Monday 16 November 2015

நெஞ்சம் மறப்பதில்லை

சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 


1973ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. கடைசியில் ஒரு பிலிப்ஸ் வானொலி பெட்டியை வெளியே எடுத்தேன். பழைய நினைவலைகளில் மூழ்கி விட்டேன்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது தொலைக்காட்சி எல்லாம் கிடையாது. வீட்டில் இருந்த ஒரே பொழுதுபோக்கு இந்த வானொலி பெட்டி தான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் மதியம் மூன்று மணிக்கு ஒலிச்சித்திரம், பாப்பா மலர் என்று பல விதமான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவார்கள். நாங்கள் அனைவரும் சுற்றி உட்கார்ந்து கொண்டு கேட்போம்.

அப்போதெல்லாம் கிரிக்கெட் வர்ணனை மிக பிரபலம். ஒவ்வொரு பந்தையும் எப்படி வீசுகிறார், எங்கிருந்து ஓடி வருகிறார், எப்படி அடிக்கிறார் என்றெல்லாம் கூற கூற ஏதோ நாமே மைதானத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு வரும். நடு நடுவே ஹிந்தியில் வேறு வர்ணனை வந்து கடுப்பேற்றும். இதற்கு விடிவுகாலமாக தமிழ் வர்ணனை என்று ஆரம்பித்தார்கள். சுனில் கவாஸ்கர் சதுர வெட்டை மட்டையால் அடித்தார் என்று செந்தமிழில் ராமமூர்த்தி கூறும்போது ஒன்றும் புரியாமல் விழித்திருக்க கடைசியில் யாருக்கோ புரிந்து bat-ஆல்  square cut அடித்தார் என்று புரிய வைத்து அனைவரும் இதற்கு ஹிந்தியின்' டப்பாகானா'வே பரவாயில்லை என்று கலாய்த்த காலம் உண்டு.

இந்த வானொலி பெட்டியில் பச்சை நிறத்தில் இரண்டு விளக்குகள் எரியும். ஒவ்வொரு அலைவரிசையாக திருப்பிக்கொண்டே வந்தால் திடீரென்று இந்த இரண்டு பச்சைகளும் ஒன்றாகி விடும். அந்த இடத்தில் தான் நன்றாக கேட்கும். பொழுது போகாமல் ஒவ்வொரு நிலையமாக திருப்பி கொண்டே வந்தால் திடீர் திடீரென்று புரியாத மொழிகளில் பாட்டு, செய்திகள் என்று மாறி மாறி கேட்கும். 

1971ம் ஆண்டு டிசம்பர் மாதம். பங்களாதேஷ் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வானொலி அருகே உட்கார்ந்து கொண்டு மிக உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்தார்கள். தினமும் மாலை ஏழு மணி ஆனால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெரிதாக ஒரு சங்கை ஊதுவார்கள். உடனே அனைவரும் வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் அணைத்து விடவேண்டும். சரியாக 7.05 மணிக்கு வானத்தின் மேலே தாழ்வாக ஒரு விமானம் பறக்கும். எந்த பகுதியில் விளக்கை அணைக்காமல் இருக்கிறார்கள் என்று மேலிருந்து ரோந்து பார்த்து கொண்டே உடனுக்குடனாக தகவல் சொல்வார்கள். என்ன ஆகுமோ என்று அனைவரும் பயந்து கொண்டே வானொலியில் அடுத்த அறிவிப்பை கூர்ந்து கவனித்து கேட்போம். போரில் இந்தியா வென்றுவிட்டது என்ற அறிவிப்பை வானொலியில் கேட்டதும் நாடே குதூகலத்தில் ஆழ்ந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் எல்லாருடைய கவனமும் வானொலியின் மீது தான். ஒட்டு எண்ணிக்கை முடிந்த உடன் எந்த தொகுதியில் யார் முன்னேறி கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். லாயிட்ஸ் சாலையில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் தான் முன்னாள் மந்திரி மதியழகன் இருந்தார். எனது தந்தை, வீட்டில் இருந்த வானொலி பெட்டியை அவர்கள் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். வீட்டை சுற்றி பெரும் கூட்டம் கூடி இருக்கும். சந்தடி சாக்கில் பலூன் காரன் முதல் கைமுறுக்கு விற்பவன் வரை எல்லோரும் வந்து அந்த இடமே ஒரு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். 

