Friday, 1 August 2008

சூர‌த் நினைவுக‌ள்-1

சூரத் நகரில் நான் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாதவை. சாதாரணமாகவே குஜராத்திகள் கடும் உழைப்பாளிகள். குஜராத்தி பிச்சைக்காரனை நீங்கள் எங்கும் பார்க்கவே முடியாது. அவ்வளவு தன்மானம் கொண்டவர்கள். விருந்தோம்பலில் அவர்களுக்கு நிகர் இல்லை என்றே கூறலாம். அதே போல, மிகவும் நாணயமானவர்கள்.

எனக்கு திருமணமாகி சில நாட்களே ஆகி இருக்கும். திருமணத்தின் போது உபயோகித்த வேட்டியில் மஞ்சள், குங்குமம் கறைகள் இருந்தன. அதை சலவை செய்வதற்காக கடையில் கொடுத்தேன். வேட்டியை திரும்ப வாங்க சென்றபோது எனக்கு ஒரே அதிர்ச்சி. வேட்டி தார் தாராக கிழிந்திருந்தது.

எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. திருமண வேட்டி இப்படி ஆகிவிட்டதே என்று மனது மிகவும் சங்கடப்பட்டது. நான் சலவைக்காரரிடம் "உங்களை நம்பி நான் எனது திருமண வேட்டியை கொடுத்தேன். இப்படி செய்துவிட்டீர்களே!" என்று கூறினேன்.

சலவை கடைக்காரருக்கும் சங்கடமாகி இருக்கும் போல‌. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் நொந்து கொண்டே கடையை விட்டு வெளியே செல்லும்போது என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவர் என்னை கூப்பிட்டார். "உங்கள் திருமண வேட்டி கிழிந்து விட்டதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். இந்த வேட்டியின் விலை என்னவோ சொல்லுங்கள், அதை நான் கொடுத்து விடுகிறேன். இல்லை என்றால், சென்னையில் எந்த கடையில் வாங்கினீர்கள் என்று சொல்லுங்கள். அந்த கடையிலிருந்தே நான் இதே மாதிரி இன்னொரு வேட்டியை உங்களுக்காக வாங்கி தருகிறேன்" என்றார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத நான், இவன் எங்கே நமக்கு பணத்தை தரப்போகிறான் என்று " சுமார் 500 ரூபாய் இருக்கும்" என்று கூறினேன். கடைக்காரர் சிறிதும் தயங்காமல் கல்லாவிலிருந்து 500 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார். அது மட்டுமில்லாமல் வேட்டி கிழிந்ததற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எனக்கு என்னவோ போலாகிவிட்டது. வீட்டுக்கு வந்து மனைவியிடம் நடந்ததை கூறினேன். வேட்டி 450 ரூபாய் தான் என்று அவர் கூறியதும் உடனே கடைக்காரரிடம் சென்று 50 ரூபாயை திருப்பி கொடுத்து விட்டேன்.

தான் ஒரு தவறு செய்து விட்டோம் என்று தெரிந்த பிறகும் அதை மறைக்காமல் பொறுப்பு ஏற்றுக்கொண்டு நான் தோராயமாக கூறிய விலையை சிறிதும் தயங்காமல் கொடுத்த அந்த சலவை கடைக்காரரின் நாணயத்தை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன். இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா? நமது ஊர் சலவை கடைகளில் ரசீதின் பின்புறம் 'துணிக்கு ஏதாவது ஆனால் துணியின் விலையில் 10 சதவிகிதம் அல்லது 20 ரூபாய், இரண்டில் எது குறைவோ அது கொடுக்கப்படும்' என்று வக்கீல் பேசுவது போல எழுதி இருப்பார்கள்.

எனது வேட்டியை சேதப்படுத்திய கடை என்ற வருத்தம் முழுவதுமாக அந்த கடைக்காரரின் நாணயத்தால் மறைந்து விட்டது. அதற்கு பிறகு அந்த கடையின் நிரந்தர வாடிக்கையாளராகி விட்டேன்.

இது ஒரு வியாபார யுத்தியாக கூட இருக்கலாம், எனக்கு தெரியவில்லை. ஆனால், பொதுவாக நாம் கொடுக்கும் பணத்துக்கு நம்மை ஏமாற்றாமல் சேவை செய்யும் எவரையும் நாம் லேசில் மாற்றுவதில்லை இல்லையா? தரமான பொருட்களை கொடுக்கும் மளிகை கடை, கலப்படம் செய்யாத பெட்ரோலை கொடுக்கும் பெட்ரோல் நிலையம், இன்முகத்தோடு நம்மை வரவேற்கும் வியாபாரி, இப்படி சொல்லி கொண்டே போகலாம். இவர்களின் சேவைக்கு சிறிது அதிகமான விலை கொடுத்தால் கூட அவர்களின் தரத்துக்கும் நாணயத்துக்கும் எப்போதும் நிரந்தர வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

2 comments:

Geetha Sambasivam said...

அருமை, வட இந்தியாவில் பொதுவாக வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது இல்லை, என்பது உண்மைதான். அதுவும் ராஜஸ்தான், குஜராத்தில் இது கொஞ்சம் நன்றாகவே தெரியும், எப்போ இருந்தீங்க சூரத்தில் என்று புரியவில்லை. நாங்களும் ஜாம்நகரில் இருந்தோம் 90ல் இருந்து 95 வரைக்கும்.

Expatguru said...

சூரத்தில் 90லிருந்து 95 வரை அங்குள்ள மிக பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். நீங்கள் ஜாம்நகரில் இருந்தீர்களா? நான் அடிக்கடி அலுவல் விஷயமாக அங்கு வந்திருக்கிறேனே. குஜராத்திகளை பண பேய் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், என்னை பொருத்த வரை அவர்கள் மிகவும் கடவுள் பக்தியுடனும் சொன்ன சொல் தவறாதவர்களுமாக இருந்திருக்கிறார்கள்.