"கடங்காரா , நீ நாசமா போக" என்று எனது பாட்டி தபால் காரனை வசை பாடியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது எனது தூரத்து உறவினர் இறந்து விட்டார். அந்த மரண செய்தியை தந்தி மூலமாக கொடுத்த தபால்காரனுக்கு தான் இந்த வசவு. இதே தபால்காரன் மணி ஆர்டர் கொண்டு வந்து கொடுக்கும்போது அவனுக்கு பாட்டி பணம் கொடுத்து அனுப்பியதும் நினைவுக்கு வருகிறது.
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்பது போல கெட்ட செய்தியை கொண்டு வந்து கொடுத்த தந்திக்காரன் என்ன செய்வான்? ஆனால் அப்போதைய கால கட்டத்தில் தொலைபேசி கைபேசி, மின் அஞ்சல் என்று எதுவுமே கிடையாது. யார் வீட்டுக்காவது தந்தி வந்தால் அது கேட்ட செய்தியாக தான் இருக்கும் என்று எழுதப்படாத சட்டம் இருந்தது. தந்திக்காரன் வருகிறான் எல்லோரும் அலறுவார்கள். அவன் வீட்டை கடந்து செல்லும்போது "அப்பாடா, நம் வீட்டுக்கு இல்லை என்று ஒரு பெருமூச்சு விடுவார்கள். அதே சமயம் யார் வீட்டுக்கு போகிறான் என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்து விட்டு "ஐயோ பாவம்" என்று உச்சு கொட்டுவார்கள்.
ஒரு முறை ஆதித்தனார் கடலூரில் டாக்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு "தந்தி ஆபிஸுக்கு போ" என்று ஓட்டுனரிடம் கூறிவிட்டு அசதியில் தூங்கி விட்டாராம். வண்டி நின்றவுடன் திடுக்கிட்டு எழுந்திருந்து வெளியே பார்த்தால் தினத்தந்தி அலுவலகத்துக்கு பதிலாக அவன் மத்திய தந்தி அலுவலகத்தின் எதிரில் போய் நிறுத்தியிருந்தானாம். அப்போது தான் கடலூரில் தினத்தந்தி பிரதியை ஆரம்பிக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். "தந்தி" என்றாலே "தினத்தந்தி தான் மக்கள் நிற்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
1995ம் ஆண்டில் புதிய பம்பாய் நெருல் பகுதியில் வசித்து வந்தேன். எனது பக்கத்து வீட்டில் வயதான இருவர் இருந்தனர் அவருடைய ஒரே மகளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. மருமகன் இந்திய ராணுவத்தில் கேப்டனாக வேலை செய்து வந்தார். வடமேற்கு பகுதியில் சீன எல்லை அருகே எங்கோ ஒரு இடத்தில் அவர் தனது மனைவி குழந்தையுடன் இருந்தார். அப்போதெல்லாம் தொலைபேசி வசதி அவ்வளவாக இல்லை. எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறத்தில் STD பூத்கள் தான் இருந்தன. இராணுவ விதிகளின் படி எல்லையில் வேலை செய்பவர்கள் தான் எங்கே இருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியப்படுத்த கூடாது. அதனால் தனது மகளும் மருமகனும் எங்கே இருக்கிறார்கள் என்பதே இந்த தாத்தா பாட்டிக்கு தெரியாது. இவர்கள் போனில் பேசினால் முதலில் அது இராணுவ exchangeக்கு சென்று அங்கு இருப்பவர்கள் சரியான இடத்துக்கு connection போட்டு கொடுப்பார்கள் அனைத்து உரையாடல்களும் ஒட்டு கேட்கப்படும்.
தாத்தா என்னிடம் ஒரு முறை "உனக்கு BSNLல் யாரையாவது தெரியுமாப்பா? வீட்டில் ஒரு phone கூட இல்லை. என் பெண்ணிடம் பேச வேண்டும் என்றால் எஸ்.டிடி பூத் வரை செல்ல வேண்டி இருக்கிறது. என்னால் முடியவில்லை" என்று கூறினார். அப்படி கூறும்போதே அவரின் ஏக்கம் மனதை பிசைந்தது. ஒரு தொலைபேசி இணைப்பு பெறுவது அவ்வளவு கடினமாக இருந்த காலம் அது. அவருடைய மனம் நோகக்கூடாது என்பதற்க்காக நானும் "தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்" என்று கூறினேன். தனிமை மிகவும் கொடிது அதுவும் முதுமையில் தனிமை மிக மிக கொடிது.
