Saturday, 10 January 2009

நெஞ்சு பொறுக்குதிலையே

1996ம் ஆண்டு. குஜராத்தில் மின் நிலையங்களை அமைக்க தனியார்களுக்கு அந்த மாநிலம் அழைப்பு விடுத்திருந்த நேரம். பம்பாயில் தனியார் வேலை செய்து கொண்டிருந்தேன். புதிய மின் நிலையங்களை அமைத்து நடத்துவது தான் எனது நிறுவனத்தின் முக்கிய வேலை.
ஒரு இடத்தில் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த இடத்தில் நிறைய தண்ணீர், மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல கோபுரங்கள் (towers) அமைக்க இடம், எரிபொருள், நிலத்தின் விலை, என்று மிக தீவிரமான ஆய்வு செய்த பிறகே அந்த இடத்தில் மின் நிலையம் அமைக்க தோது படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். அதற்காக நேரே சென்று ஆராய்ந்து அரிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது.பம்பாயிலிருந்து அஹமதாபாதுக்கு சென்று அங்கிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்து கொண்டு கிட்டத்தட்ட 12 இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து எனது நிறுவனத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த இடங்களுக்கு செல்வது இருக்கட்டும், அது போன்ற இடங்களின் பெயர்களை கூட நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பல இடங்களில் சரியான சாலை வசதி கூட இருக்கவில்லை. என்ன செய்வது? பிழைப்பு என்றால் இது போன்ற இடங்களுக்கு சென்றுதானே ஆகவேண்டும்?
இப்படி ஊர் ஊராக சென்று எனது வேலையை நான் கவனித்து கொண்டிந்த போது "வியாரா" என்ற ஒரு ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. நீங்கள் இந்த ஊரின் பெயரை உலக atlasல் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட பட்டிக்காடான ஊர். சாலை என்று ஒன்று இருந்தால் தானே வண்டி செல்ல முடியும். சாலையே இல்லை என்றால் என்ன செய்வது? எனது நிலைமையை யோசித்து பாருங்கள்."என்னடா பிழைப்பு இது, இப்படி ஒரு டொக்கு ஊருக்கு வந்து மாட்டிக்கொண்டோமே" என்று எனது மேலதிகாரியை மனதுக்குள் திட்டிக்கொண்டேன். கரடுமுரடான பாதையில் காரை விடவே எனது ஓட்டுனரும் பயங்கர கடுப்புடன் புலம்பிக்கொண்டே வந்தார். சரியான உச்சி வெயில் வேறு. வழியில் ஈ, காக்கை என்ன, கொசுவை கூட காண முடியவில்லை. ஊரை கண்டுபிடிக்கவே இத்தனை நேரம் ஆகிறதே, இனிமேல் அங்கே சென்று எப்பொழுது நான் விபரங்களை திரட்டி எப்பொழுது அங்கே இருந்து மீண்டு வருவது என்று எனக்குள் மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேரம் சுற்றி கடைசியில் ஒரு வழியாக அந்த ஊரையும் கண்டுபிடித்து விட்டேன்."இப்படி கூட ஒரு ஊர் இருக்குமா? அதில் மக்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு மின்சாரம் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன, சரியான சே!" என்றெல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டே சென்றேன்.திடீரென்று எங்கிருந்து அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை, எனது வண்டியை அப்படியே சூழ்ந்து கொண்டனர்.
வண்டியை விட்டு நான் இறங்கியதும் அதிசயத்துடன் என்னை பார்த்தார்கள். அனைவரின் தலையிலும் விதவிதமான தலைப்பாகைகள் இருந்தன. அந்த ஊர் பெண்கள் என்னை பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்களது தலைகளை சேலை முந்தானையால் மூடிக்கொண்டு குடிசைகளுக்குள் ஓடின. அம்மணமாக இருந்த சிறுவர்கள் எனது காரை சூழ்ந்துகொண்டு தொட்டு தொட்டு பார்த்து கொண்டிருந்தனர்.ஊர் பெரியவர் போல இருந்த ஒருவரிடம் நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறி எனது அலுவல் விஷயமான விபரங்களை கேட்டேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் அங்கு வந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் அனைவரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டனர். ஒருவன் எங்கிருந்தோ ஓடிப்போய் ஒரு குவளையில் சில்லென்று குடிக்கு தண்ணீர் கொண்டு வந்தான். மற்றொருவன் நான் கேட்காமலேயே தேனீரை கொண்டு வந்து வைத்தான்.

