Saturday, 19 January 2008

நாடி ஜோதிடம்

இப்போது நான் கூறப்போகும் சம்பவம் அதிசயமானதும் ஆச்சரியமானதும் ஆகும். அதை நம்புவதும் நம்பாததும் உங்களிடம் விட்டு விடுகிறேன். சற்றே கடினமான கால கட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு இருந்தேன். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு புகழ் பெற்ற நாடி ஜோதிடத்தை பற்றி எனது நண்பர் ஏற்கனவே கூறியிருந்தார். நானும் ஒரு ஜோதிட நிலயத்தினுள் சென்று எனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கேட்டுக்கொண்டேன். எனது வலது கை கட்டை விரலின் ரேகைகளை ஒரு வெள்ளைத்தாளில் பதித்து கொண்டு என்னை கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு 2 மணி நேரத்துக்கு பிறகு வருமாறு ஜோதிடர் கூறினார். மற்றபடி எனது பெயர், ஊர் என்று எந்த விதமான தகவல்களையும் கேட்கவில்லை.

நானும் கோவிலுக்கு சென்று அவர் கூறியபடியே 2 மணி நேரத்துக்கு பிறகு சென்றேன். ஒரு மேஜை மேல் கட்டு கட்டாக ஓலைச்சுவடிகள் இருந்தன. ஜோதிடர் என்னிடம்,"நான் கேட்கும் கேள்விகளுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என்று மட்டும் கூறுங்கள்" என்றார். முதல் கட்டை எடுத்து அதில் உள்ளதை படிக்க ஆரம்பித்தார். அது மிகவும் பழமையான தமிழில் இருந்தது (க்ரந்தம் என்று நினைக்கிறேன்). ஒவ்வொறு 4 வரிகள் படித்து முடித்ததும் என்னிடம் சில கேள்விகளை கேட்டார்.

உதாரணமாக, "உங்களுக்கு நான்கு தாய் மாமன்கள் இருக்கிறார்களா?", "உங்களுக்கு இரண்டு அண்ணன்கள் உள்ளனரா" என்று எனது குடும்பத்தை பற்றிய கேள்விகளை கேட்டுக்கொண்டே போனார். நான் "இல்லை" என்று ஏதாவது கேள்விக்கு பதில் கூறிவிட்டால் அந்த ஓலைச்சுவடி கட்டை அப்படியே பக்கத்தில் ஒதுக்கி விட்டு மற்றொரு கட்டை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார். இப்படியாக 4 கட்டுகளை ஒதுக்கி விட்டார். ஐந்தாவது கட்டில் அவர் கேட்ட எல்லா கேள்விகளுக்குமே விடை "ஆம்" என்று இருந்தது. ஒவ்வொறு பத்தியாக படித்து அதன் பொருளை விளக்க ஆரம்பித்தார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், முதல் பத்தியின் கடைசி வார்த்தையும் அடுத்த பத்தியின் முதல் வார்த்தையும் ஒன்றாக இருந்தன (இதை அந்தாதி என்று கூறுவார்கள் என்று நினைக்கிறேன்). என்னால் தாங்க முடியாத ஆச்சரியம். எனது குடும்பத்தை பற்றிய அத்தனை விபரங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கூறிவிட்டார். எனது தாய், தந்தை பெயர்கள், எனது மனைவியின் பெயர் உட்பட அனைத்தும் அந்த ஓலைச்சுவடியில் இருந்தன. எனக்கோ தாங்க முடியாத வியப்பு.

ஒரு வேளை இது கண்கட்டு வித்தை மாதிரி இருக்குமோ என்று நினைத்து நான் ஜோதிடரிடம் அவர் படிப்பதை சிறிது நிறுத்த சொல்லி விட்டு, "அந்த ஓலைச்சுவடியை நான் பார்க்கலாமா?" என்று கேட்டேன். அவர் "தாராளமாக பாருங்களேன்" என்று அந்த ஓலையை என்னிடம் கொடுத்தார். எனது தாய் தந்தையின் பெயர்கள் மிகவும் தெளிவாக அதில் எழுதியிருந்தன‌. என்னால் என் கண்களை நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்துடன் அந்த ஓலையை அவரிடம் கொடுத்தேன். அதற்கு பிறகு நடந்தது தான் வியப்பின் உச்ச கட்டம்.

