Wednesday, 24 December 2008

துள்ளி திரிந்ததொரு காலம்

பள்ளியில் படித்த காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். கவலை இல்லாமல் துள்ளி திரிந்த அந்த காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்.


எனது பள்ளி காலங்களும் அப்படி தான் இருந்தன. பள்ளியில் படிக்கும் போது புத்தகத்தை படித்தோமோ இல்லையோ ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைப்பதில் எல்லோரும் புலிகளாக இருந்தோம். எந்த ஒரு ஆசிரியரையும் அவரது உண்மையான பெயரை வைத்து கூப்பிடுவது என்பதே கிடையாது.


அதுவும் எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இராணுவத்தில் எதிரிகளை சுட்டாரா அல்லது தோசையை சுட்டாரா என்று இன்று வரை புரியாத ஒரு புதிர் தான். ஆனால் குறும்பு செய்யும் மாணவர்களை தோசை திருப்பி போல சாத்து சாத்தென்று சாத்திவிடுவார்.பல ஆசிரியர்களுக்கே இவரை கண்டால் பிடிக்காது. அதனால் அவரது பெயர் 'ஹிட்லர்' என்று வைத்தோம்.


அதே போல வெற்றிலை போடும் ஆசிரியருக்கு பேசும் பொழுது வாயிலிருந்து வெற்றிலை எச்சில் சாரல் போல தெறிக்கும்! அதனால் அவருக்கு 'குற்றாலம்' என்று பெயர். கொடுவாள் மீசையுடன் வரும் ஆசிரியருக்கு 'பாம்பாட்டி' என்றும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த குள்ளமான ஆசிரியருக்கு (பாவம், அவர் என்ன செய்வார்) 'சித்திரக்குள்ளன்' என்றும் சகட்டு மேனிக்கு புனை பெயர்களை சூட்டியிருந்தோம். பள்ளியிலேயே எங்கள் வகுப்பு மாணவர்களை கண்டால் ஆசிரியர்களுக்கே சற்று கலக்கம் தான்.


எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு அருமையான ஆசுகவி. அதாவது சற்றும் யோசிக்காமல் சரளமாக மரபுக்கவிதைகளை எதுகைமோனையோடு உடனடியாக சொல்ல கூடியவர். ஒவ்வொறு ஞாயிறன்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு முதுநிலை தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுப்பார். "என்னுடைய சிறு தமிழ் தொண்டு இது" என்று கூறுவார். உண்மையிலேயே இது போன்றவர்களை பார்ப்பது அரிது.


இவர் தமிழ் பாடம் எடுக்கும்போது எல்லோரும் மிக மிக ஆர்வத்துடன் இருப்போம். பாடத்தின் மேல் இருக்கும் அக்கரையை விட கடைசி 15 நிமிடங்களுக்கு நேயர் விருப்பம் போல இவர் மாணவர்களை விட்டு ஏதாவது தலைப்பு கூற சொல்லி, அந்த தலைப்பில் உடனடியாக ஒரு கவிதையை கூறிவிடுவார். அந்த கவிதை இலக்கண பிழையின்றி அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த கடைசி 15 நிமிடங்களுக்கு வகுப்பே உற்சாகம் களை கட்டி விடும். எங்களுக்கெல்லாம் தமிழ் மேல் ஒரு பற்று வருவதற்கு இவர் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.


கணக்கு பாடம் எடுப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய இளம் ஆசிரியை எங்களது பள்ளியில் சேர்ந்திருந்தார். அவரது கெட்ட நேரம் எங்களது வகுப்புக்கே அவர் கணக்காசிரியராக வர வேண்டியதாக போய்விட்டது! குரங்குகளுக்கு பாடம் நடத்த போவது அவருக்கு தெரியாது!


முதல் நாள் அவர் ஒரு formulaவை சொல்லி கொடுத்துவிட்டு அதை எழுத கரும்பலகை பக்கம் திரும்பினார். அவ்வளவுதான். கடைசி பெஞ்சிலிருந்து சரமாரியாக காகித ராக்கெட்டுகள் அவரை நோக்கி பறக்க ஆரம்பித்தன. உடனே அவர் திரும்பி பார்த்வுடன் எல்லோரும் பரம சாதுவாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர் திரும்பி எழுத ஆரம்பித்தவுடன் அனைவரும் பலவிதமான மிருகங்களின் குரல்களை எழுப்பி கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. வகுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டு நேராக ஹிட்லரிடம் சென்று புகார் கூறிவிட்டார்.


அவ்வளவுதான். உடனே ஹிட்லர் எங்களது வகுப்புக்குள் நுழைந்து "எந்த மாணவன் கலாட்டா செய்தான்?" என்று கர்ஜித்தார். யாரும் வாயையே திறக்கவில்லை. யாரை கேட்டாலும் "தெரியாது சார்" என்றே கூறினார்கள். ஹிட்லர் அல்லவா? உடனே எல்லா மாணவர்களையும் மைதானத்துக்கு வரச்சொல்லி அனைவருக்கும் கைகளில் பிரம்பால் பின்னி எடுத்துவிட்டார். நாங்கள்தான் மாவீரர்கள் ஆயிற்றே. 'நாயகன்' படத்தில் டெல்லி கணேஷ் கூறுவது போல ' ம்ஹூம், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை'. அடித்து அடித்து ஹிட்லருக்கு கை வலித்தது தான் மிச்சம்!


