Wednesday, 18 February 2009

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 1970ம் ஆண்டு டைரி, கரையான் கடித்து துப்பிய கறுப்பு வெள்ளை புகைப்படம், ஓடாத அலாரம் கடிகாரங்கள், அறுந்து போன காஸெட்கள், பழைய 'மங்கை' பத்திரிகை, 'என்றைக்காவது உபயோகப்படும்' என்று காப்பாற்றி வைத்திருந்த பேனாக்கள்,(இவற்றில் ஒன்று கூட எழுதவில்லை என்பது வேறு விஷயம்), இலுப்பை கரண்டி, அந்த காலத்து ரேஸர் (!) என்று ஒவ்வொறு குப்பையாக பரண் மீதிருந்து வெளியே வந்தன. கடைசியில் ஒரு பிலிப்ஸ் வானொலி பெட்டியை வெளியே எடுத்தேன். பழைய நினைவலைகளில் மூழ்கி விட்டேன்.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி பெட்டி வந்திருக்கவில்லை. வானொலி தான் வீட்டில் இருந்த ஒரே மின்னணு கருவி. காலையில் 5 மணிக்கெல்லாம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். இன்னும் சொல்லப்போனால், 'வந்தே மாதரம்' என்ற பாடலை தினமும் வானொலி மூலம் கேட்டுதான் மனப்பாடம் ஆகியது. சினிமா பாடல்களை வானொலி மூலம் விரும்பி கேட்போம். எனது தந்தைக்கோ நாங்கள் வானொலி முன்பு உட்கார்ந்து சினிமா பாடல்களை கேட்டால் அறவே பிடிக்காது. "போங்கடா, போய் படிக்கிற வேலையை பாருங்க" என்று விரட்டி விடுவார்.

ஞாயிற்று கிழமை மட்டும் இதற்கு விதிவிலக்கு இருந்தது. வானொலியில் வரும் 'பாப்பா மலர்' போன்ற நிகழ்ச்சிகளை விரும்பி கேட்போம்.  இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. தமிழ் நிகழ்ச்சிகளை கே.எஸ். ராஜா மிக அழகாக வழங்குவார். அவரின் குரலை கேட்பதற்காகவே பல நாட்கள் காத்து கிடப்போம். இதற்கு போட்டியாகவே 'விவித் பாரதி' என்ற தனி வர்த்தக ஒலிபரப்பை அகில இந்திய வானொலி ஆரம்பித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!  வர்த்தக ஒலிபரப்பு என்பதால் விளம்பரங்கள் நிறைய வரும். அவற்றை கேட்பதே ஒரு தனி சுகம். "இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூர் போன்றைய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி!", "ஆரோக்கிய வாழ்வினையை காப்பது லைப்பாய்...", "Pond's Dreamflower talc", "பொன்னான புதிய ரெக்ஸோனா", ஹார்லிக்ஸின் "சுசித்ரா, ஷங்கர், ராஜூ, சுஜாதா" போன்ற விளம்பரங்களில் வரும் பாடல்கள் திரைப்பட பாடல்களுக்கு ஈடாக பிரபலமாக இருந்தன.

வானொலிப்பெட்டியை 'ஆன்' செய்தால் உடனே சத்தம் வெளி வராது. இரண்டு நிமிடங்களுக்கு பிறகு பச்சை நிறத்தில் மேலிருந்து கீழாக இரு கோடுகள் தெரியும். மெல்ல வலது புறத்தில் உள்ள tuner மூலம் திருப்பி கொண்டே வந்தால் ஏதோ ஒரு இடத்தில் இந்த இரண்டு பச்சை நிற கோடுகளும் ஒன்று சேரும். அது தான் சரியான அலைவரிசை. அந்த அலைவரிசையில் தான் ஒலி கேட்கும். இல்லையென்றால் கேட்காது.

எனது தந்தை இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில செய்திகளை விடவே மாட்டார். 15 நிமிடங்களில் உலக நடப்புகள் அனைத்தும் அதில் இருக்கும். தினமும் வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனது தந்தையிடம் ஒரு நாள் நேரடியாகவே கேட்டு விட்டேன். "ஏன்ப்பா செய்திகளின் முதல் வரி மட்டும் எப்பொழுதும் 'The Prime Minister Mrs. Indira Gandhi...' என்றே ஆரம்பிக்கிறது?" அவர் அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டார். அந்த சிரிப்புக்கு அர்த்தம் பல வருடங்களுக்கு பிறகுதான் புரிந்தது!

வருடாவருடம் பிப்ரவரி மாதத்தின் கடை நாளன்று 'பட்ஜெட்' செய்திகள் வெளிவரும். இரவு 9 மணிக்கு தான் எந்தெந்த விலை ஏறியிருக்கிறது என்று அறிவிப்பார்கள். வழக்கம் போல பெட்ரோல் விலை ஏறி விட்டது என்று அறிவிப்பு வந்தால் உடனே எனது தந்தை வண்டியை அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்கு எடுத்து சென்று ரொப்பிக்கொண்டு வந்து விடுவார் (மறு நாளிலிருந்து விலை ஏற்றம் அல்லவா, அதற்காக!).

அந்த காலகட்டத்தில் வீட்டில் வானொலி பெட்டி வைத்திருந்தால் அதற்கு license வாங்கவேண்டும். கப்பம் கட்டுவது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை இதற்காக தனியாக வரி கட்டியே தீர வேண்டும். நினைத்தாலே வியப்பாக இருக்கிறது இல்லையா? தேர்தல் நேரத்தில் வானொலி செய்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டு விடும். எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன என்று முதலில் தெரிந்து கொள்வதற்கு  தொண்டர்களுக்குள் போட்டியே இருந்தது.

