Saturday 8 November 2008

அன்பளிப்பு

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முடித்திருந்த நேரம். பட்டப்படிப்புக்கான சான்றிதழை தயார் செய்து அனுப்ப சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்காலிகமாக ஒரு சான்றிதழை (Provisional Certificate) பல்கலைக்கழகத்தில் கொடுப்பதாக கூறினர். இதை வைத்து கொண்டு வேலை தேடவோ மேற்படிப்பு படிக்கவோ நிரந்தர சான்றிதழ் வரும் வரை உபயோகித்து கொள்ளலாம்.


இந்த தற்காலிக சான்றிதழை வாங்குவதற்காக ஒரு விண்ணப்ப படிவத்தை நிரப்பி வங்கியில் பணம் கட்டிவிட்டு அதற்கான நகலை படிவத்துடன் கொடுக்க வேண்டும்.


காலையிலேயே பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு இருந்த நீண்ட வரிசையில் காத்திருந்து எனது விண்ணப்ப படிவத்தை அங்கிருந்த குமாஸ்தாவிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கி பார்த்து விட்டு, "ஆமேலே பா" ("பிறகு வா") என்று கன்னடத்தில் விரட்டினார். நானும் விடுவதாயில்லை. "பிறகு" என்றால் எப்பொழுது? நான் நகராமல் அங்கேயே இருந்தேன். எப்பொழுது வரவேண்டும் என்று கேட்டதற்கு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரச்சொன்னார். ஒன்றும் பெரிய காரியம் இல்லை. ஒரே ஒரு முத்திரை அடிக்க வேண்டும். அதற்குதான் இத்தனை பீடிகை. என்னுடைய விபரங்கள் எல்லாம் ஏற்கனவே கணணியில் இருந்ததால் அதை ஒரு நகல் எடுத்து முத்திரை குத்தி பதிவாளரிடம் கையெழுத்து வாங்கினால் வேலை முடிந்தது.



நானும் அவர் கூறியது போல இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரிசையில் போய் நின்றேன். என்னை பார்த்தவுடன், "மதிய உணவுக்கு பிறகு வா" என்றார். எனக்கு சுரீர் என்று கோபம் வந்து விட்டது. "நீங்கள் தானே இரண்டு மணி நேரத்துக்கு பிறகு வரச்சொன்னீர்கள். இதை முன்பே கூறி இருந்தால் நான் மதிய உணவுக்கு பிறகே வந்திருப்பேனே" என்று கேட்டேன். அவ்வளவுதான். என்னவோ எனக்கு பெரிய உபகாரம் செய்வது போல மிக கேவலமான வார்த்தைகளால் என்னை திட்டி ஜன்னல் கதவை பட்டென்று மூடிவிட்டார்.


எனக்கு ஒரே அவமானமாக ஆகிவிட்டது. சரி, மதிய உணவுக்கு பிறகு நமது சான்றிதழை வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று அந்த ஜன்னல் அடியிலேயே உட்கார்ந்து கொண்டுவிட்டேன். (இடத்தை விட்டால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டுமே!).



மதிய உணவு வேளை முடிந்து கூட ரொம்ப நேரம் ஜன்னல் திறக்கவே இல்லை. ஒரு வழியாக ஜன்னலை திறந்த போது நான் நிற்பதை பார்த்த அந்த குமாஸ்தா என்னை ஒரு கிருமியை பார்ப்பது போல ஏளனமாக பார்த்து சிரித்தான். நான் ஒன்றும் கூறாமல் நின்று கொண்டிருந்தேன். அந்த குமாஸ்தா உடனே "உனக்கு இன்றே இந்த சான்றிதழ் வேண்டுமா?' என்று கேட்டான். நான், "எனக்கு மிக அவசரமாக வேண்டும். இரவு ஊருக்கு செல்ல வேண்டும்" என்று கூறினேன்.



அவன் உடனே, "எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இன்று முடியும் போல தோன்றவில்லை. உனக்காக செய்ய வேண்டும் என்றால் நீ எனக்கு 500 ரூபாய் அன்பளிப்பாக தர வேண்டும்" என்று கூறினான். நான், "என்னிடம் 500 ரூபாய் இல்லை" என்று கூறினேன். அவ்வளவுதான். அவன் என்னை விரட்டாத குறையாக "போய் எடுத்து கொண்டு வா" என்று கூறிவிட்டான்.



