Monday 7 April 2014

இரண்டாம் சுதந்திரம்

1975 வருடம்.  எமெர்ஜென்ஸி என்ற அவசர சட்டத்தை நாடு முழுவதும் இந்திரா காந்தி அமுல் படுத்தியிருந்தார். இந்தியாவின் மறக்க முடியாத காலகட்டம் அது என்றே சொல்லலாம்.

மாணவனாக இருந்த‌ எனக்கு அன்றைய அரசியல் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது. வானொலியில் எந்த நிலையத்தை திருப்பினாலும் 'பிரதமரின் 20 அம்ச திட்டம்' பற்றியே பிரசாரமாக இருந்தது. மெட்ராஸில் ஓடிக்கொண்டிருந்த பல்லவன் பஸ்கள் அனைத்தின் பின்புறத்திலும் பக்கவாட்டிலும் 20 அம்ச திட்டத்தை பற்றிய வாசகங்களை தீட்டியிருந்தார்கள். அந்த 20 அம்சங்கள் என்னவென்று மக்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் வாசகங்கள், பிரச்சாரம் என்று இருந்தது. சீனாவில் மாவோவின் கொள்கைகளை மூளை சலவை செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா, கிட்டத்தட்ட அதே நிலைமை தான்.


பஸ்களில் மட்டும் அல்லாமல் லாரிகள், டாக்ஸி, ஆட்டோ போன்ற எல்லா வாகனங்களிலும் இது போன்ற வாசகங்களை கண்டிப்பாக பெயிண்ட் செய்ய வேண்டும் என்று அரசு கூறியது. இதை எதிர்த்து யாரும் வழக்கு போட முடியாது. ஏதாவது பேசினால் நேராக சிறை வாசம் தான்.


இந்திரா காந்தியைவிட மிக மிக மோசமாக நடந்து கொண்டவர் அவருடைய மகன் சஞ்ஜய் காந்தி தான். இந்தியாவின் பிரச்னைகளுக்கு காரணமே குடிசைவாசிகள் தான் என்பது அவரது தத்துவம்.' குடிசைகள் தலைநகரின் 'அழகை' கெடுக்கின்றன‌. அதனால் புதுடெல்லியில் உள்ள அனைத்து குடிசைகளையும் இரவோடு இரவாக புல்டோசர் வைத்து இடித்து தள்ளுங்கள்' என்று உத்தரவிட்டார். இத்தனைக்கும் இவர் ஒரு எம்.பி. கூட இல்லை. இந்திரா காந்தியின் மகன் என்ற ஒரே 'தகுதி' தான் இருந்தது.


அரசு அதிகாரிகளுக்கு திடீரென்று ஒரு ஆணை பிறப்பித்தார். இந்தியாவின் பெருகிவரும் ஜனத்தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை கட்டாயமாக்க படவேண்டும் என்பது தான் அது. ஒவ்வொறு அரசு அதிகாரிக்கும் மாதாமாதம் ஒரு 'கோட்டா' கொடுக்கப்பட்டது. ஒரு மாதத்தில் இத்தனை பேருக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை செய்தேன் என்று அவர்கள் கணக்கு காட்ட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களின் வேலைக்கு வேட்டு தான். அதனால் போவோர் வருவோர், தெருவில் திரியும் பிச்சைக்காரர்கள், 75 வயது கிழவர்கள் என்று சகட்டு மேனிக்கு அறுவை சிகிச்சையை கட்டாயப்படுத்தி செய்தார்கள். யாராவது எதிர்த்தால் சிறைவாசம் தான்.

அப்போதெல்லாம் டி.வி. கிடையாது. எல்லா செய்தி தாள்களும் பத்திரிகைகளும் இந்திரா ஜெபம் செய்யாத குறையாக ஜால்ராக்களாக மாறி விட்டன. இதை எதிர்த்த ஒரே தமிழ் பத்திரிகை துக்ளக். எனது தந்தை வானொலியில் தினமும் இரவு 9 மணி செய்திகளை உன்னிப்பாக கேட்பார். அதன் ஆரம்ப வரிகளே "The Prime Minister Mrs. Indira Gandhi..." என்று இருக்கும். வீட்டில் துக்ளக் பத்திரிகையை வாங்க ஆரம்பித்தார்.

