Friday, 12 December 2008

எண் ஜோதிட நகைச்சுவை

இரவு நேரங்களில் பொழுது போகாத போது தொலைக்காட்சியில் வரும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது எனது வழக்கம். நேற்று இரவு அது போல ஒவ்வொறு channelஆக மாற்றி கொண்டே வந்த போது ஒரு channelல் எண் ஜோதிடம் பற்றி ஒரு "பொறியாளர்" பேசிக்கொண்டிருந்தார்.

இவர் உண்மையிலேயே பொறியாளரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் பெயருக்கு முன்னால் 'இஞ்ஜினியர்' என்று தன்னை தானே குறிப்பிட்டுக்கொண்டார். 'டாக்டர்', 'முனைவர்', 'பேராசிரியர்' என்று பட்டம் வைத்து கொள்வது போல இப்போதெல்லாம் 'இஞ்ஜினியர்' என்று கூறி கொள்வதும் ஒரு கெளரவம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன். அல்லது நாட்டில் இஞ்ஜினியர்கள் நிறைய இருப்பதால் வேலை வாய்ப்புக்கள் குறைந்து இப்போது ஆலமரத்து கிளி ஜோசியக்காரர்களுக்கு போட்டியாக இவர்களும் வந்து விட்டார்களா என்றும் தெரியாது!

சரி, என்னதான் கூறுகிறார் பார்ப்போம் என்று நிகழ்ச்சியை ஆவலுடன் கவனித்தேன். ஒரு நடுத்தர வயதான பெண், "என் பெயர் சாந்தி. எனக்கு பல நாட்களாக வயிற்றில் எரிச்சல் போல இருக்கிறது" என்றார். (இதை தான் வயிற்றெரிச்சல் என்று கூறுவார்களோ?). நமது இஞ்ஜினியர் அடுத்து கூறியது தான் நகைச்சுவையின் உச்சகட்டம். "உங்கள் பெயர் என்ன, மறுபடியும் கூறுங்கள்" என்று கேட்டார். அந்த பெண் "சாந்தி" என்றார். உடனே இவர் பலகையில் SANTHI என்று எழுதிவிட்டு "உங்களுடைய பெயரில் "தீ" இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உங்களுடைய வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது" என்றார். அடப்பாவி, இஞ்ஜினியர் எப்பொழுது டாக்டர் ஆக மாறினான்? அவர் அடுத்து கூறியது: " உங்களுடைய பெயரை SANTHI என்று இனிமேல் எழுதாதீர்கள். எண் கணிதப்படி SANTHEY என்று மாற்றி கொள்ளுங்கள்" என்று கூறினார்! நல்ல வேளை, கையில் சிறிது விபூதியை கொடுக்கவில்லை.

பரவாயில்லையே, வடிவேல், விவேக் போன்றவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விட இது இன்னும் காமெடியாக இருக்கிறதே! அடுத்து மற்றொரு பெண் வந்தார். (இவரது நிகழ்சியில் ஆண்கள் வரவே மாட்டார்களா என்ன?). அவர்களது உரையாடல் இப்படி இருந்தது.

"உங்களுடைய பெயர் என்ன?"

"மஹாலக்ஷ்மி"

"என்ன நட்சத்திரம்?"

"மூலம்"

"உங்களுக்கு என்ன பிரச்னை?"

"கடன் தொல்லை தாங்க முடியலை சார்"

இஞ்ஜினியர் இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தார். "சரி, இப்பொழுது இந்த பலகையில் நீங்கள் எப்பொழுதும் போடுவதை போல உங்களுடைய கையெழுத்தை போடுங்கள்" என்றார். அந்த பெண்ணும் Mahalakshmi என்று சாய்வாக கீழிருந்து மேலாக கையெழுத்து போட்டார். அவ்வளவுதான். நமது பொறியாளருக்கு ஐசாக் நியூட்டன் மாதிரி வேகம் வந்து விட்டது.

ஒரு protractorஐ எடுத்து கொண்டார். (நாம் பள்ளியில் படிக்கும் போது Geometryல் உபயோகப்படுத்தும் காம்ப்பஸ் ப்ரொட்ராக்டர் தான்). அந்த பெண் Mahalakshmi என்று தனது கையெழுத்தை கிறுக்கியிருந்தார் அல்லவா? அதில் நடு சொல்லான "L"ல் ப்ரொட்ராக்டரை வைத்து "இங்கே பாருங்கள், இந்த "எல்" என்ற சொல் 30 டிகிரி கோணத்தில் கீழ் நோக்கி உள்ளது. "எல்" என்றால் லகரம். லகரம் என்றால் லட்சம். அது கீழ்நோக்கி உள்ளதால் உங்களது கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுகிறீர்கள்" என்றார். அடேயப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!


