Wednesday, 4 March 2009

சூரத் நினைவுகள்=1

சூரத்திலிருந்து பம்பாய்க்கு அடிக்கடி அலுவலக விஷயமாக இரயிலில் செல்ல
வேண்டி இருந்தது. சூரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு "பறக்கும் ராணி" (Flying Rani)
என்ற இரயிலில் தான் நான் வழக்கமாக செல்வேன். இது பம்பாய்க்கு 10 மணி
அளவில் சென்று விடும். அதே போல் மாலை 5.30 மணி அளவில் பம்பாயிலிருந்து கிளம்பி சூரத்துக்கு இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்து விடும். ஒரே நாளில்
பம்பாய் சென்று வர வசதியாக இருந்ததால் இந்த இரயில் மிகவும் பிரபலமாக‌
இருந்தது. அத‌னால் எப்போதுமே இந்த‌ இர‌யிலில் கூட்ட‌ம் இருந்து கொண்டே
இருக்கும்.

முன் ப‌திவு செய்யாத‌வ‌ர்க‌ள் கூட‌ இந்த‌ இர‌யிலில் முன்பதிவு
செய்தவர்கள் பெட்டியில் ஏறி ஏதாவ‌து காலி இருக்கையில் அம‌ர்ந்து
விடுவார்க‌ள். பிற‌கு ப‌ய‌ண‌ச்சீட்டு ப‌ரிசோத‌க‌ர் வ‌ந்த‌வுட‌ன் முன்
ப‌திவுக்கான‌ க‌ட்ட‌ண‌த்தை கொடுத்து விடுவார்க‌ள். இது வ‌ழ‌க்க‌மாக‌
ந‌ட‌க்கும் ஒன்று தான்.

இதே போல், ஒரு முறை ப‌ம்பாய் செல்வ‌த‌ற்காக‌ நான் இந்த‌ இர‌யிலில் ஏறி
என‌து இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன். என‌து ப‌க்க‌த்து இருக்கை
காலியாக‌ இருந்த‌து. ச‌ரி, ஒரு வேளை இந்த‌ இருக்கைக்கான‌ ஆள் வ‌ர‌வில்லை
போலிருக்கிற‌து என்று நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி சிறிது
தூர‌ம் சென்றிருக்கும். மிக‌வும் அழுக்கான‌ குர்தாவுட‌ன் ஒரு ஆள் அந்த‌
காலி இருக்கையில் வ‌ந்து அம‌ர்ந்து கொண்டான்.

என‌க்கோ உள்ளூர பயம். 'இவ‌னை பார்த்தால் பிச்சைக்கார‌ன் போல‌
இருக்கிறான். ச‌ம‌ய‌ம் பார்த்து ந‌ம்முடைய‌ ப‌ர்ஸை அபேஸ் செய்ய‌
போகிறான். நாம் தான் உஷாராக‌ இருக்க‌ வேண்டும்' என்று
நினைத்துக்கொண்டேன். இர‌யில் கிள‌ம்பி ஒரு முக்கால் ம‌ணி நேர‌ம்
இருக்கும். ஒரு சிறிய‌ ட‌ப்பாவை திற‌ந்தான். உள்ளே ம‌ஞ்ச‌ள் நிற‌த்தில்
ஜிலேபி இருந்த‌து. என்னிட‌ம் ஒரு ஜிலேபியை கொடுத்தான். நான் உஷாராக‌
ம‌றுத்து விட்டேன். அவ‌ன் விட‌வில்லை. நான் க‌டைசியில் என‌க்கு உட‌ல்
ந‌ல‌ம் ச‌ரியில்லை என்று கூறி ச‌மாளித்து விட்டேன்.

' இவ‌ன் ப‌ய‌ங்க‌ர‌மான‌ ஆளாக‌ இருப்பான் போலிருக்கிற‌தே. முத‌ல்
ஜிலேபியை என்னிட‌ம் கொடுத்த‌திலேயே தெரிந்து விட்ட‌து இவ‌ன் ஏதோ ஒரு
திட்ட‌த்துட‌ன் தான் வ‌ந்திருக்கிறான்'

இரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென்று என்னிடம் பேச்சு கொடுக்க
ஆரம்பித்தான்.

"நீங்கள் பம்பாய் செல்கிறீர்களா?"