இதே போல ஆங்கில‌ வகுப்பெடுத்த வாத்தியாரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. கேரளாவை சேர்ந்த அவர் மலையாள வாடையுடன் ஆங்கிலம் பேசும் பொழுது தமாஷாக இருக்கும். Bledy, I will simbbbly kick you out. How many times should I repeat this exambbble? என்று அவர் ஆத்திரத்துடன் கூற, அடக்க முடியாமல் வகுப்பே இன்னும் அதிகமாக சிரிக்க, அதை கண்டு அவர் மேலும் கோபமாக, ஒரே கூத்து தான்!


நாங்கள் படித்தது வட நாட்டு பள்ளி என்பதால் (CBSE syllabus) அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி மொழியை ஒரு பாடமாக படிக்க வேண்டும். ஹிந்தி ஆசிரியர் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார். "சப் லோக் பைடோ" (எல்லோரும் அமருங்கள்) என்று அவர் கூற நாங்கள் அனைவரும் "சார், எங்கள் யாருக்குமே ஹிந்தி தெரியாது. நீங்கள் தமிழிலேயே (!) சொல்லி குடுங்க" என்று கூற அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! (எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்!). சுவாரசியமாக அவர் ஹிந்தி செய்யுளை படித்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ "ஹா" என்று எவனாவது சத்தம் போட்டு கொட்டாவி விடுவான்! வகுப்பே கலகலத்து விடும்! கடைசியில் அவரும் இந்த பசங்களை திருத்தவே முடியாது என்று ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்!


இந்த ஆராத்து பசங்களை திருத்தவே முடியாது என்று எல்லா ஆசிரியர்களும் கைவிட்டு விட்டார்கள். ஆனால் பாருங்கள், தேர்வு நேரத்தின் போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாக மாறி ஆச்சரியப்படும் விதமாக அனைவருமே நல்ல மதிப்பெண்களை பெறுவோம். நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் பள்ளியினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.


நாங்கள் கலாட்டா செய்யாத ஒரே வகுப்பு தமிழாசிரியரின் வகுப்பு தான். ஏற்கனவே கூறியது போல, அவரது தமிழ் புலமை எங்களை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் என்ன செய்வது? தமிழ் அறிஞர்களின் ஒரு சாபக்கேடு போல, வறுமை அவரையும் வாட்டியது.


ஒரு முறை எங்கள் வகுப்பில், "டேய் பசங்களா, வீட்டு வாடகையை ஏற்றி விட்டான். ஒரு 300 ரூபாய்க்குள் எங்காவது வாடகை வீடு கிடைத்தால் சொல்லுங்கப்பா" என்று கூறினார் (இது நடந்தது 1976ல்). அப்போது தான் எங்களுக்கே அவரது நிலைமை புரிய ஆரம்பித்தது.


சில நாட்கள் தமிழ் ஆசிரியர் பள்ளிக்கு வரவேயில்லை. பிறகு ஒரு நாள் சோகமே உருவாக தாடியுடன் பாடம் எடுக்க வந்தார். எங்களுக்கெல்லாம் பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வந்த போது, குரலை கனைத்து கொண்டே தனது 6 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்து திடீரென்று இறந்துவிட்டதாக கூறினார்.


வகுப்பில் பயங்கர நிசப்தம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வழக்கமாக நாங்கள் "சார், இந்த தலைப்பில் கவிதை பாடுங்கள், அந்த தலைப்பில் சொல்லுங்கள்" என்று அவரை நச்சரிப்போம். ஆனால் அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு அமைதியை எங்கள் வகுப்பு பார்த்ததே இல்லை.


உடனே அவர் தனது கணீர் குரலில் பேச ஆரம்பித்தார்:

"இளவேனிற்காலத்து இளமழலை கனவுகளே!எந்தன் இளமழலை தன்னை இருவிழிக்குள் சேர்ப்பீரோ!"......

த‌ன்னை அறியாம‌ல் அருவி போல‌ க‌விதை ம‌ழை பொழிய ஆரம்பித்தது. துக்கம் தொண்டையை அடைக்க எங்களது க‌ண்க‌ளில் க‌ண்ணீர்.

ஒரு க‌ட்ட‌த்தில்

"நாளைக்கு வ‌ழிய‌றியா ந‌ம் த‌க‌ப்ப‌ன் - த‌மிழ் ப‌டித்த‌ ஏழைக்க‌விஞ‌ன் எனும் இர‌க்க‌த்தால் போனாயோ"

என்று பிரமை பிடித்தவர் போல அவர் கூற வ‌குப்பே உண‌ர்ச்சி பெருக்கில் அவ‌ரிட‌ம் ஓடிப்போய் "வேண்டாம் சார், இத்தோடு நிறுத்தி கொள்ளுங்க‌ள்" என்று அழ‌ ஆர‌ம்பித்து விட்டோம். ம‌ணி அடித்த‌து. த‌மிழ் வ‌குப்பு முடிந்த‌து.


இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு பிற‌கு ஏனோ தெரிய‌வில்லை, எங்க‌ள‌து வ‌குப்பில் ஆசிரிய‌ர்க‌ளை க‌லாட்டா செய்யும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே நின்று விட்ட‌து. காலம் யாருக்காகவும் நிற்பது இல்லையே. எல்லோரும் பெரிய‌ வ‌குப்புக‌ளுக்கு சென்று பிற‌கு க‌ல்லூரி, வேலை, க‌ல்யாண‌ம் என்று கால‌த்தின் ஓட்ட‌த்தில் க‌ல‌ந்து விட்ட‌ன‌ர். பல வருடங்கள் ஓடிவிட்டன.


எங்களது தமிழாசிரியர் இப்போது அந்த பள்ளியில் இல்லை. ஒரு பெரிய‌ அர‌சிய‌ல் க‌ட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமைக்கு தின‌மும் அறிக்கை த‌யார் செய்யும் வேலையில் (ghost writing) ஈடுப‌ட்டிருந்தார் என்று சிலர் கூறினர்.


எது எப்படியோ, எங்கள் பள்ளியை கடந்து செல்லும் பொழுதெல்லாம் மறக்க முடியாத இந்த நினைவுகள் என்னையும் அறியாமல் வருவதுண்டு.

9 comments:

Anonymous said...

படிக்கவே மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

SUREஷ் said...

//தோசை திருப்பி போல சாத்து //

SUREஷ் said...

//கணக்கு பாடம் எடுப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய இளம் ஆசிரியை எங்களது பள்ளியில் சேர்ந்திருந்தார்//


சூப்பர்...........

Expatguru said...

கருத்துக்களுக்கு நன்றி Sureஷ்.

பி.கு: அது என்ன 'ஷ்' மட்டும் தமிழில்??

Anonymous said...

Your article has rekindled my schoolday memories. Great work!

ஜீவி said...

அது என்னவோ தெரியவில்லை, எல்லாருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் அருமையாய் அமைந்து விடுகிறார்கள்..

அல்லது இப்பொழுது தமிழில் எழுதிக் கொண்டிருப்பதே அன்றைய அவற்றை அருமையாய் உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை.

நெகிழச்செய்யும் பதிவு.

Expatguru said...

//இப்பொழுது தமிழில் எழுதிக் கொண்டிருப்பதே அன்றைய அவற்றை அருமையாய் உணர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை//

மிக சரியாக கூறியுள்ளீர்கள் ஜீவி. இப்பொழுது பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களிடம் மொழி பற்றும் இல்லை, ஞானமும் இல்லை என்றே தோன்றுகிறது. எத்தனை பேருக்கு "தமிழ்" என்ற வார்த்தையை ஒழுங்காக கூற முடிகிறது? "தமில்", "ஏல் ரூவா", "வால்வு" என்றெல்லாம் கேட்கவே எவ்வளவு நாராசமாக இருக்கிறது? ஆசிரியர்கள் சரியாக இருந்தால் ஒரு நல்ல சமுதாயத்தையே உருவாக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

Manaswini.K said...

படித்துக்கொன்டிருக்கும் போது விழியோரம் நீர் எட்டி பார்பதை தவிர்க்க முடியவில்லை...

Expatguru said...

மனஸ்வினி, ஒளவையார் கூறியது போல், உலகில் மிக கொடுமையான விஷயம் வறுமை. கட்டுரையில் ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.

300 ரூபாய் வாடகைக்கு அவர் வீடு கேட்டார் இல்லையா? நாங்கள் விஷயம் தெரியாமல் அவரிடம் "ஏன் சார், அவ்வளவு கஷ்டமான நிலைமையா?" என்று கேட்டு விட்டோம். உடனே ஒரு காகிதத்தை எடுத்து பரபரவென்று எதையோ எழுதி அதை உடனே எங்களுக்கு படித்தும் காட்டினார். அந்த எழுத்துக்கள் எங்கள் மனதில் பசுமரத்தாணி போல இன்று கூட நினைவில் இருக்கின்றன. அவர் எழுதியது:


"சாக்கடைகள் கூடுமிடத்தோரம்
பகல் சாய்ந்தே இரவு படர் நேரம்
தினம் பார்க்க மனம் பதறும் பச்சை குழந்தையுடன்
பட்டினியாய் தாய் இருக்கும் கோரம்
இங்கு பாவி வறுமைக்கு அதிகாரம்!"

தெறிக்கும் தமிழ் வரிகள். மனதிலிருந்து அருவி போல வெளியே கொட்டிய வரிகள். வறுமையை இதைவிட யாராலும் விவரிக்க முடியாது. அதை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.