Monday 22 September 2008

மதம் பிடித்த மதம்

மத கலவரங்களை பற்றி செய்தி தாள்களில் படித்திருப்பீர்கள். எப்போதாவது அதில் மாட்டிக்கொண்ட அனுபவம் இருக்கிறதா? எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.


1992 வருடம். டிசம்பர் மாதம். சூரத் நகரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். 'ஷிப்ட்' முறை இருந்ததால் பகல், இரவு என்று மாறி மாறி எனது வேலை நேரம் இருக்கும். எனது நிறுவன வண்டி நெடுஞ்சாலை வரை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வரும். நிறுவனத்தில் வேலை செய்பவர்களை குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றிக்கொண்டு அதே போல அதே இடத்தில் திரும்பி கொண்டு வந்து விட்டு விடும்.



ஆனால் எனது வீட்டிலிருந்து அந்த இடத்துக்கு செல்ல ஒரு ஒற்றையடி பாதை வழியாக தான் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். வழியில் தெருவிளக்கு கூட கிடையாது. அதனால் இரவு 'ஷிப்ட்' ஆக இருந்தால் நிலா வெளிச்சத்தில் தோராயமாக நடந்து செல்ல வேண்டியது தான் ஒரே வழி.


அன்றும் அப்படி தான். இரவு 'ஷிப்ட்' என்பதால் பகலில் தொலைக்காட்சியை பார்க்க கூட நேரமில்லை. வழக்கம் போல ஒற்றையடி பாதையில் நடந்து சென்றேன். ஆனால் என்றுமே இல்லாத அளவு அன்று மயான அமைதி இருந்தது. நெடுஞ்சாலையில் வழக்கம் போல செல்லும் வாகனங்களின் சத்தம் கூட கேட்கவில்லை. ஒரு வளைவில் திரும்பிய உடன் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கண் எதிரே ஒரு மாருதி கார் திகுதிகு என்று எரிந்து கொண்டிருந்தது. ஆனால் பக்கத்தில் யாருமே இல்லை. அதிசயமாக இருக்கிறதே, இந்நேரம் தீயை அணைக்க / வேடிக்கை பார்க்க ஒரு கும்பலே கூடி இருக்குமே. இன்றைக்கு என்ன ஆயிற்று? சாலையில் யாருமே இல்லையே?


ஒரு பத்தடி தான் நடந்திருப்பேன். டமால், டமால் என்று வெடி சத்தம். ஆனால் மறுபடியும் சாலையில் யாரையுமே காணவில்லை. தட்டு தடுமாறி நெடுஞ்சாலை வரை வந்து எனது நிறுவன வாகனம் வழக்கமாக நிற்கும் இடத்துக்கு வந்து விட்டேன். சாலையில் நான் ஒருவன் மட்டும் தான் இருந்தேன். மறுபடியும் ஒரு வெடி சத்தம். திரும்பி பார்த்தால் நான்கைந்து வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தன.



எனக்கு உதறல் எடுத்து விட்டது. ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் நமக்கு தான் என்ன என்று தெரியவில்லை என்று எனது ஆறாம் அறிவு கூறியது. உடனே, வந்த வழியே திபுதிபு என்று ஒற்றையடி பாதையில் வீட்டுக்கு இருட்டில் ஓட ஆரம்பித்தேன். வீட்டுக்கு போய் சேர்ந்த போது தான் நிம்மதியாக இருந்தது. நான் ஒரு 9 மாடி கட்டிடத்தில் இருந்தேன். நேராக மொட்டை மாடிக்கு சென்றேன். அங்கிருந்து சுற்றி பார்த்தால் பேரதிர்ச்சி. எங்கு பார்த்தாலும் திடீர் திடீரென்று தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஏன் இப்படி நடக்கிறது, என்ன ஆயிற்று என்று ஒன்றுமே தெரியவில்லை.



வீட்டுக்குள் ஓடி வந்து தொலைக்காட்சியை பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அயோத்தியில் மசூதியை இடித்து விட்டதால் கலவரம் வெடித்துள்ளது என்று. சரி, எப்படியும் இன்று இரவு வேலைக்கு செல்ல முடியாது, நாளைக்கு பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து நிறுவனத்துக்கு போன் செய்தேன். ஆனால் போன் ஒன்றுமே வேலை செய்யவில்லை. அந்த காலத்தில் கை பேசி கூட கிடையாது.

