Wednesday 17 December 2008

சலாம் பம்பாய் - 4

பம்பாய் வீ.டீ. இரயில் நிலையத்தில் நான் ஒரு அதிசயமான காட்சியை கண்டேன் என்று கூறினேன் அல்லவா? ஆனால் அதற்கு முன்னால் முதலில் எனது முந்தைய பதிவை படியுங்கள். அப்போது தான் இந்த பகுதி புரியும்.



பம்பாய் வீ.டீ. இரயில் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். காலை நேரமானால் மக்கள் இரயில் நிலையத்திலிருந்து பெருந்திரளாக வெளியே வருவார்கள். அதே போல், மாலையில் இரயில் நிலையத்துக்குள் செல்லும் கூட்டம் வெளியே வரும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.
நான் வீ.டீ. இரயில் நிலையத்தை அடைந்த போது மாலை சுமார் 6.15 இருக்கும். சரியான அடை மழை பெய்துகொண்டிருந்தது. பெருந்திரளாக மக்கள் இரயில் நிலையத்தின் 'உள்ளே' செல்வதற்கு பதில் 'வெளியே' வந்து கொண்டிருந்தார்கள். 'என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டே இரயில் நிலையத்துக்குள் சென்று பார்த்தால் ஒரு தடத்தில் கூட இரயில் இல்லை. அடுத்த இரயில் புறப்படும் நேரத்தை காட்டும் 'இன்டிக்கேட்டர்கள்' எல்லாவற்றிலுமே "00:00 " என்று இருந்தது.


என்ன விஷயம் என்று பார்த்தால் தண்டவாளங்கள் அனைத்திலும் 4 அடிக்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து இரயில்களும் ரத்து என்று கூறினார்கள். அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எப்படி செல்வது என்ற கவலையில் மக்கள் அனைவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.மழையோ விடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது.



அப்போதெல்லாம் அலைபேசி வசதி கிடையாது. ஒரு கடைக்குள் சென்று வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால் வீட்டு தொலைபேசியும் வேலை செய்யவில்லை. சாலை முழுவதும் மக்கள் வெள்ளம். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. மழையினால் இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.



சரி இப்போதைக்கு இரயில் எதுவும் கிடையாது என்பது தெரிந்து விட்டது. ஏதாவது பேருந்து கிடைக்குமா என்று வீ.டீயிலிருந்து அருகில் Fort என்ற இடம் வரை நடந்து வந்தேன். ஒரு முக்கால் மணி நேரமான பின் காட்கோப்பர் என்ற இடத்துக்கு செல்லும் ஒரு பேருந்து வந்தது.



பல முறை நான் சென்னை பல்லவன் பேருந்தில் சென்றிருக்கிறேன், பம்பாய் இரயில் கூட்டத்தில் மிதி பட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேருந்தில் இருந்த கூட்டத்தை போல எங்குமே நான் பார்த்திருக்கவில்லை. குடை சாய்வது போல பேருந்து வந்து கொண்டிருந்தது. எனக்கோ தவிப்பு. இந்த பேருந்தை விட்டு விட்டால் நாம் இங்கேயே இரவை கழிக்க வேண்டியதுதான்.
வண்டி நின்றது. ஆனால் உள்ளே நுழைவதற்கோ ஒரு துளி இடம் கூட இல்லை. வேறு வழியில்லாமல் பேருந்தின் பின் சக்கரத்தில் ஒரு காலை வைத்து ஏறி மற்றொரு காலை ஜன்னல் வழியே உள்ளே விட்டு உட்கார்ந்திருந்த பயணியின் தொடை மேல் வைத்து உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டேன்! அப்பாடா, ஒரு வழியாக பேருந்தின் உள்ளே நுழைந்து விட்டேன். அந்த பயணியோ கத்து கத்தென்று கத்தினான். நான் "sorry" (!!) என்று கூறி விட்டு அவனது இரண்டு கால்களுக்கும் நடுவில் நின்று கொண்டேன்! என்ன செய்வது, ஆபத்துக்கு பாவமில்லை!!



