Tuesday, 28 October 2008

பச்சோந்திகள்

நாம் சில 'பெரிய' மனிதர்களை மிகவும் மதித்து போற்றுவோம். அவர்களின் கொள்கை பிடிப்பு மிகவும் புரட்சிகரமானதாக இருக்கும். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி கூறும்போது அவர்களின் மேல் வைத்திருந்த மதிப்பே போய்விடும்.

எனது பெரியப்பா தமிழக காவல் துறையில் பல வருடங்கள் பணி புரிந்தவர். அவர் காலமாகி சில வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய வேலை என்னவென்றால் கட்சி தலைவர்கள் பொது கூட்டங்களிலோ கட்சி கூட்டங்களிலோ பேசும்பொழுது அதை பற்றி குறிப்பு எடுத்து அதை உடனுக்குடன் தலைமை செயலகத்துக்கு தெரியப்படுத்துவது தான். இது போன்ற குறிப்புகள் முதல்வரின் நேரடி பார்வைக்கு செல்லும். காலா காலமாக கட்சி பாகுபாடு இல்லாமல் யார் முதல்வராக வந்தாலும் நடை பெற்று வரும் வழக்கம் இது. வேலை நிமித்தமாக பல கட்சி தலைவர்களுடைய பொதுக்கூட்டங்களுக்கும் கட்சி கூட்டங்களுக்கும் (பொது ஜனம் போல சாதாரண உடையில் சென்று) குறிப்பெடுத்து நேரிடையாக தகவல் சொல்லும் ஒற்றர் பணியில் எனது பெரியப்பா இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், வந்திருப்பது காவல் துறையின் நபர் என்பது அந்தந்த தலைவர்களுக்கும் தெரியும்! பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான் இது!

அவர் ஓய்வு பெற்ற பின் எங்களிடம் பல தலைவர்களை பற்றிய ருசிகரமான சம்பவங்களை பற்றி கூறுவார்.

கடவுள் எதிர்ப்பு கொள்கையை மிக தீவிரமாக கொண்ட ஒரு கட்சி தலைவரை பற்றி எனது பெரியப்பா கதை கதையாக கூறுவார். அவர் பொதுக்கூட்டங்களில் மிக வீரமாக பேசும்போது ஆலய மணி அடிப்பதை போன்று இருக்குமாம்! அவரின் பேச்சை (60களில்) கேட்பதற்கு கூட்டம் அலை மோதுமாம். "பகுத்தறிவு" என்று கூறிக்கொண்டு மேடை மேடையாக, தெருத்தெருவாக கடவுள் எதிர்ப்பையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே தங்களது பரம விரோதிகளாக பாவித்து அவர்களை கண்டால் செருப்பால் அடிக்குமாறு தங்களது தொண்டர்களை தூண்டி விட்டு பேசுவதில் அவர் வல்லவர். "பாம்பையும் ....னையும் கண்டால் பாம்பை விட்டு விடு. ....னை உடனடியாக கொன்றுவிடு" என்று (இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட) அமிலத்தை கக்கும் அந்த தலைவர் எப்பொழுதும் கறுப்பு சட்டையுடன் தான் வெளியே செல்வார். எனது பெரியப்பாவை பொதுக்கூட்டத்தில் முதல் வரிசையில் கண்டதும் மேடையிலேயே அந்த தலைவர் "மாமியார் வீட்டிலிருந்து வந்துட்டாங்கய்யா" என்று நக்கலாக கூறுவாராம்.


இவரது வீட்டுக்கு அடிக்கடி எனது பெரியப்பா சென்றிருக்கிறார். வெளியே வெறுப்பை கொட்டி பேசும் இந்த தலைவரின் வீட்டில் நிலைமை தலைகீழாம். அது மட்டுமல்ல, அவர் வீட்டில் அணிவது தூய வெள்ளை வெளேர் என்ற சலவை சட்டையை தானாம். ஆச்சரியமாக இருக்கிறதா? சற்று பொறுங்கள். அவரது வீட்டின் உள் அறையில் சுவற்றில் அத்தனை சாமி படங்களையும் காணலாமாம்! வெளியே பகுத்தறிவு பிரசாரத்தை மேற்கொள்ளும் இவருக்கு ஜோதிடத்தின் மேல் அலாதியான நம்பிக்கையாம். இது எப்படி இருக்கிறது?

மற்றொரு மிகப்பெரிய பகுத்தறிவு தலைவரின் வீட்டிலும் இதே கதை தானாம். இவரது மனைவி, மக்கள், பேரன் பேத்திகள் எல்லோரும் ஆத்திகவாதிகள். இவர் மட்டும் தீவிர கடவுள் எதிர்ப்பை பொது வாழ்க்கையில் கடைபிடித்து வருபவர். (இவரின் வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் கோவிலில் இவருடைய பிறந்த நாளில் இவருடைய பெயரில் அர்ச்சனையே நடந்தது). "உபயம் இன்னார்" என்று இவருடைய பெயரை வெளிப்படையாகவே எழுதியிருந்தார்கள்!

இவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தங்களது இரட்டை வேடத்தால் இவர்கள் ஏமாற்றி வருவது என்றாவது ஒரு நாள் வெளியே தெரிய வந்தால் என்ன செய்ய போகிறார்களோ? இவர்களை ஆட்டு மந்தை போல நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன பதில் கூறுவார்கள்? அரசியலில் மானமாவது மரியாதையாவது, வெங்காயம், இதெல்லாம் சகஜம்ப்பா!

6 comments:

Anonymous said...

என்ன செய்வது ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை
இவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அ. நம்பி said...

பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே மெய்போ லும்மே.
- அதிவீரராம பாண்டியர்

Expatguru said...

வருகைக்கு நன்றி அனானி. இவர்களை நம்பி ஓட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும்!

Expatguru said...

மிக சரியாக சொன்னீர்கள், நம்பி ஐயா. இவர்களின் சாயம் ஒரு நாள் கண்டிப்பாக வெளுக்கும்.

muthu said...

periyar and K Veeramani?

Expatguru said...

வருகைக்கு நன்றி முத்து. இவர்கள் யார் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்களேன். என்னை ஏன் வம்பில் மாட்டி விடுகிறீர்கள்?? ;)