Wednesday, 25 January 2012

ஐ.என்.எஸ் விக்ராந்த்

டிசம்பர், 1971. இந்திய சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு தேதி. அதற்கு முன் ஒரு சிறிய பின்னோட்டம்.

1965ல் நடந்த இரண்டாம் இந்திய-பாக் போரில் PMS Ghazi என்ற நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இரவல் கொடுத்தது. அப்போது இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை.

பாக் கப்பற்படையின் மிக பயங்கரமான மற்றும் அந்த காலத்தின் அதி நவீனமான நீர் மூழ்கி கப்பல் தான் இந்த PMS Ghazi. இந்த கப்பலில் torpaedo எனப்படும் நெடுந்தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள் 28 இருந்தன. ஒரு பெரிய நகரத்தையே அழிக்க கூடிய இந்த கப்பலுக்கு ஒரு முறை எரி வாயுவை நிறப்பினால் 11000 மைல்கள் செல்ல கூடிய அளவுக்கு போதுமானதாக இருந்தது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு எரி வாயுவை நிரப்ப வேண்டியதில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
1965 போரில் இந்த கப்பலை சமாளிப்பது இந்திய கப்பற்படைக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
‘ஒரு போரில் முதலில் இறப்பது உண்மை’ என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு (The first casualty in a war is truth). அதற்கு ஏற்றாற்போல செப்டெம்பர் 23, 1965ம் ஆண்டு ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்கிற பிரம்மாண்டமான இந்திய கப்பலை அழித்து விட்டதாக பாக் அரசாங்கம் மார்தட்டி கொண்டது. அது மட்டுமல்ல, PNS Ghaziயின் தளபதிக்கு மெடல் வேறு கொடுத்து கெளரவித்தது!

ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை!!உண்மையை நிரூபிக்க போர் முடிந்த பிறகு புது தில்லியில் உள்ள வெளி நாட்டு தூதர்கள் மற்றும் உலக பத்திரிகையாளர்களை எல்லாம் இந்திய அரசு பம்பாயில் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலுக்குள் அழைத்து சென்று விருந்து கொடுத்தது. இருந்தாலும் இந்திய கப்பற்படை பொய் சொன்ன பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தது.


இது ஒரு புறம் இருக்கட்டும். 1965ல் நடந்த போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த பிறகு கூட ‘தாங்கள் தோல்வியே அடையவில்லை’ என்றும் ஐ.நா. சபை கேட்டுக்கொண்டதன் பேரில் வெறும் “போர் நிறுத்தம்” செய்ததாகவும் பாக் ராணுவ தளபதி மார் தட்டிக்கொண்டான். ஒரு பெரிய பூசணிக்காயை புதைப்பது போல இருந்தது இந்த வாதம். இதையும் இந்திய அரசாங்கம் மறக்கவில்லை. இப்போது 1971க்கு வருவோம். 1965 போரின் பிறகு இந்திய கடற்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் உணர்ந்தது. அதனால் ஐ.என்.எஸ்.விக்ராந்த் எனப்படும் போர் விமானங்களை தாங்க கூடிய மிக பிரமாண்டமான கப்பலை (aircraft carrier) இந்தியா வாங்கியது. இதை பாக் கப்பற்படை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே எப்படியாவது விக்ராந்த்தை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது. அதனால் PNS Ghaziக்கு mines எனப்படும் அதிரடி குண்டுகளை கடலிலே ஆங்காங்கு வைப்பதற்கு தகுந்தபடி தன்னை தயார் படுத்திக்கொண்டது.


