Friday, 23 January 2009

புரியாத புதிர்கள்-1

இந்த உலகில் அனைத்துமே தமது ஆதிக்கத்தில் தான் நடக்கின்றன என்று மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். ஆனால் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத சில புரியாத புதிர்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உண்மை. ஏன் இவ்வாறு நடக்கின்றன, எப்படி இவை சாத்தியம் என்பதை "ஆறறிவு படைத்த" மனிதனால் இன்னும் விளக்க முடியவில்லை. எனது அனுபவத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளே இதற்கு உதாரணம். அதை தொடர் வடிவில் எழுத நினைத்துள்ளேன். உங்களது வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி வருமா வேண்டாமா என்பது நிர்ணயிக்கப்படும்.



சில வருடங்களுக்கு முன்பு நேபால் நாட்டின் தலைநகரான காட்மாண்டுவிற்கு எனது தாய் தந்தையர் சென்றிருந்தனர். அங்கிருந்து ஒரு ஐந்து முக ருத்திராக்ஷ கொட்டையை வாங்கி வந்தார்கள். வரும் முன், அந்த ருத்ராக்ஷத்தை அங்குள்ள பசுபதிநாதர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து எனக்கு கொடுத்தார்கள். நானும், சரி புதிதாக இருக்கிறதே, என்று அதை ஒரு சங்கிலியில் கோர்த்து எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.



பிறகு இதை பற்றி மறந்தேவிட்டேன்.
ஒரு நாள் வீட்டில் பனியனோடு உட்கார்ந்து கொண்டிருந்தபோது எனது நண்பர் வந்தார். கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை பார்த்து விட்டு அதை எங்கு வாங்கினீர்கள், என்றெல்லாம் விசாரித்தார். நானும் விபரங்களை கூறினேன். உடனே வீட்டிலிருந்து ஒரு எலுமிச்சை பழம், ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை எடுத்து வரும்படி கூறினார். எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் நானும் அவற்றை கொண்டு வந்து மேஜை மீது வைத்தேன். அவர் எனது ருத்ராக்ஷத்தை கழற்றி தரும்படி கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, "நான் செய்வதை மட்டும் பாருங்கள், பிறகு கூறுகிறேன்", என்றார்.



முதலில் உருளைக்கிழங்கையும் பூண்டையும் தள்ளிவிட்டு, எலுமிச்சை பழத்தை மட்டும் மேஜை மீது வைத்தார். பிறகு அந்த ருத்ராக்ஷத்தை எலுமிச்சையின் மேல் அரை அங்குல உயரத்தில் நிற்குமாறு சங்கிலியை தன் விரல் மீது தாங்கிக்கொண்டார். அவ்வளவு தான். ருத்ராக்ஷ கொட்டை வெகு வேகமாக இடமிருந்து வலமாக சுற்ற தொடங்கியது.

என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை.
அடுத்து, எலுமிச்சை பழத்துக்கு பதில் பூண்டை மேஜை மேல் வைத்தார். முன்பு செய்தது போலவே இப்போது ருத்ராக்ஷத்தை பூண்டின் அருகில் கொண்டு சென்றதுமே மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது. ஆனால், இப்போது வலமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது.
கடைசியாக உருளைக்கிழங்கின் மேல் இதை கொண்டு சென்றபோது ஒன்றுமே ஆகவில்லை.

அந்த ருத்ராக்ஷத்தை நான் கையில் வாங்கி "நானே முயற்சி செய்கிறேன்" என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நண்பரின் கைகளின் சுற்றியது போலவே எனது கைகளிலும் ருத்ராக்ஷம் சுற்ற ஆரம்பித்தது.

இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

சில வருடங்களுக்கு பிறகு எதேச்சையாக மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். புதிதாக வாங்கிய வீட்டில் கிணறு வெட்டியிருந்தார்கள். கிணறு வெட்டும் முன் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய ஒரு water divinerஐ கூப்பிட நினைத்திருந்தாராம் எனது நண்பர். ஆனால் அவரது அண்ணன் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை அவிழ்த்து பூமிக்கு வெகு அருகில் உயரே கைகளில் தொங்கவிட்டு மெதுவாக நடந்து சென்றாராம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ருத்ராக்ஷம் மிக வேகமாக சுழல ஆரம்பித்ததாம். அந்த இடத்தில் தோண்டிய கிணற்றில் மிக இனிப்பான தண்ணீர் கிடைத்தது.

