Friday 21 March 2014

மறக்க முடியாத மூர் மார்கெட்

"கடங்காரா!  என்று என் பாட்டி வைதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. வீட்டில் புதிதாக வாங்கிய நாய்க்குட்டிக்கு மெட்ராஸ் மூர் மார்கெட்டிலிருந்து பிஸ்கெட் வாங்கி வந்தோம். நாய் பிஸ்கெட் என்பது அந்த நாட்களில் புதிதான ஒன்றாக இருந்தது. மூர் மார்கெட்டில் மட்டும் தான் அப்போதெல்லாம் கிடைக்கும். எனது அண்ணன் வாங்கி வந்த பிஸ்கெட் பாக்கெட்டை நான் பிடுங்கி கொண்டு ஓட என்னை அவன் துரத்த எங்கள் இருவரையும் நாய்க்குட்டி பாட்டியின் மேல் ஏறி குதித்து துரத்த வீடே களேபரமாக ஆனது.

மெட்ராஸ் மூர் மார்கெட் என்பது எவ்வளவு பிரபலம் என்றால், அங்கே குண்டூசி முதல் பியானோ வரை எல்லாமே கிடைக்கும் என்பது தான். வேறு எங்குமே கிடைக்காத புத்தகங்கள் எல்லாம் அங்கே கிடைத்தது. இணையதளம் என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. ஆனால் மூர் மார்கெட்டில் இருந்த புத்தக கடைக்காரர்களிடம் நீங்கள் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அவர்கள் அதற்கான சரியான புத்தகத்தை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். ராணி முத்து காமிக்ஸ் முதல் அரிய‌ பொறியியல் புத்தகங்கள் வரை எல்லாமே அங்கு கிடைத்தது. 

மெட்ராஸ் கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் நான் படித்து கொண்டிருந்த போது என்.ஸி.ஸி.யில் சேர்ந்திருந்தேன். ஒரு முறை 'பரேடுக்கு' சென்று பஸ்ஸில் வரும்போது எனது தொப்பியை தவற விட்டு விட்டேன். எனக்கு வெலவெலத்து விட்டது. எப்படியாவது தொப்பியை அடுத்த பரேடுக்குள் கண்டு பிடித்து விடவேண்டும். இல்லையென்றால் பள்ளியில் மிக கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும். என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது தான் மூர் மார்கெட்டின் நினைவு வந்தது.




அங்கு சென்று புதிதாக ஒரு தொப்பியை வாங்கிய பிறகு தான் உயிரே வந்தது. இது போன்ற தொப்பி வேறு எந்த சாதாரண‌ கடையிலும் கிடைக்காது. மூர் மார்கெட்டுக்கு சென்றால் ஒரு பொருள் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்த அனுபவம் எனக்கு கற்று தந்தது.

மூர் மார்கெட்டில் கிட்டத்தட்ட ஒரு 750 கடைகள் இருந்தன. வெளி சுற்றில் பல கடைகளும் அதே போல உள் சுற்றில் இன்னும் பல கடைகளும் இருந்தன. அண்டை மாநிலங்களில் இருந்து பல சுற்றுலா பயணிகள் தினமும் இங்கே வந்த வண்ணம் இருந்தார்கள். பிரதான கட்டிடத்தின் பின் புறம் பார்த்தால் ஒரு சிறிய zoo போல இருக்கும். அங்கே குரங்கு, கிளி, வண்ண மீன்கள், ஆமைகள், முயல்கள் என்று பலவிதமான மிருகங்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். பறவைகளை கூண்டுக்குள் வைத்து விற்பதால் எங்கள் வீட்டில் அவற்றை வாங்குவதற்கு தடை விதித்திருந்தார்கள்.

நாங்கள் அடம் பிடித்ததால் போனால் போகிறதென்று மீன் தொட்டி ஒன்றை எங்களது பெற்றோர் வாங்க அனுமதித்தார்கள். வண்ண மீன்களை அந்த மூர் மார்கெட்டில் தான் வாங்கினோம். அவற்றை பார்ப்பதற்கு எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே வரும். ஏஞ்சல் மீன், தங்க மீன் என்று ஏகப்பட்ட மீன் வகைகளை வைத்திருந்தோம்.