1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும். தெருவிளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விடுவார்கள். திடீரென்று வானில் தாழ்வாக பறக்கும் விமானத்தின் ஓசை கேட்கும். 'திக்திக்' என்று இருக்கும். அப்போது என்ன நடக்கிறது என்றே தெரியாது. அனைவரும் வானொலிப்பெட்டியின் முன்பு உட்கார்ந்து கொண்டு ஆழ்ந்து கேட்டு கொண்டிருப்போம். பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவாகி விட்டது என்றும் இந்தியாவிடம் பாகிஸ்தான் போரில் தோற்றுவிட்டது என்றும் வானொலியில் அறிவிப்பு வந்தவுடன்  அனைவரும் குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டாடினார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்ததால் எதற்காக இந்த கொண்டாட்டம், என்ன, ஏது என்றே தெரியாது. ஆனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இலவசமாக சாப்பிட இனிப்புகள் சாக்லேட்டுகள் கிடைத்தன என்பதால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்!

1975ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த நேரம். எந்த அலைவரிசையை திருப்பினாலும் அரசாங்கத்தை புகழ் பாடி '20 அம்ச திட்டத்தை' பற்றி நிகழ்ச்சிகள், பாடல்கள் என்று ஓயாமல் நிகழ்ச்சிகள் இருக்கும். வானொலி மீது ஒருவித வெறுப்பே எங்க‌ளுக்கு வந்து விட்டது. பின்னே என்ன? சுவாரசியமாக பாட்டு கேட்டு கொண்டே இருக்கும் போது அதை நிறுத்திவிட்டு "உழைப்பே உயர்வுக்கு உறுதுணை" என்று அறிவிப்பாளரின் குரல் ஒலித்தால் கடுப்பாக இருக்குமா இருக்காதா?

பல பழைய நினைவுகளை இந்த பிலிப்ஸ் வானொலி பெட்டி மீண்டும் நினைவுபடுத்தியது. தொலைக்காட்சி வந்த பிறகு வானொலி கேட்கும் பழக்கம் கிட்டத்தட்ட நின்றேவிட்டது என்று கூறலாம். இப்போது கூட எப்.எம் அலைவரிசைகளில் வரும் பாடல்களுக்காகவே வானொலி பெட்டியை இன்னமும் கடைசி அடக்கம் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இப்போது தொலைக்காட்சி பெட்டி, கணிணி, Ipod என்று பலவிதமான புதிய சாதனங்கள் வந்து விட்டன. சாதனங்கள் பெருக பெருக மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து பேசி அரோக்கியமாக‌ நேரத்தை செலவிடுவதை மெல்ல மெல்ல மறந்து போய்விட்டனர் என்றே தோன்றுகிறது. பொங்கல், தீபாவளி நாட்களில் அனைவரும் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டு சினிமா காட்சிகளை பார்ப்பதையே விரும்புகின்றனர். மற்ற நாட்களில் சீரியல்கள். வெறும் வானொலி பெட்டி மட்டும் இருந்தபோது இருந்த நிம்மதி இப்போது எங்கே காணாமல் போய்விட்டது? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு?

11 comments:

அ.நம்பி said...

படிப்பவர்களின் பழைய நினைவுகளை எழுப்பி அவற்றுக்காக ஏங்க வைக்கிறீர்கள். நல்ல நடை.

madrasthamizhan said...

நன்றி, நம்பி ஐயா.

manaswini said...

It is a walk down the memory lane. How very true. Used to be glued to the radio. இப்போது கூட வானொலி பெட்டி மெல் உள்ள காத்ல் எனக்கு குறையவே இல்லை.ஒரு
டிரான்சிஸ்டர் வைத்துள்ளேன். நான் இலங்கை வானொலி கேட்டே வளர்ந்தவள்.
சென்னை தாண்டி விவித்பாரதி வராது. நேயர் விருப்பம்,திரைச்சித்திரம் எல்லாம் திட்டு
வாங்கிக்கொன்டு கேட்பேன். Sunday அன்று " நம் வீட்டில் இன்று கம்பன் எத்தனை முறை
ஏமார்ந்தான் " என்று அப்பா கேட்டதுன்டு. Loved the post. So close to my heart.

madrasthamizhan said...

கருத்துக்களுக்கு நன்றி மனஸ்வினி. இலங்கை வானொலியில் நல்ல பாடல்கள் மட்டுமல்ல, நல்ல தமிழையும் கேட்கலாம். இப்பொழுது கூட நீங்கள் நல்ல தமிழை கேட்கவேண்டும் என்றால் இலங்கைக்கோ மலேசியாவுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தேனியார் said...

பிரமாதம். உங்கள் எழுத்தின் மூலம் அந்த காலகட்டத்திற்க்கே கொண்டு சென்றுவிட்டீர்.

அருமையான பதிவு.

madrasthamizhan said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, தேனியார்.

vijay said...

naaluku naal ungal ezhuthu nadai suvai koodi konday pogirathu...you make us visualise our past and our childhood memories which are sweet and close to our heart...pls keep going...

eagerly awaitijng your next post...

Cheers...Vijay

madrasthamizhan said...

உங்களது பின்னூட்டத்துக்கு மிக்க மகிழ்ச்சி விஜய். நம் அனைவரின் மனதிலும் ஒரு ஓரத்தில் நமது இளமைக்கால நினைவுகள் இருந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

தமிழ் பிரியன் said...

நல்ல நினைவுகள்!

madrasthamizhan said...

வருகைக்கு நன்றி, தமிழ்ப்ரியன்.

அடலேறு said...

வானொலியில் கதை படிப்பதற்கு அவ்வளவு சுவாரசியம். வாழ்த்துக்கள்