ருத்ராக்ஷம் என்பது ஒரு மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த விதை தானே. அதற்குள் இப்படி ஒரு சக்தி எப்படி வந்தது? நமது கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கிறதா? இதை பற்றி தெரிந்தவர்கள் உங்களது அனுபவங்களையும் கூறுங்களேன்.

10 comments:

Anonymous said...

எனக்கும் கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. நம் கண்களுக்கு புலப்படாத நம்மை மீறய சக்தி ஒன்று கண்டிப்பாக உள்ளது.

Anonymous said...

நல்ல பதிவு, எக்ஸ்பாட்குரு. சில வீடுகளின் வாசலில் படிக்காரத்தை கட்டி வைத்திருப்பார்கள். எனது பாட்டியிடம் கேட்ட பொழுது "காத்து கருப்பு இருந்தால் அதை அப்படியே உள்வாங்கிவிடும்" என்று கூறினார். அப்பொழுது அதற்கான அர்த்தம் புரியவில்லை. கலங்கிய நீரை தெளிவாக்குவதற்கு படிக்காரத்தை (alum) உபயோகப்படுத்துவார்கள் என்று பிறகு தெரிந்து கொண்டேன். ஏதோ ஒரு விதமான ஈர்ப்பு இது போன்ற பண்டங்களில் உள்ளன என்று தான் கூறவேண்டும்.

Manaswini.K said...

கிருத்தியும் இதே மாதிரி ஒரு ருத்திராஷம் வாங்கி வந்தார்.அவருக்கு நெபாளத்தில் ஒரு சாமியார் கொடுத்தது. அப்போது வேலையில் மிகவும் பிரச்சனை. கடினமான காலத்தை
சாத்வீகமாக கடக்க முடிந்தது.ஆனால் அதன் பிறகு யாரோ, அதை தினமும் அணிந்தால் வெங்காயம் பூண்டு போன்ற உண்வு உண்ணவே கூடாது என்று சொன்னதினால்இப்பபோது அதை பூஜையில் வைத்துள்ளோம். மும்பையில் ருத்திராஷ exhibition கூட‌ ந‌ட‌க்கும்.அங்கு இது போன்ற‌ ப‌ல‌ டெமொ ந‌ட‌த்தி காட்டுவார்க‌ள். அடுத்த‌ முறை நான் அங்கு கிடைக்கும் pamphlet வாங்கி வ‌ருகிறேன்.

Expatguru said...

ஈஸ்வர், ஹரி, வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Expatguru said...

மனஸ்வினி,

ருத்ராக்ஷத்தை நாம் கழுத்தில் மாட்டிக்கொண்டால் தான் அதற்கான பயன்களை பெறலாம். கடினமான காலத்தை சாத்வீகமாக கடக்க முடிந்தது என்று நீங்களே கூறியுள்ளீர்கள். பின்னர், யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஏன் அதை பூஜை அறையில் வைத்துள்ளீர்கள்? உண்மை என்னவென்றால், ருத்ராக்ஷம் நமது உடலில் பட்டால் தான் அந்த அதிர்வுகளினால் (vibrations) அதன் நன்மைகளை பெற முடியும். ருத்ராக்ஷத்தை அணிந்து கொண்டால் வெங்காயம் பூண்டு போன்றவைகளை உண்ணக்கூடாது என்று எதுவும் இல்லை. ஆனால் அதை அணிபவர்களுக்கு காலப்போக்கில் இது போன்ற உணவு வகைகளே பிடிக்காமல் போய்விடுவதும் உண்டு.

Anonymous said...

//அதை தொடர் வடிவில் எழுத நினைத்துள்ளேன். உங்களது வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி வருமா வேண்டாமா என்பது நிர்ணயிக்கப்படும்.//

நல்ல கட்டுரை; இன்னும் எழுதுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.

Expatguru said...

நம்பி ஐயா,

நீண்ட விடுப்பிலிருந்து மீண்டும் நீங்கள் வந்திருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

I like your writing style. Do write with quality.

Expatguru said...

உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. அதனால் தான் பதிவுகளின் எண்ணிக்கையை குறைத்து தரத்தை தர முயற்சி செய்கிறேன். உங்களுடைய பெயரை கூறவில்லையே? "அனானிமஸ்" என்றால் ஏதோ மாதிரி இருக்கிறது.

Anbu said...

http://www.ishashoppe.com/rudraksha-instruction-sheet-pi-3148.html?att_id=0

or
http://www.ishashoppe.com/rudraksha-instruction-sheet-p-3148.html

இது பயனுள்ளதாக இருக்கும்