கர்நாடக சங்கீதத்தில் எனக்கு மிக நன்றாக தெரிந்த ராகம் 'காபி'. கொஞ்சம் இருங்கள். ஏதோ சங்கீதத்தை கரைத்து 'குடித்தவன்' என்று நினைத்து விடவேண்டாம். ஹி, ஹி, நான் சொன்னது பால், சர்க்கரை எல்லாம் சேர்த்து குடிப்போமே, அந்த காபியை தான்!
சென்னையில் டிசம்பர் மாதத்தில் தான் எல்லா சபாக்களிலும் களை கட்டும். அப்போது அங்கு நடக்கும் கச்சேரிகளை விட அதற்கு வரும் மக்களை பார்ப்பதே ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். பாகவதர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது தலையை இரு பக்கமும் ஆட்டிக்கொண்டிருப்பார்கள். நடு நடுவில் 'பேஷ் பேஷ், பலே' என்றெல்லாம் கூறுவார்கள். 'ஓஹோ, இப்படி தான் ரசிக்க வேண்டும் போலிருக்கிறது' என்று நினைத்து கொள்வேன்!
ஒரு முறை சபாவில் தெரியாமல் ஒரு பெரியவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விட்டேன். பாகவதரின் பாட்டில் லயித்து கொண்டிருந்தவர், "சபாஷ்" என்று பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனது தொடையில் ஒரு அடி விட்டாரே பார்க்கலாம்! ஒரு நிமிடம் பொறி கலங்கிவிட்டது எனக்கு! அடுத்த அடியை வாங்குவதற்குள் நைசாக இங்கிருந்து தப்பி விடவேண்டும் என்று நான் எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க நினைத்த போது கொலை வெறியுடன் என்னை அவர் பார்த்தார். எனக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது. பாட்டு நடுவில் நான் எழுந்திருப்பதை அவர் விரும்பவில்லை. பாகவதரோ பாட்டை நிறுத்துவதாக இல்லை. நான் பெரியவரின் கைகளை பார்க்க, அவர் பாடகரின் முகத்தை பார்க்க, பாடகரோ கண்களை இறுக்க மூடிக்கொண்டே ஆலாபனை செய்ய மனிதர் எப்போது கருணை கண்களை திறப்பார், பாட்டை எப்போது முடிப்பார், நாம் எப்போது தப்பிக்கலாம் என்று ஆகி விட்டது!
சரி, 'ரசிகன்' என்று வேஷம் போட்டாகி விட்டது, அதை நடத்துவோம் என்று எனது வலது பக்கம் உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். 'பாருங்கள், பாகவதர் பல்வலியை எப்படி அழகாக பாடுகிறார்' என்றேன். அவர் என்னை ஒரு ஏளன பார்வை பார்த்து விட்டு, 'அது பல்வலி இல்லை, பல்லவி என்றார்'. போச்சுடா, இன்றைக்கு வசமாக இருவரின் நடுவிலும் மாட்டிக்கொண்டு விட்டேன்!
ஒரே வரியை கீறல் விழுந்த கிராமபோன் ரெகார்டு மாதிரி திரும்ப திரும்ப பாகவதர் பாடிக்கொண்டே இருந்தார். என்னப்பா இது, இதை கூட மக்கள் இப்படி ரசிக்கிறார்களே. அடுத்த வரி பாகவதருக்கு தெரியவில்லையா? யாராவது போய் அவரிடம் அடுத்த வரி என்னவென்று கூறுங்களேன்!
பள்ளி கூடத்தில் சுதந்திர தின விழா பேச்சு போட்டியில் மனப்பாடம் செய்து கொண்டு ஒப்பித்த போது 'லாலா லஜபதி ராய் நல்லவர். வல்லவர், 'லாலா லஜபதி ராய் நல்லவர். வல்லவர்,' என்று திரும்ப திரும்ப பத்து முறை ஒரே வரியை நான் கூற, (அடுத்த வரி எனக்கு மறந்து விட்டது) அனைவரின் முன்னிலையிலும் எனது தமிழ் வாத்யார் 'நறுக்' என்று எனது தலையில் குட்டியது என்னவோ இப்போது ஞாபகம் வந்து தொலைத்தது!
ஒரு வழியாக பாடி முடித்தார் என்று நினைத்து நான் எழுந்திருக்க நினைத்த போது வயலின் வாசிப்பவர் 'கீ கீ' என்று ஆரம்பித்து விட்டார். போச்சுடா! இது தான் தனி ஆவர்த்தனமா? அது முடிய ஒரு கால் மணி நேரம் ஆகியது. உடனே மிருந்தங்க காரர் 'டகடக' என்று தனது வேலையை ஆரம்பித்தார். பிறகு கடம் வாசிப்பவர் முகத்தை அஷ்ட கோணத்தில் வைத்து கொண்டு அதே போல வாசித்தார்.
அவர் பானையை அடிக்கிறாரா அல்லது தனது தொந்தியை அடிக்கிறாரா என்று தெரியவில்லை! மோர்சிங் வித்வான் தன் பங்குக்கு 'டொய்ங் டொய்ங்' என்று வாயில் எதையோ விட்டு பிடுங்குவது போல வாசிக்க இதை எதையுமே காதில் வாங்காத முனிவர் போல பின்னால் தம்புரா போடுபவர் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று ஒரு கட்டத்தில் பாகவதர் முதல் வரியை மட்டும் பாட கூட்டத்தினர் அனைவரும் கை தட்ட ஆரம்பித்தனர். அப்பாடா, பாட்டு முடிந்து விட்டது என்று நான் ஒரே பாய்ச்சலில் வெளியே ஓடினேன்.
அங்கு பார்த்தால் சபாவின் உள்ளே இருப்பதை விட அதிக கூட்டம். என்னடா இது, இங்கு வேறு ஒரு கச்சேரி நடக்கிறதா என்று எட்டி பார்த்தால் அது சபா காண்ட்டீனாம். அது சரி. பேசாமல் நாம் வந்து இங்கு போண்டா சாப்பிட்டு விட்டு நிஜமான 'காபி'யை குடித்து விட்டு போயிருந்திருக்கலாம்.
இதற்கு பிறகு 'ராகவன்' என்று யாராவது பெயர் வைத்திருந்தால் கூட அவர் பக்கத்திலே போவதில்லை.
3 comments:
ஒரு முறை சென்னை மியூசிக் அகடமியில் நீங்கள் சொன்ன மாதிரி கேன்டீனில்தான் கூட்டம் பார்த்தேன். இசைவிழா என்ற தலைப்பில் நான் 30/11/2007ல் எழுதிய பதிவைப் பாருங்களேன்.
சகாதேவன்
வருகைக்கு நன்றி சகாதேவன். Linkஐ கொடுக்க மறந்து விட்டீர்களே!
நாலு கச்சேரிக்கு விடாமப்போங்க. ஞானம் தானே கொஞ்சமாய்(?) வரும்.
சென்னை இசைவிழாபற்றி 'பாட்டும் பரதமும் பாமரளின் பார்வையில்'ன்னு ஒரு தொடர் போட்டுருந்தேன்.
Post a Comment