மறுநாள் காலை பால் கூட வரவில்லை. ஊரில் இருந்து விடுமுறைக்காக எனது மைத்துனர் வந்திருந்தார். சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று எனது ஸ்கூட்டரை எடுத்து கொண்டு மைத்துனரையும் பின்னால் துணைக்கு உட்கார்த்தி கொண்டு வெளியே சென்றேன். சிறிது தூரம் தான் சென்றிருப்பேன். எங்கிருந்தோ இராணுவ உடையில் ஒருவன் வந்து துப்பாகியை எனது மார்புக்கு நேரே வைத்து எனது வண்டியை நிறுத்தினான். நானும் எனது மைத்துனரும் வெலவெலத்து போய் விட்டோம். "ஏன் வெளியே வந்தாய்? ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாதா" என்று ஹிந்தியில் கத்தினான்.

உண்மையிலேயே எனக்கு அப்போது தான் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியும். எனது நிறுவன அடையாள அட்டையை காண்பித்து அவனிடம் 'பால் வாங்குவதற்காக வந்தேன். ஊரடங்கு உத்தரவு இருப்பது தெரியாது' என்று மன்னிப்பு கேட்டேன். அதற்கு பிறகு தான் துப்பாக்கியை மார்பிலிருந்து அவன் எடுத்தான். உடனே வீட்டுக்கு செல்லுமாறு கூறினான்.

வீட்டுக்கு வ‌ந்து என‌து ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ரிட‌ம் ந‌ட‌ந்த‌தை கூறினேன். அவ‌ர் ஒரு பெங்காலிக்கார‌ர். 'வ‌ட‌ நாட்டில் இது போன்ற‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் எல்லாம் ச‌ர்வ‌ சாதார‌ண‌ம், க‌ல‌வ‌ர‌க்கார‌ர்க‌ள் ஏதோ செய்து விட்டு போய் விடுவார்க‌ள், அவ‌தி ப‌டுவ‌து ஏனோ சாதார‌ண‌ ம‌க்க‌ள் தான்' என்று கூறினார். த‌மிழ் நாட்டிலிருந்து வ‌ந்த‌ என‌க்கு இது ஒரு புது அனுப‌வ‌மாக‌ இருந்த‌து.

அத‌ற்கு பிற‌கு வெளியே செல்ல‌வே ப‌ய‌மாக‌ இருந்த‌து. நம்புவதற்கு கடினமாக இருக்கும், ஆனால் ஒரு நாள், இர‌ண்டு நாட்க‌ள் இல்லை, ஒரு மாத‌ம், இர‌ண்டு மாத‌ங்க‌ள் இல்லை, கிட்ட‌த்த‌ட்ட‌ 10 மாத‌ங்க‌ள் சூர‌த் ந‌க‌ரிலே எப்பொழுது பார்த்தாலும் ப‌த‌ட்ட‌மாக‌ தான் இருந்த‌து.

எங்கு பார்த்தாலும் இரும்பு தொப்பி அணிந்த இராணுவத்தினர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருப்பார்கள். ஒரு நாள் ஸ்கூட்டரில் நான் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் என்னை வழி மறித்தது. அவர்கள் கையில் உருட்டு கட்டைகள் இருந்தன. என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் "வந்தே மாதரம்" என்று ஹிந்தியில் எழுதிய ஒரு ஸ்டிக்கரை எனது ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் (எனது அனுமதி இன்றி) ஒட்டினார்கள். சிறிது தூரம் சென்றிருப்பேன். தூரத்தில் மற்றொறு கும்பல் காத்து கொண்டிருந்தது. என்ன நடக்கும் என்று நான் யூகித்து விட்டேன். அவசரம் அவசரமாக ஸ்டிக்கரை பிய்த்து எரிந்து எதுவும் நடக்காதது போல சென்றேன்.

நாட்கள் செல்ல செல்ல ஒருவிதமான வெறுப்பே கொள்ள ஆரம்பித்து விட்டேன். பிழைப்புக்காக தமிழ் நாட்டை விட்டு குஜராத் வரை ஏன் வந்தோம் என்று இருந்தது. கடவுளே, எப்பொழுது தான் இது தீரும்?