எப்படியாவது இங்கிருந்து நகர்ந்தால் சரி. இத்தனைக்கும் நான் போக வேண்டிய இடம் காட்கோப்பரே அல்ல. ஆனால் வீ.டி.யை விட்டு எங்காவது சென்றால் அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ ஏதாவது கிடைக்கலாம் அல்லவா?
6.30 மணிக்கு பேருந்து கிளம்பியது. வழியெல்லாம் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். முக்கி முக்கி பேருந்து வடாலா என்ற இடம் வரை வந்து சேர இரவு 8.30 ஆகியிருந்தது. இதற்கு மேல் பேருந்து செல்லாது என்று ஓட்டுனன் கூறினான். வெளியே வெள்ளம் போல மழை நீர். பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கி விட்டனர்.



சில்லென்று மழை நீர் முழங்கால் வரை ஏறியது. இப்போது என்ன செய்வது? சரி, மற்றவர்களை போல நடக்க வேண்டியது தான் என்று வடாலாவிலிருந்து சாலையில் ஓடும் வெள்ளத்திலேயே நடக்க ஆரம்பித்தேன்.
வழி முழுவதும் தண்ணீர். லேசாக குளிர ஆரம்பித்தது. 'வீட்டிற்கு எப்படி போய் சேர்வது? எப்போது போய் சேர்வது? எப்படியாவது தகவல் கொடுத்தாக வேண்டுமே. தொலைபேசி கூட வேலை செய்யவில்லையே' என்றெல்லாம் எண்ணிக்கொண்டே சாலையில் மற்ற பயணிகளுடன் நடக்க ஆரம்பித்தேன். மணி 10.15 இருக்கும். கிங் சிர்க்கிள் என்ற இடத்தை அடைந்தேன். இது தமிழர்கள் வாழும் பகுதி. என்னுடைய துரதிர்ஷ்டம் எல்லா ஹோட்டல்களுமே இழுத்து மூடியிருந்தனர்.



பசி, குளிர், அசதி என்று உடம்பே ஒரு வழியாகி விட்டது. 'இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ கடவுளே, ஏதாவது பேருந்து கிடைக்காதா' என்று ஆதங்கத்துடன் ஸயன் என்ற இடம் வரை வந்து விட்டேன். என்னை போலவே நூற்றுக்கணக்கான மக்கள் சாலையின் வெள்ளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று பார்த்தால் சாலையின் இருபுறமும் புதிதாய் முளைத்த tent கொட்டகைகள். அதன் உள்ளே பெரிய அடுப்புகளில் சுடச்சுட pav bhaji என்ற போண்டா போன்ற தின்பண்டத்தை வீட்டு பெண்மணிகள் தயாரித்து கொண்டிருந்தனர். மழைக்கோட்டுடன் சாலையின் இரு புறத்திலும் இளைஞர்கள் உள்ளெ இருந்து அவற்றை வாங்கி எங்களை போன்றவர்களிடம் இலவசமாக கொடுத்து கொண்டிருந்தனர். என்னிடம் ஒரு இளைஞன் வந்து "அங்கிள், இதை எடுத்து கொள்ளுங்கள்" என்று ஒரு காகிதத்தில் 4 பாவ் பாஜிகளை கொடுத்தான். எனக்கு வாங்குவதற்கு சிறிது தயக்கமாக இருந்தது. நான் யோசிப்பதற்குள் என் கையில் அதை திணித்து விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே சென்று மேலும் 4 பாவ் பாஜிகளை கொண்டு வந்த மற்றவர்களிடம் கொடுத்தான்.