இந்த மீன் தொட்டியில் பிரச்னை என்னவென்றால், அந்த தண்ணீரை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் வீடே நாறிவிடும். மீன்களின் கழிவை அகற்றுவதற்கு ஒரு சிறிய நத்தையையும் வாங்கி அதே தொட்டியில் விட்டோம். மீன்களின் கழிவுதான் நத்தைகளுக்கு உணவாம். உவ்வே! மீன் தொட்டியை வாங்கும் போது அனுமதி கொடுத்த எங்கள் பெற்றோர் அதற்கு பராமரிக்கும் செலவை பார்த்து வெறுத்து போனார்கள். இருந்தாலும் போனால் போகிறது, பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள் என்று பொறுத்து கொண்டனர்.

ஒரு முறை தெரியாத்தனமாக Fighter fish என்ற கறுப்பு நிற மீன்கள் இரண்டை வாங்கி அந்த தொட்டியில் விட்டு விட்டோம். மறு நாள் பார்த்தால் தொட்டியில் அந்த இரண்டு கறுப்பு மீன்களை தவிர வேறு எந்த மீனையும் காணோம். மற்ற‌ எல்லாவற்றையும் ஸ்வாஹா செய்து விட்டது. அப்போது தான் ஒரு மீன் மற்ற மீனுக்கு இறை என்று எங்களுக்கு புரிந்தது. இது தான் சாக்கு என்று எங்கள் வீட்டில் மீன் வாங்க தடை விதித்து விட்டார்கள்.

அதற்கு பிறகு தான் புதிதாக பிறந்திருந்த நாய்க்குட்டி ஒன்றை எங்கிருந்தோ எங்கள் அண்ணன் எடுத்து கொண்டு வந்து விட்டான். பார்க்க மிக அழகாக இருந்ததால், அதை வைத்து கொள்ள வீட்டில் அனுமதித்தார்கள். அந்த நாய் சில மாதங்களிலேயே பெரிதாக வளர்ந்து விட்ட பிறகு அதற்கு தீனி போட நாய் பிஸ்கெட் கிடைக்கிறது என்று யாரோ கூறினார்கள். இதே மூர் மார்கெட்டில் தான் அந்த பிஸ்கெட்டும் கிடைத்தது. அதற்கு பிறகு நடந்தது தான் முதல் பத்தியில் நான் கூறியது.

இந்த மூர் மார்கெட்டில் அந்த காலத்து கிராமபோன் ரெகார்டுகள், தாத்தா காலத்து பெரிய்ய்ய்ய பெண்டுலத்துடன் 'டொய்ங் டொய்ங்' என்று அடிக்கும் கடிகாரங்கள், பல அரிய நாணயங்கள், தபால் தலைகள் என்று விதவிதமான கடைகள் இருந்தன. ஒரு முறை மூர் மார்கெட்டுக்கு சென்று வந்தால் அதை விட சிறந்த பொழுது போக்கு கிடையாது என்று இருந்தது.

கிளி விற்கும் கடைகள் மிகவும் பிரசித்தமாக இருந்தன. அதில் ஒரு கடையில் பேசும் கிளியை வைத்திருந்தார்கள். கூட படிக்கும் நண்பர்கள், கிளி நாம் சொல்வதையே திரும்ப சொல்லும் என்று கூறியிருந்தார்கள். அதை சோதித்து பார்ப்பதற்காக ஒரு கடையில்  யாரும் பார்க்காத நேரத்தில் நான் அதன் அருகில் சென்று 'கேன பயலே!' என்று மெதுவாக கூறினேன். அவ்வளவு தான். கிளி உடனே அதை 'டக்' என்று பிடித்து கொண்டு அதையே மீண்டும் மீண்டும் கத்த கடையில் இருந்த அனைவரும் திரும்பி பார்க்க, பின்னால் இருந்து எனது அண்ணன் முதுகில் பட் என்று ஒன்று போட, ஒரே கலாட்டா தான். அந்த கடையில் இருந்து அவசரம் அவசரமாக இருவரும் வெளியேறி பல கடைகள் கடந்து போகும் வரை அந்த கிளி அதையே கத்தி கொண்டிருந்தது இன்னும் விசேஷம்! 

