Sunday 6 July 2008

குரங்குடன் கும்மாளம்

சில‌ வருடங்களுக்கு முன் திருப்பதி கோவிலில் எங்கு பார்த்தாலும் குரங்குகளாக இருக்கும். நாம் சிறிது அசந்து விட்டால் உடனேயே எங்கிருந்தோ ஒரு கெட்டிக்கார குரங்கு நம்முடைய கையில் உள்ள பையை அபகரித்துக்கொண்டு ஓடி விடும். அப்பொழுதெல்லாம் திருப்ப‌தியில் இந்த அளவுக்கு கூட்டம் கிடையாது. குரங்கு நம்மிடமிருந்து பையை பரித்துக்கொண்டு கோவில் கோபுரத்தின் மேல் போய் உட்கார்ந்து கொண்டுவிடும். அந்த பையினுள் தின்பண்டம் ஏதாவது இருந்தால் அதை அப்படியே சாப்பிட்டு விட்டு பையை தூக்கி எறிந்து விடும். குரங்கு கூட்டத்தை பார்க்கவே மிக வேடிக்கையாக இருக்கும்.





ஆனாலும் இவற்றின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதியில் இருந்த எல்லா குரங்குகளையும் கோவில் அதிகாரிகள் பிடித்து வேறு எங்கோ காட்டுக்குள் விடுவித்து விட்டனர். பல சிறிய கோவில்களில் இன்று கூட குரங்குகளை பார்க்கலாம்.





சரி விஷயத்துக்கு வருகிறேன். குஜராத்தில் அம்பாஜி என்ற ஊர் ராஜஸ்தான் எல்லையில் உள்ளது. மலை மேல் உள்ள கோவிலை சென்றடைய 999 படிகளை ஏறி செல்ல வேண்டும். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் உள்ள தேவியை தரிசனம் செய்ய வெகு தூரத்திலிருந்து மக்கள் வருவது உண்டு. குறிப்பாக நவராத்திரி நேரத்தில் நிறைய கூட்டம் இருக்கும்.



இந்த 999 படிகளும் மிக செங்குத்தான படிகள். மலையை குடைந்து செய்யப்பட்ட கல் படிகள். ஏறுவதற்கே மிக சிரமாக இருக்கும். வயதானவர்களை 'டோலி' என்ற பல்லக்கில் வைத்து தூக்கி செல்வார்கள்.





இந்த கோவிலுக்கு நானும் எனது நண்பனும் ஒரு முறை சென்றோம். மலை ஏறுவதற்கு முன்பே கீழே பல கடைகளில் பெரிய கம்புகளை விற்றுக்கொண்டிருந்தனர். எதற்காக இந்த கம்புகள் என்று கேட்டபொழுது, 'குரங்குகளை விரட்ட' என்று சொன்னார்கள். 'திருப்பதியில் நாம் பார்க்காத குரங்குகளா' என்று அலட்சியமாக நாங்கள் அந்த கம்புகளை வாங்காமல் படியில் ஏற ஆரம்பித்தோம்.



மேலே ஏற ஏற மூச்சு வாங்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒரு 300 படிகளை ஏறி இருப்போம். அருமையான குளிர் காற்று வீச ஆரம்பித்தது. கீழே சாலையில் செல்லும் ஒட்டக வண்டிகள் எல்லாம் எறும்பு போல மிக சிறிதாக தெரிந்தன. தொலைவில் மாலை சூரியன் ஒரு மிக பெரிய சிகப்பு பழமாக வானத்தில் மெல்ல அஸ்தமித்து கொண்டிருந்தது. இந்த மலை ஏறும் அனுபவம் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. இங்கு கைபேசி வேலை செய்யாது. கணணி கிடையாது. நெடுந்தொடர்களை பார்க்க தொலைக்காட்சி கிடையாது. 'தான்' என்ற மனித அகந்தையை அழிக்க இதை விட அருமையான அனுபவம் வேறு ஏது?



இயற்கையை ரசித்துக்கொண்டே ஒரு வளைவில் திரும்பியவுடன் எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.



கிட்டத்தட்ட ஒரு ஆளின் உயரத்துக்கு ஒரு கருங்குரங்கு எங்கிருந்தோ 'தொப்' என்று எங்கள் முன்னால் வந்து விழுந்தது. அதன் உட‌ல் முழுவதும் புசுபுசு வென்று முடி. ஒரு நிமிடம் எங்களுக்கு கையும் காலும் ஓடவில்லை. இவ்வளவு பெரிய குரங்கை நாங்கள் பார்த்ததே இல்லை. அடக்கடவுளே! இதற்காக தான் கீழே கம்புகளை விற்றுக்கொண்டிருந்தார்களா!