இந்த மைன்ஸ் (Mines) எனப்படும் குண்டுகள் சாதாரணமான குண்டுகள் அல்ல. இவற்றை ஏதாவது பொருள் தொடும் வரை சாது போல கடலில் மிதந்து கொண்டிருக்கும். ஏதாவது படகோ, கப்பலோ இவற்றை தெரியாமல் தொட்டுவிட்டால் அதோகதி தான். படு பயங்கர சத்தத்துடன் இதை தொடும் கப்பல் வெடித்து சுக்கு நூறாக்கி விடும். எப்படியாவது ஐ.என்.எஸ் விக்ராந்த்தை நாசமாக்கி விட வேண்டும் என்று 92 மாலுமிகளுடன் நவம்பர் 14, 1971 அன்று கராச்சியை விட்டு PMS Ghazi வங்காள விரிகுடாவை நோக்கி கிளம்பியது. அப்போது கூட இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை என்பது தான் பரிதாபம்.


அப்போது இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக என். கிருஷ்ணன் என்ற தமிழர் இருந்தார். பல மெடல்களை வாங்கிய இந்த மாபெரும் வீரரின் சாகசங்களை நினைத்தால் இப்போது கூட மெய் சிலிர்க்கிறது.
பாக்கின் நீர் மூழ்கி கப்பல் கராச்சியை விட்டு கிளம்பி விட்டது என்பதை நமது உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்டார். எப்படியாவது விக்ராந்த்தை காப்பாற்றியே ஆக வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார். ஒரு அருமையான திட்டத்தை வகுத்தார் கிருஷ்ணன்.


சென்னை துறைமுகத்திலிருந்து அந்தமானுக்கு விக்ராந்த் கப்பலை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டார். அடுத்து பாக் நீர்மூழ்கி கப்பலை எப்படியாவது பொறி வைத்து பிடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைத்தார். விக்ராந்த் போன்ற மிக பிரமாண்டமான கப்பலில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் எப்போதும் இருப்பார்காள். அதனால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை சாதாரண கப்பல்களை விட மிக மிக அதிக அளவில் தேவைப்படும். இதை உணர்ந்த கிருஷ்ணன், விசாகப்பட்டினம் நகரத்தில் இருக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் சாதாரணமாக வாங்கும் அளவை விட மிக அதிகாமாக உணவு பொருட்களை வாங்கினார். இவருக்கு தெரியும், இந்தியாவில் உள்ள பாக் உளவாளிகள் இதை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று.


ஒரு ஊரில் திடீரென்று மிக அதிக அளவில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைகளுக்கு கிராக்கி ஏற்பட்டால் விலை உயர தானே செய்யும். இவர் வைத்த பொறியில் பாக் கப்பற்படை விழுந்து விட்டது. உளவாளிகள் மூலமாக விக்ராந்த் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறது என்ற தகவல் பாக் அரசாங்கத்துகு எட்டி விட்டது. உடனே PMS Ghazi கப்பலுக்கு ஒரு அவசர உத்தரவு சென்றது. அதை கேட்டால் இப்போது கூட குலை நடுங்குகிறது. அதாவது, விசாகப்பட்டிணத்தில் விக்ராந்த் கப்பல் இருப்பதால் அந்த துறைமுகத்தையே தவிடுபொடியாக்கி விடவேண்டும். அது மட்டுமல்ல, அந்த ஊரையே நாசமாக்கி விடவேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!


இந்திய கப்பற்படையில் ஐ.என்.எஸ் ராஜ்புத் என்ற மற்றொரு destroyer ரகத்தை சேர்ந்த கப்பல் இருந்தது. எப்படியாவது பாக் கப்பலை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற இலக்கு அதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. பம்பாயிலிருந்து கொழும்பு வந்து அங்கு எரி பொருளை நிரப்பிக்கொண்ட பின் விசாகப்பட்டிணத்தை நோக்கி புறப்பட்டது ஐ.என்.எஸ். ராஜ்புத். ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாட்டின்படி ஐ.என்.எஸ் ராஜ்புத்துக்கு கம்பியில்லா வானொலி மூலம் பல தகவல்கள் பரிமாறப்பட்டன. பாக் உளவாளிகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து வேண்டும் என்றே பரிமாறப்பட்ட தகவல்கள் இவை!