இதாவது பரவாயில்லை. சகஜமாக பேசிக்கொண்டிருந்த வேற்று மதத்தினர் கூட திடீரென்று வித்யாசமாக பழக தொடங்கினார்கள். திடீரென்று தங்களுடைய மதத்தினர் அதிகம் வாழும் பகுதிக்கு வீட்டை காலி செய்து கொண்டு சென்றனர். அது தான் எனது மனதை மிகவும் வருத்தப்பட செய்தது.

படித்த மக்கள் கூட 'இவன் நமது ஆள் இல்லை, அதனால் இவனுடைய மதத்தினர் அனைவரும் காட்டு மிராண்டிகள், நமது மதத்தினர் அனைவரையும் கொன்று குவித்து விடுவார்கள்' என்று நினக்க வைப்பது என்ன‌? மனிதனுக்கு மனிதன் கொடுக்கும் சாதாரண மரியாதை கூட இப்படி தவிடு பொடியாவதற்கு என்ன காரணம்? எங்கே போயிற்று மனித நேயம்? நேற்று வரை நல்ல நண்பர்களாக, சகோதரர்களை விட நெருக்கமாக இருந்தவர்கள் திடீரென்று எதிரிகள் ஆனதற்கு என்ன காரணம்?எல்லாவற்றுக்கும் காரணம் இந்த பாழாய்ப்போன மதம் தானோ?

ஒரு சிங்கம் மற்றொறு சிங்கத்தை அடித்து சாப்பிடுவதில்லை, ஒரு புலி மற்றொறு புலியை தாக்குவதில்லை, இந்த மனிதன் மட்டும் ஏன் மற்றொறு மனிதனை காரணமே இல்லாமல் தாக்குகிறான்? 'எவனோ எங்கேயோ என்னவோ செய்து விட்டு போகிறான், நாம் ஒற்றுமையாக இருப்போம்' என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?

ப‌த‌ட்ட‌ம் இனி த‌ணிய‌வே த‌ணியாதா என்று ஏங்கி கொண்டிருந்த‌ போது செப்ட‌ம்ப‌ர் 1993ல் ஒரு நாள் திடீரென்று ம‌ஹாராஷ்ட்ராவில் லாட்டூர் என்ற‌ இட‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌ பூக‌ம்ப‌ம் வெடித்த‌து. அத‌ன் அதிர்ச்சி சூர‌த் வ‌ரை தெரிந்த‌து. அதிகாலை ந‌ட‌ந்த‌ அந்த‌ பூக‌ம்ப‌த்தினால் வீடுக‌ள் திடீரென்று ஆட‌ ஆர‌ம்பித்த‌ன‌. அனைவ‌ரும் அல‌றி அடித்து கொண்டு வெளியே ஓடி வ‌ந்த‌ன‌ர். ம‌ண் வீடுக‌ள் எல்லாம் பொடி பொடியாக‌ உதிர்ந்த‌ன‌. தொலைக்காட்சியில் வெளிவ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ள் ம‌ன‌தை உருக்குவ‌தாக‌ இருந்த‌ன‌. ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் லாட்டூரில் இற‌ந்த‌ செய்தி சூர‌த் ந‌க‌ர‌ம் முழுவ‌தும் ப‌ர‌விய‌து.

உட‌னே ஒவ்வொறு ஏரியாவிலும் இருந்த‌ இளைஞ‌ர்க‌ள் ஒன்று கூடி ர‌த்த‌ தான‌ம் செய்து அந்த‌ பாட்டில்க‌ளை லாட்டூருக்கு வ‌ண்டியில் எடுத்து சென்ற‌ன‌ர்.

வீட்டில் இருந்த‌ ப‌ழைய‌ துணிம‌ணிக‌ள், எல்லாவ‌ற்றையும் தெரு தெருவாக‌ சேக‌ரித்து கொண்டு சென்ற‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌ சூரத் நகரில் ப‌த‌ற்ற‌ம் முழுவ‌துமாக‌ த‌ணிந்த‌து. ந‌க‌ர‌த்தில் உள்ள‌ வியாபாரிக‌ள், பொது ம‌க்க‌ள், பெரிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையாக‌ இருப்ப‌தென்று முடிவு செய்த‌ன‌ர். இத‌ற்கு பிற‌கு (சூர‌த் ந‌க‌ரை பொருத்த‌ வ‌ரை) எங்கு க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்தாலும் சூர‌த் ந‌க‌ர‌ம் ம‌ட்டும் அதிலிருந்து பிழைத்து வ‌ழ‌க்க‌ம் போல‌ வாழ்க்கை ந‌ட‌ந்த‌து என்றே கூற‌லாம்.