பல நாட்கள் தாத்தா பாட்டி தனது மகள் எப்போது கூப்பிடுவாள் என்று
ஏங்கிக்கொண்டிருப்பார்கள். அப்படி அந்த மகள் கூப்பிடும்போது குழந்தை போல அவர்களின் மனம் குதூகலித்து விடும்.
ஒரு நாள் திடீரென்று தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு உதவி செய்ய அருகில் யாருமே இல்லை. நான் வேலைக்கு சென்றிருந்தேன். எனது மனைவியும் பாட்டியும் தாத்தாவை ஒரு ஆட்டோவில் உட்கார வைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். வழி முழுவதும் தாத்தா மூச்சு விட மிகவுமே திணறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ரொம்பவுமே முடியாமல் எனது மனைவி மீது சாய்ந்து விட்டார். அதற்குள் மருத்துவமனை வந்துவிட்டது. மாடியில் உள்ள மருத்துவமனைக்கு தாத்தாவை எப்படி அழைத்து செல்வது? எப்படியோ எனது மனைவியும் ஆட்டோக்காரரும் கஷ்டப்பட்டு அவரை தூக்கி மாடிப்படியில் ஏறி தாத்தாவை அங்கு உள்ள பெஞ்சில் படுக்க வைத்தனர். அவரை வந்து பரிசோதித்த மருத்துவர் அவர் சற்று முன் இறந்து விட்டார் என்று கூறினார். பாட்டியை சமாதான படுத்தவே முடியவில்லை.
மாலையில் நான் வீட்டுக்கு வந்த போது நடந்ததை மனைவி கூறினார். நான் பாட்டியை தேற்றி விட்டு உறவினர்களின் முகவரிகளை ஒரு டைரியில் எழுதிக்கொண்டேன். அவசரம் அவசரமாக தந்தி அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது தான் அவர்கள் தபால் அலுவலகத்தை மூடி கொண்டிருந்தார்கள். "இது மிகவும் சிறிய அலுவலகம். நீங்கள் வாஷி தந்தி அலுவலகத்துக்கு செல்லுங்கள் அவர்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பார்கள்" என்று கூறினார்கள். நான், "சார், இது மிகவும் அவசரம். ஒருவர் இறந்து விட்டார். அவருடைய மகளுக்கு முதலில் தந்தி கொடுக்க வேண்டும். மற்ற உறவினர்களுக்கும் கொடுக்க வேண்டும்" என்றேன்
நம்பினால் நம்புங்கள், நான் அப்படி கூறியவுடன் பூட்டி கொண்டிருந்த கதவை அவர் திறந்து கத்தையாக சில தாள்களை (forms) என் கையில் திணித்தார். "சார், இந்த தாள்களில் நீங்கள் முகவரிகளை மட்டும் எழுதி தாருங்கள். நான் இவை அனைத்திலும் அதே செய்தியை அடித்து வாஷி அலுவுலகத்தில் கொடுத்து விடுகிறேன்" என்றார். 5 மணி ஆனால் ஒரு நிமிடம் கூட வேலை செய்யாத அரசாங்க அலுவலர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மா மனிதர். மனித நேயம் இன்னும் சாகவில்லை. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான். தாத்தா, உண்மையிலேயே நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
சில வருடங்களில் இந்த தந்தி வெறும் அசுப செய்திகளுக்காக மட்டும் என்ற நிலை சிறிது சிறிதாக மாறியது. முதன் முதலில் வானொலியில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அழைப்பு தந்தி மூலமாக வந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சி அலாதியானது என்றே கூறலாம். எனக்கு செளதியில் வேலைக்கான இண்டர்வியூ விஷயத்தை ஏஜெண்ட் தந்தி மூலமாக தான் தெரிவித்தான்.