பசி, நடந்து வந்த அசதி என்று அனைவரும் மயக்க நிலையில் இருந்ததால் கொடுத்த தின்பண்டத்தை உடனே சாப்பிட்டு விட்டோம். அப்போது தான் நான் அந்த கொட்டகைகுள்ளே பார்த்தேன். உள்ளே ஒரு 10 பெண்மணிகள் அடுப்புகளில் தின்பண்டங்களை செய்து கொண்டிருந்தனர். அந்த சுற்று வட்டாரத்து இளைஞர்கள் ஒரு 15 பேர் சுறுசுறுப்பாக உள்ளிருந்து தின்பண்டங்களை காகிதங்களில் எடுத்து பாதசாரிகளிடம் கொடுத்து கொண்டிருந்தனர்.



அந்த இளைஞர்களில் ஹிந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் என்று எல்லா ஜாதி மதத்தினரும் இருந்தனர். ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் ஓடியாடி பொது சேவை செய்து கொண்டிருந்தனர். யாரிடமிருந்தும் ஒரு சல்லி காசு கூட வாங்கவில்லை. நான் ஒருவனிடம் எவ்வளவோ வற்புறுத்தியும் கடைசி வரை என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்து விட்டான். "இல்லை அங்கிள், நீங்கள் எவ்வளவோ தூரத்தில் இருந்து நடந்து வருகிறீர்கள். உங்களுக்காக இது கூட நாங்கள் செய்யவில்லை என்றால் எப்படி" என்றான். நான் கண் கலங்கி விட்டேன். இத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்தோ, இரயில்வேயிடமிருந்தோ அல்லது மாநகராட்சியிடமிருந்தோ ஒருவிதமான உதவி கூட இல்லை. ஆனால் துடிப்புள்ள இந்த இளைஞர்களும் சமைத்து கொடுத்த தாய்மார்களும் என்னமாய் ஒரு மகத்தான சேவை செய்து கொண்டிருந்தனர்! இது போன்று நான் எங்கும் பார்த்ததேயில்லை.



அங்கிருந்து ஸயன் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நெடு நேர‌ம் காத்திருந்த‌ பிற‌கு நல்ல வேளையாக நேருல் செல்லும் பேருந்து ஒன்று வ‌ந்த‌து. அதில் ஏறி அமர்ந்து நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தேன். பொழுது விடிய‌ துவ‌ங்கி இருந்த‌து.



நண்பர்களே, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு விதமான அனுபவங்களை நான் பார்த்தேன். மனித நேயம் இன்னும் சாகவில்லை. ஆனால் வெளிப்படையாக தெரியவில்லை. ஏதாவது ஒரு மிகப்பெரிய ஆபத்து வந்தால் மட்டும் அது வெளிப்படுகிறதோ? இந்த இரண்டு விதமான அனுபவங்களில் உண்மையான பம்பாய் எது? எனக்கு புரியவில்லை நண்பர்களே! உங்களுக்கு?

3 comments:

Anonymous said...

இந்த பதிவை படித்தவுடன் உண்மையிலேயே நான் அழுதுவிட்டேன். அனுபவித்தவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் என்பார்கள். உணர்ச்சிபூர்வமான இந்த அனுபவம் மறக்க முடியாது தான்.

Anonymous said...

//மனித நேயம் இன்னும் சாகவில்லை.//

உண்மை.

//ஆனால் வெளிப்படையாக தெரியவில்லை.//

உண்மை.

//ஏதாவது ஒரு மிகப்பெரிய ஆபத்து வந்தால் மட்டும் அது வெளிப்படுகிறதோ?//

உண்மை. மனித சமுதாயத்தின் பலமும் இதுதான்; பலவீனமும் இதுதான்.

கட்டுரை மிக நன்று; வாழ்த்துகள்.

Manaswini.K said...

It brought tears to my eyes too. Have experienced the deluge in 2005.Children were stuck in school and some on the way . In our building alone there were so many different experiences. But people were everywhere to help others. That is Bombay!!!
By the way,am still wondering why I got flashed as anonymous for the comment on Salam Mumbai -3?