Saturday 15 November 2008

இந்திய குடிமக்கள்

நமது செய்கைகளை வைத்து பிறர் நம்மை எடை போடுவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் நமது நாட்டினர் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.



எனக்கு பல வருடங்களாக ஒரு சந்தேகம். வெளி நாட்டு விமான பயணங்களின் போது விமான பணிப்பெண்கள் இந்தியர்கள் என்றால் ஒரு மாதிரி சேவையையும் வெள்ளைக்காரர்கள் என்றார் சிறப்பான சேவையையும் செய்வதை கண்டு பல முறை எனது மனம் கொதித்தது உண்டு. வெள்ளைக்காரர்களுக்கு புன்முறுவலுடனும், இந்தியர்கள் என்றால் வேண்டா வெறுப்புடனும் இவர்களுடைய சேவை இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஏதாவது கேட்டால் உடனடியாக ஓடோடி அதை கொண்டு வரும் பணிப்பெண்கள், இந்தியர்கள் ஒரு கோப்பை தண்ணீர் கேட்டால் கூட ஏதோ பெரிய தொண்டு செய்வது போல நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஞாபகப்படுத்திய பிறகே கொண்டு வருவார்கள்.

இருவரும் ஒரே கட்டணத்தை தானே செலுத்துகிறோம், அது என்ன வெள்ளை தோல் என்றால் ஒரு அடிமை புத்தி என்று பல முறை நான் மனதுக்குள்ளேயே பொங்கியதுண்டு.



அதற்கு விடை சென்ற முறை நான் செளதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் போது கிடைத்தது. செளதி அரேபியா ஒரு மிக மிக கண்டிப்பான இஸ்லாமிய நாடு என்பது அனைவரும் அறிந்ததே. இங்கு மதுபானங்கள் அருந்துவதோ, விற்பதோ, வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இது எல்லா நாட்டினருக்கும் பொருந்தும்.



அவ்வப்போது கள்ளத்தனமாக சிலர் வீட்டிலேயே சாராயத்தை காய்ச்சி காவல் துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவங்கள் கூட உண்டு. அப்படி மாட்டிக்கொண்டவர்களுக்கு மிக கடுமையான சிறை தண்டனை மற்றும் சவுக்கடி கொடுக்கப்படுவது வழக்கம்.



அண்டை நாடான பஹ்ரைன் இதற்கு முற்றிலும் நேர்மாரானது. அங்கு தாராளமாக எல்லா வகை மதுபானங்களும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் பெண்கள் சமாசாரத்துக்கும் பெயர் பெற்ற இடம் (!)


இந்த கட்டுப்பாடுகளில் இருந்து 'தப்ப' வாரக்கடைசிகளில் செளதியிலிருந்து போர் தொடுப்பது போல ஆயிரக்கணக்கில் பஹ்ரைன் நாட்டுக்கு பலர் காரில் செல்வார்கள். இதில் முக்கால்வாசி பேர் செளதி நாட்டினரே. சரி விஷயத்துக்கு வருகிறேன்.


செளதியில் வேலை செய்யும் வெளி நாட்டினர்களின் பெரும்பான்மையோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களிலும் பெரும்பான்மையோர் கடை நிலை தொழிலாளர்கள் தான். இவர்களுக்கு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை தான் சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதி கிடைக்கும். மிக குறைந்த சம்பளத்தில் கடினமான வேலை செய்யும் நம் நாட்டினரை பார்க்க மிக பரிதாபகரமாக இருக்கும். ஊரில் உள்ளவர்களுக்கு இவர்கள் படும் கஷ்டம் ஒன்றுமே தெரியாது. "அவனுக்கு என்ன, துபாயில் வேலை செய்கிறான். பணம் மரத்தில் கொட்டும்" என்று பேசுவார்கள். (நமது ஊரில் செளதி, பஹ்ரைன், கத்தார், ஓமன் எல்லாமே "துபாய்" தான்!)




இப்படி 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறை வரும்போது பெரும்பாலானோர் பஹ்ரைன் வழியாக ஊருக்கு திரும்பி செல்வார்கள். பஹ்ரைனிலிருந்து புறப்படும் விமானங்களில் மதுபானம் கொடுக்கப்படுவது வழக்கம்.




