Saturday, 8 March 2014

விடையில்லாத கேள்விகள்

சமீபத்தில் மெட்ராஸில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு பொருட்காட்சிக்கு செல்ல நேர்ந்தது. வழக்கம் போல பல மாநிலங்களில் இருந்தும் கடைகள் திறந்திருந்தனர். விதவிதமான கைவினை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். பொதுவாக இது போன்ற கடைகளில் நான் எதையும் வாங்குவதை விட வேடிக்கை பார்த்து கொண்டே கடை கடையாக செல்வது தான் வழக்கம். ஏனென்றால், திரும்ப திரும்ப துணி கடை, பாத்திர கடை என்று அலுத்து விட்டது. கைவினை பொருட்கள் என்று விளம்பரம் செய்திருந்ததால், என்னதான் இருக்கிறது பார்ப்போம் என்று மனைவியுடன் சென்றிருந்தேன்.

ஒவ்வொரு கடையாக பார்த்து கொண்டு வரும்போது, ஒரிசா மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் வைத்திருந்த கடை என்னை கவர்ந்தது. வாசலில் மிக அழகான ஒரு தரை விரிப்பை பிரமாதமாக நெய்து தொங்க விட்டிருந்தார். ஒரு நிமிடம் அதை நின்று ரசித்து விட்டு கடைக்குள் பார்த்த போது ஒரு மூலையில் வயதான பெண்மனி ஒருவர் காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரை பார்த்தால் கண்டிப்பாக 75 வயதுக்கு மேல் இருக்கும். முழுவதும் நரைத்த முடி. ஆடம்பரமே இல்லாமல் ஒரு பருத்தி சேலையை உடுத்தி கொண்டு வேலையில் மும்முரமாக இருந்தார். முகத்தில் பல வருடங்களின் அனுபவக்கோடுகள் சுருக்கங்களாக பதிந்திருந்தன. தலையை நிமிர்ந்து என்னை பார்த்து லேசாக ஒரு புன்முறுவல் பூத்தார். ஒரு கணம் என்னுடைய பாட்டியை போலவே இருந்தார். 


அந்த தரை விரிப்பை காண்பித்து, "இது மிகவும் அழகாக இருக்கிறது. இதை நெய்தவர்கள் உங்கள் கிராமத்தில் இருக்கிறார்களா?: என்று கேட்டேன். அதற்கு அந்த பாட்டி புன்னகையை நிறுத்தாமல், "இல்லை தம்பி. இதை நானே நெய்தேன். இது போல நிறைய நெய்திருக்கிறேன்" என்று கூறினார். பாட்டியின் இந்த பதில் எனக்கு வியப்பை அளித்தது. இந்த காலத்தில், இந்த வயதில் வீட்டில் சும்மா முடங்கி கிடக்காமல் தன் சுய உழைப்பால், தன்மானத்தை இழக்காமல் சொந்த மாநிலத்தை விட்டு இத்தனை தூரம் வந்து கடை வைத்திருப்பதே ஒரு சாதனை தான். 

பாட்டியின் இந்த பதில், பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை என் மனதில் அசை போட வைத்தது. 1992ம் வருடம் நான் சூரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் திருமணமாகி சில மாதங்களே ஆன நேரம். திருமண‌ வாழ்க்கையை துவங்கும் அந்த காலகட்டத்தில் எனது வருமானமும் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லி கொள்ளும்படி இல்லை. ஆனால் இருக்கும் வசதிகளுடன் நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக இருந்தோம். 