அப்போதெல்லாம் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் துக்ளக் வரும். அதன் அட்டைப்படத்தில் இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வதை போல ஒரு முறை துக்ளக் கார்டூன் வெளியிட்டது. ஒரு கழுதை, "20 அம்ச திட்டத்தின் பயன் என்ன?" என்று கேட்க மற்றொரு கழுதை "எனக்கு தெரியாது. ஆனால் சாப்பிட நிறைய பேப்பர் கிடைக்கிறது" என்று கூறுகிற மாதிரி கார்டூன் வெளியிட்டு விட்டார்கள். அவ்வளவு தான். மறு நாளிலிருந்து துக்ளக் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் 'சென்சார்' செய்வதற்காக டேரா போட்டு உட்கார்ந்து விட்டார்கள். சோ கைது செய்யப்பட்டார். துக்ளக்கின் அடுத்த இதழின் அட்டையில் கார்டூனுக்கு பதிலாக முழுவதும் கறுப்பு அட்டையை வெளியிட்டது.


இதில் சில வேடிக்கையான நிகழ்வுகளும் நடந்தன. அவசர சட்டம் அமுலில் இருந்ததால் விலைவாசி திடீரென்று கட்டுக்குள் அடங்கியது. ஒரு கிலோ தக்காளி 25 பைசா என்ற அளவுக்கு வீழ்ந்து விட்டது என்றால் நம்ப முடிகிறதா? லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது. நெய்வேலியில் இரவு முடித்துவிட்டு அதிகாலை வீட்டுக்கு திரும்பும்போது நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், பீரோ என்று திடீர் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை எனது நண்பன் கூறும்போது வியப்பாக இருக்கும். இவை எல்லாம் கிம்பளமாக கிடைத்தவையாம். ரெயிடுக்கு பயந்து இரவோடு இரவாக இப்படி நடுத்தெருவில் வைத்து விட்டார்களாம்!

ஜார்ஜ் பெர்னான்டெஸ், அத்வானி, வாஜ்பாய், ஜெகஜீவன்ராம், சரண் சிங் போன்ற தலைவர்கள் அனைவரையும் இந்திரா சிறையில் அடைத்தார். மது தண்டவதே சில மாதங்களுக்கு பிறகு விடுதலையானார். வெளியே வந்த அவர் சிறையில் இருந்த அத்வானிக்கு சங்கேத மொழியில் ஒரு தந்தியை அனுப்பினார்.

"Met prominent members of joint family about the new house to be set up. Proceeding to see grandfather today. —Madhu Bala Advani"

இதன் அர்த்தம் என்னவென்றால், புதிதாக ஒரு கட்சியை துவங்குவதற்காக ஜெயபிரகாஷ் நாராயணை சந்திக்க பாட்னாவுக்கு செல்கிறேன் என்பது தான். ஜனதா கட்சி என்று ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது இப்படி தான். இந்திய தேசத்தின் சரித்திரத்தையே புரட்டி போட்ட நிகழ்வு அது.


என்னதான் ஆட்டமாக ஆடினாலும் மேலே இறைவன் பார்த்து கொண்டிருக்கிறான் இல்லையா? சஞ்ஜய் காந்தி திடீரென்று விமான விபத்தில் இறந்து போனார். நாட்டு மக்கள் யாரும் அதற்காக கண்ணீர் சிந்தவில்லை. ஏழையின் வயிற்றெரிச்சலும் சாபமும் வீண் போகாது என்பதை இது நிரூபிப்பதை போன்று இருந்தது.

சஞ்ஜய் காந்திக்கு தபால் துறையினர் சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டனர். எல்லாம் இந்திரா காந்தியின் உத்தரவின்படி தான். உடனே துக்ளக் பத்திரிகையில் "சஞ்ஜய் காந்தியின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் அவர் இந்த தேசத்துக்காக ஒன்றும் பெரிய தியாகம் செய்துவிடவில்லை. இவரின் உயிர் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல அவருடன் கூட இறந்த பைலட்டின் உயிரும் அவரது குடும்பத்துக்கு மிக முக்கியம். அதனால் அந்த பைலட்டின் நினைவாக துக்ளக் தபால் தலை வெளியிடுகிறது" என்று ஒரு பக்கம் முழுவதும் அந்த பைலட்டின் சிறிய அளவிலான புகைப்படத்தை வெளியிட்டனர். அவ்வளவு தான். ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பைலட்டின் தபால் தலையை உறையின் மீது ஒட்டி துக்ளக் அலுவலகத்துக்கு அனுப்பு ஆரம்பித்தார்கள். மூட்டை மூட்டையாய் குவிந்த அந்த தபால்களை தபால் துறையினர் குப்பையில் வீசி எறிந்தனர்.