"ஆமாம்"
(மனதுக்குள் : இல்லடா கலப்பை, ஆப்கானிஸ்தான் செல்கிறேன்)

"இரயில் சரியான நேரத்தில் தான் செல்கிறது, இல்லையா?"

"ஆமாம்"
(டேய், டேய், என‌க்கு தான் நேர‌ம் ச‌ரி இல்லை)

"நீங்க‌ள் சூர‌த்தில்தான் இருக்கிறீர்க‌ளா"

"ஆமாம்"
(இல்லை, செள‌தியில் இருக்கிறேன். அங்கிருந்து ஒட்டக‌த்தின் மேல் ஏறி
சூர‌த்துக்கு வ‌ந்தேன்)

இப்ப‌டியாக‌ அவ‌ன் கேட்ட‌ கேள்விக‌ளுக்கெல்லாம் "ஆமாம்" என்று ஒரே ப‌தில்
கூறினேன். பேச்சை வ‌ள‌ர்த்தால் தானே பிர‌ச்னை?

திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை
உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.

அவன் சிரித்துக்கொண்டே, "இது நல்ல வைரம்" என்றான். அடப்பாவி, தீர்மானமே
செய்து விட்டான் போல இருக்கிறது.

அதற்கு பிறகு எனக்கு இருப்பே கொள்ளவில்லை. 'எப்படா பம்பாய் வரும்' என்று
ஆகிவிட்டது. இந்த திருட்டுப்பயலிடமிருந்து எப்பொழுது தப்பிக்க போகிறோம்
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இரயில் திடீரென்று மெதுவாக செல்ல ஆரம்பித்தது. ஜன்னல் வழியே வெளியே
பார்த்தேன். இப்போது இரயில் நின்றே விட்டது. சிகப்பு சிக்னலில் இரயில்
நின்று கொண்டிருந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் போரிவலி என்ற இரயில்
நிலையம் வந்து விடும். இந்த நிலையத்தில் முக்கால்வாசி பேர் இறங்கி
விடுவார்கள். வண்டி சிக்னலுக்காக காத்திருந்தபோது போரிவலியில் இறங்க
வேண்டியவர்கள் தத்தம் சாமான்களை இறக்கி கீழே இறங்குவதற்கு தயாராக
இருந்தார்கள்.

அப்போது என் அருகில் இருந்த திருட்டு பிச்சைக்காரன் தனது இடுப்பிலிருந்து
ஒரு சுருக்கு பையை எடுத்தான். ஒரே ஒரு நொடி தான். அந்த பையை நன்றாக
முடித்து போட்டு தனது அழுக்கு குர்த்தாவுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால்
அந்த ஒரு நொடியில் அந்த பைக்குள் இருந்ததை நான் பார்த்து விட்டேன்.
எனக்கு மிக பெரிய அதிர்ச்சி. அந்த பைக்குள் நான் பார்த்தது பல விதமான
சிறிய கற்களை போன்ற பொருட்கள். ஆனால் பளபளவென்று மின்னியது போல இருந்தது.

இரயில் மெதுவாக நகர்ந்து தளத்துக்குள் நுழைந்தது. நான் அவ‌னை பார்த்து
"நீங்க‌ள் என்ன‌ வேலை செய்கிறீர்க‌ள்?" என்று கேட்டேன். அந்த
'பிச்சைக்காரன்'  "நான் சூரத்தில் வைரங்களை வெட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு கீழே இறங்கி விட்டான்.

அவனது சுருக்கு பையில் இருந்தது அத்தனையும் வைர கற்கள் என்று அப்போது
தான் எனக்கு உறைத்தது. இத்தனை நேரம் ஒரு சாதாரண பயணி போல என் அருகில் அமர்ந்து வந்திருக்கிறான். தன்னிடம் இருக்கும் பொருள் யாருக்கும்
தெரியக்கூடாது என்பதற்காக இப்படி அழுக்கு உடையில் வந்திருந்தானோ என்னவோ.

ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது. அந்த இரயில் பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

நான் என்னவோ அவன் என்னுடைய ஒற்றைக்கல் வைர மோதிரத்தை
தான் திருடப்போகிறான் என்று நினைத்து கொண்டிருந்தேன். அவன் தன்னிடம்
இருக்கும் வைரங்களை மற்றவர்கள் திருடிவிடக்கூடாது என்று பிச்சைக்காரன்
உடையில் இருந்தானோ என்னவோ? கவியரசர் அனுபவித்து அல்லவா
எழுதியிருக்கிறார்,

'ஒருவன் மனது ஒன்பதடா
அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா'

9 comments:

அ.நம்பி said...