காலையில் இருந்து எனக்கு பசி வேறு. ஒன்றுமே சாப்பிடவில்லை. எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இவனை இன்று ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது என்று தீர்மானித்தேன். அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக என்னை கேவலப்படுத்தினான் அல்லவா? இவனுக்கு மேலதிகாரி யார் என்று தெரியவில்லையே. சரி, வந்தது வரட்டும், என்று நேரிடையாக பதிவாளரையே பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.



பதிவாளர் ஒரு தனி அறையில் இருந்தார். வாசலில் இருந்த பியூன் என்னை தடுத்து, "அவர் மிகவும் busyயாக இருக்கிறார். இப்பொழுது பார்க்க முடியாது" என்று கூறினான். நானும் விடாப்பிடியாக, 'அவர் freeயாக ஆகும்வரை நான் காத்திருக்கிறேன்' என்று அவரது அறையின் வாசலில் நின்றுகொண்டேன். அந்த அறைக்கு நேர் எதிரில் உள்ள அறையில் தான் அந்த குமாஸ்தா உட்கார்ந்து கொண்டிருந்தான். ஆனால் நான் அங்கு நிற்பதை அவன் பார்க்கவில்லை.

நேரம் செல்ல செல்ல நான் பொறுமையை இழந்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து வாசலில் இருந்த ப்யூன் கழிவறைக்கு செல்ல, ஒரு உத்வேகத்தில் வந்தது வரட்டும் என்று பதிவாளரின் அறையை திறந்து கொண்டு நேரே உள்ளே நுழைந்தேன். எனக்கு பின்னால் கதவை மூடாமல் திறந்தே வைத்தேன்.
இப்பொழுது நினைத்து பார்த்தாலும் ஏன் அப்படி செய்தேன் என்று தெரியவில்லை, ஆனால் எப்படியோ அது நடந்து விட்டது. உள்ளே நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
"Busy" என்று கூறப்பட்ட பதிவாளர் ஒரு செய்தி தாளை அகல விரித்து மும்முரமாக பார்த்து கொண்டிருந்தார். அவரது மேஜையில் ஒரு பத்து லாட்டரி சீட்டுக்கள்!! என்னை கண்டதும் சிறிது திடுக்கிட்டு பிறகு சுதாரித்து கொண்டு "என்ன?" என்பது போல பார்த்தார்.
நான் ஆங்கிலத்தில் அவரிடம் மெல்ல ஆரம்பித்தேன். நான் பேச பேச என்னை அறியாமலேயே எனது குரல் சிறிது சிறிதாக அதிகமாக ஆரம்பித்தது. பதிவாளரிடம், "ஐயா, நான் காலையில் இருந்தே சாப்பிடாமல் வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு சாதாரண சான்றிதழுக்காக உங்களது அலுவலக குமாஸ்தா என்னை அலைக்கழிய வைக்கிறார். அவருக்கு 500 ரூபாய் கொடுத்தால் தான் எனது வேலையை செய்வாராம். நானோ ஒரு மாணவன். இன்னமும் சம்பாதிக்க கூட ஆரம்பிக்கவில்லை. எனது செலவுக்கே எனது தந்தையை நம்பிக்கொண்டிருக்கிறேன். இவருக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வேலை செய்வார் என்றால் பிறகு இந்த அலுவலகம் எதற்கு, சம்பளம் எதற்கு, மேலதிகாரி நீங்கள் எதற்கு?" என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டேன்.
கதவு திறந்திருந்ததால் அலுவலகத்தில் அனைவருக்கும் நான் கத்தி பேசியது கேட்டுவிட்டது. அனைவரும் திக்பிரம்மை பிடித்தது போல அமைதி ஆகிவிட்டனர். அது மட்டுமல்ல, ஜன்னல் திறந்திருந்ததால், வெளியே காத்திருந்த மற்றவர்களுக்கும் நான் கத்தியது கேட்டிருக்க வேண்டும்.
அதிர்ச்சியில் உறைந்த பதிவாளர் உடனே தனது இருக்கையை விட்டு எழுந்தார். எனது தோளில் கையை வைத்து, "இல்லை தம்பி. நீங்கள் நினைப்பது போல இல்லை" என்று ஏதோ கூறினார். கோபத்தில் எனது கண்கள் சிவந்திருந்தன. எனது கையை பிடித்து என்னை தனது அறையின் வெளியே அழைத்து வந்தார். நேராக அந்த குமாஸ்தாவிடம் சென்று "என்ன செய்வீர்களோ தெரியாது, 10 நிமிடத்தில் இந்த பையனுக்கு சான்றிதழ் தயாராக வேண்டும்" என்றார். குமாஸ்தாவின் முகத்தில் அதிர்ச்சி மின்னல்.
சரியாக பத்தாவது நிமிடம் எனது கைகளில் சான்றிதழ் வந்தடைந்தது. பதிவாளரிடம் எனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்து விட்டு அந்த குமாஸ்தாவை ஒரு பார்வை பார்த்தேன்.
ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட அந்த பார்வையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், ஒரு 21 வயது பையனிடம் நேர்ந்த அவமானத்தால் கூனிக்குறுகி வேறு எங்கோ பார்த்தார்.
அன்று ஒரு மிக முக்கியமான பாடத்தை கற்று கொண்டேன். நமது பலவீனத்தை சாதகமாக்கி கொள்ள யாராவது முயற்சி செய்தால் நாம் பயந்து விடக்கூடாது. நேருக்கு நேராக அதை எதிர்கொள்ள வேண்டும். ஒரு வேளை எனது கோபமான வார்த்தைகளால் அன்று வேறு ஏதாவது கூட நடந்திருக்கலாம். ஆனால் நான் கூறியதில் நியாயம் இருந்ததாலும் மனதில் இருந்து உண்மையான வார்த்தைகள் வெளிவந்ததாலும் அன்று வெற்றி பெற்றேன் என்றே நினைக்கிறேன்.
இத்தனை வருடங்களுக்கு பிறகு கூட பெங்களூர் பல்கலைக்கழகத்தின் வழியாக நான் செல்லும் போது மறக்க முடியாத இந்த சம்பவத்தை நினைத்து சிரிப்பு தான் வருகிறது!