ஏற்கனவே நல்ல பசியுடன் நான் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் கொடுத்த தேனீரை உடனடியாக குடித்து விட்டேன். அதற்கு பிறகு மெல்ல எனது பார்வையை அவர்களின் மீது செலுத்தினேன்.
அத்தனை பேரின் முகத்திலும் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. துணியில் கிழிசல் இல்லாமல் ஒருவர் கூட இல்லை. உழைத்து உழைத்து கன்னிப்போயிருந்த கைகள். ஒருவர் காலில் கூட செருப்பு இல்லை. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. சில அலுவல் ரீதியான தகவல்களை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்து கொண்டேன். எனக்கு தேனீர் கொண்டு வந்தவனிடம் எனது பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த பத்து ரூபாயை திணித்தேன். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.

வண்டியில் ஏறி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் தான் சென்றிருப்பேன். சாலையின் நடுவே ஒருவன் வந்து இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி எனது வண்டியின் முன்னால் வழியை மறித்துக்கொண்டு நின்றான்.என்ன விஷயம் என்று கேட்டேன். தன்னை 'தஹேஜ்' என்ற சற்றே பெரிய ஊருக்கு என்னை அழைத்து செல்லுமாறு கெஞ்சினான். நானும் அந்த ஊர் வழியாக தான் செல்வதாக இருந்ததால் அவனை காரின் முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள சொன்னேன். அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு பல முறை நன்றி கூறிக்கொண்டு அமர்ந்து கொண்டான்.அவனுடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன். தனது கிராமத்துக்கு ஒரு கார் வருவது இது தான் முதல் முறை என்று கூறினான். அரசாங்க அதிகாரிகள் எட்டி கூட பார்ப்பது கிடையாது. பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ எதுவுமே கிடையாது என்றான். வெள்ளம் வந்தால் கிராமமே தீவு போல மிதக்க ஆரம்பித்து விடும் என்றும், பிரசவத்துக்கு தான் மிக மிக கடினம் என்றும் கூறினான். கோடை காலத்தில் வறட்சியால் மக்கள் பல நாட்கள் பட்டினி கிடப்பது சர்வ சாதாரணம் என்று கூறினான்.இறைவா! இப்படியும் ஒரு இடமா? நிலவுக்கு ராக்கெட் விடுகிறோம், சுதந்திர நாடு என்று நம்மை நாமே மார்தட்டி கொள்கிறோம், ஆனால் ஒரு சாதாரண கிராமத்துக்கு தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதி போன்றவைகளை கூட செய்து தர இயலவில்லையா? இந்த மக்கள் என்னதான் பாவம் செய்தார்கள்? படிப்பறிவு இல்லை என்பது அவர்களின் குற்றமா? கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடினார். ஆனால் அதனினும் கொடிது வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது தானோ? நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து வந்த எனக்கு இதை நேரில் பார்த்தவுடன் மனதை மிகவும் பாதித்தது.
இந்த சம்பவம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு யதேச்சையாக தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த போது "7000 கோடி ரூபாய் மோசடி செய்த கணிணி தொழிலதிபர்" என்ற தலைப்பு செய்தியை பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. அடுத்த வேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் அந்த கிராம மக்களின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் ஏழைகள் தான். ஆனால் கண்டிப்பாக திருடர்கள் அல்ல. ஒரு கோடிக்கு பின் எவ்வளவு பூஜ்யங்கள் இருக்கின்றன என்பது இருக்கட்டும், "கோடி" என்றால் என்ன என்பதையே தெரியாத மக்கள் உள்ள நாட்டில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். என்னத்தை சொல்வது?

14 comments:

Anonymous said...

இது தான் உலகம்! என்ன செய்வது?

ஆதித்தன் said...

உங்கள் பதிவை வாசிக்கும் போது, உண்மையாகவே நெஞ்சு பொறுக்கவில்லை. எப்போதுதான் இந்த அப்பாவிமக்களுக்கு விடுதலை கிடைக்குமோ?

சாணக்கியன் said...

அந்த வறட்சியான கிராமங்களைப் பற்றிய செய்திகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவைதான். ஆனால் கடைசியில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து சரியல்ல. அந்த கணினி அதிபர் தனி ஆளாக ஒரு நிறுவனத்தை தொடங்கி 53000 பேருக்கு வேலை கொடுத்துள்ளார். எத்தனையாயிரம் கோடி சம்பளமாக நடுத்தர மக்கள் பெற்று பயனடைந்துள்ளனர்? அவர் ஒரு பைசா கூட திருடிக்கொள்ளவில்லை(இப்பொழுது வரை வந்திருக்கும் செய்திகளை வைத்து). கொஞ்சம் கணக்கு திருத்தம் செய்துள்ளார், எதிர்காலத்தில் சரி செய்துவிடலாம் என்று எண்ணி. தவறுதான். ஆனால் அதிகமாகவே நாம் குறை சொல்கிறோம். 60000 கோடி ஸ்பெட்க்ட்ரம் ஊழலை (முழுவதும் கொள்ளை) மறந்துவிட்டோம். ஒரு கம்பெனி நடத்துபவர் ஒரு தவறு செய்துவிட்டார் என்பதால் அவர் செய்த நன்மைகளை எல்லாம் விட்டுவிட்டு தூற்றுகிறோம். இதுதான் உலகம்.

