Thursday, 15 March 2012

இப்படியும் ஒரு அனுபவம்

செளதி அரேபியாவில் என்னுடன் சாமி என்ற நண்பர் வேலை செய்து வந்தார். அவருடைய முழு பெயர் மிக நீளமாக இருக்கும். கடைசியில் சாமி என்று முடியும். செளதிகளுக்கு வாயில் முழு பெயர் நுழையாததால் அவருடைய பெயர் சாமி என்றே ஆகிவிட்டது.

ஒரு முறை அவர் தான் இருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டுக்கு குடி பெயர்ந்தார். அந்த வீட்டில் அதற்கு முன்னர் பிராமண வகுப்பை சேர்ந்த ஒருவர் காலி செய்து விட்டு வேறு எங்கோ சென்று விட்டார். வீட்டில் இருந்த பழைய குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்யும்போது சாமிக்கு ஜோதிடத்தை பற்றிய பழங்கால புத்தகம் ஒன்று  கிடைத்தது. அந்த வீட்டில் முன்பு இருந்தவர் விட்டு விட்டு சென்றிருக்கிறார். பொழுது போகாத நேரத்தில் சாமி இந்த புத்தகத்தை படிக்க தொடங்கி அதிலே மிகவும் ஈடுபட்டு லயித்து போய் விட்டார்.

சில மாதங்கள் கழித்து ஒரு நாள் சாப்பிடும் நேரம். என்னுடைய மற்றொரு நண்பர் கார்த்திக் என்பவர் தனக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று  சாமியிடம் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது சாமி "உங்களுடைய ஜாதகத்தையும் உங்களது மனைவியின் ஜாதகத்தையும் கொடுங்களேன், ஏதாவது தோஷம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்" என்று எதேச்சையாக கூறினார். கார்த்திக்கும் 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற மன நிலையில் இருந்ததால் மறு நாளே இருவரின் ஜாதகத்தையும் சாமியிடம் கொடுத்தார். சாமி இரண்டு ஜாதகங்களையும் மிக நுட்பமாக பார்த்து விட்டு "சரியாக ஒரு மாதத்தில் உங்கள் மனைவி கற்பமாவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறினார். ஏதோ நல்லது நடந்தால் சரி என்று நாங்கள் அதை அத்துடன் முடித்து கொண்டோம்.


காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சரியாக ஒரு மாதத்தில் உண்மையிலேயே கார்த்திக்கின் மனைவி கர்ப்பமடைந்தார். பல வருடங்கள் காத்திருந்தவருக்கு மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. சரியாக இதை கணித்த சாமியை பற்றி போவோர் வருவோர் அனைவரிடமும் மாய்ந்து மாய்ந்து போய் கூறி விட்டார்.  வெகு விரைவில் சாமி நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். அனைவரும் தங்களது ஜாதகங்களை அவரிடம் சென்று காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் 'பரவாயில்லை, நண்பர்கள் தானே' என்று ஜாதகம் பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்போது தான் அவருடன் விதி விளையாடியது.


செளதியில் இரு வகை காவல் துறையினர் உண்டு. முதல் வகை நம்மூர் போலீசை போல. இரண்டாம் வகை, மத போலீஸ் எனப்படும் "முத்தாவா" என்ற மத குருமார்கள். நீண்ட தாடியுடும், குட்டை பாவாடையுடனும்  உலா வரும் இவர்கள் வைத்தது தான் சட்டம். சாதாரண போலீசை விட இவர்களுக்கு அதிகாரங்கள் அதிகம். இவர்களுடைய அட்டகாசம் தாங்காமல் பல செளதிகளே இவர்களை வெறுப்பார்கள். மத போலீஸ் என்றாலும் இவர்கள் பல இடங்களில் வேலையில் இருப்பார்கள்.

செளதியில் ஜோதிடம் போன்றவைகளுக்கு இடமே இல்லை. யாராவது இது போன்று ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதனால் பொதுவாகவே யாரும் வெளிப்படையாக இதை பற்றி பேசவே பயப்படுவார்கள்.