13 comments:

CVR said...

Interesting experience..
Thanks a lot for sharing :)

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி CVR.

சீமாச்சு.. said...

நல்ல அனுபவம்.. நல்ல எழுத்து.. படிக்க சுவாரசியமாக இருந்தது..

கடைசியில் உங்களுக்கு நியாயம் கிடைத்ததில் மகிழ்ச்சி.. படிக்கும் போதே உங்களுக்கு வந்த நியாயமான கோவம் எனக்கும் வந்தது...

பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ளல் ஆகாது பாப்பா..

மோதி மிதித்துவிடு பாப்பா..
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

அன்புடன்
சீமாச்சு..

Anonymous said...

//...உனக்காக செய்ய வேண்டும் என்றால் நீ எனக்கு 500 ரூபாய் அன்பளிப்பாக தர வேண்டும்" என்று கூறினான்.//

`அன்பளிப்பு' என்பதனை ஒரு பண்பாடாகவே கருதும் நாட்டில் அவர் 500 ரூபாய் கேட்டதில் வியப்பொன்றும் இல்லையே?

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சீமாச்சு. பல முறை நாம் சும்மா இருப்பதாலேயே பிறர் அதை தமக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள் அல்லவா?

Expatguru said...

பண்பாடு மட்டுமல்ல, நம்பி ஐயா, உரிமை என்றே அல்லவா நினைக்கிறார்கள்? வாங்கும் சம்பளம் அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கு தான், வேலை செய்ய வேண்டுமென்றால் அன்பளிப்பு தேவை என்ற நிலைமை ஆகிவிட்டது.

Anonymous said...

உங்க மாதிரி அனுபவம் என் கணவருக்கும் 2006ல் ஏற்பட்டது அதே பெங்களுர்
யுனிவர்சிட்டியில்..ஆனா 1500 ரூபாய் கொடுத்து கையெழத்து வாங்கிட்டு வந்தார்...வேற வழி...2 நாளில் துபாயில் இருக்க வேண்டிய சூழ்நிலை.

Expatguru said...

இவர்கள் திருந்தவே மாட்டார்கள் போல இருக்கிறது. "நமக்கேன் வம்பு, பேசாமல் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு காரியத்தை முடித்து கொண்டு செல்வோம்" என்கிற நமது மனப்பான்மையினால் தான் இது போன்ற நபர்களுக்கு அன்பளிப்பு வாங்க தைரியம் வருகிறது. இதை சரி செய்ய ஒரு வழி உள்ளது.

பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவு வெளிவந்தவுடன் இணையத்தில் சென்று நாமே 'ப்ரிண்ட்' எடுத்து கொள்ளும் வசதி வரவேண்டும். சென்னை மாநகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை இப்படி தான் செய்திருக்கிறார்கள்.

Anonymous said...

பிச்சைகாரன் தட்டில் இருந்து காசு திருவதை விட கேவலம் அன்பளிப்பு வாங்குவது என்பது என்று அவர்களுக்கு புரியுமோ, அன்றுதான் அவர்கள் உருப்பிடுவார்கள். மாணவனிடம் லஞ்சம் கேட்பது, அவனையும் வருங்காலத்தில் சீரழிப்பது போல்தான். தான் கெட்டது மட்டுமில்லாமல், வருங்கால சமுதாயத்தையும் சீரழிக்கின்ற பாவிகள் இவர்கள். கோபமாக வருகின்றது, மற்றவர் பதிவில் எழுதுவதால் வார்த்தைகளை யோசித்து எழுதவேண்டியுள்ளது. இராகவன், நைஜிரியா

Expatguru said...

வருகைக்கு நன்றி, இராகவன். இதாவது பரவாயில்லை. அரசாங்க மருத்துவமனைக்கு சென்றால் பிணவறையில் இருந்து சடலத்தை வெளியே எடுக்க கூட கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இன்று உள்ளது. இவர்களுக்கெல்லாம் ஈவு இரக்கம் என்பதே கிடையாது என்றே நினைக்கிறேன். எப்படியாவது பணம் பண்ண வேண்டும், மற்றவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன, என்கிற போக்கு தான்.

யூர்கன் க்ருகியர் said...

நான் எப்பொழுதுமே ஒரு ரகசிய காமெராவை என்கூட வைச்சுக்கொண்டு இருப்பேன்.
டைம் பார்த்து காமெராவை ஆன் பண்ணி இந்த மாதிரி "அன்பளிப்பு" கேட்பவனை எல்லாம் ஒரு ஆட்டு ஆட்டிடலாம்.

ரகசிய காமெராவின் மாதிரியை கீழே உள்ள லிங்கில் போயி பார்க்கவும்.


http://www.elv.de/output/controller.aspx?cid=74&detail=10&detail2=23882

ஜீவி said...

அருமை குரு! விஷயம் வடு போல உங்கள் மனத்தில் பதிந்து விட்டது. அதனால் மிகவும் உணர்வு பொங்க
எழுதித் தள்ளி விட்டீர்கள்..
அன்று மட்டும் உங்கள் காரியம் வெற்றிகரமாக நடந்திருக்க வில்லையென்றால், இவ்வளவு காலத்திற்கு நினைவில் வைத்திருந்திருக்க மாட்டீர்கள்..
ஏனென்றால், வெற்றி நின்று நிதானித்து எந்த காலத்தும் சுவைக்கக் கூடியது.. இளம்வயதில் ஏற்படும் எந்த சங்கடமும் துன்பமானவை தாம். நல்லவேளை! உங்களுக்கு நல்லது நடந்தது அன்று.

இதைப் படித்ததும் அமரர் அகிலனின்
'பாவைவிளக்கு' நாவலில் வரும் ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. அது வேறுமாதிரியானது.
நீளமானது.. சுவைபடச் சொல்ல வேண்டும்.. எனது ஒரு பதிவில், வாய்ப்பு கிடைக்கும் பொழுது சொல்கிறேன்..
எதையும் வெகு சிறப்பாக உணர்வு பொங்க எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..

Expatguru said...

நன்றி ஜீவி. நீங்கள் கூறியது போல, வாழ்க்கையில் சில விஷயங்களை மறக்கவே முடியாது தான். இளமையில் நாம் கற்கும் பாடம் தான் கடைசி வரை இருக்கும் இல்லையா?

'ஆன்மாவை தேடி' தொடரின் அடுத்த பகுதி எப்பொழுது ஐயா? நீண்ட இடைவெளியை விட்டுவிடாதீர்கள். ஆர்வம் தாங்க முடியவில்லை!