தினமும் இரவு 9 மணிக்கு ஆங்கிலத்தில் செய்திகள் வரும். அதை தவறாமல் எனது தந்தை கேட்பார். செய்திகள் ஆரம்பம் ஆவதற்கு முன்பு 'குக் குக் குக்' என்று ஒரு சத்தம் வரும். அது ஏன் என்று வெகு நாட்களுக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பிறகுதான் அது நேரத்தை குறிப்பதற்காக என்று தெரியவந்தது. இடியே விழுந்தாலும் தலைப்பு செய்திகளின் முதல் வரி எப்போதுமே "The Prime Minister Mrs. Indira Gandhi...." என்று தான் ஆரம்பிக்கும்! விவரம் புரியாத வயதில் எனது தந்தையிடம் 'ஏன் இப்படி' என்று கேட்பேன். அவர் சிரித்துக்கொண்டே போய் விடுவார். 


ஒரு கட்டத்தில் இலங்கை வானொலியில் புத்தம் புதிய பாடல்களை போட ஆரம்பித்த உடன் அனைவரும் இலங்கை வானொலிக்கு அடிமையானோம். அதிலும் கே.எஸ். ராஜாவின் வெண்கலக்குரலுக்கு பலர் விசிறி ஆனார்கள். "இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆசிய சேவை, செய்திகள் வாசிப்பது சொற்சொரூபவதி" என்று தெறிக்கும் தமிழில் அவர்கள் ஆரம்பிக்கும் போதே இனிமையாக இருக்கும். இலங்கை வானொலிக்கு போட்டியாக இந்திய வானொலியில் விவித் பாரதியை ஆரம்பித்தார்கள். ஆனாலும் இலங்கை வானொலி போல அவ்வளவாக அது எடுபடவில்லை. என்ன இருந்தாலும் அசல் அசல்தான், நகல் நகல்தான்.

தினமும் காலையிலும் மாலையிலும் 'உங்கள் விருப்பம்' என்ற நிகழ்ச்சி வரும். பல நல்ல பாடல்களை போடுவார்கள். ஆனால் அதைவிட சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பாடல்களின் நடுவில் வரும் விளம்பரங்கள் தான். 'சுசித்ரா, சங்கர், ராஜு, சுஜாதா என்றும் சுறுசுறுப்புடனே..." என்று ஹார்லிக்ஸ் விளம்பரம், 'பொன்னான புதிய ரெக்ஸோனா', 'ஆரோக்கிய வாழ்வினையை காப்பது லைஃப்பாய்', 'பாண்ட்ஸ் ட்ரீம் ஃப்ளவர் டால்க்', ' வாஷிங் பவுடர் நிர்மா', என்ற இனிமையான பாடல்களுடனான விளம்பரங்கள், 'இந்தியா இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்றைய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி', 'கேசவர்த்தினி தைலம்', 'ஏ.ஆர்.ஆர். சுகந்த பாக்கு' போன்ற விளம்பரங்கள், போர்ன்விடா வினாடிவினா நிகழ்ச்சி, காலையில் எழுந்தவுடன் 'வந்தே மாதரம்' -  ஆஹா, இவை எல்லாம் எப்படி மறக்க முடியும்?

1982ம் ஆண்டு டெல்லியில் ஆசிய விளையாட்டுக்கள் ஆரம்பித்தன. அப்போது திடீரென்று எல்லா இடங்களிலும் தொலைக்காட்சி வர ஆரம்பித்தது. தமிழில் ஒரே ஒரு தொலைக்காட்சி நிலையம் தான். அதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒளியும் ஒலியும்' என்ற நிகழ்ச்சியை வைப்பார்கள். அதே போல சனி, ஞாயிறன்று ஏதாவது திரைப்படம் போடுவார்கள். மெல்ல மெல்ல தொலைக்காட்சியின் ஆதிக்கத்தில் அனைவரும் வர தொடங்கினார்கள். 

தொண்ணூறுகளில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வர தொடங்கின. முதலில் ஸ்டார் டி.வி. என்று ஹிந்தியில் வர‌ ஆரம்பித்தது. தமிழில் முதன்முதலில் சன். டி.வி. ஆரம்பித்தது. நடிகை ராதிகா நடித்த ஒரு நெடுந்தொடரின் ஆரம்பத்தில் ஒரு குழந்தை 'சித்தீ............' என்று அழகாக கத்தும். வெகு சீக்கிரம் மக்கள் தொலைக்காட்சிக்கு அடிமையானார்கள்.இதில் வானொலியை சிறிது சிறிதாக மறந்து ஒரு கட்டத்தில் அதை கேட்பதையே பெரும்பாலான மக்கள் நிறுத்தி விட்டனர். 

இப்போது சில வருடங்களாக பண்பலை நிகழ்ச்சிகள் வர துவங்கிய பிறகு மீண்டும் வானொலியை சிலர் கேட்க தொடங்கி விட்டனர். ஆனாலும் முன்பு போல என்றும் வராது என்றே தோன்றுகிறது.