ஒரு கட்சியில் தலைவர் அடிக்கடி தனது தொண்டர்களுக்கு "டெல்லிக்கு தந்தி அனுப்புங்கள்" என்று கூறுவார். பிரதமர் அலுவலகத்தில் அப்படி வந்து சேரும் தந்திகளை அவர் பார்ப்பாரா என்பது வேறு விஷயம் எதோ தந்தி அலுவலகத்துக்கு இதனால் சிறிது லாபம் வந்தால் சரி தான். Post and Telegraph (P&T) என்று காலா காலமாக நமக்கு தெரிந்த தபால் நிலையங்களை திடீரென்று Department of Posts என்று மாற்றி விட்டார்கள். Morse Codeல் அடித்து அனுப்பிய தந்தியின் காலம் போய் கணினியிலேயே அடிக்க ஆரம்பித்தார்கள்.
காலத்தின் வெள்ளத்தில் தந்தி மெல்ல சாக ஆரம்பித்தது. தந்தியை விடுங்கள் இப்போதெல்லாம் யாரும் கடிதமே எழுதுவதில்லை என்றே சொல்லலாம். அது தான் எதற்கெடுத்தாலும் கைப்பேசி மூலமாகவோ மின் அஞ்சல் மூலமாகவோ விஷயத்தை கூறி விடுகிறார்களே. தந்தி போல இனி "சார் போஸ்ட்" என்ற குரலை கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை
Telex மாதிரி இப்போது தந்திக்கும் மூடுவிழா சொல்லி விட்டது நமது தபால் துறை. அடுத்த தலைமுறைக்கு தந்தி என்றால் என்ன என்பதை விளக்குவதே கடினமாக இருக்கும். ஜூரம் வரும்போது பற்கள் தந்தி அடிக்கின்றன என்று இனிமேல் கூற முடியாது. தந்திக்கம்பி என்றால் என்ன என்று இன்றைய தலைமுறையினரே கேட்கிறார்கள். தந்தி இறந்து விட்டது என்று இனி யாரிடம் தந்தி அடிப்பது?
8 comments:
குழந்தை பிறப்பு பற்றியும் தந்தி அடித்து தான் தெரிய படுத்தினார்கள் .ஜூன் 15 தான் தந்தியின் கடைசி நாள் என்று இப்போது தான் படித்தேன் , அதற்குள் உங்கள் கட்டுரை!! செம ஸ்பீடு தான்
குழந்தை பிறப்பு பற்றியும் தந்தி அடித்து தான் தெரிய படுத்தினார்கள் .ஜூன் 15 தான் தந்தியின் கடைசி நாள் என்று இப்போது தான் படித்தேன் , அதற்குள் உங்கள் கட்டுரை!! செம ஸ்பீடு தான்
தந்திக்கு முந்த வேண்டாமா, மனஸ்வினி?
Raju
Fantastic writing...enjoyed every word of it..
K.Sreenivasan
Nagasaki
நெகிழ்ச்சியான பதிவு. நெருல் தபால் அலுவலகம் ஒரு ஆச்சரியம்.
ராணுவத்தில் warzone தவிர அந்த மாதிரி ஒரு கட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. but understandable. இந்திய விமானப்படையில் கடைசிச் சுற்று இன்டர்வ்யூ போனபோது வீட்டுக்கும் அப்போது எனக்கிருந்த காதலிக்கும் போன் பேசியதை ஒட்டுக் கேட்டார்கள் - வேலையில் இருப்பவர்களை நிச்சயம் tap பண்ணுவார்கள்.
தந்தி வசதி இப்போது கிடையாதா? மூடிவிட்டார்களா?
தொலைந்து போனவற்றில் இதுவும் ஒன்று.
தினத்தந்தி - now that is a vision.
தந்தி சேவையை ஜூலை 15 முதல் நிறுத்த போகிறார்கள் அப்பாதுரை. NO MORE TELEGRAMS STOP
excellent
just do not want to do anything but to read your articles only one after the other exxxxcellent
ardent fan
charu
Post a Comment