Wednesday, 9 January 2008

மொழி

ஒரு மொழியை கற்றுக்கொள்வதால் எவ்வளவு ஆதாயம் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன்.

செளதி அரேபியாவுக்கு வந்த புதிதில் எனக்கு சுத்தமாக அரபி மொழி தெரியாது. (இப்போது மட்டும் என்னவாம்?). நான் வேலை செய்யும் தொழில் நகரத்தின் நுழைவாயிலில் தினமும் என்னுடைய அடையாள அட்டையை காவலர்களிடம் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய மன நிலைக்கு ஏற்ப சில சமயம் ஒன்றுமே கூறாமல் விட்டு விடுவார்கள், சில சமயம் குடைந்து எடுத்து விடுவார்கள்.
ஒரு முறை எனது வாகனத்தில் நான் சென்று கொண்டிருந்த போது ஒரு போலீஸ்காரன் எனது வண்டியை நிறுத்தினான்.

வழக்கம் போல அடையாள அட்டையை தான் கேட்கிறான் என்று நினைத்து அதை காண்பித்தேன். அவன் அதை வாங்கி பார்த்து விட்டு "அஃப்த்தா சாந்தா" என்று அரபியில் கூறினான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஒரு வேளை 'இக்காமா' எனப்படும் எனது Work Permit டை தான் கேட்கிறானோ என்று நினைத்து அதை கொடுத்தேன்.
அவன் மீண்டும் "அஃப்த்தா சாந்தா" என்று கூறினான்.
'ஓஹோ, நாம் தான் தவறான பொருளை கொடுத்து விட்டோம் போலிருக்கிறது. சரி ஒரு வேளை 'இஸ்திமாரா' எனப்படும் என்னுடைய வண்டி பதிவு சீட்டை தான் கேட்கிறானோ' என்று நினைத்து அதை அவனிடம் கொடுத்தேன்.

அவன் கடுப்பாகி மீண்டும் "அஃப்த்தா சாந்தா" என்று குரலை உயர்த்தி கூறினான்.

'அடக்கடவுளே, கத்த ஆரம்பித்து விட்டானே, இவன் என்ன இழவு சொல்கிறான் என்று கூட புரியவில்லையே. ஒரு வேளை என்னுடைய ஓட்டுன உரிமத்தை (driving license)தான் கேட்கிறான் போல இருக்கிறது' என்று நினைத்து அதை அவனிடம் கொடுத்தேன்.
அவன் கோபத்தின் உச்சத்துக்கே சென்று விட்டான்.
"அஃப்த்தா சாந்த்தா" , "அஃப்த்தா சாந்த்தா" என்று மீண்டும் மீண்டும் கத்த ஆரம்பித்தான்.

'சரி, ஏதோ தவறு நடந்து விட்டது. நமது நிறுவன அடையாள அட்டையை தான் கேட்கிறானோ' என்று நினைத்து மீண்டும் அதை அவனிடம் கொடுத்தேன்.
அவன் கண்களில் கோபம் கொப்பளிக்க என்னை பார்த்தான். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தலையில் கையை வைத்துக்கொண்டு 'ரோ' என்று கத்திக்கொண்டே என்னை போகும்படி கூறினான்.

'சரி, நம்மை மேலும் குடையாமல் விட்டானே' என்று நினைத்து கொண்டே எனது நிறுவனத்துக்குள் நுழைந்தேன். ஆனால் எனக்கு உள்ளூர ஒரு அரிப்பு. 'அப்படி அவன் என்ன தான் கேட்டான், நான் என்ன செய்து விட்டேன் அவன் கோபப்பட' என்று எனக்குள் நினைத்து கொண்டேன்.
மதிய வேளையில் எனது செளதி நண்பனிடம் "அஃப்த்தா சாந்தா என்றால் என்ன" என்று கேட்டேன். அவன் என்னை ஆச்சர்யமாக பார்த்து விட்டு "முதலில் என்ன நடந்தது என்று கூறு" என்றான்.

"சரி, ஏதோ வில்லங்கம் போல இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டே நடந்தவை அனைத்தையும் அவனிடம் கூறினேன். எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவன் வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்து விட்டான். எனக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"டேய், அப்படி என்னதான் அதற்கு அர்த்தம்" என்று கேட்டேன். அப்போது தான் அவன் "அஃப்த்தா சாந்தா என்றால் உனது வண்டியின் டிக்கியை திற என்று அர்த்தம்" என்றான்!

'அடப்பாவி, அதான் போலீஸ்காரன் வெறியாகிவிட்டான். சரி, எப்படியோ நாமும் அரபியில் ஒரு வார்த்தை புதிதாக கற்றுக்கொண்டோம்' என்று நினைத்துக்கொண்டேன்.
இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவரை சந்திதேன். அவர் தன்னுடைய மனைவியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் "சாந்தா" என்று கூறினார். திடீரென்று நான் சிரித்து விட்டேன். அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் பார்க்க நான் சமாளித்துக்கொண்டு "சாந்தா என்ற பெயரை கேட்டாலே இப்போதெல்லாம் எனக்கு எனது வண்டியின் டிக்கி தான் ஞாபகம் வருகிறது" என்று அவரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன். பிறகு என்ன, அவர் தன் மனைவியை கலாய்க்க அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.