Wednesday, 15 October 2008

டூ வீல‌ர் ஓட்டிய‌ க‌தை

இப்பொழுதெல்லாம் 15 வயது பையன்கள் எல்லாம் சாலையில் 'டூ வீலர்களை' ஓட்டி செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனக்கும் 12 வயது வரை 'டூ வீலர்' ஓட்ட தெரியாது. அதாங்க, சைக்கிளை பற்றி தான் சொல்கிறேன்!"சைக்கிளை ஓட்டி கீழே எங்கேயவது விழுந்து பல்லை கில்லை உடைத்து கொள்ளாதே. போய் படிக்கிற வேலையை பாரு" என்று வீரத்தை பிஞ்சிலேயே ஊட்டி எனது வீட்டில் வளர்த்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று எனது சித்தியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சித்தியின் பையன் கோபி என்னைவிட ஒரு வயது சிறியவன். அவன் நான் வருவதை அறிந்ததும் எங்கிருந்தோ ஒரு வாடகை சைக்கிளை எடுத்து வந்து (1 மணி நேரத்துக்கு 50 பைசா!) ஹாண்டில் பாரை கூட பிடிக்காமல் கைகள் இரண்டையும் தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு 'ஹோ' என்று கத்திக்கொண்டே சைக்கிளை சாலையில் ஓட்டி என்னை வெறுப்பேற்றினான்.நாம் தான் தன்மான சிங்கமாயிற்றே! 'பூ! இது என்ன பெரிய வேலை' என்று கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பின் சக்கரத்தின் நடுவில் குத்த, அவன் உருட்டி அடித்துக்கொண்டு கீழே விழுந்து கை கால் எல்லாம் சிராய்த்து கொள்ள, அங்கு ஒரு பெரிய அடிதடியே உருவாகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. கடைசியில் அமெரிக்காவும் இந்தியாவும் அணு ஒப்பந்தம் செய்து கொண்டது போல ஒரு சமரசம் செய்து கொண்டோம். அதாவது, அவன் வீட்டுக்கு தெரியாமல் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டியதை நான் அவன் அம்மாவிடம் கூற மாட்டேன். பதிலுக்கு, அவன் அதே வாடகை சைக்கிளில் எனக்கு ஓட்ட கற்று கொடுக்க வேண்டும்' என்பது தான் அந்த ரகசிய ஒப்பந்தம்!அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல பின் சக்கரத்துக்கு இரண்டு புறமும் விழுந்தால் தாங்கிக்கொள்ள இரண்டு சிறிய சக்கரங்கள் கொண்ட stand எல்லாம் கிடையாது. விழுந்தால் அடிபட்டுக்கொள்ள வேண்டியது தான். அதாவது, உண்மையிலேயே 'டூ வீலர்' தான்!என்னை சீட்டில் உட்கார்த்தி வைத்து விட்டு "நேராக பார். அங்கே இங்கே பார்த்தால் கீழே விழுந்து விடுவாய்" என்று 'தைரியம்' கொடுத்து பின்னால் உள்ள காரியரை கோபி பிடித்துக்கொண்டான். பெடலை மிதித்ததுதான் தாமதம். சைக்கிள் பயங்கரமாக இரு பக்கமும் ஆடத்துவங்கியது. "மிதிடா" என்று அவன் கத்த, நான் மிதிக்க , சைக்கிள் நேராக போய் ஒரு சுவற்றில் மோத, நான் ஒரு பக்கம், சைக்கிள் ஒரு பக்கம் என்று விழுந்தோம். ஒரு வழியாக சுதாரித்துக்கொண்டு சைக்கிளை தூக்கி பார்த்தால் அழுகையே வந்து விட்டது. முன் சக்கரம் வலது பக்கமாகவும் ஹாண்டில் இடது பக்கமாகவும் திரும்பிக்கொண்டிருந்தது. "என்னடா செய்வது, சைக்கிள் கடைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது" என்று நான் கோபியை கேட்க அவனோ கவுண்டமணி பாணியில் "இதெல்லாம் சகஜம்டா" என்று வீர வசனம் கூறி முன் சக்கரத்தை இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்து ஹாண்டிலை நேர் படுத்தினான்.