வையும் தன்மையையும் சொல்லில் விளக்குவது அரிது; உணரவேண்டும்.

உணரத் தூண்டுகிறது உங்கள் எழுத்து.

Expatguru said...

கருத்துக்களுக்கு நன்றி நம்பி ஐயா. பயங்கரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த 31 வயதே ஆன மேஜர் சந்தீப் காயம்பட்ட தனது சக வீரரை காப்பாற்றும் போது தீவிரவாதியினால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தை உன்னிகிருஷ்ணன் " எனது மகன் இறந்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால் பிறருக்காக தனது உயிரை பணயம் வைத்தது பெருமையாக இருக்கிறது" என்று கூறினார். இவர்களுக்கெல்லாம் நாம் எவ்வாறு கைமாறு செய்ய போகிறோம்?

தருமி said...

நன்றி சொல்லும் இந்தப் பதிவில் நானும் உங்களோடு இணைகிறேன்.

Anonymous said...

////பிறருக்காக தனது உயிரை பணயம் வைத்தது பெருமையாக இருக்கிறது" என்று கூறினார். இவர்களுக்கெல்லாம் நாம் எவ்வாறு கைமாறு செய்ய போகிறோம்?///

உள்ளம்பூர்வமான வார்த்தைகள்
உண்மையாகவே
நாம் எவ்வாறு கைமாறு செய்ய போகிறோம்?