மிருக‌ ம‌ன‌தை ம‌னித‌ ம‌ன‌மாக‌ ஆக்குவ‌த‌ற்கு இது போன்ற‌ இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளை கொடுத்து, 'நான் ஒருவ‌ன் உன‌க்கு மேலே இருக்கிறேன் மூட‌ ம‌னித‌னே' என்று இறைவ‌ன் சொல்லாம‌ல் சொல்கிறானோ?

12 comments:

Anonymous said...

அருமையான பதிவு

//மிருக‌ ம‌ன‌தை ம‌னித‌ ம‌ன‌மாக‌ ஆக்குவ‌த‌ற்கு இது போன்ற‌ இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளை கொடுத்து, 'நான் ஒருவ‌ன் உன‌க்கு மேலே இருக்கிறேன் மூட‌ ம‌னித‌னே' என்று இறைவ‌ன் சொல்லாம‌ல் சொல்கிறானோ?//

பின் வரும் இறைவசனத்தை சற்று சிந்திக்க

மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்திட நாடினால், அதில் வளம் பெற்று வாழ்பவர்களை (நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம். ஆனால், அவர்களோ (நம்முடைய ஏவலுக்குக் கட்டுப்படாமல்) அதில் அவர்கள் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள். அப்பொழுது தன் மீது (வேதனை பற்றிய நம்முடைய) வாக்கானது உண்மையாகி விடுகிறது. பின்னர் நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். (திருக்குர்ஆன் 17:16)

நபியே!) உமது ரப்பு எந்த ஊரையும், அவ்வூரார் சீர்திருந்துபவர்களாக இருக்கும் நிலையில், அநியாயமாக அழிப்பவனாக இல்லை. (திருக்குர்ஆன் 11:117)

பாவிகளான கூட்டத்தினரைத் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?

(திருக்குர்ஆன் 46:35)

அவர்கள் பணிந்து விடுவதற்காக, வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும், நாம் அவர்களைப் பிடித்தோம் (திருக்குர்ஆன் 6:42)

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அனானி.

Anonymous said...

//ஒரு சிங்கம் மற்றொறு சிங்கத்தை அடித்து சாப்பிடுவதில்லை, ஒரு புலி மற்றொறு புலியை தாக்குவதில்லை, இந்த மனிதன் மட்டும் ஏன் மற்றொறு மனிதனை காரணமே இல்லாமல் தாக்குகிறான்? 'எவனோ எங்கேயோ என்னவோ செய்து விட்டு போகிறான், நாம் ஒற்றுமையாக இருப்போம்' என்று ஏன் யாரும் நினைப்பதில்லை?//

அருமையான வார்த்தைகள்! அதைவிட அருமையான பதிவு!

Expatguru said...

வருகைக்கு நன்றி அனானி. ஒன்று சொல்ல மறந்து விட்டேனே! நான் இருந்த குடியிருப்பில் எனது நண்பர் நூருதினும் இருந்தார். 'உங்களுக்கு பயமாக இருந்தால் நீங்கள் எனது வீட்டிலேயே சில காலம் தங்கி இருக்கலாம்' என்று கூறினேன். ஆனால் அவர் 'உங்களை போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எனக்கு பயமே கிடையது' என்று கூறி கடைசி வரை வீட்டை காலி செய்யாமல் எப்பொழுதும் போல அனைவரிடமும் பழகி வந்தார். மனித நேயம் இறந்து விடவில்லை. சமய சந்தர்ப்பங்களால் சில தடுமாறிவிடுகிறது, ஆனால் மீண்டும் எழுந்து விடுகிறது என்ற உண்மையை நான் அனுபவத்தால் உணர்ந்தேன்.

Anonymous said...

பதிவு நன்று.ஆனால்
//மிருக‌ ம‌ன‌தை ம‌னித‌ ம‌ன‌மாக‌ ஆக்குவ‌த‌ற்கு இது போன்ற‌ இய‌ற்கை சீற்ற‌ங்க‌ளை கொடுத்து, 'நான் ஒருவ‌ன் உன‌க்கு மேலே இருக்கிறேன் மூட‌ ம‌னித‌னே' என்று இறைவ‌ன் சொல்லாம‌ல் சொல்கிறானோ?//
இதை விட மோசமான செயல் இருக்க முடியாது.