சூரத் என்னதான் ஒரு மாவட்ட தலைநகரமாக இருந்தாலும் இன்றளவும் ஒரு பெரிய கிராமம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு ஒரு சந்தை நடக்கும். அதுவே ஒரு திருவிழா மாதிரி இருக்கும். சந்தையில் கிடைக்காத பொருளே இல்லை என்று சொல்லலாம். அக்கம் பக்கத்தில் இருந்த கிராமங்களில் இருந்து எல்லா வியாபாரிகளும் சந்தைக்கு வந்து பொருட்களை விற்பதும் வாங்குவதும் ஒரே கூட்டமாக இருக்கும். அந்த காட்சியை காண்பது, மெட்ராஸிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பழைய கிராமபோன் தகடுகள், தபால் தலைகள், அபூர்வமான நாண‌யங்கள், அந்த காலத்து தாத்தா கடிகாரம், பேசும் கிளி, வண்ண மீன்கள், என்று விதவிதமாக சாதாரண கடைகளில் கிடைக்காத சாமான்கள் எல்லாம் சந்தையில் கிடைத்தன‌. பஞ்சு மிட்டாய்க்காரன், மாங்காய் தலையன், பாம்பாட்டி, ரங்கராட்டினம், மோடி மஸ்தான், குளிர்பான கடை என்று பார்க்கவே வித்யாசமான  மனிதர்களும் கடைகளும், கிட்டத்தட்ட நம்மூர் திருவிழா மாதிரியே சூரத்தின் சனிக்கிழமை சந்தை இருந்தது. அதனால், சந்தைக்கு செல்வதே ஒரு மிக பெரிய பொழுது போக்காக இருந்தது என்றே சொல்லலாம். 


ஒரு முறை நானும் என் மனைவியும் சந்தைக்கு சென்று திரும்பி கொண்டிருக்கும் போது தெரு ஓரத்தில் வரிசையாக மர பொம்மைகளை   தரையில் அடுக்கி வைக்க பட்டிருந்தன. அவற்றை நான் ஒரு நிமிடம் கூட பார்த்திருக்க மாட்டேன். எனது ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்குள் வேகவேகமாக ஒருவன் ஓடி வந்தான். "ஐயா, இதை வாங்கி கொள்ளுங்கள்" என்று தனது கையில் இருந்த ஒரு மர பொம்மையை காண்பித்தான். நான், "வேண்டாம்" என்று கூறி வண்டியை கிளப்பும் முயற்சியில் இருந்தேன். வண்டி ஸ்டார்ட் செய்ய முடியாமல் மக்கர் செய்தது. நான் எரிச்சலுடன் அதை தள்ளி கொண்டே சென்றேன். இவன் என் பின்னால் விடாமல் துரத்தி கொண்டே  வந்தான்.

 "ஐயா, தயவு செய்து வாங்கி கொள்ளுங்கள்" என்றான். நானோ சற்றே கோபமாக, "அதான் வேண்டாம் என்று சொல்லி விட்டேனே" என்று குரலை உயர்த்தி சொன்னேன். அப்போது தான் அவன் முகத்தை பார்த்தேன். சுற்றுப்புற கிராமத்திலிருந்து வந்த பழங்குடி ஆள் என்று தெரிந்தது. அவன் சாப்பிட்டே பல நாட்களாகி இருக்கும் போல இருந்தது. சாலை ஓரத்தில் விற்றுப்போகாத மர பொம்மைகளை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன்."ரொம்ப நல்ல பொருள் ஐயா, தயவு செய்து வாங்கி கொள்ளுங்கள்" என்று கெஞ்சாத குறையாக என் கையில் கிட்டத்தட்ட திணித்தே விட்டான். இது என்னடா வம்பாக போச்சே, சாலையில் அடுக்கி வைத்திருந்த பொருளை பார்ப்பது கூட தப்பா, என்று நினைத்து கொண்டே, அவனிடம் விலையை விசாரித்தேன். "150 ரூபாய்" என்றான். 

எனக்கோ, வாங்க விருப்பமே இல்லை. அது மட்டுமல்லாமல் அப்போதிருந்த கால கட்டத்தில் நான் வாங்கிய சம்பளத்துக்கு 150 ரூபாய் கொடுத்து எதற்கும் பிரயோஜனப்படாத ஒரு அலங்கார பொருளை வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. அவனை எப்படியாவது தட்டி கழிக்க வேண்டும். மர பொம்மையை நான் சரியாக கூட பார்க்கவில்லை. அவனை எப்படியாவது விரட்டி விட வேண்டும் என்பதே என் மனதில் பிரதானமாக இருந்தது. "20 ரூபாய்க்கு தருகிறாயா? அதற்கு மேல் சல்லி காசு கூட கொடுக்க முடியாது" என்றேன். 150 ரூபாய் பொருளை யாராவது 20 ரூபாய்க்கு கொடுப்பார்களா? அதனால் தான் நான் வேண்டுமென்றே அப்படி  கூசாமல் கேட்டேன். மெட்ராஸாக‌ இருந்தால் "போயா சாவு கிராக்கி" என்று திட்டிக்கொண்டே சென்றிருப்பான். எனக்கும் அது தானே வேண்டும். என்னை விட்டால் போதும், எப்படியாவது வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு சென்றால் சரி. எப்படியாவது இவனை ஒழித்து விட்டு நாம் கிளம்பி விடவேண்டும். இல்லை என்றால் நம்மை துரத்தி கொண்டே வருவான் என்பது என் எண்ணம்.

