Wednesday, 16 July 2008

சில நேரங்களில் சில மனிதர்கள்

பம்பாயின் இரயில் பாதைகள் மேற்கு இரயில்வே, மத்திய இரயில்வே, மற்றும் துறைமுக வழி என்று மூன்று விதமாக உள்ளன‌. இந்த மூன்று பாதைகளும் தனித்தனியாக இருந்தாலும் ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் ஒன்றாக சேரும். மத்திய மற்றும் மேற்கு இரயில்வே பாதைகள் தாதர் இரயில் நிலையத்திலும், துறைமுக மற்றும் மத்திய இரயில்வே பாதைகள் குர்லா இரயில் நிலையத்திலும் சேரும். இவ்விரு இரயில் நிலையங்களிலும் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் எப்போதுமே இருக்கும்.

பம்பாயில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பகுதி நேரமாக எம்.பி.ஏ படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தேன். நான் இருந்த‌ நேருல் என்ற இடம் துறைமுக பாதையில் உள்ளது. மேற்படிப்புக்காக மேற்கு இரயில் பாதையில் உள்ள வில்லே பார்லே என்ற இரயில் நிலையத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டியதாக இருந்தது. எப்படியும் போக ஒன்றரை மணி நேரமும் வர ஒன்றரை மணி நேரமும் ஆகி விடும். அந்த பயணங்களின் போது ஏற்பட்ட அனுபவங்களை மறக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வரும் இரயிலை அதே நேரத்தில் தினமும் பிடிக்கும் பயணிகள் இருந்தனர். அதில் கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டி "பஜனை டப்பா" என்றே பெயர் பெற்றிருந்தது. இந்த பெட்டியில் எப்போதும் ஒரு கோஷ்டி பஜனை செய்து கொண்டே வரும். அதுவும் சாதாரண பஜனை அல்ல. ஜால்ரா, டோலக், என்று வாத்தியங்களுடன் பஜனை செய்வார்கள். இவர்கள் பக்திக்காக பஜனை செய்கிறார்களா அல்லது நீண்ட பயணத்தின் களைப்பை போக்குவதற்காக செய்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை. ஆனால் இரயில் கிளம்பும் நிலையத்திலிருந்து கடைசி நிறுத்தம் வரை பஜனை செய்து கொண்டே வருவார்கள். பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். இரயில் நிலையத்துக்குள் வண்டி வரும்போதே "ஜல் ஜல்" என்று சத்தம் அதிர வைக்கும்.

அந்த கோஷ்டியில் சில தமிழர்களும் இருந்தனர். இதில் இரண்டு பேர் "பாலசுப்ரமணியன்" என்று ஒரே பெயருடன் இருந்தனர். இவர்கள் இருவரையும் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதனால் ஒருவன் பெயர் "பஜனை பாலு" என்றும் மற்றொருவனுடைய பெயர் "அகண்ட பஜனை பாலு" (!!) என்றும் காலம் காலமாக அந்த பெட்டியில் பயணம் செய்து வரும் முன்னோர்கள் சூட்டி விட்டிருந்தனர்!

இவர்களை போன்றே சீட்டு கச்சேரி ஜாம்பவான்களும் பயணம் செய்வது வழக்கம். இரயில் கிளம்பியவுடனேயே சீட்டுக்கட்டை விரிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடைசி நிலையம் வரை ஆடிக்கொண்டே வருவார்கள். அப்படி ஒரு வெறி. முதலில் சிறிது நாட்கள் அந்த பெட்டியில் ஒரு பார்வையாளனாக நானும் பயணம் செய்தேன். பிறகு ஏனோ தெரியவில்லை, வேறு ஒரு பெட்டியில் பயணம் செய்ய ஆரம்பித்தேன் (ஒரு புதிய அனுபவம் கிடைக்குமே என்று கூட இருக்கலாம்).

ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் ஏறும் விதவிதமான மக்களை பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம் தான். கூட்டம் குறைவாக உள்ள நேரத்தில் இரயில் வண்டி ஒரு நடமாடும் விற்பனை நிலையமாகவே மாறிவிடும். கண் பார்வை தெரியாத ஒருவன் கையில் ஊதுபத்தி கட்டுகளை எடுத்துக்கொண்டு வருவான். நல்ல மணமாக இருக்கும். பத்தே நிமிடங்களில் விற்று தீர்த்து விடுவான். அவன் இரயிலிலிருந்து இறங்குவதற்கும் ஏறுவதற்கும் யாருடைய உதவியையும் எதிர் பார்க்க மாட்டான். கையில் ஒரு வெள்ளை கம்புடன் தானே ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி இறங்கி ஊதுபத்திகளை விற்பான்.

இதில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும் நண்பர்களே! அவன் குருடன் என்று பரிதாபத்தில் வாங்குபவர்களை விட ஒரு தரமான பொருளை அவனிடமிருந்து வாங்குபவர்கள் தான் அதிகமாக இருந்தனர். அவனுக்கு எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை இருக்கும் பாருங்கள். இரண்டு கண்கள், கை கால்கள் இருந்தும் கூட பட்டப்படிப்பை முடித்த கையோடு வேலை வாய்ப்பு நிலையத்தில் பேரை பதிவு செய்துவிட்டு "வேலை கிடைக்கவில்லை" என்று கூக்குரலிடும் நம் இளைஞர்கள் குருடர்களா, அல்லது யாருடைய உதவியும் இல்லாமல் தன்னந்தனியாக, அதுவும் இரண்டு கண்களும் தெரியாத போதும் கூட, பெட்டி பெட்டியாக ஏறி விற்கும் இந்த மனிதன் குருடனா என்று தெரியவில்லை.

