Tuesday, 23 April 2013

விட்டதும் பெற்றதும்

இன்று எனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். தனது தங்கை ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் பயணம் செய்தாரம். விமானம் தரை இறங்கிய போது பெட்டியை காணவில்லையாம். இவர் தவித்து போய் புகார் கொடுத்தாராம். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு  விமான நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாம். இவர் சென்று பார்த்தால் கிழிந்த நிலையில் தனது பெட்டியை கண்டாராம்.

"அவர் ஏன் அந்த பெட்டியை பெற்றுக்கொண்டார், புகார் செய்யவில்லையா?" என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "யார் இதற்கெல்லாம் அலைவது என்று விட்டு விட்டாள்", என்றார்.

2007ம் வருடம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து செளதியில் உள்ள தமாமுக்கு இலங்கை வழியாக சென்றேன். கொழும்பில் ஒரு 5 நாட்கள் தங்கி விட்டு, ஊர் சுற்றி பார்த்து விட்டு அப்படியே செளதிக்கு செல்வதாக திட்டம். சுனாமி முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த படியால் பல சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்வதற்கே பயப்பட்டு கொண்டிருந்தனர். நான் பயணச்சீட்டை வாங்கும்போதே ஒரு முறைக்கு பல முறை விசாரித்து கொண்டதில் 40 கிலோ வரை சாமான்களை எடுத்து செல்லலாம் என்று கூறியிருந்தனர். அதன்படி, சென்னையிலிருந்து கிளம்பும்போது 37 கிலோ சாமான்களை எடுத்து சென்றேன். மறு பேச்சு பேசாமல் சென்னையில் ஏற்றி கொண்டனர்.

கொழும்பு சென்று 5 நாட்கள் சுற்றுலா முடிந்த பின் தமாமுக்கு செல்ல விமான நிலையத்துக்கு வந்தேன். கண்டிப்பாக 20 கிலோவுக்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்று கூறிவிட்டனர். "பயணச்சீட்டை வாங்கும் போதும் சென்னையிலும் இதை பற்றி யாருமே ஒன்றும் கூறவில்லை, இப்போது நான் எனது சாமான்களை யாரிடம் கொடுப்பேன்?" என்று கேட்டேன். நான் எவ்வளவோ மன்றாடியும் முடியவே முடியாது என்று அந்த விமான நிறுவன பெண் கூறிவிட்டாள். அது மட்டுமல்லாமல், நான் தமிழில் எனது மனைவியிடம் பேசுவதை பார்த்து விட்டு, கிண்டலாக மற்ற பெண்களிடம் என்னை பற்றி சிங்களத்தில் ஏதோ கூற அவர்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர். 

இலங்கையில் நான் 3 கிலோவுக்கு ஊர் சுற்றி பார்த்த போது வாங்கிய சாமான்கள் வேறு வாங்கி விட்டேன். அப்போது கூட மொத்தம் 40 கிலோ எடை தான் ஆயிற்று. சாமான்களை நான் எங்கு தான் விடுவது? வேறு வழியே இல்லாமல் 20 கிலோவுக்கு உண்டான அதிகப்படி பணத்தை  அபராதமாக அழுது விட்டு விமானத்தில் ஏறினேன். நல்ல வேளை என்னிடம் கடன் அட்டை இருந்ததால் தப்பித்தேன்.


தமாமில் இறங்கிய பின்பும் என்னால் இதை மறக்க முடியவில்லை. பணம் கட்டியது ஒரு புறம், கொழும்பில் அந்த பெண் என்னை எல்லோர் எதிரிலும் மிக கேவலமாக நடத்தியதில் அவமானத்தில் கூனி குறுகி விட்டேன். இவர்களை சும்மா விடக்கூடாது என்று மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது.