//ஒருவரை அவரின் உடைகளை வைத்து எடை போடுவது எவ்வளவு தவறு என்று அன்று எனக்கு தெரிந்தது.//

இது நிலையான உண்மை; காலத்தால் மாறாது.

Geetha Sambasivam said...

ரொம்ப நாட்கள் முன்னே வந்திருக்கேன் உங்க பதிவுகளுக்கு, அதுக்கு அப்புறம் இன்னிக்கு. பரோடா - சூரத் பயணம் நினைவில் வந்தது, உங்கள் பதிவைப் பார்த்து.

Manaswini said...

இதை படித்தவுடன் எனக்கு அன்பே சிவம் படம் பற்றிய நினைவு வருகிறது.

சில அனுப‌வ‌ங்க‌ள் சில‌ ம‌னித‌ர்க‌ள் ம‌ற‌க்க‌முடிவ‌தில்லை.அழ‌கான‌ ப‌திவு.

வடுவூர் குமார் said...

என்ன பண்ணுவது? உலகம் அப்படி இருக்கு.

தேனியார் said...

அருமையான் நடை. நேரில் பார்த்த உணர்வு.
ஆம் சில நேரம் எல்லோருமே வேசம் போட வேண்டி இருக்கிறது.

jeeveeji said...

//திடீரென்று எனது வலது கையை பிடித்து இழுத்து அதில் இருந்த மோதிரத்தை
உன்னிப்பாக கவனித்தான். நான் வெலவெலத்து போய் விட்டேன். உடனே எனது கையை இழுத்து கொண்டு ஒரு முறை முறைத்தேன். எனது மோதிரத்தில் ஒரு ஒற்றை வைரக்கல் இருந்தது. அதை தான் அவன் உற்று பார்த்தான். எனது சந்தேகம் சரியாகி விட்டது போல. இவனிடம் 200% உஷாராக இருக்க வேண்டும்.//

சும்மா சொல்லக்கூடாது, அட்டகாசமான த்ரில்!
நுனி சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்கிற உணர்வில் ரசித்துப் படித்தேன்.. அந்தந்த நேரத்து மனசில் படிந்த உணர்வுகளை,
அப்படியே வார்த்தைகளாக்கி இருக்கிறீர்கள்..
நல்லதொரு வாசிப்பைக் கொடுத்தமைக்கு நன்றி.

madrasthamizhan said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜீவீ.

pattammal(bangalore) said...

உருவத்தைக்கண்டு இகழாமை வேண்டும் என்ற முதுமொழிக்கேற்ப
இந்த கதை அமைந்துள்ளது.எறும்பு உருவத்தில் சிறியதுதான்.ஆனால்
யானை உருவத்திலும்,மதிப்பிலும் மிகப்பெரியது.யானயை மதிக்கும்
அளவு,இரும்பை நாம் நினைப்பதில்லை.எறும்பு யானையின் காதில்
புகுந்து விட்டால்,அது அனுபவிக்கும் வேதனையில்தான் அதன்(எறும்பின்)
மதிப்பு யானைக்கு தெரியவரும்.
அது போல கடல் நீரும் அகலத்திலும் நீளத்திலும் பரப்பிலும் பெரியது.
அருந்துவதற்கு ஏற்றது அல்ல.ஆனால் ஊற்று நீர்,பரப்பில் சிறியது.
ஆழத்தில் மிகுந்தது.வெளியே நீர் தெரியாது.சுவையில் நிகரற்றது.
எனவே நம்மில் சில மனிதர்கள் வெளித்தோற்றத்தில்,உடையணிவதில்
உரையாடலில்,பழக்க வழக்கங்களில்,பெரிய மனிதர்களாக,அறிவு
மிகுந்தவர்களாக,படாடோபமாக காட்டிக்கொள்வர்.இறுதியில் அவர்கள்
தன்னைசிரியனாக உணரும் சமயம்,நானமடைகின்றனர்.ஆகவே தனைத்தான்
தாழ்த்திக்கொல்பவன் உயர்த்தப்படுவான்.

madrasthamizhan said...

கருத்துக்களுக்கு நன்றி அம்மா. கவியரசர் அதனால் தான் எழுதியிருக்கிறாரோ "உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா" என்று?