Tuesday, 5 August 2008

கோவிந்தா, கோவிந்தா

வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகளுக்கு நம்மால் "விஞ்ஞானபூர்வமான" பதில்களை கூறுவது மிக கடினமாக இருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி எனக்கும் நேர்ந்தது. இதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்களுடைய விருப்பம். "பகுத்தறிவுவாதிகள்" தயவுசெய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம், இது உங்களுக்கான பதிவு அல்ல.

1983ம் வருடம். பெங்களூரில் நான் பொறியியல் படித்து கொண்டிருந்த நேரம். என்னுடைய அக்காவும் பெங்களூரில் அவருடைய குடும்பத்தினருடன் இருந்தார். ஒரு வாரக்கடைசியில் திடீரென்று 'திருப்பதி செல்வதாக உள்ளோம்' என்று அவர்கள் வீட்டில் கூறினார்கள். 'நானும் வருகிறேன்' என்று கூறியவுடன் அனைவரும் பெங்களூரிலிருந்து ஒரு பஸ்ஸில் கிளம்பி திருப்பதி சென்றடைந்தோம். நான், எனது அக்கா, அவருடைய கணவர், 3 வயது குழந்தை, அக்காவின் மாமனார், மாமியார் எல்லோரும் சென்றோம்.

நாங்கள் திருமலைக்கு சென்ற போது இரவு 11 மணி இருக்கும். எல்லோருக்கும் பயண அசதி. மறு நாள் அதிகாலையில் அங்க பிரதக்ஷணம் செய்வதாக இருந்தது. அப்போதெல்லாம் கை ரேகை எடுக்கும் பழக்கம் இல்லை. யார் வேண்டுமானாலும் குளித்து விட்டு உடலில் ஈரத்துணியுடன் அங்க பிரதக்ஷணம் செய்ய அனுமதிக்க பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு கிடைத்த விடுதி அறை கோவிலிலிருந்து வெகு தூரத்தில் இருந்தது. இரவு 11 மணிக்கு போய் சேர்ந்த நாங்கள் அசதியில் தூங்கி விட்டோம். திடீரென்று ஒரு உந்துதலில் எழுந்து பார்த்தால் மணி இரண்டு. மூன்று மணிக்கு சுப்ரபாதம் ஆரம்பிக்கும் போது அங்க பிரதக்ஷணத்தையும் ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் அவசரம் அவசரமாக அறையில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் அனைவரும் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தோம். திருமலையில் இலவச பஸ் சேவை இரவில் ஓடாது என்பதால் வேறு வழியில்லாமல் எல்லோரும் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தோம்.

குழந்தையால் ஓட முடியாது என்பதால் அவளை எனது தோளில் உட்கார வைத்து நானும் ஓடினேன். ஒரு வழியாக கோவிலை சென்று அடைந்த எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.

கோவில் வாசலில் நின்றிருந்த காவலாளி "இன்று வெள்ளிக்கிழமை. அதனால் அங்க பிரதக்ஷணம் கிடையாது" என்றார். எங்களுக்கோ தலையில் இடி விழுந்தது போல இருந்தது. கோவிலுக்கு வெளியே இருந்த மண்டபத்தில் (இப்போது அதை இடித்து விட்டார்கள்) அனைவரும் உட்கார்ந்து கொண்டோம்.

திருப்பதிக்கு வந்து அங்க பிரதக்ஷணம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. எங்களுக்கு வருத்தம் என்னவென்றால் 'இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து கடைசியில் இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற முடியவில்லையே' என்பது தான். "கோவிந்தா! உன்னை தேடி நாங்கள் வந்தோம். இப்படி செய்து விட்டாயே" என்று மனம் உருகி வேண்டினோம். அனைவருக்கும் அழுகையே வந்து விட்டது.

திடீரென்று எங்களை தாண்டி ஒரு பெரியவர் சென்றார். நெற்றியில் பட்டை நாமமும், பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் என்று மிக கம்பீரமாக இருந்தார். நேரே காவல்காரரிடம் சென்று "இவர்கள் ஏன் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார். காவல்காரர் "இன்று அங்கபிரதக்ஷணம் கிடையாது என்பது இவர்களுக்கு தெரியாது. ஆனால் அதை செய்வதற்கு வந்திருக்கிறார்கள்" என்று கூறினார். எங்களை ஒரு பார்வை பார்த்த பெரியவர் காவலாளியிடம் "சரி, சரி, இவர்களை மட்டும் அனுமதி" என்றார். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். திருப்பதி தேவஸ்தானத்தில் ஏதோ பெரிய அதிகாரி போல, என்று நினைத்துக்கொண்டோம்.