மீண்டும் காரியரை பிடித்துக்கொண்டு அவன் கூடவே ஓடி வர நான் மெல்ல பெடலை மிதிக்க தொடங்கினேன். சாலை ஓரத்தில் 90 டிகிரி வளைவு இருந்தது. கோபி மூச்சிரைக்க காரியரை பிடித்துக்கொண்டே ஓடி வர நான் கொஞ்சம் கொஞ்சமாக பெடலை வேகமாக அழுத்தி வளைவில் திரும்பினேன். 'டமார்' என்று ஒரு சத்தம். ஒரு இரண்டு வினாடிகளுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.நானும் சைக்கிளும் முன்போல தெருவில் தூக்கி வீசப்பட்டிருந்தோம். என்னடா, எல்லாம் இரண்டு இரண்டாக தெரிகிறதே என்று பார்த்தால், என்னை போலவே இன்னொரு பிரகஸ்பதி சைக்கிள் கற்றுக்கொண்டு எதிர் பக்கத்தில் இருந்து வந்து என்னுடைய சைக்கிளில் மோதியிருக்கிறான்!முட்டியிலிருந்து இரத்தம் கொட்ட எனது சைக்கிளில் இடித்தவனை "எல் போர்டு, முள்ள மாரி, கேப் மாரி" என்று சிறப்பான சென்னை செந்தமிழில் திட்டிக்கொண்டே எழுந்தேன்.பாவம், அவனுக்கும் அடி பட்டிருந்ததால் அவனையும் எழுப்பி "நீ அடுத்த தெருவுக்கு போய் ஓட்டு" என்று கூறிவிட்டு, மீண்டும் எனது புனித பயணத்தை தொடர்ந்தேன்.கோபி காரியரை பிடித்துக்கொண்டே கூட ஓடி வர‌, ஒரு கட்டத்தில் அவன் "கவலைப்படாதே, நான் பிடித்துக்கொண்டு தான் இருக்கிறேன்" என்று தைரியம் ஊட்ட, ஹாண்டிலில் முன்பு இருந்த ஆட்டம் இப்போது குறைந்ததை கண்டு பெருமையாக இருந்தது. "பார்டா கோபி, இப்போது ஹாண்டில் ஆடாமல் இருக்கிறது. வாடகை வண்டி என்றாலே இப்படி தான், ஏதாவது ஓட்டை உடைசலை கொடுத்து நம் தலையில் கட்டி விடுவார்கள்" என்று நான் பேசிக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தேன். 'என்னடா, ஒன்றுமே பேசாமல் வருகிறாய்' என்று நான் கேட்க பதிலே இல்லை.திடீரென்று திரும்பி பார்த்தால் எனது முகமே வெளிறி விட்டது. கோபி தெருக்கோடியில் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அடப்பாவி, அப்போது நான் தனியாகவா இத்தனை நேரம் ஓட்டிக்கொண்டிருந்தேன்? ஐயோ, பிரேக் வேறு பிடிக்கவில்லையே, என்ன செய்வது என்று பதற ஆரம்பித்ததுதான் தாமதம். டமால் என்று பிளாட்பாரத்தின் மேல் ஏற்றி வெற்றிகரமாக வண்டியை சுவற்றில் மோதி நிறுத்தினேன்.'இதுக்கு மேல தாங்க முடியாதுடா சாமி' என்று சைக்கிளை தூக்கி கொண்டு எழுந்திருக்க, கோபி சாவகாசமாக நடந்து வந்தான். அவனை பிடித்து இரண்டு சாத்து சாத்தலாமென்று கருவிக்கொண்டிருக்கும் போதே 'பராவயில்லைடா. ரொம்ப சீக்கிரமாகவே சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டியே' என்றான். ஓ, அப்படியா? எனக்கும் இப்போது டூ வீலரை ஓட்ட தெரியுமா?சைக்கிளை தள்ளிக்கொண்டே வாடகை கடை இருக்கும் தெரு வரை வந்தோம். எட்டி பார்த்தால் கடைக்காரருக்கு பதில் அவருடைய மகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். நல்ல வேளை, தப்பித்தோம். கடையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவனிடம் 50 பைசாவை கொடுத்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம். இனி ஒரு மாதத்துக்கு இந்த தெரு பக்கமே தலை வைத்து படுக்க கூடாது!வீட்டுக்குள் பதுங்கி பதுங்கி நுழைந்த உடனேயே வீர தழும்புகளை எல்லோரும் பார்த்து விட்டனர். 'அது ஒன்றும் இல்லை, விளையாடும் போது கீழே விழுந்து விட்டேன்' என்று நான் கூற கோபி என்னை முறைத்து பார்த்தான்! பின்னே என்ன, வாடகை சைக்கிளை திருட்டுத்தனமாக வாங்கி ஓட்டி கீழே விழுந்து அடியா பட்டுக்கொண்டேன்?


