Friday, 10 August 2012

பாத்திரமறிந்து...

எண்பதுகளில் பம்பாய் நரிமன் பாயிண்ட் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். அப்போதெல்லாம் வீ.டி. இரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நரிமன் பாயிண்ட்டிலிருந்து நிறைய 'ஷேர் டாக்ஸிகள்' கிடைக்கும். ஒரு பயணிக்கு மூன்று ரூபாய் வாடகை. முக்கால்வாசி டாக்ஸிகளை சர்தாஜிகள் தான் ஓட்டுவார்கள்.


பொதுவாக நான் மந்த்ராலயா வரை நடந்து வந்து அங்கிருந்து பஸ் பிடித்து நான் தங்கியிருந்த‌ மாடுங்காவுக்கு செல்வேன். சில சமயம் மிகவும் சோர்ந்து போயிருந்தால், பேசாமல் ஷேர் டாக்ஸி பிடித்து வீ.டி. வரை சென்று, அங்கிருந்து இரயில் பிடித்து செல்வேன். அது போல ஒரு முறை டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது மறக்க முடியாத ஒரு அனுபவம் ஏற்பட்டது.


டாக்ஸியை ஒரு சர்தார்ஜி ஓட்டி கொண்டிருந்தார். நான் அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன். சிக்னலுக்காக வண்டி நின்று கொண்டிருந்த போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கிழவி ஒவ்வொரு வண்டி அருகிலும் சென்று பிச்சை எடுத்து கொண்டிருந்தாள். ஆனால், அவளை கண்ட உடனேயே பலர் முகத்தை சுளித்து கொண்டனர். யாருமே அவளுக்கு பிச்சை போடவில்லை. எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. நான் அமர்ந்திருந்த டாக்ஸி அருகே கிழவி வந்தாள்.


அதற்குள் சிக்னல் விளக்கு மஞ்சளுக்கு வந்து விட்டது. எனது பர்ஸில் அவசரம் அவசரமாக விரலை துழாவி கையில் கிடைத்த நாணயத்தை அவளிடம் இருந்த பாத்திரத்தில் போட்டேன். அது எந்த நாணயம் என்று கூட நான் பார்க்கவில்லை. வண்டி கிளம்புவதற்குள் அவளுக்கு ஏதாவது போட வேண்டும் என்ற நோக்கத்தில் கிடைத்த நாணயத்தை துழாவி எடுத்து போட்டேன்.

துரதிர்ஷ்டவசமாக எனது கையில் கிடைத்த நாணயம் வெறும் 25 பைசா தான். சிக்னல் அதற்குள் பச்சையாக மாறி விட்டது. வண்டியை ஓட்டுனர் கிளப்ப ஆயத்தமானார்.

ஒரு கணம் தான். அந்த ஒரே கணத்தில் யாருமே எதிர்பாராத விதமாக கிழவி அந்த 25 பைசா நாணயத்தை எடுத்து தரையில் ஓங்கி விட்டெறிந்து 'தூ' என்று காறி துப்பினாள். வண்டி கிளம்பி விட்டது.

எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. மிகவும் அவமானமாக போய் விட்டது. வண்டியை ஓட்டி கொண்டு வந்த சர்தார்ஜி, " நல்லதுக்கே காலம் இல்லை. இதை  போல பத்து பேரிடம் 25 பைசா வசூல் செய்திருந்தால் ஒரு டீ, பன் வாங்க காசு சேர்ந்திருக்குமே" என்றார். (அப்போதெல்லாம் டீ ஒரு ரூபாய் தான்).

அப்படி நான் என்ன தவறு செய்து விட்டேன்? யாருமே காசு போடாமல் அவளுடைய குஷ்ட ரோகத்தை கண்டு முகம் சுளித்த போது நான் ஏதோ கையில் கிடைத்ததை போட்டது தவறா? அல்லது, மற்றவர்களை போல நானும் முகத்தை வேறு பக்கமாக திருப்பி கொண்டு இருந்திருக்க‌ வேண்டுமா? ஏழை என்று நினைத்து தானே நான் பிச்சை போட்டேன்? ரொம்ப நேரம் மனது மிகவும் சங்கடப்பட்டு கொண்டிருந்தது.

ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை செய்தி தாள்களில் 'உதவி தேவை' என்று விளம்பரங்களை பார்க்கும்போதும் இந்த சம்பவமே ஞாபகம் வரும். 'உண்மையிலேயே இவர்களுக்கு உதவி தேவையா, இவர்கள் ஏழைகள் என்றால் விளம்பரம் செய்யும் அளவுக்கு எப்படி பணம் வந்தது', என்றெல்லாம் மனதில் எண்ண அலைகள் தோன்றும். அப்படி நினைக்க கூடாது தான். பாவம், எத்தனையோ பேர் உதவிக்காக உண்மையிலேயே காத்திருக்கிறார்கள்.னால், எனது அன்றைய அனுபவம் ஏனோ ஆழ்மனதில்  பதிந்து விட்டது.


ஒரு வேளை அன்றைய தினம் நான் 25 பைசா போடுவதற்கு பதிலாக ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ போட்டிருந்தால் அந்த கிழவி பேசாமல் வாங்கி கொண்டு போயிருப்பாளோ? நான் எதுவுமே போடாமல் இருந்திருந்தால் கூட அந்த கிழவிக்கு ஒன்றும் தெரிந்திருக்காது, 25 பைசா என்றவுடன் அப்படி தூற எரிந்து விட்டாளே. அப்படி என்றால் பிச்சையிலேயே பெரிய பிச்சை, சிறிய பிச்சை என்று இருக்கிறதோ?

யோசித்து பார்த்தால் நாம் அனைவ‌ருமே பிச்சைக்கார‌ர்க‌ள் தான். எல்லோருமே பெரிய‌ பிச்சையை எதிர்ப்பார்த்து தான் அலைகிறோம். வ‌ங்கிக்கு சென்று கால் க‌டுக்க‌ வ‌ரிசையில் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் நின்றால் சீந்த‌ ஆளில்லாம‌ல் இருப்போம். அதே ஒரு பெரிய‌ தொகையை 'டெப்பாசிட்' செய்தால், வ‌ங்கி மேலாள‌ர் வாச‌ல் வ‌ரை வ‌ந்து விடை கொடுப்பார். ந‌கை க‌டைக்கோ துணி க‌டைக்கோ  சென்று பெரிய‌ அள‌வில் வாங்கினால், நம‌க்கு குளிர் பான‌ உப‌ச‌ரிப்பு கிடைக்கிற‌து.  ஒரு கைக்குட்டை மட்டும் வாங்கி பாருங்களேன்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை பிச்சை எடுத்து கொண்டே இருக்கிறோம். குழந்தை பிறந்த உடன் ஆஸ்பத்திரியின் ஆயாவுக்கு ஏதாவது கொடுத்தால் தான் சரியாக கவனிப்பாள். அதுவும் ஆண் குழந்தை என்றால் இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டும் என்ன குறைச்சலா? சாதாரணமாக இயற்கை பிரசவம் அடையும் தாய்களுக்கு கூட 'நீங்கள் அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்யா விட்டால் தாயின் உயிருக்கே ஆபத்து' என்று கடைசி நிமிடத்தில் பயமுறுத்தி பணம் பண்ணும் பிச்சைக்காரர்கள் தானே.

குழந்தை பிறந்து பள்ளியில் சேர்க்க நன்கொடை எதிர்பார்க்கும் பள்ளி நிர்வாகத்தினர், அந்த குழந்தைக்கு தேவையான சீருடைகள், ஷூ, சாக்ஸ் முதல் எல்லாவற்றையும் குறிப்பிட்ட கடையிலிருந்து மட்டும் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் ஆசிரியர்கள், இது தான் சாக்கு என்று பல மடங்கு விலையை கூட்டும் கடைக்காரர்கள், இவர்கள் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான்.