அவசரம் அவசரமாக கோவில் உள்ளே நுழைந்து நாங்கள் அங்கபிரதக்ஷணத்தை ஆரம்பிக்கவும் "கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா.." என்று கோவில் அந்தணர்கள் சுப்ரபாதத்தை பாடவும் சரியாக இருந்தது. "கோவிந்தா! கோவிந்தா!! என்னே உனது கருணை" என்று அவனை எண்ணிக்கொண்டே அனைவரும் ஆனந்தமாக அங்க பிரதக்ஷணத்தை செய்து முடித்தோம்.

அங்கபிரதக்ஷணம் செய்தவர்களுக்கு ஒரு இலவச தரிசனம் உண்டு. நாங்கள் மட்டும் தான் அன்று அங்கபிரதக்ஷணம் செய்தவர்கள் என்பதால் எங்களுக்காக ஒரு தரிசனம் அனுமதிக்க பட்டது. கண்கள் நிறைய ஆனந்தமாக பரம்பொருளை தரிசித்து விட்டு கோவில் வெளியே வந்தோம்.

எங்களுக்கு சிறப்பு அனுமதி கொடுத்த அந்த அதிகாரியை சந்தித்து நன்றி கூற வேண்டும் என்று முதலில் எங்களை தடுத்த அந்த காவலாளியிடம் "எங்களை உள்ளே அனுமதித்த அந்த பெரியவர் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டோம். காவலாளியோ, மிகவும் குழம்பி "எந்த பெரியவர்? யாரையுமே நான் உள்ளே அனுமதிக்கவில்லையே!" என்று கூறினார். நாங்களோ விடாமல் "இல்லையப்பா. எங்களை நீ அனுமதிக்கவில்லை. பெரிய‌ நாமம் போட்ட ஒரு பெரியவர் வந்து எங்களை அனுமதிக்க சொன்னாரே, நீதானே எங்களை உள்ளே விட்டாய்" என்று கூறினோம். அந்த காவலாளியோ, விடாப்பிடியாக "இரவு முழுவதும் நான் இங்கே தான் நின்று கொண்டிருக்கிறேன். இன்று அங்கபிரதக்ஷணமே கிடையாது. நான் யாரையுமே உள்ளே அனுமதிக்கவில்லையே" என்று கூறினான்!

எங்கள் கண்களில் கண்ணீர்!கோவிந்தா! நீ நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றா? கருணைக்கடலே! எங்களுக்காக இறங்கி வந்தாயோ நீ? கோவிந்தா! கோவிந்தா!! காத்தருள்வாய் இறைவா!

6 comments:

Anonymous said...

உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்த அனுபவம் உங்களுக்கு!

Anonymous said...

//உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைத்த அனுபவம் உங்களுக்கு!//

I too agree this.

Anonymous said...

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை

உங்கள் உண்மையான பக்தி நிரூபித்துள்ளது.

கோவிந்தா! கோவிந்தா!!

Expatguru said...

வருகைக்கு நன்றி அனானி. "பகுத்தறிவாளர்கள்" சிலர் இதை கேட்டால் கேலி செய்வார்களோ என்று பயந்து கொண்டே இத்தனை நாட்கள் இதை பற்றி எழுதாமல் இருந்தேன். ஆனால் எனக்கு நடந்த இந்த அதி அற்புதமான அனுபவத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் தான் இதை எழுதினேன்.

அது மட்டுமல்ல. ஒவ்வொறு முறையும் நான் திருமலைக்கு செல்லும்போது கடவுளிடம் எனக்கு "இது வேண்டும், அது வேண்டும்" என்று கேட்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு பெரிய பட்டியலையே எழுதிக்கொண்டு செல்வேன். ஆனால், அந்த வேங்கடவனை பார்த்த உடனேயே லயித்து நான் கேட்க நினைத்த எல்லாவற்றையும் மறந்து விடுவேன். கோவிலை விட்டு வெளியே வந்த உடனே ஒரு பெரிய பாரத்தை இறக்கிய மாதிரி ஒரு அனுபவம் இருக்கும். அதை வார்த்தைகளால் கூற இயலாது, அனுபவித்தால் தான் தெரியும்.

நம‌க்கு என்ன வேண்டும், எப்போது வேண்டும் என்பதை அவனை தவிர வேறு யாருக்கு தெரியும்?

Anonymous said...

III:

Vanakkam Expatguru,
Padika padika mei siliruthu veten as Anony's said. Ennaal nambave mudiyavillai. I too read this kind of experience in "Aval Vikatan" books (2/3 years back). Unmai bakthi-ku kadavul eppothum thunai irupaar.

Anonymous said...

Amazing story..