ஊதுபத்தி விற்பவனை போலவே பலரும் பெட்டியில் ஏறி இறங்குவார்கள். நான் வழக்கமாக செல்லும் பெட்டியின் அடுத்த பெட்டி பெண்களுக்கான பெட்டி. இரண்டு பெட்டிகளுக்கு நடுவில் ஒரு வலை போட்டு தடுத்திருப்பார்கள் (பாதுகாப்பு காரணங்களுக்காக முழுவதும் மறைத்துவிடாமல் இந்த ஏற்பாடு என்று நினைக்கிறேன்). அந்த பெட்டியிலிருந்து வரும் சத்தம் வேறு விதமாக இருக்கும். வளையல்கள், தோடுகள், கொண்டை ஊசிகள், பொட்டுகள், safety pin என்று பெண்கள் சமாசாரங்கள் எல்லாம் இந்த பெட்டியில் விற்பனை செய்வார்கள். இவர்கள் மற்ற பெட்டிகளில் ஏறுவதில்லை. தங்களுடைய பொருட்களை யார் யார் வாங்குவார்கள், எங்கு செல்லுபடியாகும் என்று எவ்வளவு focussed-டாக இருக்கிறார்கள் பாருங்கள். படிப்பறிவில்லாத இந்த பாமர மக்களிடம் உள்ள அந்த பொது அறிவு எவ்வளவு பெரிய எம்.பி.ஏ. படிப்பிலும் கிடையாது என்றே சொல்லலாம்!

நேருல் இரயில் நிலையத்தில் நான் ஏறும் அதே பெட்டியில் கூட்டமாக ஒரு நான்கைந்து பேர் ஏறுவார்கள். கிழிந்த உடைகளுடன் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அனைவரின் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியம் இருக்கும் (தபலா, ஜால்ரா, ஹார்மோனியம், இத்யாதி). இவர்கள் இருக்கைகளில் உட்கார மாட்டார்கள். இரயில் கிளம்பியவுடன் தரையில் உட்கார்ந்து ஒவ்வொருவரும் ஒரு வாத்தியத்தை வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிரதான பாடகனாக ஒருவனும் அவனுடைய பெண்ணும் பாடிக்கொண்டே வருவார்கள். கேட்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும். சுருதி தப்பாமல் மிக மென்மையான ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டே வருவார்கள். சமயத்தில் ஒரிஜினல் பாட்டில் உள்ள குரலை விட இவர்களின் குரல் நன்றாக இருக்கும்! ஒவ்வொரு பாட்டு முடிந்த பின்பும் அந்த சிறிய பெண் ஒரு தகர டப்பாவை எடுத்துக்கொண்டு பயணிகளிடம் பிச்சை கேட்டுக்கொண்டே செல்வாள். இவர்கள் பிச்சைக்காரர்களா அல்லது ஏழை கலைஞர்களா, எப்படி அழைப்பது?

இவர்களுடைய பாட்டை கேட்பதற்காகவே தினமும் அந்த குறிப்பிட்ட இரயிலில் பயணம் செய்வதை விரும்புவேன். நேரம் போவதே தெரியாது. இவர்களுடைய பாடல்களை கேட்டவுடன் மனதே லேசாகி விடும்.

ஒரு நாள் திடீரென்று காக்கி சட்டை போட்ட 5 பேர் அந்த பெட்டியில் ஏறி இந்த பாடகர்கள் கூட்டத்தை கொத்தாக அழைத்துக்கொண்டு சென்றார்கள். 'பறக்கும் படை' என்று கூறினார்கள். அதற்கு பிறகு அந்த வண்டியில் அவர்களை நான் பார்க்கவே இல்லை. ஏனோ தெரியவில்லை, முன்பின் தெரியாத அந்த பிச்சைக்கார கலைஞர்களுக்காக மனது அழுதது. இதுவும் ஒரு அனுபவமோ?

2 comments:

கோவை விஜய் said...

பம்பாய் தொடர்வண்டியின் உங்கள் அனுபவத்தை ஒட்டிய பதிவு என்னை( என் நினைவுகளை) சென்னை தொடர்வண்டி பயணத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஆனால் ஒரு வித்தியாசம் பம்பாயில் மூன்று ரலில் பாதைகள் ( 3 கோட்டங்கள்), அதுவும் அகல ரயில் பாதை.இங்கெ ஒரே பாதை.சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை. கூட்டமும் பம்பாய் அளவுக்கு கிடையாது. ஆனால் இங்கும்

1.கண் பார்வை குறைபாடுடன் பொருட்கலள் விற்பனை, மிகுந்த தன்னம்பிக்கையுடன்

2.பாட்டுக் கச்சேரி தனி ஆவர்த்தனம்

3.சீட்டுக் கச்சேரி

4.தன் சோகக் கதை சொல்லி பணம் கேட்கும் நபர்கள்

5.கூட்ட நெரிசலை தனக்கு சதாகமாக்கி "பிக்பாக்கட்' அடிப்பவர்கள்

ஆக மின் தொடர் வண்டியின் கலாச்சாரம் பம்பாய் என்றாலும் சென்னை என்றாலும் ஒன்றுதான் போலும்.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Expatguru said...

உண்மைதான் விஜய். எந்த நகரமாக இருந்தாலும் மனிதர்களின் போக்கு ஒரே மாதிரிதான், இல்லையா? வருகைக்கு நன்றி.