13 comments:

rapp said...

எனக்கும் கிட்டத்தட்ட இப்படி கலக்கல் சைக்கிள் அனுபவம் உண்டு. ரொம்ப நாள் ஒரு தழும்பு கூட இருந்தது (மூக்கின் மேல்) . சூப்பர் பதிவு:):):)

Rajarajan Kannan said...

Nice experience. Everybody has one.

Expatguru said...

வாங்க rapp. வீரத்தழும்பு விழுந்த கதையை சொல்லுங்களேன்!

Expatguru said...

Thanks, maapla. Certain memories can't be forgotten easily, isn't it?

Vishnu... said...

நல்ல அனுபவம் ..இனிமையாக இருக்கு நண்பரே ..

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி விஷ்ணு. அடிக்கடி வாருங்கள்.

Anonymous said...

முழங்காலைப் பணயம் வைத்துப் பிற உறுப்புகளைக் காப்பாற்றிக் கொள்வது என் `சிறப்புத் தகுதி’ அப்போது.

ஒவ்வொரு முறையும் விழுந்து எழுந்ததும் முழங்கால் தோல் தேய்ந்து வெண்மையாகத் தெரியும். பிறகு குருதி கசியத் தொடங்கும். சிறிது நேரத்தில் எல்லாமே சிவப்பாக மாறும்.

நிற்கவோ நடக்கவோ முடியாது. சைக்கிளில் தூக்கி அமரவைத்து வீட்டுக்குக் கொண்டு வருவார் அண்ணன்; அலறுவார் தாயார். இவையெல்லாம் அடிக்கடி நடக்கும்.

என் முழங்கால் தேய்வையும் எரிச்சலையும் உங்கள் கட்டுரை நினைவூட்டுகிறது.

Expatguru said...

நம்பி ஐயா, போருக்கு சென்றால் விழுப்புண் வரத்தானே செய்யும்? முதன்முறை நளபாகத்தை முயற்சி செய்யும்போது விரல்களில் படாத தீக்காயங்களா? என்ன செய்வது, நம்முடைய இது போன்ற தியாகங்களை நமது வீடுகளில் யாரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை, சே!!

ஜீவி said...

அது என்னவோ தெரியவில்லை.. எல்லோருக்கும் இந்த சைக்கிளை நண்பர்கள் தாம் கற்றுக்கொடுக்கின்றனர்; அல்லது நண்பர்கள் இருவர் சேர்ந்து கற்றுக் கொள்கின்றனர். முட்டியைப் பேர்த்துக் கொள்ளாமல் ஒருத்தரும் கற்றுக் கொண்டதில்லை என்பது 'சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்' மகாத்மியத்தின் உபவிதி போலும்! அந்த 'பேலன்ஸ்'ங்கற சமாச்சாரம் கிடைத்ததும், முகத்தில் வழியும் பெருமிதம் இருக்கிறதே! அது அலாதியானது; அர்த்தமுள்ளது.
சேலத்தில் சைக்கிள் விடக் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று, அரைகுறை பேலன்ஸ்
கிடைத்த அடுத்த வாரமே, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஏற்காடு மலையேறி, சைக்கிளில் அமர்ந்து இறங்குகையில், போன உயிர் திரும்பி வந்து,' அப்பாடா, சாமி' என்று தரை தொட்டது இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
'லைட்'டான ஆனால் ஹெவியான
ஒரு சப்ஜெக்டை லைட்டாகக் கையாண்டு மனசை லேசாக்கியமைக்கு மிக்க நன்றி, குரு!

அன்புடன் அருணா said...

அட இதைப் படித்தவுடன் எங்கிட்டே இருக்கும்"டூ வீல‌ர் ஓட்டிய‌ க‌தை" நினைவுக்கு வந்தது.....கூடிய சீக்கிரம் பகிர்வேன்....
அன்புடன் அருணா

Expatguru said...

வருகைக்கு நன்றி, அருணா. உங்களது அனுபவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நானானி said...

நல்லா கொசுவத்தி சுத்த வெச்சுட்டீங்க! டூ வீலர், 4வீலர் எல்லாம் ஓட்டிய கதையெல்லாம் ஏராளமிருக்கு. ஒவ்வொண்ணாப் பதிவேன்.

Expatguru said...

வாங்க நானானி. உங்களுடைய வீர சாகசங்களையும் சொல்லுங்க.

யாருமே த்ரீ வீலர் ஓட்டிய கதையை சொல்ல மாட்டேங்கறாங்களே! சுத்த மோசம் போங்க!!!