இங்கு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. விமானம் பஹ்ரைன் எல்லையை விட்டு தாண்டியது தான் தாமதம். உடனே காணாததை கண்டது போல இவர்களுக்கு வெறி ஏறி விடும். கொடுக்கும் ஒரு கப் மதுவை ஒரேயடியாக குடித்து விட்டு உடனேயே மற்றொறு கப் கேட்பார்கள். யாராவது மது வேண்டாம் என்று கூறி விட்டால் போதும். அவர்களுடைய கோப்பையை கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. அதை எனக்கு கொடுங்கள் என்று பிடுங்காத குறையாக எடுத்துக்கொள்வார்கள்.





சிறிது நேரத்திலேயே 'ஆ' 'ஊ' என்று கத்தி ரகளை செய்து வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த விமானத்தில் நாம் குடும்பத்துடன் சென்றால் அதோ கதி தான். குழந்தை குட்டிகளுடன் செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். வாந்தி நாற்றத்தில் 'எப்பொழுதுடா ஊர் போய் சேர்வோம் சாமி' என்று ஆகி விடும்.



இது போன்ற குடிமகன்கள் இருக்கும்போது, 'இந்தியர்கள் எல்லோருமே இது போன்றவர்கள் தான்' என்று தவறாக நம்மை இந்த பணிப்பெண்கள் எடை போடுவதில் வியப்பில்லை.. ஏனென்றால், வெள்ளைக்காரர்கள் கூட விமானத்தில் மது அருந்துவார்கள். ஆனால் இவர்களை போன்று சுய கட்டுப்பாட்டை இழந்து கலாட்டா செய்ய மாட்டார்கள்.





குடிமக்களே! உங்களுக்காக உங்களது குடும்பத்தினர் ஊரில் காத்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் தள்ளாடியபடி வந்து இறங்கினால் விமான நிலையத்தில் உங்களை வரவேற்க காத்திருக்கு உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? உங்களுடைய குழந்தைகள் தான் என்ன நினைக்கும்? செளதியா விமானத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாக வரும் நீங்கள் Gulf Air விமானத்தில் ஏன் கூத்தடிக்கிறீர்கள்? நீங்கள் செய்யும் அட்டகாசம் உங்களை மட்டும் பாதிப்பதில்லை. அது நீங்கள் மற்ற இந்தியர்களுக்கும், ஏன், இந்திய நாட்டுக்குமே செய்யும் பெரிய அவமானம் ஆகும். எதுவாக இருந்தாலும் உங்களுடைய ஊருக்கு சென்று செய்து கொள்ளுங்களேன். வெளி நாட்டில் இருக்கும் வரையாவது கண்ணியமாக இருந்து கொள்ளுங்களேன். ஏழையாக இருப்பதில் தவறில்லை - பணம் நிலையற்றது, ஆனால் ஒழுக்கமில்லாமல் இருப்பது தான் தவறு என்பதை எப்பொழுது அறிந்து கொள்வீர்கள்?








9 comments:

Anonymous said...

நீங்கள் சொல்வதை பல முறை நானும் அனுபவித்துள்ளேன். இந்தியாவிற்கு வரும் / செல்லும் (Inbound / outbound) விமானங்களில் தான் இந்த பிரச்சினை.

நான் சென்னையில் இருந்து Kunming (in P.R. of China) நான், சென்னை/சிங்கப்பூர்/பாங்காக் வழியாக செல்வது வழக்கம். சென்னை / சிங்கப்பூர் மார்கத்தில் மிக கேவலமாக நடத்தும் சிங்கப்பூர் airlines அதிகாரிகள்/விமான பணிப்பெண்கள் ‍ சிங்கப்பூர்/ பாங்காக் மார்கத்தில் மிக மரியாதையாக நடத்துவதை பார்த்துள்ளேன். இதில் நீங்கள் எந்த வகுப்பில் பயணம் செய்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல.