ஆனால் அடுத்த நொடியே அவன் "சரி ஐயா" என்று 20 ரூபாய்க்கு அதை விற்க ஒப்புக்கொண்டு விட்டான். பேரமே பேசவில்லை. இப்போது எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. நானோ அவனை தட்டி கழிப்பதற்காக 20 ரூபாய் என்று வாய்க்கு வந்ததை கூறிவிட்டேன். இப்போது அவன் ஒப்பு கொண்டு விட்டான். நான் வாங்கியே தீர வேண்டிய கட்டாயம். எனது மனைவி "அவனை பார்த்தால் பாவமாக இருக்கிறது. வாங்கி விடுங்கள்" என்று கூறினாள். நான் வேண்டா வெறுப்பாக 20 ரூபாயை அவனிடம் கொடுத்து அந்த மர பொம்மையை வாங்கி விட்டேன்.

வீட்டுக்கு வந்த பிறகு அந்த பொம்மையை முழுமையாக அப்போது தான் பார்த்தேன். ஏதோ புத்தர் முகம் போல இருந்தது. அந்த முகத்தில் உளியால் அழகாக  கண்கள், காதுகள், தோடுகள் என்று செதுக்கி விடப்பட்டிருந்தது. அந்த பொம்மையை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைத்து விட்டு  விட்டேன். 

சில மாதங்களுக்கு பிறகு மெட்ராஸிலிருந்து எனது மாமனாரும் மாமியாரும் வந்திருந்தனர். ஒரு நாள் எதேச்சையாக அந்த பொம்மையை பற்றி எனது மாமியார் விசாரித்தார். நான் வேண்டா வெறுப்பாக "சந்தையில் ஒருவன் 20 ரூபாய் கொடுத்து என் தலையில் இதை கட்டிவிட்டான். நீங்கள் வேண்டுமானல் இதை எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறினேன். அவர் அதை எடுத்து கொண்டார். அதன் பிறகு அதை பற்றி மறந்தே போய் விட்டேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு நான் மெட்ராஸுக்கு வந்தபோது என் மாமியார் வீட்டுக்கு சென்றேன். அப்போது ஒரு ஓரத்தில் பளபளவென்று பிரமாதமாக ஒரு பொம்மை இருந்தது. "இது என்ன தெரிகிறதா?" என்று என் மாமியார் கேட்டார். எனக்கு சத்தியமாக ஞாபகமே இல்லை. இன்று காலை என்ன சாப்பிட்டேன் என்பதே எனக்கு நினைவில் இருப்பதில்லை, இதெல்லாம் போய் யார் ஞாபகம் வைத்திருப்பார்கள்? "சூரத்தில் 20 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கினீர்களே, அந்த பொம்மை தான் இது" என்றார். அப்போது தான் அந்த பொம்மையை அருகில் சென்று பார்த்தேன். பார்க்க மிக பிரமாதமாக இருந்தது. அதை வார்னிஷ், பாலிஷ் எல்லாம் செய்து வைத்திருந்தார் என் மாமியார். அதற்கே 60 ரூபாயாகி விட்டதாம். ஒரு சாதாரண மர சிற்பம் இத்தனை வேலைப்பாடுகளுடன் இவ்வளவு அழகாக இருக்குமா என்று அன்று வியந்தேன். அப்போது அதை என்னிடம் விற்ற அந்த பழங்குடி கிராமத்தானின் முகம் மனதின் முன் ஆடியது.