ஒரு மிக பெரிய கப்பல் ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதிலிருந்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் கம்பியில்லா வானொலி மூலம் பரிமாறி கொள்ளப்படும். அது மட்டுமல்ல, விக்ராந்த் கப்பலிலிருந்து ஒரு மாலுமி அனுப்புவது போல ஒரு தந்தியும் ஐ.என்.எஸ். ராஜ்புத்திலிருந்து அனுப்ப பட்டது. “உயிருக்கு போராடி கொண்டிருக்கும் எனது தாயாரின் நிலை எப்படி உள்ளது?” என்று ஒரு மாலுமி கேட்பது போல ஒரு போலி தந்தி அனுப்ப பட்டது. இவை அனைவற்றையும் பாக் உளவாளிகள் கவனித்து கொண்டே இருந்தனர்.


இதற்குள் பாக் நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டிணத்தை நெருங்கி விட்டது. ஆனால் இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல் இல்லாததால் எங்கே இந்த கப்பல் உள்ளது என்று தான் தெரியவில்லை. அப்போது கம்பியில்லா வானொலி மூலம் ஒரு செய்தி பாக் கப்பலிலிருந்து கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) உள்ள சிட்டகாங் நகருக்கு அனுப்ப பட்டது. அதாவது ஒரு விதமான lubrication எண்ணெய் அவசரமாக தேவை படுகிறது என்பது தான் அந்த செய்தியின் சாராம்சம். கம்பியில்லா வானொலியில் என்னென்ன சம்பாஷணைகள் நடைபெறுகின்றன என்று இந்திய கப்பற்படையினரும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தனர்! உடனே அவர்களுக்கு தெரிந்து விட்டது, பாக் கப்பல் இப்போது விசாகபட்டிணத்தின் வெகு அருகில் இருக்கிறது என்று. ஏனெனில், அவர்கள் கேட்ட அந்த எண்ணெய் நீர்மூழ்கி கப்பல்களில் மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.


இந்த செய்தியை கொடுத்த பாக் மாலுமி தான் எத்தனை பெரிய ஆபத்துக்கு வித்திட்டுள்ளான் என்பதை அப்போது அறிந்திருக்க ஞாயமில்லை. அதுமட்டிமல்ல, சரித்திரத்தையே மாற்றும் அந்த நிகழ்ச்சிக்கு அஸ்திவாரமும் போட்டு விட்டான் அவன்!


டிசம்பர் 4, 1971. ஐ.என்.எஸ். ராஜ்புத் விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து ரோந்துக்காக புறப்பட்டது. இந்த சுற்றுப்புறத்தில் தான் எங்கோ பாக் கப்பல் இருக்கும் என்பது தோராயமாக தெரியும், ஆனால் எங்கே என்று தான் தெரியாது. துறைமுகத்தை விட்டு கிளம்பிய ராஜ்புத்தின் மாலுமிக்கு ஒரு பொறி தட்டியது. ஒரு வேளை நம்மை விக்ராந்த் என்று நினைத்து பாக் கப்பல் போட்டு தள்ளி விட்டால்?

 சட்டென்று படு உஷாராகி கப்பலின் இஞ்ஜினை அணைத்து விட்டார். தன்னுடைய ராடாரில் பார்த்தார். தண்ணீரில் ஒரு அசாதாரணமான மாற்றம் (disturbance) இருப்பதை கருவி காட்டியது. சற்றும் தாமதிக்காமல் இரண்டு ஏவுகணைகளை அந்த கொந்தளிப்பை நோக்கி ஏவினார். அப்போது மணி இரவு 12.05. படு பயங்கரமாக சத்ததுடன் பல மிக பெரிய வெடிகள் சரமாரியாக கடலில் வெடித்தனர். விசாகப்பட்டிணம் கடற்கரையில் இருந்த வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ச்சியில் சிதறின. ஏதோ பூகம்பம்தான் நடக்கிறது என்று மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பிறகு மயான அமைதி.


