Sunday 15 June 2008

ஐடியாக்களின் பிறப்பிடம்

சமீபத்தில் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அந்த விழாவை ஒரு பொது கூடத்தில் (recreation hall)நடத்தியிருந்தனர். சிறிது நேரம் சென்ற பின் மடி பாரத்தை இறக்க (அதாங்க "உச்சா போக") கழிவறைக்கு சென்றேன். அந்த கழிவறையின் கதவு பின்புறத்தில் 'அரசன் மாதிரி உட்கார், குரங்கு மாதிரி உட்காராதே' என்று (Sit like a king, not like a monkey!) ஆங்கிலத்தில் யாரோ எழுதி ஒட்டி இருந்தனர். ஆஹா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

வீட்டுக்கு வந்த பின் வெகு நேரம் இதையே நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். என் தங்கமணிக்கு ஒரு சந்தேகம் 'என்ன ஆயிற்று இந்த மனிதனுக்கு' என்று. அவள் பாவம் என்ன தான் செய்வாள்? வழக்கம் போல எங்கள் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. ஆனால் இந்த குமுதம், ஆனந்த விகடன் இத்யாதி பத்திரிகைகளை வேறு எந்த இடத்திலும் தேட வேண்டாம். நேராக கழிவறைக்கு வந்தால் ஒரு சிறிய நூலகத்தையே காணலாம்!

இதனால் பல முறை எனக்கும் தங்கமணிக்கும் சண்டை வந்திருக்கிறது. "உங்களுக்கு பத்திரிகை படிக்க வேறு இடமே கிடைக்கவில்லையா?" என்று வழக்கம் போல அவள் கத்த நானும் "வீட்டில் நிம்மதியா படிக்க இதை விட்டால் வேறு ஏது இடம்?" என்று கூறுவேன்.

அது என்னமோ தெரியவில்லை, கழிவறையில் தான் மிக பெரிய ஐடியாக்கள் தோன்றும் என்று நினைக்கிறேன். ஊரில் நான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டுக்கு என்ன நிற பெயிண்ட் அடிப்பது என்பதிலிருந்து தலை முடி கறுக்க எந்த‌ தைலத்தை உபயோகப்படுத்தலாம் என்பது வரை சகல யோசனைகளுக்கும் சிறந்த இடம் இந்த கழிவரறைதான்! 'இப்படி யோசித்து யோசித்தே இருக்கும் நான்கு முடிகளும் உங்களுக்கு உதிர்ந்து விடும்' என்று தங்கமணி கதவின் அந்த பக்கத்திலிருந்து கத்துவதை காதில் வாங்காது, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் போல புதிய புதிய யோசனைகள் அருவி போல கொட்டும் இடம் சாட்சாத் நமது கழிவறை தான் நண்பர்களே!

சில பேர் வீட்டில் கழிவறையில் வெறும் ஒரு zero watt பல்பை பொருத்தியிருப்பார்கள். கேட்டால் மின்சார சிக்கனமாம். அடக்கடவுளே! இவர்கள் எல்லாம் எப்படிதான் இருக்கிறார்களோ! 'யார் வேண்டுமானாலும் எப்படியோ போகட்டும், நமது வீட்டு கழிப்பறையில் ஒரு fan ஐ சுவற்றில் கட்டாயம் மாட்ட போகிறேன்' என்று நான் கூறினால், தங்கமணி தலையில் அடித்துக்கொள்கிறாள்.

பின்னே என்ன நண்பர்களே, அக்கடா என்று கழிவறையில் உட்காரும்போது வியர்த்து விறுவிறுத்து புழுங்கினால் ஐடியாக்கள் எப்படி வெளிவரும்?

மனிதன் நிம்மதியாக ஒரு செய்தித்தாளையோ புத்தகத்தையோ படிக்க வேண்டாம்?
'இந்த மாதிரி அக்கிரமம் வேறு எந்த வீட்டிலும் கிடையாது' என்று தங்கமணி கூறுவாள். ஆனால், சமீபத்தில் எனது நண்பர் வீட்டில் தற்செயலாக கழிவறைக்கு சென்றால் அங்கு நான் பார்த்தது -‍ வேறு என்ன, குமுதம் பத்திரிகை தான்! ஆக, எல்லோர் வீட்டிலும் நடப்பது இது தானா?

அதனால் ரங்கமணிகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் உரிமையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். ஞாபகம் இருக்கட்டும், ஆர்க்கமெடிஸ் என்ற விஞ்ஞானி ஒரு பெரிய தத்துவத்தையே பாத்ரூமில் தான் கண்டுபிடித்தார். இந்த தங்கமணிகளுக்கு எப்படி தெரிய போகிறது கழிவறையின் கற்பூர வாசனை!

1 comment:

Anonymous said...

அட! நீங்களும் நம்ம சங்கத்து உறுப்பினரா? தெரியாமல் போச்சே!!