Tuesday, 10 February 2009

மாற்றத்தை மாற்ற முடியாது!

எனது புதிய வலைப்பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. பழைய கள் தான். மொந்தை மட்டும் தான் புதிது. பருகிவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்களேன்.

திடீரென்று ஏன் இந்த மாற்றம்? மாற்றம் தான் வாழ்க்கைக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது அல்லவா? தினமும் அதே வேலை, அதே முகங்கள், அதே கணினி, அதே அதே என்று செய்ததையே செய்து கொண்டிருந்தால் விரக்தி வந்து விடாதா? (அதற்காக அதே மனைவியா என்று கேட்காதீர்கள்!). இந்த பதிவை எழுத மற்றும் ஒரு காரணம் உண்டு.

என்னுடைய நெருங்கிய நண்பர் டேவிட். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவருக்கு 60 வயது நிரம்புவதால் ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்போவதாக (பணி நீக்கத்துக்கு இப்படி ஒரு கெளரவமான வார்த்தை) மேலதிகாரி கூறினார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. "நான் என்ன தவறு செய்தேன்? வயதை கூறி இப்படி என்னை நீக்குகிறார்களே. இன்னும் 5 வருடங்கள் வேலை செய்ய என் உடம்பிலும் மனதிலும் சக்தி உள்ளதே" என்று புலம்பி தீர்த்து விட்டார். இத்தனைக்கும் அவரது மகனும் மகளும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் இவர் தான் பாவம்.

இந்த் 27 வருட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக செளதியில் வாழ்ந்து வந்தார். என்ன செய்வது, குடும்ப நிலவரம் அந்த மாதிரி. இங்கு வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களை போல இவரும் குடும்பத்துக்காக தியாகம் செய்து தனி மனிதனாக வேலை செய்தார். இதனால் இவரது குடும்பம் செழிப்பானது என்னவோ உண்மைதான். ஆனால் இவரை பொறுத்த வரை வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதி வீணாகி விட்டது அல்லவா?

இப்பொழுது ஓய்வு பெறும் வேளையில் அந்த மாற்றத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஊரில் இருக்கும் உறவினர்கள் "இவ‌னுக்கு என்ன‌? துபாயில் வேலை செய்கிறான். கொள்ளையாய் ப‌ண‌ம் இருக்கும்" என்று மிக‌ சுல‌ப‌மாக‌ கூறிவிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தெரியும் இங்கு செள‌திக்கார‌ன் எவ்வ‌ள‌வு மோச‌மான‌வ‌ன் என்றும் இங்கு கோடை கால‌த்தில் 52 டிகிரி வெயில் என்றும் குளிர் கால‌த்தில் 0 டிகிரி ப‌னி என்றும்.

வாழ்க்கையில் நம் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. முதலில் ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைக்க. பிறகு வீடு கட்ட. பிறகு வீட்டு க‌ட‌னை அடைக்க. அதற்கு பிறகு குழந்தைகளின் படிப்பு. அது முடிந்த பின் கல்லூரி நுழைவு மற்றும் தேர்வுக்கான செலவுகளை சமாளிக்க. அதன் பின் கல்யாணம். சரி ஒரு வழியாக இது முடிந்தது என்று நினைத்தால் வரிசையாக வளைகாப்பு, சீமந்தம், பிரசவ செலவு என்று ஓயாத அலைகளை போல ஒன்றன் பின் ஒன்றாக பண பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இதன் நடுவில் வீட்டில் பெரியவர்களோ அல்லது வேறு யாராவது நோய்வாய் பட்டாலோ கேட்கவே வேண்டாம். இவை எல்லாவற்றையும் கடந்து 'அப்பாடா' என்று மூச்சு விடும் வேளையில் நமக்கே முதுமையும் நோயும் வந்து விடுகிறது. இறைவா! இந்த சுழற்சியிலிருந்து விடுதலை எப்போது?

முதுமையும் மூப்பும் "நான் ஒருவன் இருக்கிறேன்" என்று இறைவன் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதற்கு தானோ? டேவிட்டை போலவே எனக்கும் ஒரு நாள் முதுமை வரும். என்னையும் கட்டாய ஓய்வு பெற கூறுவார்கள் (அது வரை நான் இங்கே இருந்தால்). சரி,  இங்கு இல்லை என்றால் வேறு எங்காவது. இதில் இருந்து மீண்டு வருவது எப்போது?

யோசித்து பார்க்கும் போது,  மாற்றம் என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது என்பது நிதர்சனமாக தெரிகிறது. எனது பாட்டன் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் எனக்கே வேலை கிடைத்திருக்காது அல்லவா? இதைத்தானே கவியரசர் "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது" என்று கூறினார்? சரி, மாற்றம் என்பது மாற்ற முடியாதது தான். அதை மனது ஏற்று கொள்ள என்ன செய்ய வேண்டும்?