சரி விடுங்கள், வெளியே சென்றால் ஆட்டோ காரர் பெயருக்கு மீட்டரை வைத்து கொண்டு அதை போடாமலேயே அநியாயமாக கேட்கும் வாடகை, வீட்டுக்கு காஸ் சிலிண்டரை வைக்கும் ஆள், ஹோட்டலுக்கு சென்றால் சாப்பிட்ட தொகைக்கு மேல் ஏதாவது எதிர்ப்பார்க்கும் சர்வர் இவர்கள் எல்லாரும் 'சிறிய' பிச்சைக்காரர்கள். இவர்களாவது பரவாயில்லை, ஏதோ வயிற்று பிழைப்புக்கு கேட்கிறார்கள் என்று கூறலாம்.


ஏதாவது ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு செல்லுங்கள். 9 மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலகத்துக்கு நிதானமாக 10 மணிக்கு வந்து பெயருக்கு இரண்டு கோப்புகளை பார்த்து விட்டு மின் விசிறிக்கு அடியில் அரட்டை அடித்து கொண்டு வெட்டிக்கு 'வேலை' பார்க்கும் அதிகாரிகளுக்கு 'ஏதாவது' அன்பளிப்பு கொடுத்தால் தானே நமது காரியம் ஆகிறது? இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று கூறலாமா? வேண்டாம், லஞ்சத்தில் என்ன கெளரவம் வேண்டி கிடக்கிறது?

தேர்தல் சமயத்தில் மட்டும் இரு கை கூப்பி கூழை கும்பாடு போட்டு வோட்டு கேட்கும் அரசியல் குப்பைகளும் நமது சமுதாயத்திலிருந்து வந்த பிச்சைக்காரர்கள் தானே, அவர்கள் என்ன வெளி நாட்டிலிருந்து குதித்தவர்களா? வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அரசாங்கமும் பிச்சையின் ஒரு வேறுபாடு தான். இதில் வேடிக்கை என்னவென்றால், வாங்கும் சம்பளத்தை தவிர வேறு எந்த விதமான வருமானமும் இல்லாமல் இருப்பவர்கள் தான் பாவப்பட்ட மக்கள். அவர்களை கசக்கி பிழிந்தெடுத்து ஒரு வழி செய்து விடுவார்கள்.

அதே சமயம், நீங்கள் கோடீஸ்வரராகவோ, ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு சொந்தமான 'விவசாயி'யாகவோ, கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கி திருப்பி தராமல், அரசாங்கத்திடமிருந்து எல்லா சலுகைகளையும் பெற்று கொண்டு வரியே கட்டாமல் ஏய்க்கலாம். இது தான் இந்தியா.

குழந்தைகள் பெரியவர்களாகி திருமணம் செய்து கொடுப்பது பிச்சையின் உச்சகட்டம். பிள்ளை வீட்டாரின் கோபத்துக்கு ஆளாக கூடாது என்று பதறும் பெண்ணை பெற்றவன் படும் பாடு இருக்கிறதே, சொல்லவே வேண்டாம். இத்தனைக்கும் பிச்சை போடுபவன் பெண் வீட்டுக்காரன். அதனால் தான் கன்னிகா'தானம்' என்று கூறுகிறார்களோ?

மரணத்துக்கு பிறகு மருத்துவ சான்றிதழ் இல்லாமல் சமரசம் உலாவும் சுடுகாட்டில் கூட சடலத்தை எரிக்க மாட்டார்கள். அதற்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும். சரி, அது முடிந்த கதை என்றால், அதற்கு பிறகு இறப்பு சான்றிதழ் அலைச்சல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றாலும் பிச்சை போட்டால் தான் முடியும்.


