Saturday, 24 April 2010

நிலைய வித்வான்

திருமணம் ஆவதற்கு முன்பு சூரத்தில் பணி செய்து  கொண்டிருந்த நேரம். சாப்பாட்டுக்கு கஷ்டம் தான். அருகில் நல்ல ஹோட்டல்கள் கிடையாது. வேறு வழி இல்லாமல் நானே சமையல் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த நாட்கள் அவை.

தினமும் சாதம் ரசம் செய்து வெறுத்து விட்டதால் "வித்யாசமாக" இருக்கட்டும் என்று உப்புமா செய்யலாம் என்று ஒரு நாள்  களத்தில் இறங்கினேன். எனது நண்பர் குமார் இந்த உப்புமாவை "நிலைய வித்வான்" என்று அடிக்கடி கூறுவார். வானொலியில் ஒளிபரப்புவதற்கு வேறு எதுவும் கைவசம் இல்லை என்றால் நிலைய வித்வான்களை வைத்து 'ஜிங் ஜிங்' என்று எதையாவது வாசிக்க சொல்வார்கள் அல்லவா, அதே போல பலகாரம் எதுவும் இல்லை என்றால் அவசரத்துக்கு இதை செய்யலாமாம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில் இலுப்ப சட்டியில் சிறிது ரவையை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கிளறி அதன் மேல் கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு என்று சேர்த்து கிளறி ஒரு வழியாக இறக்கி வைத்தேன். சிறிது சுவைத்து பார்த்ததில் ஓரளவு நன்றாகவே வந்திருந்தது.

முதன் முதலில் உப்புமா செய்திருந்ததால் மிகவும் பெருமையாக இருந்தது. நான் இருந்த கட்டிடத்தில் மொத்தம் இருபத்து நான்கு வீடுகள் இருந்தன. அதில் திருமணம் ஆகாதவர்கள் ஒரு ஆறு பேர் தான்ந, நான் செய்த உப்புமாவை மற்றவர்களிடம் கொடுத்து பாராட்டு வாங்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை

ஒவ்வொரு வீடாக சென்று நான் செய்த உப்புமாவை கோவில் பிரசாதம் போல எல்லோருக்கும் சிறிது சிறிது கொடுத்து விட்டு வந்தேன். எப்போதுமே நல்ல சமையல் செய்யும்போது அதை செய்தவனக்கு எதுவுமே மிஞ்சாது இல்லையா? அதே போல எனது உப்புமா சிறிது கூட எனக்கு மீதம் இருக்கவில்லை. 'சரி சரி, ரொம்ப ஆட வேண்டாம்' என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. மேலே படியுங்கள்.

நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று தெரிந்தவர்கள் அனைவருக்கும் எனது உப்புமாவை கொடுத்ததில் உள்ளூர ஒரு பெருமிதம். அன்று இரவு என்னால் சரியாக தூங்கவே முடியவில்லை. வெளியே ஒரே சத்தமாக இருந்தது. ஆனால் ஒரே அசதியாக இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை.

மறு நாள் காலை எனது நண்பன் வீட்டுக்குசென்றேன். அவனது முகமே ஒரு மாதிரி வெளிறி போயிருந்தது.

என்னை பார்த்த பார்வை சற்றே வித்யாசமாக இருந்தது. அது பயமா அல்லது கொலை வெறியா அல்லது இரண்டுக்கும் நடுவில் எதாவதா என்று நான் யோசிப்பதற்குள் அடுத்த வீட்டுக்காரன் வயிற்றில் கையை வைத்தபடியே வெளியே வந்தான். ஏதோ நடந்திருக்க வேண்டும். ஆனால் என்ன என்று தான் தெரியவில்லை. நான் பேச வாயை திறப்பதற்குள் எனது நண்பன் "அட கடன்காரா, செய்வதை எல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதவன் போல நிற்கிறாயே" என்று என்னை அடிக்க வந்தான். அவன் கையை தூக்க அப்படியே "அம்மா" என்றுஅடி வயிற்றை பிடித்து கொண்டே ஆடிக்கொண்டே உள்ளே ஓடினான்.  சொல்லி வைத்தாற்போல எதிர் வீடு, பக்கத்து வீடு என்று அந்த கட்டிடத்தில் இருந்த அனைவருக்கும் பேதி. இதை தான் 'ஆடி கழிவு' என்று கூறுகிறார்களோ? . அப்படி என்ன செய்து விட்டேன் நான்? ஒ, எல்லாம் அந்த உப்புமாவின் வேலையா?