"உங்களது பெயரில் கூட்டு எண் சரி இல்லை. அதனால் உங்களது பெயரை உடனே Mahalatchoumi என்று மாற்றிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல. இனிமேல் கையெழுத்து போட்டுவிட்டு கீழே கோடு போடாதீர்கள்" என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார்.


செம காமெடி போங்கள்! ஒரு பெயரை மாற்றி விடுவதால் கடன் தொல்லை தீர்ந்து விடுமாம். இந்தியாவின் கடன் பாக்கியை இது போலவே தீர்த்து விடுங்களேன். அமெரிக்காவில் கூட இப்பொழுது பண பிரச்னையாம். அமெரிக்காவின் பெயரை கூட மாற்றிவிட்டால் பண தொல்லை தீர்ந்து விடுமே!தமிழ்நாட்டில் சில பிரபல அரசியல்வாதிகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா என்ற பெயரில்ல் கடைசியில் ஒரு 'a' வை அதிகமாக வைத்து Jayalalithaa என்று மாற்றி கொண்டுள்ளார். அது போலவே எஸ்.வி.சேகர் தனது பெயரை S.Ve.Shekar என்று வைத்து கொண்டுள்ளார். டீ.ராஜேந்தர் தனது பெயரை விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றி அமைத்தபின் அவருக்கு விஜயம் வந்ததா என்று தெரியவில்லை. அதே போல, திருநாவுக்கரசு, தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார். சரி, இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.


சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்கு அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?


எண் ஜோதிடம் உண்மையா போலியா என்று ஒரு பக்கம் இருக்கட்டும். நமது தொலைக்காட்சிகளுக்கு இவர்களினால் நல்ல பணம் கிடைக்கிறது என்பதை தவிர வேறு யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்கிற நிலையில் இருக்கிற நமது மக்களும் இது போன்றவர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பது தான் பரிதாபம்.

22 comments:

Govindarajan.L.N. said...

Pl see other shows by self styled Doctors about Gemmology, Vaasthu Nameology. Have a hearty laugh.They have reserved rooms in hotels in big cities and give consultations only by appointment. Our people should change.

Anonymous said...

மக்கள் தங்கள் துன்ப நிலையில் தங்கள் அறிவினை சற்று விளக்கி வைத்து விட்டு மற்றவர்களின் ஆலோசனை கேட்கும் போது இப்படிப் பட்ட பல்வேறு சமூக விரோதிகள் தங்கள் சுய நலனுக்காக மக்களை ஏமாற்றி விடுகின்றனர்.

சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும் சிலரின் மூட பழக்கங்களும் இவர்களுக்கு ஆதாரம்.

தமிழ் நாடன் said...

எல்லாம் மக்களின் மனக் கோளாறுதான் காரணம். உண்மையா உழைத்து பணம் கேட்டால் அவனுக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட மிகவும் சிந்திப்பார்கள். அனால் இது போன்ற ஏமாற்று பேர் வழிகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார்கள். எயிட்சுக்கு மருந்து கண்டு பிடித்துவிட்ட நமது சித்த வைத்தியர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

Anbu said...

very super

Anbu said...

அடேயப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!

Manaswini.K said...

Ha ha ha.. You got slightly ahead of me on this topic.On and off I watch this when I used to wait for Krithi. I found it equally amuzing. (Must attempt Tamil font soon)

Expatguru said...

கோவிந்தராஜன்,

வருகைக்கு நன்றி. சாலை ஓரத்தில் இவர்கள் கடை விரித்து ஜோதிடம் கூறினால் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் அதையே நவீனமாக இவர்கள் செய்தால் கூட்டம் அலை மோதுகிறது. என்னத்தை சொல்ல?

Expatguru said...

வாருங்கள் அனானி,

நீங்கள் கூறியதை போல பிரபலமானவர்கள் இவர்களுக்கு தரும் ஆதரவும் இது போன்றவர்கள் வளர காரணமாகிவிடுகிறது.

Expatguru said...

தமிழ்நாடன்,

அடுத்த பதிவு இதை பற்றி எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் கூறி விட்டீர்கள்.

Expatguru said...

அன்பு,

குப்புற படுத்து ரூம் போட்டு யோசிக்கிறாங்க!

Expatguru said...

மனஸ்வினி,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. நகைச்சுவை காட்சிகளுக்கு இவர்களை அடித்து கொள்ள முடியாது. அதுதான் channelக்கு channel குத்தகை எடுத்திருக்கிறார்களே!

RAMASUBRAMANIA SHARMA said...