Expatguru said...

//இதை விட மோசமான செயல் இருக்க முடியாது.//

என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள் என்று புரிய‌வில்லையே.

Anonymous said...

//1992 வருடம். டிசம்பர் மாதம். சூரத் நகரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.


//ப‌த‌ட்ட‌ம் இனி த‌ணிய‌வே த‌ணியாதா என்று ஏங்கி கொண்டிருந்த‌ போது செப்ட‌ம்ப‌ர் 1993ல் ஒரு நாள் திடீரென்று ம‌ஹாராஷ்ட்ராவில் லாட்டூர் என்ற‌ இட‌த்தில் ப‌ய‌ங்க‌ர‌ பூக‌ம்ப‌ம் வெடித்த‌து.'


நான் கூறப்போவது சற்று வித்தியாசமானது,

அதாவது மனிதர்களிடையே ஓரிடத்தில் திடீரெனெ தோன்றும் கலவர சூழலுக்கும் பின் அந்தப்பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கையின் சீற்றத்திற்கும் தொடர்பு உள்ளது. அதாவது அவ்வாறு உருவாகக்கூடிய இயற்கையின் சீற்றத்தினை முன் கூட்டியே பெருவாரியான அப்பகுதி மக்கள் ஆழ் மன நிலையில் உணர்வதால் அதன் வடிகால் அவர்களிடையே மூர்க்க குணத்தினை தூண்டி கலவரங்களை தோற்றுவிக்கிறது எனலாம்.

Anonymous said...

//பின் வரும் இறைவசனத்தை சற்று சிந்திக்க

மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்திட நாடினால், அதில் வளம் பெற்று வாழ்பவர்களை (நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம். ஆனால், அவர்களோ (நம்முடைய ஏவலுக்குக் கட்டுப்படாமல்) அதில் அவர்கள் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள். அப்பொழுது தன் மீது (வேதனை பற்றிய நம்முடைய) வாக்கானது உண்மையாகி விடுகிறது. பின்னர் நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். (திருக்குர்ஆன் 17:16)

நபியே!) உமது ரப்பு எந்த ஊரையும், அவ்வூரார் சீர்திருந்துபவர்களாக இருக்கும் நிலையில், அநியாயமாக அழிப்பவனாக இல்லை. (திருக்குர்ஆன் 11:117)

பாவிகளான கூட்டத்தினரைத் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?

(திருக்குர்ஆன் 46:35)

அவர்கள் பணிந்து விடுவதற்காக, வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும், நாம் அவர்களைப் பிடித்தோம் (திருக்குர்ஆன் 6:42)//

தனக்கு பணியவில்லை என அழிப்பவன் எப்படி இறைவன் ஆக முடியும் ? லூசுப்பசங்க ,முட்டாசாமி

Expatguru said...

நிழலின் குரல் அவர்களே,

பிறரின் கருத்துக்களும் உங்களுடைய கருத்துக்களும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். அதை கூறும் உரிமையும் உங்களுக்கு உண்டு. ஆனால் அதற்காக பிறரின் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் தூற்றாமல் இருங்களேன். புரிதலுக்கு நன்றி.

Anonymous said...

என்னங்க அநியாயமா இருக்கு ?

எங்க இறைவனை கும்பிடாத்தால் உங்களுக்கு பூகம்பம் குடுத்தான்னு ஒரு லூசு சொல்லுது , அதை நீங்க கண்டிக்கலையே ?

அது சரி என எண்ணுகிறீர்களா?

Expatguru said...

இல்லை ஐயா. அவர் கூறியது அவருடைய கருத்து. அதே போல நீங்கள் கூறியதும் உங்களுடைய கருத்து. இருவருக்குமே தத்தம் கருத்துக்களை கூறும் உரிமை இருக்கிறது, பிறர் மனம் புண்படாமல் கூறும் வரையில். கருத்து வேறுபாடு இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் அவருடைய கடவுளை "முட்டாசாமி" என்று தூற்றுவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரிஷி (கடைசி பக்கம்) said...

Like these kind of real narration without any coating. It makes easy realization of exact situation at that time.

Keep going....