ஒரே நொடியில் திபுதிபு என்று ஒரு குரங்கு படையே எங்களை சுற்றி வளைத்தது. ஒவ்வொறு குரங்கும் கிட்டத்தட்ட ஐந்தரை அடி இருக்கும். கன்னங்கரேல் என்ற நிறம். முதலில் வந்த குரங்கு தான் தலைவன் போல. மிக கோரமாக பற்களை காண்பித்தது. எங்களுக்கு எல்லா நாடிகளும் அடங்கி விட்டன.


நல்ல வேளையாக எங்கள் பைகளில் தின்பண்டம் எதுவும் இல்லை. நாங்கள் தப்பி ஓட நினைத்தாலும் எங்கு செல்வது? ஒரு புறம் செங்குத்தான மலை. மற்றொரு புறம் அதள பாதாளம். அப்படியே வந்த வழியே கீழே ஓடினாலும் குரங்குகள் ஓங்கி ஒரு அடி அடித்தால் நாங்கள் கைலாசம் போவது உறுதி!


மிகவும் பதற்றமான அந்த தருணத்தில் எங்களுக்கு பின்னால் வந்த ஒரு குஜராத்தி பக்தர் நிலைமையை பார்த்ததும் உடனே சுதாரித்து கொண்டார். "குரங்கின் கண்களை நேருக்கு நேர் பார்க்காதீர்கள். ஓடாமல், சாதாரணமாக ஆனால் வேகமா நடந்து மேலே செல்லுங்கள்" என்று கத்தினார். அந்த நேரத்தில் அவர் கூறியதை அப்படியே வேதவாக்காக எடுத்து கொண்டு விறுவிறு என்று நானும் நண்பனும் மேலே நடக்க ஆரம்பித்தோம். குரங்கு படை எங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது.


கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் உயிரை கையில் பிடித்துக்கொண்டே மலையை ஏறினோம். பயத்தில் உடல் முழுவதும் வியர்த்து விட்டது. 'கடவுளே! எங்களை காப்பாற்று' என்று மனதில் வேண்டிக்கொண்டே மலை உச்சி வரை வந்து விட்டோம். திரும்பி பார்த்தால் எங்களை பின் தொடர்ந்த குரங்கு கூட்டத்தை காணவில்லை. அப்பாடா! அப்போது தான் உயிர் வந்தது!


மாலையில் ந‌ட‌ந்த‌ தீபாராத‌னையை பார்த்து விட்டு ம‌ற்ற‌ ப‌க்த‌ர்க‌ளுட‌ன் சேர்ந்தே நாங்க‌ளும் கூட்ட‌த்துட‌ன் கீழே இற‌ங்கி வ‌ந்தோம். எங்க‌ளுக்கு நேர்ந்த‌ அனுப‌வ‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொண்டே இற‌ங்கினோம். அப்போது தான் த‌னியாக‌, அதுவும் கையில் க‌ம்பு இல்லாம‌ல் நாங்க‌ள் வ‌ந்த‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ ம‌ட‌த்த‌ன‌ம் என்று எங்க‌ளுக்கு புரிந்த‌து. இந்த கருங்குர‌ங்குக‌ள் காட்டிலிருந்து வ‌ருப‌வையாம். இவை க‌டித்தால் அதோக‌தி தானாம். அவ‌ற்றின் க‌ண்க‌ளை நேருக்கு நேர் பார்த்தால் நாம் அத‌னை தாக்க‌ போவ‌தாக‌ நினைத்துக்கொண்டு ந‌ம்மை தாக்கி விடுமாம். நல்ல‌ வேளை, நாங்க‌ள் பிழைத்தோம்!



இந்த திகிலான‌ அனுப‌வ‌த்துக்கு பிற‌கு சாலையில் எங்காவ‌து குர‌ங்காட்டி "ஆடுடா ராமா, ஆடு" என்று குட்டி குரங்குடன் வித்தை காட்டினால் கூட‌ சிறிது ந‌க‌ர்ந்தே சென்றுவிடுகிறேன். எங்காவ‌து பிடுங்கி வைத்தால் யார் அவ‌ஸ்தை ப‌டுவ‌து :D

2 comments:

கோவை விஜய் said...

இப்போ தமிழக்த்திலும் மலை கோவிலெல்லாம் குரங்காரriன் சாம்ராஜ்யம் தான் .அதிலும் குறிப்paaக குழு குழு குற்றாலத்தில்(தென்காசி பக்கம்-திருனெல்வெலி மாவட்டம்)அவற்றின் அட்டகாசம் ஓவர்
தி.விஜய்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Expatguru said...

'மனித' குரங்குகள் செய்யும் அட்டகாசத்துக்கு இதெல்லாம் பரவாயில்லை விஜய்!