NALLA PATHIVU. ELLAME ORU NAMBIKKAI THAN(SILA PER MOODA NAMBIKAINU SOLRANGA). IRUNTHALUM JANANGALUKKU EPPIDIYAVATHU AVANGA KASHTAM THEERNTHAL SARITHAN...NO IDEA ABOUT WHY POPULAR PEOPLE ALSO CHANGING THEIR NAME AS PER NUMEROLOGY.IT REMINDS ME OF ONE IMPORTANT EVENT HAPPENED IN MY COLLEGE DAYS...PROF.DR.TAMIL KUDIMAGAN, WAS OUR PRINCIPAL, WHO USED TO INSIST ALL THE STUDENTS TO CHANGE THEIR NAME IN TAMIL, FOR WHICH NORMALLY HE TAKES SPECIAL CLASSES IN HIS BUSY SCHEDULE AND GIVE USEFUL TIPS...LOTS OF STUDENTS OBLIGED OUR PROF.WHO'S ORIGINAL NAME WAS "SATHAIYA".THERE IS NO ENDING FOR THESE TYPE OF GIMMICS.IF IT IS WORKED OUT FOR SOME POPULAR PERSONALITY...AUTOMATICALLY THE EVENT WILL BECOME A SUPER HIT. ITS ALL IN THE GAME.

Expatguru said...

ராமசுப்ரமணிய ஷர்மா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

//IRUNTHALUM JANANGALUKKU EPPIDIYAVATHU AVANGA KASHTAM THEERNTHAL SARITHAN...//

அதற்காக protractorஐ வைத்து பெரிய விஞ்ஞானி போல பாமர மக்களை ஏமாற்றி பணம் பண்ணலாமா?

வடகரை வேலன் said...

அதுல ஒருத்தர் ஆங்கிலத்தில பேசுவாரு ரெம்பக் காமடெஇயா இருக்கும்.

if it now means okey. in future means very problem. no matching means no matching. how can you able to live?

அது பாவம் ஒரு வெளினாட்டுப் பெண்மணி.

ரெம்ப வெறுப்பா இருக்கும்போது இதப் பார்த்தா தமாஷா இருக்கும்.

raajha seckhar னு ஒருத்தர் பெயர் ராஜசேகராம்.

thinagaran - தினகரனாம்.
selvamoney - செல்வமணியாம்.

Expatguru said...

வடகரை வேலன்,

இது போன்றவர்கள் இருக்கும் வரை நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது!

அ நம்பி said...

எண்சோதிடப் புரட்டர்

http://nanavuhal.wordpress.com/2008/09/25/numerology/

அ நம்பி said...

//சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.//

பணத்துக்காக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். பணத்துக்காக ஊடகங்களும் துணைபோகின்றன. சமுதாயம் பாழ்படுவது குறித்து யாருக்கும் கவலையில்லை.

Expatguru said...

நம்பி ஐயா,

அரை மணி நேரத்தை இவர்கள் ஒரு தொலைக்காட்சியில் வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவாகும். இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றே தெரியவில்லை.

Anonymous said...

There is a famous "doctor" who keeps appearing in almost every channel. He has a miracle cure from AIDS to deafness to infertility. You can see him prompting his "patients" with questions "Didn't you get cured?" (What else do you expect as a reply?). The amusing part is that he himself looks like a patient!

ஜீவி said...

வர்ணிப்பு அருமை, குரு!
படித்துக் கொண்டே வரும் பொழுது
என்னை மீறி இதழ் கடையில் முகிழ்த்த புன்முறுவலை அடக்கவே முடியவில்லை.

நல்ல நடை; நல்ல வெளிப்படுத்துதல்!

மனம் நிறைந்த அன்பான வாழ்த்துக்கள்!

Raj said...

//சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்கு அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?
//

ரொம்ப நாளா...என்க்கும் இத்தே டவுட்டுதான்!!!!!!!!!!இவனுங்க கறுப்பை வெள்ளையாக்க ஏதாவது டகுல் பண்றானுங்களா?

Expatguru said...

வாங்க, ராஜ். ஒரு ஜோதிடர் பத்து விரல்களிலும் கலர் கலராக மெகா சைஸில் மோதிரம் போட்டு கொண்டு எதிர்காலத்தை கூறுவார். கால் விரல்களிலும் போடுவாரோ என்னவோ! ஒரே ஒரு கல் மோதிரம் வாங்கவே நமக்கு முழி பிதுங்குது. இவங்களுக்கு எங்கேருந்து பணம் வருதோ தெரியல. ஆக மொத்தம் இவங்களோட எதிர்காலம் பிரமாதமா இருக்கு!