Expatguru said...

வருகைக்கு நன்றி ஆதித்தன். கட்சி பாகுபாடில்லாமல் அத்தனை அரசியல் கட்சிகளும் இது போன்ற மக்களுக்காக பாடுபடுவதாக மார் தட்டி கொள்கின்றன‌. ஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நம் நாட்டில் பல கிராமங்கள் இன்னும் உள்ளன என்பது தான் நிதர்சனம்.

Expatguru said...

வாருங்கள், சாணக்கியன். கருத்துக்களுக்கு நன்றி.

என்னுடன் வேலை செய்பவர் ஒருவர் தனது மகள் திருமணத்துக்காக அந்த கணிணி நிறுவனத்தில் பல பங்குகளை வாங்கி இருந்தார். 150 ரூபாய் விற்ற பங்கு ஒரே நாளில் 6 ரூபாயாக குறைந்தவுடன் அவருக்கு மாரடைப்பு வராத குறைதான். இப்படி பல லட்சக்கணக்கான மக்களை தவறான கணக்கு காட்டி ஏமாற்றி இருக்கிறார்.அவர் 53000 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார் என்பதால் அவர் செய்த தவறு சரி ஆகிவிடுமா? மேலும், அந்த 53000 பேருக்கும் சும்மா ஒன்றும் இவர் சம்பளம் கொடுக்கவில்லையே. செய்த வேலைக்கு தானே கூலி கொடுத்தார்?

நான் கூற வந்தது என்னவென்றால், இது போன்ற மோசடி பேர்வழிகள் இருக்கும் நாட்டில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் மக்களும் இருக்கிறார்கள் என்பது தான்.

dondu(#11168674346665545885) said...

அது இருக்கட்டும். அந்த மின்நிலையம் வந்ததா இல்லையா? இப்போது எப்படி இருக்கிறது அங்கு நிலைமை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Expatguru said...

இல்லை. பல மாதங்கள் இழுத்தடித்தார்கள். அதற்குள் தேர்தல் நேரம் வந்துவிட்டதால் அந்த projectஐ கிடப்பில் போட்டு விட்டார்கள். பிப்பாவவ் என்ற இடத்திலும் ஜாம்நகரிலும் மட்டும் தனியார் மின் நிலையங்கள் இன்றும் இயங்குகின்றன.

Unknown said...

படித்து முடித்ததும் நடந்த சம்பவங்கள் மனக்கண் முன் நிழலாடி மறைந்தது, ஏனோ ஒரு அழுத்தம் நெஞ்செல்லாம் நிங்காமல் நிறைந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இதுபோன்ற கல்வியறிவற்ற பாமர மக்கள் நிறைந்துள்ளனர், அவர்கள் விழிப்புணர்ச்சி பெறும் முன்னர் இந்த உலகம் அழிந்துவிடுமோ!!!

butterfly Surya said...

கொடுமையிலும் கொடுமை...

ஷாஜி said...

//கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடினார். ஆனால் அதனினும் கொடிது வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது தானோ?//

---உண்மையாகவே நெஞ்சு பொறுக்கவில்லை சார்...

Expatguru said...

வருகைக்கு நன்றி சிவகுமார் சுப்புராமன். உலகெங்கும் பாமர மக்கள் உள்ளனர். ஆனால் ஆட்சி செய்பவர்கள் சில ஆண்டுகளில் அவர்களை மெம்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக ஒன்றுமே இல்லாத பாலைவனமான மத்திய கிழக்கு நாடுகளையே எடுத்து கொள்ளுங்கல். எண்ணெய் வளத்தை தவிர அவர்களிடம் வேறு ஒன்றுமே இல்லை. ஆனால் ஒரு 20 ஆண்டுகளில் எப்படி ஒரு மாற்றம். நமது நாட்டில் எல்லாமே இருக்கிறது, நேர்மையான ஆட்சியாளர்களை தவிர.

Expatguru said...

வாருங்கள் வண்ணத்துபூச்சியார். இது போன்றவைகளை கண்டும் கேட்டும் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்று இருக்கிறது, இல்லையா?

Expatguru said...

ஷாஜி, சில சமயம் இந்தியாவின் பிரச்னையே நமது எல்லையில்லா சுதந்திரம் தானோ என்று நினைக்கிறேன். ஒரு 5 வருட காலம் இராணுவ ஆட்சி நடந்தால் எல்லாம் சரியாகிவிடுமோ என்று கூட தோன்றுகிறது. இது போன்ற சாதாரண மக்கள் செய்த பாவம்தான் என்ன? இவர்களுக்கு விடிவு காலமே கிடையாதா?

Anonymous said...

இது தான் இந்தியா ! என்ன செய்வது?