Sunday 6 July 2014

கோபாலபுரத்து கனவுகள்

மெட்ராஸின் லாயிட்ஸ் சாலையிலும் பிறகு கோபாலபுரம் இரண்டாவது குறுக்கு தெருவிலும் எனது இளமைக்காலம் கழிந்தது. லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல வட இந்திய பள்ளியில் தான் நான் படித்தேன்.


கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலஸ்வாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு கிடைத்த சர்க்கரை பொங்கல் பிரசாதம் அதைவிட பிரசித்தி பெற்றது! பள்ளிக்கு செல்லும் போது தினமும் அந்த கோவில் வழியே தான் செல்ல வேண்டும். மிக அழகிய வேலைப்பாடுடன் பெரிய மரக்கதவு போடப்பட்டிருக்கும். உள்ளே சென்றால், பிள்ளையார், முருகன், ஐயப்பன் என்று ஏகப்பட்ட சன்னதிகள் இருக்கும். எப்போதும் ஜேஜே என்று கூட்டமாக இருக்கும்.

கார்த்திகை மாதம் ஆரம்பித்தால் போதும், கோவில் களை கட்டிவிடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தினமும் இங்கு வந்து போவார்கள். இந்த கோவிலின் எதிரே ஒரு தெரு உள்ளது. அந்த தெருவின் முதல் வீடு தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீடாகும். அவர் எப்படியோ தெரியாது, ஆனால் அவரது வீட்டார்கள் அனைவரும் இந்த கிருஷ்ணர் கோவிலுக்கு அடிக்கடி வந்து போவார்கள்.

மார்கழி மாதத்தில் இந்த கோவிலை காலை 4.30 மணிக்கே திறந்து விடுவார்கள். எங்களை எல்லாம் எனது தாயார் சீக்கிரமே எழுப்பி குளிக்க செய்து 5.30 மணி தீபாராதனைக்கு அழைத்து செல்வார். பிரமாதமாக இருக்கும். அந்த கிருஷ்ணர் விக்ரகம் 1000 வருடங்களுக்கு மேல் பழமையானதாகும். கும்பகோணத்துக்கு அருகில் ஒரு கிராமத்திலிருந்து அதை எடுத்து வந்து 1932ம் வருடம் இங்கு பிரதிஷ்டை செய்தார்கள். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.



1975ம் வருடம் என்னால் மறக்க முடியாத ஒன்று. இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த காலம். கிட்டத்தட்ட இந்தியாவே மீண்டும் அடிமை சாசனத்திற்கு சென்று விட்டதை போன்று இருந்தது. அவ்வளவு கெடுபிடி. ஒரு நாள் பள்ளியிலிருந்து நான் திரும்பி வரும்போது அந்த கோவிலின் வாசலில் அரை நிர்வாணமாக ஒருவன் படுத்திருந்தான். பரட்டை தலை, அரை டிராயர், மேலே ஒன்றுமே இல்லை. கோவிலின் வாசலில் குறுக்கே படுத்திருந்தான். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். பக்கத்தில் சென்று பார்த்தால் தனக்கு தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தெரிந்தது.


அவனை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடியது. அவனும் யாரையும் சட்டை செய்யாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தான். சிலர் அவனை குச்சியால் விரட்டி அடிக்க சிறிது நேரம் கழித்து மீண்டும் அவன் வந்து அங்கு படுத்து கொள்வான். இதில் வேடிக்கை என்னவென்றால், சம்ஸ்கிருதத்தில் பல ஸ்லோகங்களை சரளமாக சொல்லி கொண்டிருந்தான். ஒரு பைத்தியம் எப்படி இவ்வளவு சரளமாக ஸ்லோகங்களை சொல்கிறான் என்று எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு வேளை படித்த பைத்தியமாக இருக்குமோ?

