Showing posts with label எண் ஜோதிட நகைச்சுவை. Show all posts
Showing posts with label எண் ஜோதிட நகைச்சுவை. Show all posts

Friday, 12 December 2008

எண் ஜோதிட நகைச்சுவை

இரவு நேரங்களில் பொழுது போகாத போது தொலைக்காட்சியில் வரும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்ப்பது எனது வழக்கம். நேற்று இரவு அது போல ஒவ்வொறு channelஆக மாற்றி கொண்டே வந்த போது ஒரு channelல் எண் ஜோதிடம் பற்றி ஒரு "பொறியாளர்" பேசிக்கொண்டிருந்தார்.

இவர் உண்மையிலேயே பொறியாளரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் பெயருக்கு முன்னால் 'இஞ்ஜினியர்' என்று தன்னை தானே குறிப்பிட்டுக்கொண்டார். 'டாக்டர்', 'முனைவர்', 'பேராசிரியர்' என்று பட்டம் வைத்து கொள்வது போல இப்போதெல்லாம் 'இஞ்ஜினியர்' என்று கூறி கொள்வதும் ஒரு கெளரவம் ஆகி விட்டது என்று நினைக்கிறேன். அல்லது நாட்டில் இஞ்ஜினியர்கள் நிறைய இருப்பதால் வேலை வாய்ப்புக்கள் குறைந்து இப்போது ஆலமரத்து கிளி ஜோசியக்காரர்களுக்கு போட்டியாக இவர்களும் வந்து விட்டார்களா என்றும் தெரியாது!

சரி, என்னதான் கூறுகிறார் பார்ப்போம் என்று நிகழ்ச்சியை ஆவலுடன் கவனித்தேன். ஒரு நடுத்தர வயதான பெண், "என் பெயர் சாந்தி. எனக்கு பல நாட்களாக வயிற்றில் எரிச்சல் போல இருக்கிறது" என்றார். (இதை தான் வயிற்றெரிச்சல் என்று கூறுவார்களோ?). நமது இஞ்ஜினியர் அடுத்து கூறியது தான் நகைச்சுவையின் உச்சகட்டம். "உங்கள் பெயர் என்ன, மறுபடியும் கூறுங்கள்" என்று கேட்டார். அந்த பெண் "சாந்தி" என்றார். உடனே இவர் பலகையில் SANTHI என்று எழுதிவிட்டு "உங்களுடைய பெயரில் "தீ" இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி உங்களுடைய வயிற்றில் எரிச்சல் ஏற்படுகிறது" என்றார். அடப்பாவி, இஞ்ஜினியர் எப்பொழுது டாக்டர் ஆக மாறினான்? அவர் அடுத்து கூறியது: " உங்களுடைய பெயரை SANTHI என்று இனிமேல் எழுதாதீர்கள். எண் கணிதப்படி SANTHEY என்று மாற்றி கொள்ளுங்கள்" என்று கூறினார்! நல்ல வேளை, கையில் சிறிது விபூதியை கொடுக்கவில்லை.

பரவாயில்லையே, வடிவேல், விவேக் போன்றவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை விட இது இன்னும் காமெடியாக இருக்கிறதே! அடுத்து மற்றொரு பெண் வந்தார். (இவரது நிகழ்சியில் ஆண்கள் வரவே மாட்டார்களா என்ன?). அவர்களது உரையாடல் இப்படி இருந்தது.

"உங்களுடைய பெயர் என்ன?"

"மஹாலக்ஷ்மி"

"என்ன நட்சத்திரம்?"

"மூலம்"

"உங்களுக்கு என்ன பிரச்னை?"

"கடன் தொல்லை தாங்க முடியலை சார்"

இஞ்ஜினியர் இப்போது ஏதோ யோசனையில் ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தார். "சரி, இப்பொழுது இந்த பலகையில் நீங்கள் எப்பொழுதும் போடுவதை போல உங்களுடைய கையெழுத்தை போடுங்கள்" என்றார். அந்த பெண்ணும் Mahalakshmi என்று சாய்வாக கீழிருந்து மேலாக கையெழுத்து போட்டார். அவ்வளவுதான். நமது பொறியாளருக்கு ஐசாக் நியூட்டன் மாதிரி வேகம் வந்து விட்டது.

ஒரு protractorஐ எடுத்து கொண்டார். (நாம் பள்ளியில் படிக்கும் போது Geometryல் உபயோகப்படுத்தும் காம்ப்பஸ் ப்ரொட்ராக்டர் தான்). அந்த பெண் Mahalakshmi என்று தனது கையெழுத்தை கிறுக்கியிருந்தார் அல்லவா? அதில் நடு சொல்லான "L"ல் ப்ரொட்ராக்டரை வைத்து "இங்கே பாருங்கள், இந்த "எல்" என்ற சொல் 30 டிகிரி கோணத்தில் கீழ் நோக்கி உள்ளது. "எல்" என்றால் லகரம். லகரம் என்றால் லட்சம். அது கீழ்நோக்கி உள்ளதால் உங்களது கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுகிறீர்கள்" என்றார். அடேயப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!


"உங்களது பெயரில் கூட்டு எண் சரி இல்லை. அதனால் உங்களது பெயரை உடனே Mahalatchoumi என்று மாற்றிக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல. இனிமேல் கையெழுத்து போட்டுவிட்டு கீழே கோடு போடாதீர்கள்" என்றெல்லாம் பேசிக்கொண்டே போனார்.


செம காமெடி போங்கள்! ஒரு பெயரை மாற்றி விடுவதால் கடன் தொல்லை தீர்ந்து விடுமாம். இந்தியாவின் கடன் பாக்கியை இது போலவே தீர்த்து விடுங்களேன். அமெரிக்காவில் கூட இப்பொழுது பண பிரச்னையாம். அமெரிக்காவின் பெயரை கூட மாற்றிவிட்டால் பண தொல்லை தீர்ந்து விடுமே!



தமிழ்நாட்டில் சில பிரபல அரசியல்வாதிகள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். ஜெயலலிதா என்ற பெயரில்ல் கடைசியில் ஒரு 'a' வை அதிகமாக வைத்து Jayalalithaa என்று மாற்றி கொண்டுள்ளார். அது போலவே எஸ்.வி.சேகர் தனது பெயரை S.Ve.Shekar என்று வைத்து கொண்டுள்ளார். டீ.ராஜேந்தர் தனது பெயரை விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றி அமைத்தபின் அவருக்கு விஜயம் வந்ததா என்று தெரியவில்லை. அதே போல, திருநாவுக்கரசு, தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றி வைத்து கொண்டுள்ளார். சரி, இது அவரவர் சொந்த விருப்பம் என்று வைத்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.


சாதாரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு நிமிடம் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கே சில லட்சங்கள் அல்லது கண்டிப்பாக சில ஆயிரங்களாவது செலவாகும். இது போன்ற எண் ஜோதிடர்கள் ஒரு முழு அரை மணி நேர slotஐ தங்களுக்காக வாங்கி கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இதற்கு அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?


எண் ஜோதிடம் உண்மையா போலியா என்று ஒரு பக்கம் இருக்கட்டும். நமது தொலைக்காட்சிகளுக்கு இவர்களினால் நல்ல பணம் கிடைக்கிறது என்பதை தவிர வேறு யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. "எதை தின்றால் பித்தம் தெளியும்" என்கிற நிலையில் இருக்கிற நமது மக்களும் இது போன்றவர்களிடம் ஏமாறுகிறார்கள் என்பது தான் பரிதாபம்.