மறு நாள் காலை. கடலுக்குள் சென்ற மீனவர்கள் துறைமுகத்தின் வாயிலில் ஒரு மிக பெரிய எண்ணை கசிவு (oil slick) இருப்பதாக கூறினர். இந்திய கடற்படையின் diverகள் கடலுக்கடியில் சென்று பார்த்தனர். அவர்கள் கண்ட காட்சி ரத்தத்தையே உறைய வைத்து விட்டது. 92 மாலுமிகளின் சடலங்களும் பாக் நீர் மூழ்கி கப்பலுக்குள்ளேயே சிதறி சின்னாபின்னமாக இருந்தது. கப்பலில் இருந்து பாக் தளபதியின் முத்திரையும் (official seal) பல அரிய பாகங்களையும் இந்திய கப்பற்படையினர் மேலே கொண்டு வந்தனர்.
விசாகப்பட்டிணம் பிழைத்தது. அது மட்டுமல்ல. பாகிஸ்தானின் ஒரே நீர்மூழ்கி கப்பலும் அழிந்தது.

அதற்கு பிறகு போரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியபின் மறக்காமல் நமது இராணுவத்தினர் Surrender Documentல் பாகிஸ்தானின் தளபதி நியாசியை கையெழுத்திட வைத்தனர்.இந்த அதி அற்புதமான செயலுக்கான சூத்திரதாரியான கிருஷ்ணனை பிரதமர் இந்திரா வெகுவாக பாராட்டினார்.போர் முடிந்து ஐ.என்.எஸ் விக்ராந்த் சென்னை வந்தது. மக்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கில் சாலைகளில் கொண்டாட ஆரம்பித்தனர். எத்தனை பெரிய வெற்றி இது! நம் தாய் நாட்டுக்காக எத்தனை பேர் தங்கள் உயிரை கொடுத்திருந்திருப்பார்கள்? பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஐ.என்.எஸ் விக்ராந்த் திறந்து விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முதன் முறையாக இந்திய கப்பற்படையின் மாணிக்கம் (jewel in the crown) விக்ராந்துக்குள் சென்று பார்த்தனர். கப்பலுக்குள் இந்திய தேசிய கீதம் கப்பற்படையின் bandடினால் வாசிக்கப்பட்டது. தேசிய கீதம் முடிவடைவதற்குள் பலர் அழுது விட்டனர். உணர்ச்சிமயமான அந்த அரிய சந்தர்ப்பத்தை பார்த்து பரவசமடைந்தவர்களுள் நானும் ஒருவன்.

7 comments:

ஜெகன்னாதன் said...

நமது பாதுகாப்புக்காக தங்களது உயிரையே அர்ப்பணிக்கும் இராணுவத்தினருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். இவர்களது தியாகத்தினால் தான் நாம் இன்னும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

இத்துடன் இரண்டு மூன்று தரம் படித்துவிட்டேன். ஒவ்வொரு தடவையும் க்ருஷ்ணனின் motivation வித்தியாசமாகத் தோன்றுகிறது. தோராயமாக விடுத்த கணை சரியான இலக்கை அடைந்தது fortunate. கப்பலை நேரில் பார்க்க thrillingஆக இருந்திருக்கும். கற்பனை செய்ய முடிகிற்து.

Expatguru said...

கருத்துக்களுக்கு நன்றி ஜெகன்னாதன்.

Expatguru said...

நன்றி, அப்பாதுரை. கிருஷ்ணன் போன்ற தன்னலமற்ற வீரர்களினால் தான் நாம் இன்னும் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம்.

விக்ராந்த் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. அந்த போர் கப்பலை decommission செய்து விட்டார்கள். பொதுவாக ஒரு கப்பலை decommission செய்தவுடன் அதை உடைத்து விடுவார்கள் (ship breaking). விக்ராந்தின் அற்புதமான சேவையை நினைவில் வைக்கும் விதமாக அதை ஒரு floating museum-ஆக பம்பாயில் வைத்துள்ளனர்.

lakea said...

A very gripping narration of a great historic event. Proud of my country!

Expatguru said...

Thanks, Ilakea.

Unknown said...
This comment has been removed by the author.