பாவம், அவனுக்கு என்ன வறுமையோ. நான் அந்த பொம்மையை 20 ரூபாய்க்கு கூட வாங்காமல் போயிருந்தால் அன்று அவன் பட்டினி கிடந்திருப்பானோ? வறுமையால் மனிதர்கள் என்னென்ன செய்கிறார்கள்! அவனுடைய குடும்பத்தை இதை விற்று தானே அவன் காப்பாற்ற வேண்டும்? இந்த பொம்மையை மெட்ராஸின் எந்த கைவினை ஷோரூமில் போய் பார்த்தாலும் குறைந்தது 500 ரூபாய்க்கு விற்பார்கள். அதை நமது நாகரீக மாந்தர்கள் பேரம் பேசாமல் வாங்குவார்கள். ஏனென்றால் அது "கடை அல்லவா? பொம்மையை செய்தவனை பற்றி யார் நினைக்கிறார்கள்?

நம்மில் பலருக்கு அந்த பொம்மை சிற்பியின் நிலைமைதான் என்றே நினைக்கிறேன். சில விதிவிலக்குகளை தவிர நம்மில் பெரும்பாலோர் திறமை மிக்கவர்கள் தான். ஒழுக்கமுடையவர்கள் தான். நேர்மையானவர்கள் தான். ஆனால், அனைவருக்கும் அவரவர் விரும்பிய அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடிவதில்லை. சமய சந்தர்ப்பம் அந்த மாதிரி ஆகி விடுகிறது. சிலர் மிக சிறிய வயதிலேயே மிக பெரிய பதவிகளை அடைந்து விடுகிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் சிலர் சொந்த தொழில் செய்து செழிப்பாக இருக்கிறார்கள். சாதாரண ரிக்ஷா ஓட்டுபவன் பணக்கார பெண்ணை மணந்து கோடீஸ்வரனாக மாறுவது எல்லாம் எம்.ஜி.ஆர். படங்களில் வேண்டுமானாலும் நடக்கலாம். யதார்த்த வாழ்க்கையில் இப்படி நடப்பதே இல்லை. இபபடி பெரிய நிலையை அடைந்தவர்கள் எல்லாம் மேதைகளும் அல்ல, சாதாரண நிலையில் இருப்பவர்கள் திறமையற்றவர்களும் அல்ல. சிலருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைக்கிறது, பலருக்கு அது கிடைப்பதில்லை, அவ்வளவுதான் வித்யாசம். ஒரு வேளை அந்த மர சிற்பத்தை விற்றவன் ஒரு பெரிய நகரத்துக்கு வந்து கடையை வைத்திருந்தால் இந்நேரம் மிக பெரிய ஆளாக வந்திருப்பானோ? யாருக்கு தெரியும்? 

ஏன் இவ்வாறு நடக்கிறது?  இதை "விதி" என்பதா, "வினை" என்பதா? வாழ்க்கையின் தேடலில் சில கேள்விகளுக்கு விடையே இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உயர்ந்த நிலை அது தான் பிரச்சனையே... எது உயர்ந்த நிலை...? எதற்காக உயர்ந்த நிலை...? முடிவில் திருப்தியில்லாத நிலை தான் உயர்ந்து நிற்கும்... காரணம் ஒப்பிடுதல்...

மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் : ஒப்பிட்டுப் பார்த்தல்

உன்னை பிறரோடு நீ ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் சக்தி விரயமாகிறது.

உன்னை உன்னோடு ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் வளர்ச்சி நிகழ்கிறது. - புத்தர்

நன்றி... வணக்கம்...

Expatguru said...

உண்மை தனபாலன். "பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலை" என்று எழுதியிருக்க வேண்டுமோ? ஒப்பிடுதலே பிரச்னைகளுக்கு காரணம் என்று சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சராசரி மனிதர்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவது ஒப்பிட்டு நினைக்க‌ தோன்றுவது இயற்கை தானே?

Thamizhan said...

நான் பணத்தைத் துரத்து துரத்து என்று துரத்தினேன்,இருந்த பணமும் போனது. மகிழ்ச்சியைத் துரத்தினேன்,மகிழ்ச்சியும் கிடைத்தது , அட, பணமும் போகாமலிருந்தது !

காரிகன் said...