சிங்கப்பூர் ஏர்லயன்ஸை விட, எமிரேட்ஸ் கிரௌண்ட் ஸ்டாப் நம்மவர்களை மிக மட்டமாக, அடிமைகளாக நடத்துவது மிகக்கொடுமை. (எமிரேட்ஸ் என் சொந்த அனுபவம். ஒரு முறையல்ல, மூன்று முறை. ஓவ்வொருமுறையும் நான் புகார் கொடுத்ததுதான் மிச்சம்).

என்னுடைய புரிதலில் இந்த மாதிரி நம்மை மட்டும் நடத்தவில்லை. துபாய் / லாகோஸ் தடத்தில் நைஜிரியா மக்களையும், எமிரேட்ஸ் கிரௌண்ட் ஸ்டாப் இது மாதிரிதான் நடத்துகின்றார்கள். அதே எமிரேட்ஸ் துபாய் / தோகா மார்கத்தில் மிக மரியாதையாக நடத்தினார்கள்.

ஒன்று மட்டும் புரிகின்றது, இதில் நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை விட, எந்த நாட்டிற்கு போகின்றீர்கள் என்பது தான் முக்கியம். இதற்கு, நம் ஆட்கள் செய்கை, நெருப்பில் எண்ணையை விட்ட மாதிரி ஆகிவிட்டது.
இராகவன், நைஜிரியா

எட்வின் said...

மிகச் சரி நண்பரே...நானும் அவதிப்பட்டிருக்கிறேன் இந்த குடிமகன்களால்

Expatguru said...

உண்மைதான், இராகவன். நான் வளைகுடா நாடுகளில் தான் இந்த மாதிரி நம்மவர்களை நடத்துகிறார்கள் என்று எண்ணிணேன்.

Expatguru said...

வருகைக்கு நன்றி எட்வின். இது போன்ற குடிமக்கள் தான் கெட்டது போதாது என்று தனது நாட்டுக்கே பெரிய அவமரியாதையை தேடி கொடுக்கிறார்கள்.

Anonymous said...

In this aspect, I want to clarify one thing. The Ground staffs of Emirates treated me very bad. The crew members were very kind and good. On the other hand, my experience with Singapore airlines is the Crew members were very bad especially when I travel between Singapore and Chennai. Since I travelled with 6 or 7 airlines, my experience is THE WORST GROUND STAFFS ARE EMIRATES AND BEST CREW MEMBERS ARE EMIRATES. Both good and bad are in Emirates only. Raghavan, Nigeria

Anonymous said...

எனது நண்பனுக்கு இது போன்ற அனுபவம் நிகழ்ந்தது அவனும் பக்ரைனில் இருந்து சென்னைக்கு செல்லும் போது சகபயணி அடித்த கொட்டம் மறக்க இயலாது.விமானத்தில் கொடுத்த மது போதாதென்று dutyfree யில் வாங்கிய மதுவையும் குடித்து சென்னையில் அவர் இறங்குவதற்கு பட்டபாடு மிகவும் கொடுமையானது.

Anonymous said...

//ஏனென்றால், வெள்ளைக்காரர்கள் கூட விமானத்தில் மது அருந்துவார்கள். ஆனால் இவர்களை போன்று சுய கட்டுப்பாட்டை இழந்து கலாட்டா செய்ய மாட்டார்கள்.//

நம்மவர்கள் குடிப்பதே போதை தலைக்கேறி அறிவிழந்து மானமிழந்து பெருங்குரலெடுத்துக் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்துக் கலாட்டா செய்வதற்காகத்தான்; இதுதான் நம் `பண்பாடு'.

நம் பண்பாட்டுக்கு எதிராக எழுதும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Expatguru said...

ஆமாம், நம்பி ஐயா. தமிழர் பண்பாட்டை எப்படி எல்லாம் நிலை நிறுத்துகிறார்கள் பாருங்கள்!

Expatguru said...

வருகைக்கு நன்றி, மகேஷ். மற்ற பயணிகளுக்கு தொல்லை தரும் இது போன்றவர்களை சிறையில் அடைத்தால் என்ன என்று கூட தோன்றுகிறது.