சாமியுடைய 'பிராபல்யம்' கூட வேலை செய்யும் ஒரு முத்தாவா காதுக்கு எட்டி விட்டது. ஒரு நாள் அவன் சாமியை கூப்பிட்டு விசாரித்தான். சாமிக்கு வெலவெலத்து விட்டது. "இல்லை, நான் எதேச்சையாக தான் கூறினேன் அது உண்மையாகி விட்டது" என்றெல்லாம் கூறி சமாளித்தான். முத்தாவா அசரவில்லை. "என்னுடன் வா" என்று அவனை ஒரு காரில் உட்கார வைத்து எங்கோ வெகு தூரம் ஒட்டி சென்றான். வழி முழுவதும் யார் யாருடனோ கைபேசி மூலம் அரபியில்தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே சென்றான். சாமிக்கோ உதறல் எடுக்க தொடங்கி விட்டது. இன்று கதை கந்தல் தான் என்று நினைத்தான். சாமியுடன் முத்தாவா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வழி முழுவதும் சிகரெட்டை ஊதி தள்ளி கொண்டே வண்டியை ஓட்டினான்.


ஊருக்கு வெளியே சென்றவுடன் ஒரு மிக பெரிய வீட்டின் முன் கார் நின்றது. அந்த வீட்டின் முன் பல கார்கள் நின்று கொண்டிருந்தன. இறங்கி உள்ளே இருவரும் சென்றார்கள். அங்கு ஒரு பெரிய அறையில் ஒரு பத்து செளதிகள்  இருந்தனர். முத்தாவா தான் அவர்களை  தொலைபேசி மூலம் அங்கு வரவழைத்து இருந்திருக்கிறான். அறையின் நடுவில் ஒரு நாற்காலியில் இவனை உட்கார வைத்து விட்டு அனைவரும் இவனை சூழ்ந்து கொண்டனர். முத்தாவா பேச ஆரம்பித்தான்.


"சாமி, நான் உன்னை இங்கு அழைத்து வந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். எனக்கு ஒரு பெரிய பிரச்னை உள்ளது. எனது தங்கையை அவளது கணவன் சரியாக நடத்துவதில்லை. இவள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி 'இனி அவனுடன் குடித்தனம் நடத்த மாட்டேன்' என்கிறாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை", என்றான். அவன் என்ன கூற வருகிறான் என்று புரிந்தது. மத குருவாக இருந்து கொண்டு வேற்று மத ஜோசியக்காரனிடம் கேட்க வேண்டி உள்ளதே என்ற தர்மசங்கடம். சுற்றி இவனது சொந்தக்காரர்கள் வேறு இருக்கிறார்கள்.


சாமி உடனே சமயோசிதமாக  குறிப்பறிந்து கொண்டு "நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களது தங்கையின் பிறந்த தேதி, மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை மட்டும் கூறுங்கள்" என்றான். அதற்குள் ஒரு தட்டு நிறைய பேரீச்சம் பழமும் பாலில்லாத தேநீரும் வந்தது. எல்லா செளதிகளும் இவையே பார்த்து கொண்டிருந்தனர்.


சாமி சில கணக்குகளை போட்டு விட்டு "தயவு செய்து நீங்கள் உங்களுடைய தங்கையை கட்டாய படுத்தாதீர்கள். அவர்களுடைய திருமணம் நிலைக்க வாய்ப்பு மிக குறைவு" என்று கூறி விட்டான். அறையில் மயான  அமைதி. 'கடவுளே, இவன் நம்மை என்ன செய்ய போகிறானோ தெரியவில்லையே' என்று சாமிக்கு உள்ளூர உதறல்.


திடீரென்று முத்தாவாவின் கைபேசி ஒலித்தது. எங்கிருந்து அழைப்பு வந்தது என்று பார்த்த  உடனே அனைவரும் கேட்கும்படியாக  'ஸ்பீக்கரில்' போட்டு விட்டான்.  மறு முனையில் தங்கையின் கணவன். "உங்களுடைய தங்கையை நான் விவாக ரத்து செய்ய போகிறேன். எனக்கும் அவளுக்கும் ஒத்து வரவில்லை" என்று கூறி வைத்து விட்டான். முத்தாவவின் முகம் வெளிறி விட்டது. யாரும் எதுவுமே பேசவில்லை.