தகுதியானவர்களே மேலிடத்தில் இருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது. மேலே இருப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள் கிடையாது என்பது என் எண்ணம். நீங்கள் கேட்கும் கேள்வி எல்லோரிடமும் இருப்பதுதான். இதற்கு விதி என்று சொல்லிவிட்டு மனிதத்தை மறுப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்காது. நல்ல பதிவுக்கு நன்றி. மரத்தில் செய்யப்பட்ட சிற்பத்தின் பின்னாலிருந்த மனிதனை நீங்கள் நினைவு கொள்வதே ஒரு விதத்தில் பாராட்டப்படவேண்டியதுதான்.

Expatguru said...

நன்றி, தமிழன்.

நன்றி, காரிகன்.

G.M Balasubramaniam said...


ஒரு சொல் வழக்கு கேட்டிருக்கிறேன். “ஆள் விலை, கல் விலை” என்பார்கள். ஒரு பொருளுக்கு மதிப்பு என்பது அதை வாங்குபவனையும் விற்பவனையும் பொருத்தது. அந்த சூரத் வியாபாரி உங்களைத் தவறாக எடை போட்டு ரூ150/- என்றிருக்கலாம் நீங்கள் கொடுத்த ரூ.20 /- அவனது ஒரு வேளை பசியைப் போக்கி இருக்கலாம்.உங்களிடம் அந்தபொம்மையை விற்காமல் இருந்தால் அவன் பசியால் வாடி இருப்பான் என்பது உங்கள் கற்பனயாகக் கூட இருக்கலாம் இதை எல்லாம் நீங்கள் கொண்ட கழிவிரக்கம் தவறு என்பதற்காகச் சொல்லவில்லை. யதார்த்த உலகில் எதுவும் சரி தவறு என்று சொல்ல முடிவதில்லைமுடிவில் நான் நினைப்பது அந்த பொம்மையின் விலை அது இருக்குமிடத்தைப் பொறுத்தது. உங்கள் இரக்க சிந்தனை வரவேற்கப் பட வேண்டியதே. அதனால் நாம் ஏமாற்றப்பட்டால் கவலை வேண்டாம். உங்கள் எண்ணம் நல்லதாக இருந்திருக்கிறதே. வாழ்த்துக்கள்.

Expatguru said...

வாங்க ஜி.எம்.பி.சார். தரையில் வைத்திருந்த ஏகப்பட்ட விற்றுப்போகாத பொம்மைகளை பார்த்தும் அவன் என்னிடம் கெஞ்சிய விதத்தை பார்த்தும் அவன் ஏமாற்றுபவன் போல தெரியவில்லை. இருந்தாலும், வெறும் வார்னிஷும் பாலிஷும் செய்வதற்கே மெட்ராஸில் 60 ரூபாய் கேட்டார்கள்.

இது ஒரு புறம் இருக்கட்டும். நம் நாட்டில் விவசாயிகளின் கதியும் இது தான் என்று நினைக்கிறேன். பொருளின் விலையை விட நடுவில் புகுந்து விளையாடும் இடைத்தரகர்களினால் கடைசியில் வாங்குபவன் பல மடங்கு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இதில் விவசாயிக்கு கிடைப்பதோ வெகு சொற்பமே. நகரங்களின் கடைகளில் விற்கப்படும் கலை பொருட்களிலும் இது போல தானோ என்னவோ.

bandhu said...

எல்லாமே விடையில்லாத கேள்விகளே.. Life is really not fair!

Expatguru said...

நன்றி, bandhu.

Kalyanasundaram said...

Really excellent ....behind every fortune there is a crime ..i have read...
Now i realize that even behind every purchase there is a human angle
The event shows the good mind of you and your wife

நாடோடிப் பையன் said...

A thought provoking entry.

As a policy, I try not to haggle with street vendors in India. I love haggling; but not with them.

Expatguru said...

நன்றி, நாடோடி பையன் (நடுவில் 'ப்' வரக்கூடாது).

This apart, I think you must sometimes use your judgment as there are some street vendors (not all of them) who take you for a ride too.

Mahesh Prabhu said...

விலை குறைவாக வாங்கும் பொழுது, நல்ல வேளை கடைக்காரனிடம் ஏமாறவில்லை என்று நினைத்தது உண்டு..

எல்லா நேரங்களிலும் அது உண்மை இல்லை போலும் நல்ல சிந்தனை சார்...

rameez said...

மிக யதார்த்தமான பதிவு.. அருமை

Expatguru said...

நன்றி, ரமீஸ்