என்னை உயிரோடு இவர்கள் கொளுத்தும் முன் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று உடனடியாக எனது வீட்டுக்குள் பொய் ஒளிந்து கொண்டேன். அப்படி என்னதான் தவறு நடந்திருக்க கூடும்? "சமைத்து பார்" புத்தகத்தை ஒரு முறை மீண்டும் படித்தேன். மிக முக்கியமான முதல் வரியை நான் படிக்க மறந்ததால் வந்த வினை. "ரவையை வாணலியில் வறுத்து எடுத்து கொள்ளவும்" என்று இருந்தது. இதை யாரும் ஏன் என்னிடம் முதலிலேயே கூறவில்லை? ஒரு திரைப்படத்தில் நடிகர் ஜனகராஜ் சிகரெட் என்று நினைத்து வாயில் பட்டாசை கொளுத்தி கொள்வாரே, அது தான் ஞாபகம் வந்தது. எது எப்படியோ, இந்த அனுபவத்துக்கு பிறகு நான் ஏதாவது புதிய பலகாரத்தை செய்தால் அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளது போல தப்பித்து விடுகிறார்கள்! நீங்களாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்!

1 comment:

jeevee said...

வறுத்த ரவையே கடைகளில் விற்கிறார்கள் என்றாலும், நாமே பொன்வறுவலில் முன்னாடியே ரவையை வறுத்துக் கொள்வது தான் நல்லது. சில வீடுகளில், என்ன தான் நிலைய வித்துவான் கைவசம் இருந்தாலும், அவசர நேரத்திற்குக் கைகொடுக்க வேண்டுமே என்று வறுத்து எடுத்துக் கொள்ள காலதாமதத்தைத் தவிர்க்க முன்னாலேயே வறுத்து வைத்துக் கொள்வதும் உண்டு.

உப்புமா தயாரிப்பது ஒரு கலையே. இதில் மனம் திராசு தட்டு போல் எடைபோடப் பழகிவிடும் அதிசய உண்மை தன்னாலே கைவரப்பெறும் அழகு ஒளிந்து உள்ளது நாளாவட்டத்தில் தெரியவரும்.

முதலில் வாணலியில் வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அது கொதிக்கையில் வேண்டிய அளவு உப்பு போட வேண்டும். இந்த வேண்டிய அளவு தண்ணீர், ரவையைப் போட்டதும் அது உறிஞ்சிக் கொள்ளும் தண்ணீரை விடக் கொஞ்சம் கூடுதலாகவும், கொதிக்கும் நேரத்தைத் தாண்டியும் லேசாக உப்புமா ஈரப்பதமாக இருக்கும் அளவிலும் இருக்க வேண்டும். போடும் உப்பின் அளவு ரொம்பவும் முக்கியம். அதிகம் போட்டு விட்டால், செய்த உப்புமா அத்தனையும் வேஸ்ட். அதனால் உப்பு போட்ட நீர் கொதிக்கையிலேயே, அதைக் கொஞ்சம் கரண்டியில் எடுத்து ஆற்றி டேஸ்ட் பண்ணிப்பார்த்தால், ரொம்பவும் உப்புக் கரிக்காமல் இருந்தால் ஓக்கே. நாம் போடக்கூடிய ரவை மூழ்கிய பிறகும் உப்பின் உணர்வு லேசாக தங்கி இருக்கிற மாதிரி நமது நாக்கின் சுவை தீர்மானிக்கும் அதிசயம் இருக்கே அதுதான் அதிசயம். பிறகு நீங்கள் சொன்ன மாதிரி தான். நீரில் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்த ரவையை சேர்த்துக் கொண்டே வந்து, ரொம்ப கட்டிதட்டிப் போய்விடாமலும் போட்ட ரவை நன்கு வேகும் அளவில் காய்ந்து போய் விடாமல் புரட்டப்பட்டும், தயாரான உப்புமாவை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
உப்புக் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தால் கவலைப்பட வேண்டாம். ஆறிய பிறகு அரைமூடி எலும்பிச்சை பழத்தை அதில் பிழிந்து விட்டால் அற்புதமாக இருக்கும். சூடான உப்புமாவில் எலும்பிச்சை பிழிந்தால் கசந்து விடும். அதில் கவனம் தேவை.
சமையல் என்பது லேசுபட்ட காரியமில்லை.
அது ஒரு கலை. இதில் கைதேர்ந்த நம் வீட்டுப் பெண்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும்.
தாங்கள் சமைத்ததை இலையில் போட்டு, நன்றாய் இருக்கிறது என்ற நம் ரசனைச் சொல் ஒன்றே போதும் அவர்களுக்கு. அதில் சமைத்தவருக்கு சாப்பிட்ட திருப்தியே வந்து விடும்.