மூர் மார்கெட் இருந்த இடம் இரயில்வேக்கு சொந்தமானதாகும். ஆனால் வியாபாரிகள் கடை வைத்து விட்டதனால் பல முறை இரயில்வே அந்த இடத்தை கைப்பற்ற முயற்சித்து தோல்வி அடைந்தார்கள். இப்படி இருந்த காலத்தில் தான் அந்த மறக்க முடியாத நிகழ்ச்சி நடந்தது.

1985ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி திடீரென்று எங்கோ தீ பற்றிக்கொண்டு மளமளவென்று சில மணி நேரங்களிலேயே அந்த அற்புதமான கட்டிடம் தீக்கிரையானது. சென்னையில் இருந்த அத்தனை தீயணைப்பு வண்டிகளும் போராடிய பிறகு கூட ஒன்றையும் காப்பாற்ற முடியவில்லை. 



கண் எதிரே தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்த வியாபாரிகள் அதற்கு பிறகு நிமிரவே முடியவில்லை. தீ எல்லாம் அணைந்து சில நாட்களுக்கு பித்து பிடித்தது போல வியாபாரிகள் அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது நெஞ்சை உலுக்க வைத்த காட்சி. இரயில்வே செய்த சதி என்றார்கள், சிலர் மின் கசிவு என்றார்கள். எது ஆனால் என்ன, மெட்ராஸின் ஒரு மிக பெரிய பொக்கிஷம் நிரந்தரமாக காணாமல் போய் விட்டது என்பது தான் நிதர்சனம். வாழ்க்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால், வாழ்நாள் முழுவதும் உழைத்து உருவாக்கிய‌ ஒன்று, சில நிமிடங்களில்  கண் முன்னே வீழ்வதை பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பது தான்.

பின் புறம் இருந்த அல்லி குளத்தை மூர் மார்கெட்டின் இடிபாடுகளை வைத்து நிரப்பினார்கள். அந்த இடத்தில் அரசாங்கம் வேறு ஒரு கட்டிடத்தை நிறுவியது. ஆனால் வீழ்ந்த வியாபாரம் வீழ்ந்தது தான். பழைய மூர் மார்கெட்டுக்கு இருந்த மவுசு அல்லி குள மார்கெட்டுக்கு இல்லாததால் பல கடைகள் காலியாகவே இருந்தன.




 தீயில் கருகியது புத்தகங்களும் பொருட்களும் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான குடும்பங்களும் மெட்ராஸின் ஒரு மிகப்பெரிய அங்கமும் என்பது தான் உண்மை. 

மீண்டும் அதே இடத்தில் புதிய மூர் மார்கெட் வந்து விடக்கூடாது என்பதில் இரயில்வே மிகவும் தீவிரமாக இருந்தது. உடனடியாக அந்த இடத்தில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தை கட்ட ஆரம்பித்தார்கள். அது தான் இன்று நீங்கள் பார்க்கும் முன்பதிவு கட்டிடம். 


அந்த கட்டிடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் எரிந்து போன மூர் மார்கெட்டின் மாடல் ஒன்றை இரயில்வே நிறுவியது. மூர் மார்கெட் என்று மெட்ராஸில் ஒரு இடம் இருந்தது என்று இன்றைய தலைமுறைக்கு காண்பிக்க அதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. கால வெள்ளத்தில் அடித்து கொண்டு போய் விட்ட பல புராதனங்களில் மெட்ராஸ் மூர் மார்கெட்டும் ஒன்று. வெள்ளம் அடித்து கரையில் ஒதுக்கியது வெறும் அதன் பசுமையான நினைவுகளை மட்டுமே.






23 comments:

Unknown said...