முதலில், நடப்பது எல்லாம் நம்மால் தான் என்கிற நினைப்பை நாம் விட்டொழிய வேண்டும். நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. எப்பொழுது "நான்" என்கிற அகந்தை நம்மை விட்டு விலகிறதோ, அப்பொழுதே மனது லேசாகிவிடுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்க வேண்டிய நேரத்தில் சம்பவங்கள் நடந்தே தீரும். ஒன்று நடக்க கூடாது என்று இருந்தால், தலை கீழாக நின்றாலும் கண்டிப்பாக அது நடக்காது.

அதிகாலையில் கிழக்கே உதிக்கு சூரியனை பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறது? கூட்டம் கூட்டமாக பறவைகள் பறப்பதை பாருங்கள். ஆஹா, எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது? குழந்தைகளின் பேச்சை கேளுங்கள். இதை விட பேரின்பம் உண்டோ?

பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ கிடைத்த இறையை சேமிக்க வேண்டும் என்றோ எண்ணமே வருவதில்லை. சொல்ல போனால், அவைகளுக்கு அடுத்த வேளை உணவு கூட தேடினால் தான் கிடைக்கும். ஆனால் அதற்காக அவை கவலைப்படுவதில்லை. மனிதன் மட்டும் தான் கவலையில் மூழ்கி தன்னை தானே முதுமைக்கு தள்ளிக்கொள்கிறான். இதில் சண்டை சச்சரவு வேறு.

பக்கத்து தெருவுக்கு போவதற்கு  வண்டியை எடுக்காமல் காலார நடந்து செல்லுங்கள். உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி வருவதை உணர்வீர்கள். உண்மையான நண்பர்களிடம் மனம் விட்டு சிரித்து பேசுங்கள். மனது பத்து வருடம் இளமையாகி விடும். இதை எல்லாம் விட்டுவிட்டு பாழாய்ப்போன பணத்துக்காக எவனிடமோ சேவகம் செய்து அடிமை வாழ்வு வாழ்ந்து அந்த வாழ்க்கையே அர்த்தமற்றதாகி போவதற்கா நம்மை இறைவன் படைத்தான்? மாற்றத்தை எதிர்கொண்டு வாழ்க்கையை இன்பகரமாக அனுபவிப்போம்.

11 comments:

ராமன் said...

மனதை தொட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

அ.நம்பி said...

நிலையானது ஏதுமில்லை என்னும் உண்மையை உணர்ந்துகொண்டால் மாற்றத்தை எதிர்கொள்வது எளிதாகிவிடும்.

அருமையான கட்டுரை.

manaswini said...

வாழ்த்துக்கள். மறுமொழி என்றால் என்ன என்று இப்போது தான் தெரிந்தது. :)

madrasthamizhan said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, நம்பி ஐயா.

madrasthamizhan said...

மனஸ்வினி,

புதிய வலைப்பூவில் நானும் கத்துக்குட்டி தான். பிளாகரை விட இதில் பல வசதிகள் உள்ளதால் புதிய வீட்டில் குடி புகுந்து விட்டேன்.

vijay said...

this is an excellent article and replicates what's running in our mind at present...

nothing is permanent but change... only way to oversee/overcome change is to be the change itself...

keep writing....keep going great guns...

Cheers...Vijay...

madrasthamizhan said...

வருகைக்கு நன்றி, விஜய். நீண்ட நாட்களுக்கு பிறகு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். அடிக்கடி வாருங்கள்.

syed rahman said...

வாழ்த்துக்கள்.அருமையான கட்டுரை

madrasthamizhan said...

கருத்துக்களுக்கு நன்றி, சையத் ரஹ்மான். அடிக்கடி வருகை தாருங்கள்.

தேனியார் said...

அற்புதமானப் பதிவு. நானும் இதே நிலமையில் பலரைக் காண்கிறேன். பணத்துக்காக நம்மை அறியாமல் வாழ்க்கையின் பல நல்ல பகுதியை இழந்துவிடுகிறோம்.

கூடுமானவரையில் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டே பணத்தை தேடினால் இழப்பை குறைக்கலாம்.

சார் இந்த புதிய வேர்ட் பிரஸ் பற்றி ஒரு பதிவிட்டால் எம்மைப் போன்றோர்களுக்கு பயனாக இருக்கும்.

madrasthamizhan said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, தேனியார்.

சமீப காலம் வரை நானும் பிளாகரில் தான் இருந்தேன். ஆனால் இந்த பதிவு முதல் தான் வேர்ட்ப்ரஸுக்கு மாறிவிட்டேன். இதில் பிளாகரை விட பல வசதிகள் உள்ளன. உதாரணத்துக்கு, உங்களுடைய பதிவுகளின் மேல் உள்ள themeஐ நீங்கள் மிக எளிதாக மாற்றிக்கொண்டே இருக்கலாம். மேலும், பல templateகள் உள்ளன. நீங்கள் wordpress.com க்கு சென்றால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்.