மேலே உள்ள படத்தில் கோவில் வாசல் தெரிகிறதே, அதில் ஒரு கதவில் தலையையும் மறு கதவில் கால்களையும் வைத்து வழியில் குறுக்கே படுத்திருப்பான். யாராவது விரட்டி விட்டால் மீண்டும் வந்து படுத்து கொள்வான். சில நாட்களுக்கு பிறகு அவனை யாரும் சட்டை செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

எனது பெரியப்பா காவல் துறையில் உளவு பிரிவில் இருந்தார். எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது ஒரு முறை எதேச்சையாக இந்த கோவிலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் ஒரு மிக பெரிய குண்டை தூக்கி போட்டார். நாங்கள் தினமும் பார்த்து வந்த "பைத்தியம்" உண்மையில் இந்திரா காந்தி அரசினால் கருணாநிதியின் வீட்டை உளவு பார்க்க வைக்கப்பட்ட ஒற்றனாம். அவர் வீட்டுக்கு யார் யார் வருகிறார்கள், என்ன நடக்கிறது போன்ற விஷயங்களை டெல்லிக்கு தகவல் கொடுப்பதற்கே அவன் அங்கு அனுப்ப பட்டிருக்கிறான் என்று தெரிந்தது. எங்களுக்கு தூக்கி வாரி போட்டது.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இவன் தங்களை வேவு பார்க்க வந்தவன் என்ற விஷயம் கருணாநிதிக்கு தெரியும். அவருக்கும் உளவு பிரிவில் ஆட்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவரது வீட்டில் இருந்து தினமும் இந்த 'பைத்தியத்துக்கு' உணவு செல்லும்! கவுண்டமணி கூறுவது போல, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! 1977ம் வருடம் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சொல்லி வைத்தாற்போல இந்த பைத்தியமும் காணாமல் போய் விட்டான்.

ஏனோ தெரியவில்லை, கோபாலபுரத்தில் நிறைய பிச்சைக்காரர்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் அடிக்கடி குடுகுடுப்பைக்காரன் வருவான். ஏதேதோ உளறிக்கொண்டே செல்வான். அவனுடைய குடுகுடுப்பை சத்தத்தை கேட்டவுடன் நாங்கள் வேடிக்கை பார்க்க செல்வோம். உடனே எனது தாயார் முதுகில் ஒன்று போட்டு உள்ளே போக சொல்வார். ஏன் என்று கேட்டால், 'அவன் மந்திரவாதி, மை வைத்து சுடுகாட்டுக்கு கூட்டி சென்று உன்னையும் ஒரு குடுகுடுப்பைக்காரனாக ஆக்கி விடுவான்' என்று பயமுறுத்துவார். அதை கேட்டு நாங்கள் பயப்படுவதற்கு பதிலாக 'அட, சுவாரசியமாக இருக்கே' என்று நாங்கள் வேண்டுமென்றே வெளியே எட்டி பார்க்க ஒரே அமர்க்களமாக இருக்கும்! இதே போல, பாம்பாட்டி, பூம்பூம் மாட்டுக்காரன், மாங்காய் தலையன், சாலையில் 'கோவிந்தோ, கோவிந்தோ' என்று உருண்டு கொண்டே செல்பவன், சாட்டையால் தன்னையே அடித்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட பிச்சை கேட்பவன் (ரொம்ப நாள் கழித்து தான் இது குங்குமம் என்றும் வியர்வையில் சேர்ந்து ரத்தம் போல தெரிகிறது என்றும் உணர்ந்தேன்!), கையில் கறுப்பு நிற குச்சியை வைத்து கொண்டு குறி சொல்பவள்,  தொம்மங்கூத்தாடி, இடது தோளில் ஒரு மூட்டையில் கைக்குழந்தையும் வலது கையில் 'டண்டண்டண்  டக்கர டக்கர‌' என்று தப்பட்டையை அடித்துக்கொண்டே பிச்சை கேட்பவள் என்று விதவிதமான மனிதர்கள் நாள் முழுவதும் தெருவில் வந்து கொண்டே இருப்பார்கள்.

மாலை வேளைகளில் தெருவை அடைத்து கொண்டு அனைவரும் கிரிக்கெட் ஆடுவோம். அப்போது தான் தொலைக்காட்சி வந்திருந்த நேரம். எல்லாமே கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி தான். ஒரே ஒரு சானல் தான். அதில் மணிக்கு ஒரு பத்து தடவை 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' என்று போர்டை போடுவார்கள். எதிரொலி என்ற நிகழ்ச்சியில் வாரா வாரம் ஒருவர் வந்து வாசகர் கடிதங்களை படிப்பார். அதில் பாதிக்கு மேல் திட்டி எழுதியிருப்பார்கள். சனி ஞாயிறன்று போடும் சினிமாவை பார்பதற்காக தெருவில் டி.வி. இருக்கும் ஒரே ஒரு வீட்டில் அனைவரும் ஆஜராகி விடுவோம்.