1985 பெப்ரவரி மாதம் நான் முதன் முதலாக இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தேன் . வந்தவுடன் எனக்கு தேவையான படுக்கை விரிப்பு , போர்வை போன்றவற்றை மூர் மார்கெட்டிலேயே வாங்கியிருந்தேன் . அதற்கு அடுத்த நாள் மூர்மார்க்கெட் தீக்கைரையாகி முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி போனதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது .
அடுத்த நாள் மூர்மார்க்கெட் அமைந்திருந்த பகுதிக்கு போயிருந்தேன் . மார்க்கெட் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து போயிருந்தது .இரும்பு தொப்பி அணிந்த ஆயுதம் தாங்கிய போலிசாரின் காவல் காவலிலும் கட்டுப்பாட்டிலும் அந்த பகுதி இருந்தது .

இலங்கையில் நான் இருந்தபோது விகடன் , குமுதம் போன்ற பத்திரிகைகள் மூலம் அறிமுகாமாகியிருந்த மூர்மார்க்கெட் , பின் சென்னைக்கு நான் வந்த சில நாட் களிலேயேநேரில் பார்க்க கூடிய வாய்ப்பை பெற்ற நான் அடுத்த நாளிலேயே எரிந்து சாம்பலானது இன்றும் ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது.

Expatguru said...

பாலகுமார், மூர் மார்கெட்டின் அனுபவத்தை உணர்ந்தவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரர்கள் தான்.

சிவகுமாரன் said...

கிளியின் கேனப் பயலே ...ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

சிவகுமாரன் said...

கிளியின் கேனப் பயலே ...ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

காரிகன் said...

மிக அழகான எழுத்து. லாவகமாக எழுதும் பாணி பலருக்கு வாய்ப்பதில்லை. உங்களுக்கு கை கூடியிருக்கிறது. பாராட்டுக்கள். மூர் மார்கெட்டை நான் கேள்விப்பட்டதோடு சரி. பல முறை சென்ட்ரல் நிலையம் சென்று மூர் மார்கெட்டின் எரிந்துபோன சாம்பலின் மீது எழுப்பப்பட்ட முன்பதிவு கட்டிடத்தில் நின்றிருந்த அனுபவம் உண்டு.ஆனால் அது அப்போது தெரியாது.

அந்த கிளி பேச்சு அபாரம். நல்லவேளை கேனப் பயலே எவ்வளவோ பரவாயில்லை. வேறு ஏதாவது சொல்லியிருந்தால் இன்னும் களேபகரமாகியிருக்கும், இல்லையா?

Expatguru said...

உண்மைதான் காரிகன். இப்படி சரித்திரம் போற்றும் பல கட்டிடங்களை நாம் பாதுகாக்க தவறியதால் தான் நிரந்தரமாக அழிந்து விட்டன. நமது பொக்கிஷங்களை நாமே மதிக்கவில்லை என்றால் வெளி நாட்டினர் எப்படி மதிப்பார்கள்? இதே அமெரிக்காவாக இருந்தால் ஒரு 100 வருட கட்டிடத்தை பாதுகாத்து அதை ஒரு சுற்றுலா தலமாகாவே மாற்றி இருப்பார்கள்.

கிளி பேச்சு, எதேச்சையாக நடந்த ஒன்று. நல்ல வேளை, நீங்கள் சொன்னபடி, வேறு ஏதாவது கூறாமல் விட்டேனே!

சீனு said...

மேலே காரிகன் கூறியது போல மிக மிக அருமையான எழுத்து.. மூர் மார்கெட் குறித்து நான் அறிந்து கொண்டவை அனைத்தும் மிகப் புதிய தகவல்கள்... தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்கள் நன்றி :-)

Expatguru said...

மிக்க நன்றி, சீனு. அடிக்கடி வாருங்கள்.

G.M Balasubramaniam said...


பொழுது போக்க மூர் மார்க்கெட் சென்றதுண்டு. ஒரு அழிவின் பின்னணியில் இன்னொன்று உருவாகிறதுஇப்போதைய சபர்பன் ட்ரெயின் நிலையம் உதாரணம். நாங்களும் மீன் வளர்த்திருக்கிறோம். மோலி மீன்களும் கப்பி மீன்களும் தொட்டியில்மீன் குட்டிகளைப் பிரசவிப்பது கண்டு மகிழ்ந்ததுண்டுசில மீன்கள் முட்டையிடும் சில குஞ்சு பொரிக்கும் மூர் மார்க்கெட் பின்னால் ஜூ இருந்தது. அப்போதைய மெட்ராஸ் காணாமல் போய் ஆண்டுகளாகி விட்டன.