ஜோதிடர் அடுத்த வரியை படிக்க ஆரம்பித்தார். "இந்த ஓலைக்கு உரியவர் இதை இந்த வருடம், இந்த மாதம், இந்த தேதியில் தன் கையாலேயே வாங்கி படிப்பார்" என்று எழுதியிருந்தது. பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரை பார்த்தேன். அதில் கூறியிருந்த படியே தமிழ் வருடம், மாதம், தேதி எல்லாமே சரியாக இருந்தது!! ஜோதிடர் சிரித்து கொண்டே கூறினார் "எல்லாம் இறைவன் செயல். அது அது அந்த அந்த நேரத்தில் நடக்கும் என்பது ஏற்கனவே நிச்சயிக்க பட்டுவிட்டது. நீங்கள் இன்று வந்து இந்த ஓலையை படிக்க வேண்டும் என்பது விதி. அது நடந்து விட்டது" என்று கூறினார். நான் இதற்கு முன் அந்த ஜோதிடரை பார்த்தது கூட கிடையாது. எப்படி ஒரு விரல் ரேகை மூலமாக இத்தனை சரியாக அவரால் சொல்ல முடிகிறது என்றே தெரியவில்லை. ஓலை சுவடியை படிப்பது அவரது குலத்தொழில் என்று கூறினார். இதை பற்றி யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன். உங்களது அனுபவம் எப்படி இருந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். நான் ஏற்கனவே கூறியபடி, இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம். ஒன்று மட்டும் நிதர்சனமாக அவர் கூறினார். அது என்னவென்றால், 'நடப்பவை அனைத்துமே இறைவன் செயல்'.

இதில் நாம் தான் ஏதோ சாதித்து விட்டோம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். எல்லாமே கடவுள் செயல். பிறகு நாம் யார்? இந்த உடலா? அல்லது அதனுள் இருக்கும் உயிரா? அப்படி என்றால் உயிர் என்பது என்ன? அதுதான் கடவுளா? எனக்கு தெரியவில்லை நண்பர்களே. உங்களுக்கு?

7 comments:

Unknown said...

நாடி ஜோதிடரின் பெயர் தெரியுமா? எனக்கு இந்த ஜோதிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டு, ஆனால் இதுவரை முயற்சித்தது இல்லை.

சவுதி அரேபியாவில் எங்கே இருக்கிங்க?

Expatguru said...

வருகைக்கு நன்றி KVR. எனக்கு நாடி ஜோதிடம் பார்த்தவரின் பெயர் சிவா என்று நினைக்கிறேன். அவரை எனக்கு இதற்கு முன்பு தெரியாது. என்னை பொருத்த வரை அவர் கூறியது அனைத்தும் நடந்துள்ளது. அனைவருக்கு அது போலவே நடக்குமா என்பது எனக்கு தெரியாது. என்னுடைய அனுபவத்தை மட்டும் கூறியுள்ளேன்.

gonzalez said...

same thing happened to me in kanchipuram. i went nadi astrologer called d.balasubramanium. they got thumb impression only all the details came right it was awesome. i never even know that guy. within second bundle i got my nadi leaf. and please visit my nadi astrology site nadiastrologyforall.blogspot.com/

and please click those gooooogle ads.

Expatguru said...

வருகைக்கு நன்றி Saravana Martian.

ராஜேஷ் குமார் said...

நீங்கள் பார்த்த ஜோதிடரின் முகவரியை எனக்கு கொடுக்கவும்

Expatguru said...

ராஜேஷ் குமார்,

அவருடைய பெயர் சிவா. வைத்தீஸ்வரன் கோவிலில் மில்லடி தெருவில் இருக்கிறார். இப்போதும் இருக்கிறாரா என்று தெரியாது.

ஒரு disclaimer : என்னை பொருத்த வரையில் அவருடைய கணிப்புகள் 100% சரியாக இருந்தன. ஆனால் மற்றவர்களுக்கு அது அப்படி இருக்குமா என்று தெரியாது.

Thamizhan said...

மிக நன்று. எனக்கும் இதுபோன்றதொரு அனுபவம் உண்டு. ஆனால் சில செய்திகளால் அங்கு நடப்பவைகளின் உண்மைத்தன்மை கேலிக்குறியதாக ஆகிறது... சரிதான் கடவுளையே சோதிக்கும் மூடர் கூடம்தானே தமிழகம். எனக்கு இரும்புதொழில்தான் என அடித்து சொல்லியிருந்தது சுவடியில். அதுவும் நடக்கிறது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வைத்தீஸ்வரனை தரிசிக்க மிக்க ஆவல். முக்கியமாக அக்ரஹாரதெருவில் உள்ள ஒரு உணவகத்தில் உண்ட உணவின் சுவை பலவருடம் கழித்தும் நினைவில் உள்ளது, குறிப்பாக வத்த குழம்புடன் நெய் சேர்த்து :) திருச்சிற்றம்பலம்