ஆனது ஆகட்டும் என்று காரசாரமாக ஒரு  மின் அஞ்சலை எழுதினேன். நான் எப்படி இலங்கை விமான நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டேன் என்றும், நான் எவ்வளவு எடுத்து கூறியும் அவர்கள் என்னை அவமானப்படுத்தியதையும், சுனாமி முடிந்து சில மாதங்களே ஆன இலங்கையில் சுற்றி பார்க்க வந்த எனக்கு நல்ல பாடம் என்றும் கன்னா பின்னாவென்று ஆவேசமாக எழுதிவிட்டேன். எழுதி முடித்தவுடன் இதை யாருக்கு அனுப்புவது என்று எண்ணினேன். இலங்கை விமான நிலைய அதிகாரிகளுக்கு இதை அனுப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களை விட மேலானவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தேன். 


கூகிள் தான் இருக்கவே இருக்கிறதே. இலங்கை அரசின் வலை தளத்தை நோண்டி பார்த்தேன். சுற்றுலா துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்று அனைவரது மின் அஞ்சல்களும் இருந்தன. அனைவருக்கும் சகட்டு மேனிக்கு அதே மின் அஞ்சலை அனுப்பினேன். "நான் பயணச்சீட்டை வாங்கும் போதே  பல முறை விசாரித்தேன். சென்னையில் விமானத்தை ஏறும்போது கூட யாரும் எதுவும் கூறவில்லை. கொழும்பில் தான் என்னை தவிக்க விட்டனர். அது மட்டும் இல்லாமல் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டனர். குடும்பத்துடன் இருந்ததால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றெல்லாம் எழுதியிருந்தேன்.

பிரஷர் குக்கரிலிருந்து விடுபட்ட நீராவி போல எனது கோபத்தை எல்லாம் கோர்த்து அவர்களை ஒரு வாங்கு வாங்கி விட்டேன். சரி, மின் அஞ்சலை அனுப்பியாகி விட்டது. இனி என்ன செய்வது? என்னால் என்னதான் செய்ய முடியும்? இனிமேல் ஸ்ரீலங்கா விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். என்னால் அவ்வளவுதானே முடியும்?

வாழ்க்கையில் பல முறை நம்மை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை பார்த்து இப்படி பொங்கியது உண்டு. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்ற வெறுப்பை ஒவ்வொரு சாதாரண மனிதனும் கண்டிப்பாக எப்போதாவது நினைத்திருப்பான். இந்த கையாலாகாத்தனம் நடுத்தர வர்கத்தினர் பெற்ற சாபமா? "தனி மனிதனாக நம்மால் என்னத்தை சாதித்து விட முடியும்" என்கிற தவிப்பா?

இந்த மின் அஞ்சல் அனுப்பி அந்த நிகழ்ச்சியை நானும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு திடீரென்று எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. ஸ்ரீலங்கா விமானத்தின் மிக மிக உயர்மட்ட அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. அவசரம் அவசரமாக அதை திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்களை இப்படி அலைக்கழித்திருக்க கூடாது. இது எங்களது தவறு தான். நீங்கள் 20 கிலோவுக்கு கட்டிய அதிகப்படி அபராதத்தை உங்களது செளதி முகவரிக்கு அனுப்புகிறோம்." என்று கூறியிருந்தார்.

வாடி, வா. உனது மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் எழுதியதால் அலறி அடித்து கொண்டு பதில் போட்டிருக்கிறாய் அல்லவா?

நான் உடனடியாக பதில் எழுதினேன். "நான் அபராதமாக கட்டிய பணத்தை எனது சென்னை முகவரிக்கே இந்திய ரூபாயாக அனுப்பிவிடுங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த பிரச்னை இதோடு முடிவடைந்து விடவில்லை. எனது பணத்தை தான் நீங்கள் திரும்ப கொடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். என்னை அலைக்கழித்ததற்கு நீங்கள் எப்படி இழப்பீடு கொடுக்க போகிறீர்கள்?" என்று மிகவும் காட்டமாக கேட்டு எழுதினேன். ஆனால் இம்முறை அந்த அதிகாரிக்கு மட்டும் மின் அஞ்சலை எழுதினேன். மன்னிப்பு கேட்டு விட்டானே, போனால் போகிறான் என்று தான்.