Expatguru said...

ஒரே ஒரு முறை மூர் மார்கெட்டின் பின் புறம் இருந்த பழைய zoo விற்கு சென்றிருக்கிறேன், ஜி.எம்.பி. சார். சிங்கம், புலி எல்லாம் கூண்டில் அடைத்து வைத்திருந்தார்கள். வண்டலூர் கட்டிய பிறகு தான் அந்த மிருகங்களுக்கும் திறந்த வெளி விமோசனம் கிடைத்தது.

நாடோடிப் பையன் said...

Nostalgic entry. Thanks for sharing.

Expatguru said...

நன்றி, நாடோடி பையன்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : நானும் பதிவுலகமும் - 2

Mahesh Prabhu said...

இந்த இடத்தை பழைய புக் விக்கிற இடம்னு கேள்வி பட்டு இருக்கேன், இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது இப்போதான் தெரியுது. இப்போ அந்த எடத்துல எதாவது கடைங்க இருக்க பாஸ் ???

Mahesh Prabhu said...

இந்த இடத்தை பழைய புக் விக்கிற இடம்னு கேள்வி பட்டு இருக்கேன், இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது இப்போதான் தெரியுது. இப்போ அந்த எடத்துல எதாவது கடைங்க இருக்க பாஸ் ???

Expatguru said...

நன்றி, மஹேஷ் பிரபு. மூர் மார்கெட்டின் பின்புறம் உள்ள அல்லி குள மார்கெட்டில் அரசு கட்டிடம் கட்டி கொடுத்தால் கூட அங்கு ஒன்றும் போணி ஆகாததால் பல வியாபாரிகள் நடைபாதையிலேயே கடை விரித்து விட்டார்கள். சிலர், சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள நடைபாதையில் விற்று கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தி.நகரில். இப்படி பல இடங்களுக்கு சிதறி விட்டார்கள்.

sekar said...

பழைய கனமான நினைவுகளை அற்புதமாகப் பதிவுச் செய்திருக்கிறீர்கள்.

Expatguru said...

நன்றி சேகர்

rameez said...

அருமையான பதிவு நண்பரே

Kasthuri Rengan said...

மூர்மார்கெட் குறித்த நினைவுகள் அருமை வெறுமனே அது எரிந்து போய்விட்டது என்று எழுதினால் கூட மனதில் நிற்காது.
அங்கே வாங்கிய மீன்தொட்டி என்.சி.சி தொப்பி என்று சம்பவங்களை அடுக்கி சிகரம் வைத்தது போல எரிந்துபோன கடையை சுற்றி வந்த வாழ்விழந்த வியாபாரிகளை சொன்ன பொழுது மனம் கனத்தது... பதிவு நகைப்பில் ஆரம்பித்து திகைப்பில் முடிகிறது அது நம்மை ஒரு கையறு நிலையிலும் வைக்கிறது ... பின்னூட்டங்களும் அருமை
திரு.சாம் அய்யா சொல்லி வந்தேன் ... நன்றி

Expatguru said...

மிக்க நன்றி, Mathu. அடிக்கடி வருகை தாருங்கள்.

சார்லஸ் said...

அருமையான நகைச்சுவைப் பதிவு . மூர்மார்கெட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஆனால் பார்த்ததில்லை. நீங்கள் அதை கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் . இப்படிதான் நாம் நிறைய பொக்கிஷங்களை இழந்து போயிருக்கிறோம் . நமது உணர்வோடும் உள்ளத்தோடும் வாழ்க்கையோடும் உறவாடிக் கொண்டிருந்த ஒரு விஷயம் சட்டென நம்மை விட்டு தொலைந்து போனதை வலியுடன் பார்ப்பதைத் தவிர நாம் வேறு என்ன செய்துவிட முடியும்

Expatguru said...

மிக்க நன்றி, சார்ல்ஸ்