நீண்ட நேர அமைதிக்கு பிறகு நிமிர்ந்து சாமியை பார்த்தான். மெல்லிய குரலில் மற்றவர்களிடம் ஏதோ கூறினான். தரையில் ஒரு துண்டை விரித்து போட்டான். அந்த அறையில் இருந்த அனைவரும் நூறு, இருநூறு என்று பணத்தை போட்டனர். அதை அப்படியே மூட்டையாக கட்டி சாமியிடம் முத்தாவா கொடுத்தான்.

சாமிக்கு இப்போது மிகவும் தர்ம சங்கடமாகி விட்டது. "நான் இதை பணத்துக்காக செய்ய வில்லை. ஏதோ சில நண்பர்கள் கேட்டார்களே என்று விளையாட்டாக ஆரம்பித்தேன். எப்படியோ உங்களுடைய காதுகளுக்கு அது எட்டி விட்டது. வருத்தத்தில் இருக்கும் போது இந்த பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது கொடுங்கள். வாங்கி கொள்கிறேன்" என்றான். முத்தாவா வலுக்கட்டாயமாக அந்த மூட்டையை சாமியின் கைகளில் திணித்து விட்டு அவனை வீடு வரை வண்டியில் விட்டான்.


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாமி நண்பர்களுக்கு கூட ஜோசியம் பார்ப்பதை விட்டு விட்டான். அவனை வம்புக்கு இழுப்பதற்காகவே வேண்டும் என்றே யாராவது ஜாதகத்தை பார்க்க கூறினால்  "ஏதோ பிழைப்புக்கு வந்தோமா, வேலையை பார்த்தோமா என்று நான் பாட்டுக்கு இருக்கிறேன், ஆளை விடுங்கடா சாமி" என்று சாமி அலறுவதை பார்த்து நாங்கள் சிரிப்போம். 

9 comments:

Temple Jersey said...

super

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))))

bandhu said...

அகஸ்மாத்தாக உங்கள் பதிவுக்கு வந்தேன்.. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். மாதம் ஒரு பதிவுதான் என்று கோட்டா போட்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. ஆனாலும், அத்தனையும் ரத்தினங்கள்! பற்பல கூழாங்கற்களுக்கு ஒரு இரத்தினக்கல் மேல் தான்!

Expatguru said...

வருகைக்கு மிக்க நன்றி, Temple Jersey.

துளசி டீச்சர், இந்த கத்துக்குட்டியின் வலைப்பதிவுக்கு உங்களை போன்ற ஜாம்பவான்கள் வருகை தந்தது எனது பாக்கியமே.

பந்து, என்ன இப்படி கூறி விட்டீர்கள்? கோட்டா, தோட்டா எல்லாம் கிடையாது சார். ஏதோ மனதுக்கு பட்டதை கிறுக்கி இருக்கிறேன். அடிக்கடி வருகை தாருங்கள்.

vijay.s said...

Raju,

Epdi irukinga? romba maasathuku appuram, wordpress poi angendhu blogspot vandhu potta ella pathivaiyum paathen. un ezhuthil oru unmai/sathiyam iruku...neraiya ezhuthunga pls.. i felt the same when we sold our home in thanjavur..i didnt want to go and see my home last time on the day of registration...inikum, en manasu thudikum...thirumba thanjavur la oru veedu vangi kadaisi kaalam anga irukanumnu... en wife/amma, ellarum...athuku inum time iruku, naan maatum than andha oorla irupen..vera uravinar yaarum iruka maatanga...thanimaila irupiyaanu kaypanga..enna pathil solrathunu theriyathu. Neenga, ippa bahrain la thanay irukinga? naan singapore nov 2010 vandhen... chennai illai atleast bangalore odaye orediya poganumnu feel panren.take care.

vijay.s said...

Raju,

spelling mistake la 'un' apdinu vandhiduchu...thappa eduthukathinga..

Expatguru said...

வருகைக்கு நன்றி, விஜய். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது பின்னூட்டம் படித்ததில் மகிழ்ச்சி.

Bhuvaneshwari Shankar said...

இந்த கட்டுரையை மிகவும் நன்றாக எழுதயுள்ளீர்கள். நான் இந்த கட்டுரை யுடன்னேயே பிரயாணித்தேன் . சந்தோசம் பயம் என்று பல உணர்சிகளை எழுப்பி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, இலக்கியா.