Tuesday, 21 October 2008

தித்திக்கும் தீபாவளி

வந்தேவிட்டது மற்றொரு தீபாவளி. எங்கு பார்த்தாலும் கூட்டம் கரை புரளும் நேரம் இது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நேரம் தான்.

மற்ற பண்டிகைகளுக்கும் தீபாவளிக்கும் ஒரு முக்கியமான வித்யாசம் உள்ளது. அதுதான் பட்டாசு. வருடா வருடம் விதம்விதமான பட்டாசுகள் வருகின்றன. ஆனால் அதற்கு தகுந்தாற்போல விலையும் கூடிக்கொண்டே போகிறது. நான் சிறுவனாக இருந்த போது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே அதை பற்றிய கனவுடன் இருப்போம். எங்களது தெருவில் இருந்த பணக்கார நண்பன் "எங்கள் வீட்டில் நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கி இருக்கிறோம்" என்று பீற்றிக்கொள்வான். அப்பொழுதெல்லாம் நூறு ரூபாய் என்பது மிக பெரிய தொகை.


தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் எனது தந்தை பட்டாசுகளை வாங்கி வருவார். அதற்கு முன்னால் வாங்கினால் கொளுத்தி தள்ளிவிடுவோம் என்று அவருக்கு தெரியும்! 40 ரூபாய்க்கு ஒரு பெரிய பை நிறைய பட்டாசுகளை வாங்கி வருவார். (இப்போதெல்லாம் 40 ரூபாய்க்கு ஒரு வெடி வந்தாலே அதிசயம் தான்!). அதை உடனே ஒரு பெரிய செய்தி தாளில் விரித்து காய வைப்போம். யாரும் எந்த வெடியையும் எடுத்து விடாமல் காவல் தெய்வமாக எனது அண்ணன் இருப்பான்! லக்ஷ்மி வெடி, குருவி வெடி, ஊசி பட்டாசு, இரயில், பூந்தொட்டி, அணுகுண்டு, மத்தாப்பு என்று விதவிதமான பட்டாசுகளை பார்க்கும்போதே மிக ஆசையாக இருக்கும்.


தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு தான் பட்டாசு பையை பிரிப்பார்கள். முதல் வெடி எப்பொழுதுமே அணுகுண்டு தான். உண்மையிலேயே மிக பயங்கர வெடி சத்தம் அணுகுண்டில் தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருந்து பாட்டி "கடங்காரா, தெருவில் போய் வெடியேன்டா" என்று கத்தியவுடன் ஒரு குரூர(!) திருப்தியுடன் வெளியே சென்று ஒவ்வொறு பட்டாசாய் வெடிக்க ஆரம்பிப்போம். மத்தாப்பு, குருவி வெடி, சட்டி வாணம் என்று ஒவ்வொன்றாய் மாற்றி மாற்றி வெடிக்க மறுநாள் காலை வெடிப்பதற்காக சில வெடிகளை பதுக்கி வைப்போம்.

தீபாவளியன்று காலை 3 மணிக்கே எழுந்து முதல் வெடியை வெடிக்க வேண்டும் என்று முந்தைய நாள் மாலையிலேயே நண்பர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வோம். அன்று இரவு தூக்கமே வராது. கிட்டத்தட்ட இரவு ஒரு மணி வரை அங்கொன்றும் இங்கொன்றும் வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.
அதிகாலை 3 மணி ஆனது தான் தாமதம். வெளியே வந்து முதலில் ஒரு லக்ஷ்மி வெடியை வெடித்து தெருவையே எழுப்பி விட்டுதான் மறுவேலையே. அதற்குள் அம்மா உள்ளே இருந்து அனைவரையும் கூப்பிட்டு தீபாவளி மருந்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பார். அடுத்து எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அவசரம் அவசரமாக வீட்டில் செய்த இனிப்புகளை சாப்பிட்டு விட்டு மீண்டும் மிச்ச சொச்ச வெடிகளை வெடிக்க புறப்பட்டு விடுவோம். ஒரு ஆறு மணி வாக்கில் ஆய்ந்து ஓய்ந்து வீட்டுக்குள் வருவோம்.உறவினர்கள் ஒவ்வொருவராக வர தொடங்குவார்கள். அவர்களின் வருகையே மிக மகிழ்ச்சியாக இருக்கும். பிற்காலங்களில் இந்த பாழாய்ப்போன தொலைக்காட்சி வந்த பிறகு எல்லோர் வீட்டிலும் விருந்தோம்பலின் அணுகுமுறையே மாறிவிட்டது.

தொலைக்காட்சியில் அன்று வெளிவந்த திரைப்படங்களின் பாடல் காட்சிகள், நடிக நடிகைகளின் அனுபவங்கள் போன்ற 'முத்துக்கள்' ஒளிபரப்ப துவங்கியபின் தெரியாமல் யாராவது உறவினர் வீட்டுக்கு வந்து விட்டால் போதும். வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்று 'உபசரிக்கும்' கலாச்சாரம் மெல்ல வர துவங்கியது. அப்படியே யாராவது உறவினர் வந்து விட்டால் கூட அவரிடம் பேசுவதை விட்டுவிட்டு தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்பார்கள். நடுவில் விளம்பர இடைவெளி வரும்போது மட்டும், விருந்தினர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்ற ஞானோதயம் ஏற்பட்டு, "அப்புறம் வேறு என்ன விசேஷம்?" என்று அவரிடம் கேட்க ஆரம்பிப்பார்கள். அதுவும் அந்த ஒரு நிமிடம் தான். மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் பழைய குருடி கதவை திறடி என்று தொலைக்காட்சியில் தங்களையே தொலைத்து விடுவார்கள்.என்ன இருந்தாலும் தீபாவளியை போன்ற மகிழ்ச்சி வேறு எந்த பண்டிகையிலும் இல்லை என்றே கூறலாம். பதினொறு வருடங்களாக செளதியில் வேலை செய்கிறேன். வெடிச்சத்தமும், நண்பர்களுடன் அடித்த கும்மாளங்களும், சொந்த பந்தங்கள், குழந்தைகள் பெரியோர்களுடன் கழித்த அருமையான இந்த பண்டிகையை நம்மால் அது போல இங்கு கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் இன்னும் உள்ளது. பணத்துக்காக உயிரை அடகு வைத்து விட்டோமோ என்று உள்ளம் கேட்கிறது. பதில் தான் இல்லை.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

4 comments:

Anonymous said...

இனிய நினைவுகள்.

Anonymous said...

//பணத்துக்காக உயிரை அடகு வைத்து விட்டோமோ என்று உள்ளம் கேட்கிறது. பதில் தான் இல்லை.//

விடை தேடாதீர்கள்.

தீபாவளி வாழ்த்துகள்.

vijay.s said...

excellent one!!! ungaladuya eliya ezhuthu nadai...intha article padipavarin manathil ullatha vivaripathu pol ullathu...

iniya deepavali nal vazhthukal...

closely following both of ur blogs...

wud like to have ur email id...

cheers...vijay

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி விஜய். உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சில காரணங்களுக்காக எனது மின் அஞ்சலை வெளியிடாமல் இருக்கிறேன் (நாம் இருக்கும் ஊர் அப்படி, உங்களுக்கே தெரியும்). அதை பற்றி விரிவாக ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை பாருங்களேன்

http://www.saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentID=2008101018843&archiveissuedate=10/10/2008