இதை எல்லாம் கூட விட்டு தள்ளுங்கள். கோவிலுக்கு சென்றால் கடவுளிடம், 'எனக்கு இது வேண்டும், அது வேண்டும்' என்று தானே கேட்கிறோம்? எப்போதாவத,  ஒரே ஒரு முறையாவது "கடவுளே, குளிரிலும் வெயிலிலும் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களை காப்பாற்று" என்றோ, "தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தீ அணைக்கும் படையினரை காப்பாற்று" என்றோ, 'யாராவது நமக்கு ஏதாவது கொடுக்க மாட்டார்களா' என்று அனாதை விடுதிகளில் அன்புக்கு ஏங்கும் குழந்தைகளை காப்பாற்று " என்றோ கடவுளிடம் வேண்டுகிறோமா? ஆகையால், கடவுள் முன் நாமும் பிச்சை எடுக்கும் பரதேசிகள் தான். இதில் மற்றவர்களை குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

தன்னலமில்லாத மனிதர்கள் என்பதே கிடையாது என்பது தான் நிதர்சனம். ஒரு யுகத்துக்கு ஒரு மகா புருஷர் அப்படி அவதரித்து அந்த கால கட்டத்தில் நாம் வாழ்ந்து அவரை பின்பற்றினாலேயே அதுவே பெரிய விஷயம் என்று நினைக்கிறேன். 4 comments:

வவ்வால் said...

நல்லா சொல்லி இருக்கீங்க, ஆனால் இது அனைவருக்கும் தினசரி நிகழ்கிறது, இதெல்லாம் ஒரு பிரச்சினை என்றே யாரும் நினைப்பதில்லை,பிரச்சினை என்பதை விட அவலம் எனலாம்,

லஞ்சம் வாங்கி வாங்கி மறத்து போனது போல கொடுத்து கொடுத்தும் மறத்துப்போய்விட்டார்கள் மக்கள்.

பிச்சை சம்பவத்திற்கு இன்னொரு உதாரணம்,பெங்களூருவில் இருக்கும் போது நிகழ்ந்தது. (இதுக்கு சிலர் என்னை திட்ட வரலாம்)

பெங்களூருவில் லோக்கல் பார்களில் திருநங்கைகள் வந்து கையை தட்டி , ஏன் கையை இழுத்து கூட காசு கேட்பார்கள், 5 ரூ கொடுத்தால் திட்டுவார்கள், கூசாமல் 50 ரூ கேட்பார்கள், சரினு 10 ரூ கொடுத்தால் திட்டிக்கொண்டே வாங்கிக்கொள்வார்கள், எல்லாம் சரக்கு அடிக்க தான், கொடுக்கவில்லை என்றாலும் திட்டுவார்கள்,அங்கு யாரும் அதனை தப்பாவே நினைக்க மாட்டார்கள், மிரட்டி வாங்கும் பிச்சைக்கு என்ன சொல்வது :-))

மும்பையில் கூட அது போல உண்டு எனக்கேள்வி.

Expatguru said...

வருகைக்கு நன்றி, வவ்வால். பம்பாயில் எண்பதுகளில் எனக்கே நீங்கள் கூறிய அனுபவம் ஏற்பட்டது. கிங் சர்கிளில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு அலிகள் கூட்டம் என்னை வழிமறித்தது. அதில் ஒருத்தி, "மரியாதையாக பணம் குடு, இல்லேன்னா அவுத்து காமிப்பேன்" என்று மிரட்டினாள். என்ன செய்வது, தலை எழுத்து என்று கொடுத்தேன். இவர்கள் ஏன் உழைத்து சம்பாதிப்பதில்லை?

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

fine

Anonymous said...

Dear blogger,
You can extend the analogy further to include philosophical thought ... In the. Illayaraja song Pitchai Pathiram he compares the human body to a begging bowl. I understand that here you are focussing on the mundane and materialistic aspect of our lives but in a new perspective- the profane could as easily become sacred! Just a thought anyway :)