காமராஜர் காலமான போது அவரின் இறுதி ஊர்வலத்தில் நானும் கலந்து கொண்டேன். மக்கள் சமுத்திரம் என்றே சொல்லலாம். உண்மையிலேயே அதற்கு பிறகு எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது தான் அது போன்ற காட்சியை கண்டேன். எல்லா கட்சி தலைவர்களையும் இந்திரா காந்தி சிறையில் அடைத்தார். காமராஜரை மட்டும் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மெட்ராஸ் காந்தி மண்டபத்துக்கு அருகில் உள்ள அவரது சமாதியில் பிரம்மாண்டமான ராட்டை ஒன்றை கட்டிடத்தின் மேலே நிறுவினார்கள். அந்த ஒரே காரணத்துக்காக இந்திரா காந்தி அவரது சமாதிக்கு வர மறுத்து விட்டார்.

கூட இருந்த கைத்தடிகளின் பேச்சை நம்பிய இந்திரா காந்தி, உண்மையிலேயே தனக்கு மக்களின் ஏகபோக ஆதரவு இருப்பதாக நம்பினார். தேர்தலை அறிவித்தார். வெறுப்பில் இருந்த மக்கள் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்தார்கள். முதன்முறையாக காங்கிரஸ் இல்லாத ஒரு ஆட்சியை நாடு கண்டது. இந்திரா ஆட்சி பொறுப்பை விட்டு கொடுப்பாரா மாட்டாரா என்று உலகமே பார்த்து கொண்டிருந்தது. நல்ல வேளை. தோல்வியை ஒப்பு கொண்டு இந்திரா பதவி விலகினார். அது புதிய சுதந்திர தினம் என்று சொன்னால் மிகையாகாது.


மூன்றே வருடங்களில் சண்டை சச்சரவுகளால் வெறுப்படைந்து மக்கள் மீண்டும் இந்திராவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், இந்தியாவில் இனி யாருமே அவசர சட்டம் கொண்டு வர முடியாது, மக்களை அடக்கி ஆள முடியாது என்று மக்கள் தீர்மானமாக கொடுத்த தீர்ப்பு உலக வரலாறு ஆகிவிட்டது.







 

7 comments:

Mahesh Prabhu said...

எமர்ஜென்சி பத்தின தகவல் அருமை, இதே மாதிரி உங்களிடம் நிறைய தகவல் எதிர் பாக்கிறேன்.........

Expatguru said...

நன்றி, மஹேஷ் பிரபு.

G.M Balasubramaniam said...

எமர்ஜென்சி அந்தக் காலத்தின் கோலம். மிகவும் தவறான அணுகு முறை.ஆனால் அந்தக் காலத்தில் அதை ஆதரித்தவர்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் கைத்தடிகள் அல்ல. எனக்குப் பல நேரங்களில் ஒரு benevolent dictator தேவையோ என்று தோன்றுகிறது. உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்காமல் ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைக்கையில் .......

Expatguru said...
This comment has been removed by the author.
Expatguru said...

ஜி.எம்.பி.சார், அவசர சட்டத்தை இந்திரா காந்தி கொண்டு வந்ததே அலஹாபாத் நீதிமன்றம் தேர்தலில் அவர் மோசடி செய்து வெற்றி பெற்றார் என்று தீர்ப்பு கூறியதால் தானே! அப்படி ஒரு சட்டம் அந்த கால கட்டத்தில் கொண்டு வர தேவையே இல்லாமல் இருந்தது. தனது பதவியை காத்துக்கொள்ள இந்த தேசத்தையே ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் அல்லவா இந்திரா கொண்டு வந்தார்? World history reveals that there is not a single benevolent dictator, but replete only with power-hungry tyrants.

காரிகன் said...

வழக்கம் போலவே மிக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Expatguru said...

நன்றி, காரிகன்.