ஒரு மணி நேரத்தில் அதற்கு பதில் மின் அஞ்சல் வந்தது. "நீங்கள் கேட்டு கொண்டபடி உங்களுடைய பணத்தை சென்னையில் இருக்கும் ஸ்ரீலங்கா விமான நிறுவனம் உங்களது வீட்டுக்கு வரைவோலையாக அனுப்பும்படி நாங்கள் ஆணையிட்டிருக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க அனுபவம் மீண்டும் இனி யாருக்கும் நடக்க கூடாது என்று விமான நிலையத்தினருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம். இத்துடன் ஒரு கூப்பனை அனுப்பியுள்ளோம். எங்களுடைய சிறிய பரிசாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஸ்ரீலங்கா விமானத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது இந்த கூப்பனை விமான பணிப்பெண்ணிடம் கொடுக்கவும். எங்களது Duty Free கடையிலிருந்து  60 டாலருக்கு மதிப்பிலான உங்களுக்கு விருப்பமான எந்த பொருளையும் நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். நீங்கள் பயணம் செய்யப்போகும் விமான விபரங்களை எங்களுக்கு கூறினால், அந்த பொருளை உங்களுக்கு நாங்கள் கொடுத்து விடுகிறோம்" என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

செளதியிலிருந்து திருச்சிக்கு எனது நண்பன் கொழும்பு வழியாக அதற்கு அடுத்த வாரம் செல்ல இருந்தான். நான் அவனது பயண விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பினேன். "எனது சார்பாக எனது நண்பனிடம் ஒரு perfume பாட்டிலை கொடுத்து விடவும்" என்று எழுதியிருந்தேன்.

விடுமுறைக்கு சென்று திரும்பிய நண்பன் அந்த perfume பாட்டிலை என்னிடம் கொடுத்தான். ஆனால் அதை விட சுவாரசியம் என்ன தெரியுமா? அந்த பயணத்தில் அவனுக்கு ராஜ மரியாதையாம். இவனது இருக்கைக்கு வந்து மிக மிக பணிவுடன் விமான பணிப்பெண் அந்த perfume பாட்டிலை கொடுத்தாளாம். அது மட்டும் இல்லாமல், பயணம் முழுவதும் பத்து முறை இவனிடம் வந்து விசாரித்து விட்டு போனாளாம்! எல்லாம் ஒரு புகார் செய்த வேலை! எனது நண்பனுக்கு பதிலாக நானே இலங்கை விமானத்தில் மீண்டும் சென்றிருந்தால் எனக்கும் "ராஜ மரியாதை" கிடைத்திருக்குமோ அல்லது ஜனாதிபதிக்கு மின் அஞ்சல் எழுதியதற்காக  விமானம் கொழும்பில் இறங்கியவுடன்  "ராஜாதிராஜ" மரியாதை என்று உள்ளே தள்ளி இருப்பார்களோ, தெரியாது.

நமது பக்கம் நியாயம் இருக்கும் போது நாம் துவண்டு விடக்கூடாது. ஒரு வேளை நான் ஸ்ரீலங்கா விமான அதிகாரிக்கு மட்டும் எழுதியிருந்தால் அதற்கு பதில் வந்திருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த அனுபவத்தால் நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு மேல் உள்ளவர்களின் கவனத்துக்கு அதை கொண்டு செல்லுங்கள். உங்களது பக்கத்து நியாயத்தை கூறுங்கள். அவர்கள் நாக்கை பிடுங்கி கொண்டு சாகிற மாதிரி கேளுங்கள். மிக முக்கியமாக, அந்த புகாரை பல பெரிய மனிதர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பார்த்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராலும் பறிக்க முடியாது. இது நிச்சயம்!


 

2 comments:

ப.கந்தசாமி said...

உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன்.

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி