Friday, 20 May 2011

சுமை

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில்
தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம்.


சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். "நீங்கள் 'மெயில்' செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது 'தி மெயில்' என்ற ஆங்கில நாளேடு மிக பிரபலமாக
இருந்தது. நான் என்ன கூற போகிறேன் என்று அறிய மிக ஆவலுடன் பெரியவர் என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ திடீரென்று அந்த நாளேடு நின்று விட்டதே" என்றேன்.


பெரியவரின் முகம் சட்டென்று வாடிவிட்டது. எனக்கோ மிக தர்ம சங்கடமாக போய் விட்டது. "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். பெரியவர் ஒரு பெரிய பெருமூச்சுடன் தொடர்ந்தார்.
அந்த செய்தித்தாளின் தலைமை நிருபராக பல வருடங்கள் பணி புரிந்து நான் ஓய்வு பெற்றேன். மாலை செய்தித்தாள் என்பதால் , மின்சார ரெயிலில் போவோர், அலுவுலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் என்று பலரும் மிக ஆவலுடன் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். அதை ஒரு பொற்காலம் என்றே கூறலாம்" என்று கூறியபடி  குவளையில் இருந்த தண்ணீரை பெரியவர் குடித்தார்.


அவர் பேசுவதை நான் இடைமறிக்க விரும்பவில்லை. பெரியவர் குரலை கனைத்து கொண்டு தொடர்ந்தார். "ஹிந்து பேப்பருடன் எங்களால் போட்டி போட முடியவில்லை. சிறிது சிறிதாக எங்களது செலவுகள் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாக்கு பிடிக்க
முடியாது என்று 1981ம் ஆண்டு மெயில் செய்தித்தாளை மூடிவிட்டார்கள்" என்றார். அதை கூறும்போதே அவருக்கு குரல் கரகரத்தது. ஏதோ  கூட்டத்தில் குழந்தையை தவற விட்ட தாயை போன்ற தவிப்பு அவரது குரலில் ஆழ்மனது ஏக்கம் தெரிந்தது.

சிறிது நேரம் அவருடன்  இருந்து விட்டு நான் விடை பெற்றேன்.ஆனால் நெடு நேரம் அவர்
கூறியதை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.

இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு 'மெயில்' என்று ஒரு செய்தித்தாள் இருந்தது என்று தெரியும்? அந்த செய்தி தாளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று எனது தந்தை கூறியுள்ளார். ஒரு 30 வருட காலத்தில் சுவடே இல்லாமல் மறைந்து விட்ட ஒரு செய்தி தாளை பற்றி அந்த பெரியவர் எவ்வளவு ஏக்கத்துடன் பேசினார் என்று எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ஹிந்து நாளேட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் 'தி மெயில்' என்று எழுதியிருக்கும் அந்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பெரியவரின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.உண்மையில் நாம் அனைவருமே பழைய நினைவுகளின் அடிமைகளாக உள்ளோம் அல்லவா? ஒரு முறை எனது மகள் எதையோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்க நான்
மறுத்துவிட "பத்து ரூபாய் தானேப்பா" என்றாள். எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. "அது என்ன பத்து ரூபாய் ‘தானே’ என்று ஒரு இளக்காரம்? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? நான் பள்ளிக்கு செல்ல இரண்டு பஸ் மாறி தினமும் கஷ்ட்டப்பட்டு  போனேன். நீ என்னடாவென்றால் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய்" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.

இதை கேட்ட எனது மனைவி "இன்னும் எத்தனை வருடங்கள் தான் நீங்கள் இதே பல்லவியை பாடுவீர்கள்? நீங்கள் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதால் உங்களது மகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா" என்று கேட்க எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

சற்றே யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அது எண்ணம் என்கிற பெரும் சுமை. பிறப்பு முதல் மரணம் வரை இந்த எண்ண பாரத்திலேயே பொழுதை கழிக்கிறோம். நம்மால்
சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையே. இந்த சிந்தனையில் தானே
ஆசை, பொறாமை, வக்கிரம், அன்பு, கருணை என்று பலவித பரிமாணங்கள்
உருவாகின்றன? பறவைகள் மற்றும் விலங்குகள் இது போன்று சிந்திப்பது இல்லையோ?
அதனால் தானோ நம்மை விட மிக ஆனந்தமாக இருக்கின்றன?

மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே இந்த சிந்தனை சுமைதான். இதை சற்றே இறக்கி
வைக்க முடியுமா? இறைவா, எண்ண சுமையை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி
கொடுப்பாயா?

7 comments:

Manaswini said...

Paulo Coelho சொல்லி இருந்ததை போல், பழைய நினைஉகள் என்பது உப்பு போன்றது. அது துளி தேவை. அதை மட்டும்மே சாப்பிட முடியாது . அதிகமானால் நல்லதும் இல்லை. இதை புரிந்து கொண்டால் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Jeevee said...

அற்புதமான பதிவு, நண்பரே! நெடுநாளைக்குப் பின் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.

படிக்கக்கையிலேயே என் எண்ணத்தில் அந்த மவுண்ட் ரோடு 'மெயில்' கட்டிடத்தின் தோற்றம் நினைவில் படிந்து கொண்டு வந்தது. மாலை நேரத்தில் பிளாட்பாரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 'மெயில்' செய்தித்தாளை வாங்கிப் போவதும் எண்ணத்தில் பதிகையிலேயே நீங்களும் அதைக் குறிப்பிட்டு விட்டீர்கள். 'சுதேச மித்திரன்' செய்தித்தாள்--பத்திரிகை பற்றியும் இதே மாதிரியான நினைவுகள் என்னில் உண்டு.

நாம் நினைப்பதையே அதே நினைவு கொண்ட இன்னொருவரும் பகிர்ந்து கொள்ளுதல் ஒரு சந்தோஷ அனுபவம். எண்ணம் கொடுக்கும் இனிமையில் இதுவும் ஒன்று. நம்மை வழிநடத்தும் செயல்பாட்டில் எண்ணத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. எல்லாவிதங்களிலும் பார்க்கப் போனால், நமது வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அந்த எண்ணத்தின் வீச்சே காரணமாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால், நம்மைப் பக்குவமாக வார்த்தெடுப்பதில் எண்ணத்திற்கு பெரும் பங்கு உண்டு. அதன் பலத்தில் தான் எதையும் பகுத்து ஆராயவும் முடிகிறது.

எண்ணங்களை அழித்துத் துடைத்து விட்டு கிளீன் ஸ்லேட் மாதிரி வைத்துக்கொள்ள மனத்தை வைத்துக் கொள்ள முடியாது. ஏனெலில் மனித மனத்தின் செயல்பாடே அது தான். மனித மனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதே இந்த எண்ணம் தான். மாசு தூசுகளைத் துடைத்துத் துப்புறவுப்படுத்தி நிர்மலமாக சிந்தனைகளை வைத்துக் கொள்பவன் பாக்கியசாலி. அது ஒரு பயிற்சி. அந்த அனுபவப் பயிற்சி பெறவே நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு வாழ்க்கையில் அல்லாடுகிறோம். பயிற்சி சித்திப்பின், குழந்தையாகி விடலாம். அந்த நிலையே தெயவ நிலை.

காரண காரியத்தோடேயே எல்லாவற்றையும் படைத்து, வழிநடத்திச் செல்லும்
இறைவனின் ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் ஓர்ந்து பார்த்தால் பிரமிப்பு தான் மிஞ்சுகிறது. நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

madrasthamizhan said...

வருகைக்கு மிக்க நன்றி ஜீவி அவர்களே. நான் எழுதியது கூட பெரிதாக ஒன்றுமில்லை. அற்புதமான தமிழில் ரசனையுடன் நீங்கள் பதில் எழுதி இருந்ததை நான் மிகவும் ரசித்தேன்.

madrasthamizhan said...

உண்மை தான். கால ஓட்டத்திற்கு ஏற்ப நம்மை நாமே மாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

வசந்தவாசல் said...

நல்ல பதிவு ஐயா! மேலும் ஜீவி அவர்களின் பின்னூட்டமும் அருமை! எண்ணங்களே மனிதனின் வாழ்வை தீர்மானிக்கிறது! நல்லெண்ணம் கொண்டோரின் வாழ்வு பிரகாசிக்கிறது. தீய எண்ணம் கொண்டோரின் வாழ்வு தீதாகவே முடிகிறது.

மேலும் ஐயா சென்னைத்தமிழனுக்கு... எனக்கு தங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும். அதாவது ஒரு தகவல் வேண்டும் ஐயா..! நான் 22 வருடமாக துபாயில் வசித்துவருகிறேன். 18 வயதில் தொடங்கிய என் புலம்பெயர் வாழ்க்கைக்கு, இதுவரை தீர்வில்லை. வயதும் நாற்பது தொடங்கிவிட்டது.. இன்னும் வாழ்க்கை தொடங்கவில்லை. அடுத்த வருடம் துபாய் வாழ்க்கைக்கு ஒரு குட்பை சொல்லலாமென இருக்கிறேன். தாங்கள் சூரத்தில் பனிபுரிந்ததாக அறிகிறேன். எனவே சூரத்தைப்பற்றிய அறிவும் அனுபவமும் மிகுதியாயிருக்கும்.

நான் ஊர்வந்தால் ஊரில் (தமிழகத்தில்) ஜவுளிக்கடை வைக்க விரும்புகிறேன். ஆனால் ஆடைகளுக்கு பிரபலம் சூரத் என நிறைய கேட்டிருக்கிறேன். படித்துமிருக்கிறேன். அதைப்பற்றிய தகவல் வேண்டும். யாரை தொடர்புக்கொள்வது எப்படி சந்தையிலிருந்து பொருளை வாங்குவது. அங்குள்ள சந்தை நிலவரம் என்ன? இதுபற்றிய தகவல் வேண்டும் ஐயா! உங்கள் கைபேசி எண் தர இயலுமா? அல்லது என் எண்ணுக்கு ஒரு (மிஸ்கால்) விடு அழைப்பு தந்தால் நான் உங்களை கூப்பிடிகிறேன் ஐயா! என் கைபேசி 00971556063344. தயவுசெய்து உதவுங்கள்!

madrasthamizhan said...

உங்களது கருத்துக்களுக்கு நன்றி ஐயா.

நீங்கள் பல வருடங்கள் துபாயில் இருந்ததால் இந்தியாவில் உள்ள நிலவரம் பற்றி அறிய வாய்ப்பு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல. உங்களை போன்ற எண்ணம் உடையவர்கள் பலர் சூரத்திலிருந்து மொத்தமாக வாங்கி பிற இடங்களில் சில்லரையாக விற்கிறார்கள். இந்த தொழிலில் போட்டி மிக கடுமையாக உள்ளது. அதனால், எனது கருத்தை கேட்பதால் சொல்கிறேன், எந்த முடிவாக இருந்தாலும் அதை துபாயில் இருந்தபடி செய்யாதீர்கள். நீங்களே சூரத்துக்கு சென்று அங்கு நிலவரம் எப்படி, போட்டியாளர்கள் யார், உங்களால் தாக்கு பிடிக்க முடியுமா போன்ற பல விஷயங்களை நேரில் கண்டறிந்து அதன்படி செயல்படுவது தான் நல்லது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அல்லவா, அதை கவனமாக யோசித்து செலவழியுங்கள். உங்களது எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

வசந்தவாசல் said...

நன்றி ஐயா! பல அலுவல்களுக்கு இடையிலும்... எனக்கு பதிலளித்தமைக்கு மிக்க நன்றி!! இன்ஷாஅல்லாஹ் தாங்கள் கூறியது போன்றே செய்கிறேன்.