இப்போது எல்லா இளைஞர்கள் கையிலும் கைப்பேசி, வலை என்று சதா சர்வகாலமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். 

நல்ல இசை, நல்ல பாடல்கள், நல்ல கவிதைகள் என்று வானொலியில் நல்ல நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்த எனது இன்பம் இவர்களுக்கு இனி கிடைக்குமா? அப்படி கிடைத்தாலும் அதை ரசிக்கும் பக்குவம் இவர்களுக்கு வருமா என்று தெரியவில்லை. நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஆர்பரிக்கும் அலைகளை போல கால வெள்ளத்தில் வானொலியும் அடித்து கொண்டு போய் விட்டது என்றே கூறலாம். அந்த வெள்ளத்தின் கரைகள் இனிமையான நினைவுகளை என்றும் சுமந்து கொண்டிருக்கின்றன.




11 comments:

காரிகன் said...

நண்பர் குரு,

-----1973ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. ----

அவைகள் குப்பைகள் அல்ல. பழைய நாட்களின் மிச்சங்கள். அன்று பணம் கொடுத்து வாங்கிய அவைகள் இன்றைக்கு விலை மதிப்பில்லாத உயரத்தில் இருக்கின்றன. என்னிடமும் இதே "குப்பைகள்" நிறைய உண்டு.

வானொலி மாதிரியான இன்னொரு பொழுதுபோக்கு சாதனம் அதன் பிறகு வரவேயில்லை. எங்கள் வீட்டில் டீ வி வாங்கிய பிறகு கூட நானும் எனது சகோதரனும் வானொலியை குடைந்துகொண்டிருப்போம். "டி வி பார்ப்பதை விட்டுவிட்டு அங்கே ரேடியோவில என்ன கருமத்தைதான் இதுக கேக்குதுகளோ ?" என்று என் அம்மா முனங்குவார்கள்.

ஒரே அலைவரிசையில் நாம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

----நல்ல இசை, நல்ல பாடல்கள், நல்ல கவிதைகள் என்று வானொலியில் நல்ல நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்த எனது இன்பம் இவர்களுக்கு இனி கிடைக்குமா? அப்படி கிடைத்தாலும் அதை ரசிக்கும் பக்குவம் இவர்களுக்கு வருமா என்று தெரியவில்லை. நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.------

உண்மையான வார்த்தைகள். எனக்கும் இதே சிந்தனை அடிக்கடி எழுவதுண்டு. நான் 70களைச் சேர்ந்தவன் என்பது குறித்து எனக்கு பெருமிதம் உண்டு. இன்றைய டிஜிடல் பொழுதுபோக்குகள் இல்லாத உண்மையான மனித உணர்வுகளோடு நாம் பரிச்சயம் கொண்டிருந்ததோம். அது இவர்களுக்குக் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

நல்ல எழுத்துக்கு எனது பாராட்டுக்கள்.

Unknown said...

very nice write up ji.somehow i feel that every generaton has their own ways of remembering their childhood days read rknarayans SWAMY AND FRIENDS ENGLISH TEACHER... KEEP IT UP

Expatguru said...

அன்புள்ள நண்பர் காரிகனுக்கு,

மனதிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Unknown said...

Inswamy and friends r k narayan the celebrated novelist beautifully narrated his school days experiences through one character swamy your writing rekindles my yound days ji

Expatguru said...

Thanks so much for your compliments, Nat Chander. But I am nowhere near the great genius of R.K.Narayan.

சார்லஸ் said...

இனிய நண்பர் குரு அவர்களே

நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறீர்கள். இணைய உலகுக்கு மீண்டு வந்திருக்கிறீர்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை என்று எந்தெந்த நினைவுகளை அசைபோட்டீர்களோ அதில் 90 சதவீதத்தை நானும் சேர்ந்தே அசை போட்டேன். இறந்த காலத்திற்கு பயணித்து நாம் அனுபவித்து வாழ்ந்த இனிய நாட்களை நாமே மீண்டும் பார்க்க முடிந்தால் அதுதான் நமக்கு பேரின்பம் . நீங்களும் அவ்வாறுதான் பயணித்திருக்கிறீர்கள். தூசி தட்டி எடுத்து வைக்கும் பழைய பொருட்கள் எல்லாம் மீந்து போன இன்ப நினைவுகள். தூக்கிப் போட்டு விடாமல் சேமித்து வையுங்கள். நீ எதைக் கொண்டு சந்தோசம் அடைவாய் என்று யாராவது கேட்டால் இதைக் கண்டு அடைவேன் என சற்றும் யோசிக்காமல் சொல்லலாம்.

வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு நாம் ஆடிய ஆட்டங்களும் பாடிய பாட்டுக்களும் கொஞ்ச நஞ்சமா !? மாற்றம் என்பது இல்லையென்றால் இப்படியெல்லாம் நமது பொன்னான நினைவுகளை மீட்டெடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும். வானொலிப் பெட்டிகள் மறைந்து கைபேசியிலேயே அனைத்தும் வந்து விட்ட தொழில்நுட்பத்தால் என்ன பயன்? காமா சோமா என்று கண்டதையும் படபடவென வெட்டிப் பேச்சு பேசும் RJ க்கள் அடிக்கும் கூத்துக்கு தலையாட்டி ரசிக்கும் இன்றைய இளைஞர்கள் உண்மையில் நிறைய இழந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். நாம் பாக்கியசாலிகள்.





Expatguru said...

நண்பர் சார்லஸ் அவர்களுக்கு,

உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. எனது பதிவு ஒரு பக்கம் இருக்கட்டும். ஆத்மார்த்தமாக மனதில் பட்டதை அழகிய தமிழில் பிரமாதமாக நீங்கள் எழுதியதை மிகவும் ரசித்தேன். இணையத்தில் இப்போதெல்லாம் எழுதவே மனம் கேட்பதில்லை. ஒரு கட்டத்தில் எழுதுவதையே நிறுத்திவிடலாமா என்றே யோசித்தேன். உங்களை போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பால் தான் அந்த எண்ணத்தை தள்ளி போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றிகள்.

saamaaniyan said...

குரு அவர்களுக்கு...

----௧973ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. ----

முக்கியமாய் " இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம் " என்ற வரி !

விவரிப்பு நிகழும் காலத்துக்கோ அல்லது சூழலுக்கோ படிப்பவரை இட்டுச்செல்லும் காலயந்திரங்களாய் மாய வார்த்தைகளை அமைத்து எழுதுவது என்பது மிக சிலருக்கே கைக்கூடும்... அந்த வரம் உங்களுக்கு அமைந்திருப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி !

நீங்கள் குறிப்பிடும் அந்த குப்பைகளில்தானே அழியாத பாசியாய் நம் பசுமை நினைவுகள் படர்ந்துள்ளன ?!

சரோஜ் நாராயண்சாமி, இலங்கை வானொலியின் ராஜா, அப்துல் ஹமீது, அப்புறமாய் வந்த தென்கச்சி சுவாமிநாதன் என நம் மனதில் என்றென்றும் வீற்றிருக்கும் வானொலி நட்சத்திரங்கள்தான் எத்தனை ?!

அந்தி மாலையில் விட்டேத்தியாய் சைக்கிளில் செல்லும் பொழுதில், எதிர்பாரா தருணம் ஒன்றில் ஏதோ ஒரு கடையின் வானொலியிலிருந்து " இது ஒரு பொன்மாலை பொழுது... " என கசிந்த இசையை கேட்டபோது உண்டான சிலிர்ப்பு தேடும் பாடல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் இந்த காலத்தில் இல்லைதான் !

ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கியதற்கு நன்றிகள் பல குரு !

சாமானியன்

எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


Expatguru said...

மிக்க நன்றி, சாம். நல்ல தமிழை எழுதுவது ஒரு புறம் இருக்கட்டும், அதை ரசித்து இவ்வளவு அழகாக எழுதுவது அனைவருக்கும் வந்து விடாது. அதுவே ஒரு கலைதான். அது உங்களிடம் அபாரமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

peace said...

மலரும் நினைவுகள்.
நன்றாக எழுதுகிறீர்கள்.
1965 ஆம் ஆண்டும் இந்திய பாக் போர் நடந்த போது, ஊரை இருட்டடிபுச் செய்வது நடந்தது.
சுசித்ராவின் குடும்பம் என்பது ஹார்லிக்ஸ் வழங்கிய வானொலித் தொடர்.
செய்தி வாசித்த ஷோபனா ரவியின் புன்சிரிப்புக்காக காத்திருந்த நண்பர் ஒருவர் உண்டு.
இலங்கை ரூப வாகினியில் மிகவும் மங்கலாகத் தெரிந்த அதே கண்கள் திரைப்படத்தை சென்னையில்
பார்த்தோம்.
தொலைக்காட்சியில் 'I Love Lucy'தொடர் வந்தது. அதை கூட படித்த ஆங்கிலோ இந்தியன் மாணவன் மட்டும் தனியாகப் பார்த்து சிரித்துக்
கொண்டு இருப்பான். அவனுக்கு தமிழ் தெரியாது என்று நினத்துக் கொண்டிருந்தேன், சமையல்காரரிடம்,
தனக்கு என்ன வேண்டும் என்று சொல்வதைக் கேட்கும் வரை.

Expatguru said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், சாம்.