இந்த கோபாலபுரத்து சாலைகளில் தான் நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன். கான்ரான் ஸ்மித் சாலை ஓரத்தில் உள்ள ஒரு வாடகை சைக்கிள் கடையில் (ஒரு மணி நேரத்துக்கு 50 பைசா) எடுத்து கொண்டு எங்கள் நண்பர்கள் அனைவரும் கற்று கொண்டோம். சைக்கிள் காரியரை நண்பன் பிடித்து கொள்ள, நான் பாலன்ஸ் செய்து கொண்டே வேகமாக பெடலை அழுத்தி ஓட்ட, நண்பன் பிடித்து கொண்டிருக்கிறான் என்று நினைத்து கொண்டே நான் அவனுடன் பேசிக்கொண்டே ஓட்ட, ஒரு கட்டத்தில் பதிலே இல்லையே என்று திரும்பி பார்க்க, அப்போது தான் இத்தனை நேரம் நான் தனியே ஓட்டி கொண்டிருந்தேன் என்ற உண்மை உரைக்க, பயத்தில் அப்படியே உறைந்து போய் தெருக்கம்பத்தில் சைக்கிளை மோதி கை, கால் எல்லாம் ரத்தக்களறியாக வீட்டுக்கு வந்து சேர்ந்து, எனது வீரத்தழும்புகளை காட்டி நான் சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட கதையை வீட்டில் சொல்லி, அவர்கள் பாராட்டுவதற்கு பதிலாக முதுகில் ரெண்டு சாத்திய கதை - இதே போல ஒவ்வொருவர் வீட்டிலும் நடந்தது. ஞாயிறன்று காலை 6 மணி முதல் கோபாலபுரம் மாநகராட்சி மைதானத்தில் மதியம் வரை கிரிக்கெட் ஆடி விட்டு வியர்வை வழிய வருவோம்.

மினரல் வாட்டர் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. குழாய் தண்ணீர்தான். ஒருவனுடைய வாட்டர் பாட்டிலிலேயே மற்றவர்கள் அனைவரும் உதட்டை வைத்து குடிப்போம். யாருக்கும் வியாதி வந்ததில்லை. யார் வீட்டுக்கும் யார் வேண்டுமானாலும் எப்போதும் செல்லலாம். கதவை தட்டி கொண்டு செல்வது என்பதெல்லாம் கிடையாது. சாப்பிடும் போது கையால் தான் சாப்பிடுவோம். ஸ்பூன்,ஃபோர்க் எல்லாம் கிடையாது. தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். இரவு பாயில் படுத்து தான் உறக்கம். டியூஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஃபேஸ்புக், ட்விட்டர், இத்யாதி எல்லாம் கிடையாது. கம்ப்யூட்டர் என்றாலே என்னவென்று தெரியாது. கால்குலேட்டரையே கல்லூரிக்கு வந்த பிறகு தான் முதன்முறையாக அதிசயத்துடன் பார்த்தேன். ஆனால் இதெல்லாம் இல்லை என்றதால் வாழ்க்கை நின்றுவிடவில்லை. சுகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. 

"நீ பெரியவனான பிறகு என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று யாருமே எங்களை கேட்டதில்லை. ஏனென்றால், அப்படி ஒரு கனவு யாருக்குமே இருந்ததில்லை. அன்றைய பொழுதை ஜாலியாக கழித்தோமா, அவ்வளவு தான். எல்லோர் மனதிலும் சின்னச்சின்ன ஆசைகள் இருந்தன. எனக்கு என்றாவது ஒரு நாள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் யாருமே ஆசை நிறைவேறவில்லை என்றால் ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை. எதிர்பார்ப்பும் இல்லை, அதனால் ஏமாற்றமும் இல்லை.

உருண்டோடிடும் கால வெள்ளத்தில் நாங்களும் பெரியவர்களான பின் கோபாலபுரத்தை விட்டு வேறு இடம், பிறகு வேறு ஊர், வேறு மாநிலம், வேறு நாடு என்று பிரிந்து விட்டோம். இப்போது அனைவரும் பெரியவர்களாகி விட்டோம். 

ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து விட்டோம். தன் வீடு, தன் குடும்பம், தன் மனைவி மக்கள், தன் வேலை என்று அனைவரும் அவரவர் வாழ்க்கை சுமையில் மூழ்கி விட்டனர். சிறுவர்களாக‌ இருந்த போது இருந்த சுதந்திரம், அந்த நிம்மதி, அந்த அமைதி இப்போது எங்கே காணாமல் போயிற்று என்றே தெரியவில்லை. பழைய நண்பர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் பணத்துக்காக ஆன்மாவை விற்று விட்டோம் என்றே நினைக்கிறேன். 

எப்போதாவது கோபாலபுரம் பக்கம் சென்றால் யாராவது பழைய நண்பர்கள் தென்படுவார்களா என்று மனதுக்குள் ஒரு நப்பாசை பிறக்கும். ஆனால் இப்போது தான் எல்லோரும் என்னை போல வெளியே சென்று விட்டார்களே. காலத்தின் வேகமான அலைகள் எல்லாவற்றையும் அடித்து கொண்டு போய் விட்டது. கரையில் இப்போது எஞ்சியிருப்பது வெறும் நினைவுகளே.







11 comments:

காரிகன் said...

படிப்பவர்கள் எல்லோருக்கும் அவர்களின் பழைய நாட்களின் நினைவுகளை கொண்டுவருகிறது உங்கள் பதிவு. பாராட்டுக்கள் குரு.

மினரல் வாட்டர் இல்லாத குழாய் தண்ணீர் குடித்து வளர்ந்த தலைமுறையினரில் நானும் ஒருவன். ஏறக்குறைய உங்கள் அனுபவங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தின் அழியாத சுவடுகள்.

அந்த பைத்தியக்கார ஒற்றன் சம்பவம் அர்ஜூன் படம் போல இருந்தது. சுவையான எழுத்து. வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

எதுவும் கடந்து போகும்...!

Expatguru said...

நன்றி, காரிகன்.

Expatguru said...

நன்றி, தனபாலன்.

S said...

அது ஒரு கனா காலம்...
பால்யத்தையும் யவ்னத்தையும்
யாவரும் அசை போட சுவையானதக இருக்கும்.

அதற்காகவே என் பிள்ளைகளை அதிகம் தொந்தரவு செய்வதில்லை....
போட்டியுள்ள உலகம் எண்று தெரிந்தும்.


அவர்களுக்கும் அசை போட
அருமையான காலமாக இருக்கட்டுமே

ஏர்போர்ட்டில் தண்ணீர் அருந்துவற்கு தம்ளர் இல்லை
கை குவித்துதான் குடிக்க வேண்டியுள்ளது.
ஒவ்வருமுறை காணும்போதெல்லாம்
சிறுவயதில் ஒரு கையால் அடிபம்பின்
வாயை அடைத்து மறு கையால் அடித்து
தாகம் தனித்தது நினைவுக்கும் வரும்,
இப்போதெல்லம் அடிபம்ப் இருப்பதில்லை.
இருப்பவற்றில் தண்ணீர் இருப்பதில்லை.

மீள்காலத்த்ற்கு அழைத்து சென்ற பதிவிற்கு நன்றி.

சரவணகுமார்

Expatguru said...

நன்றி, சரவணகுமார்.

vijayan said...

இளமையெல்லாம் வெறும் கனவுமயம் என மறைந்தது சிலகாலம்,தெளிவும் அடையாமல் முடிவும் தெரியாமல் மயங்குது எதிர்காலம்.

Expatguru said...

நன்றி, விஜயன். அனுபவித்து தான் எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

G.M Balasubramaniam said...


எனக்கு எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது” தூங்கினாய், கனாக் கண்டாய்; வாழ்க்கை இன்பமயமாக இருந்தது. விழித்து எழுந்தாய் அதேவாழ்க்கை கடமைக் கடலாகத் தெரிகிறது. வளர்ந்துவிட்ட அனைவருக்கும் கடந்துபோன வாழ்க்கை சுவையானதாகவே தெரியும் exceptions இருக்கலாம் . இன்னும் ஒன்று கவனித்து இருக்கிறீர்களா. ?ஒரே சூழ்நிலையில் வளர்ந்த பலரது நினைவுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.என் பதிவுகள் பல என் நினைவுகளைத் தாங்கி வந்தவையே.

அப்பாதுரை said...

Such a reading pleasure..will return.

Expatguru said...

Thanks, Appadurai.