நீங்கள் வளைகுடாவிலோ அல்லது செளதியிலோ வேலை தேடுகிறீர்களா? அப்போது இந்த கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள்.
எனது நண்பர் கணேஷ் செளதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலையில் இருக்கிறார். அவரை பார்ப்பதற்க்காக ஒரு நாள் அவருடைய அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக புதிதாக கேரளாவை சேர்ந்த ஒருவரை அன்றுதான் நியமித்திருந்தார். எனது நண்பரிடம், "என்ன, புதிதாக ஆள் சேர்த்திருக்கிறீர்கள் போல இருக்கிறதே" என்றேன். அதற்கு அவர் அந்த ஆளை பற்றி கூற ஆரம்பித்தார். அவருடைய பெயர் சோமன். அவருக்கு நேர்ந்த அனுபவங்களை கேளுங்கள்.
9 வருடங்களுக்கு முன்பு கொச்சியிலிருந்த ஒரு ஏஜெண்ட் மூலமாக தோட்டக்காரன் வேலைக்கு சோமனை ஒரு செளதிக்காரன் தேர்ந்தெடுத்தான். சோமன் 8-வது வகுப்பு வரைதான் படித்துள்ளார். வீட்டில் வறுமை காரணமாக, 'சரி, செளதிக்கு போய் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு வருவோம், பசி பிரச்னையாவது தீரும்' என்ற நம்பிக்கையில் தோட்டக்காரன் வேலைக்கு ஒப்புக்கொண்டார். மாதம் 800 ரியால் சம்பளம், 2 வருடங்களுக்கு ஒரு முறை விடுப்பு என்று ஒப்பந்தம் போடப்பட்டது. வீட்டில் இருக்கும் நகைகளை விற்று சிறிது கடனும் வாங்கி ஏஜெண்ட்டுக்கு 75000 ரூபாய் கொடுத்தார் சோமன். "எப்படியும் செளதிக்கு போய் சம்பாதிக்க போகிறோம், 2 வருடங்களில் இந்த கடனை எல்லாம் அடைத்து விடலாம்" என்று நினைத்தார்.
செளதிக்கு வந்து சேர்ந்த உடனேயே சோமனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்தில் அவரை வரவழைக்க வந்திருந்த செளதிக்காரன், முதலில் அவருடைய கடவுச்சீட்டை (passport) பிடுங்கிக்கொண்டான். பிறகு வண்டியில் உட்கார வைத்து பல மணி நேரம் பாலைவனத்தில் அவரை அழைத்து சென்றான்.
வெகு தூரம் பாலைவன மணலில் சென்ற பிறகு கீற்று கொட்டகையை போல ஒரு இடம் தென்பட்டது. அந்த இடத்தை சுற்றி ஒரு 25 ஒட்டகங்கள் இருந்தன. வண்டியை நிறுத்திய செளதி, சோமனை இறங்க சொன்னான். ஒரு பெரிய நிறைய தண்ணீரையும் 'கபூஸ்' என்ற சுக்கா ரொட்டி ஒரு 15ம் கொடுத்து விட்டு, இனிமேல் இந்த ஒட்டகங்களை பார்த்து கொள்வது தான் உன்னுடைய வேலை என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
வாரம் ஒரு முறை அந்த செளதிக்காரன் வந்து தண்ணீரும் 15 கபூஸையும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவான். பேச்சு துணைக்கு கூட அள் இல்லை. மைல் கணக்கில் வெறும் மணல் தான். அவருடைய நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு நாள், இரண்டு நாட்கள் இல்லை, ஒரு வாரம் இரண்டு வாரங்கள் இல்லை, 5 வருடங்கள் இதே போல கழிந்துவிட்டன. சோமனின் உடல் நலமும் வெகுவாக பாதிப்படைந்தது. ஆனால் அதை விட அவரின் மனம் கிட்டத்தட்ட பித்து பிடித்தது போல ஆகிவிட்டது.
ஒரு முறை இதே போல செளதிக்காரன் வந்த போது, சோமன் அவனிடம் தான் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேல் பரிதாபப்பட்டு செளதிக்காரன் அவரை அழைத்துக்கொண்டு சில மணி நேரம் பயணம் செய்து கடைசியில் ஜூபைல் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தான். அங்கு உள்ள மருத்துவமனையில் மருத்துவரை பார்ப்பதற்காக வெளியே உட்கார்ந்திருந்தார்கள். 5 வருடங்களுக்கு பிறகு வெளி மனித முகத்தை பார்த்த சோமனுக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அந்த மருத்துவமனையில் எனது நண்பர் கணேஷ் தனக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சென்றிருந்தார். யாருடனோ தொலைபேசியில் மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்த போது சோமன் அதை கேட்டுவிட்டார். உடனே அவரிடம் ஓடி வந்து அவரது கால்களில் விழுந்து "எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்" என்று கதறினார்.
அதற்குள் கூட்டம் சேர்ந்துவிட்டது. அந்த செளதிக்காரனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.
தெய்வாதீனமாக அதே சமயத்தில் கணேஷுக்கும் அவரது அலுவலகத்தில் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே அவர் செளதிக்காரனிடம் சோமனுடைய விசாவை இவரது நிறுவனத்துக்கு மாற்றி தருமாறு கேட்டார். அதற்குண்டான செலவுகளை தனது நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறினார். முதலில் இதற்கு ஒப்புக்கொள்ளாத செளதிக்காரன் அரை மனதாக பிறகு ஒப்புக்கொண்டான். விசா மாற்றப்படும் வரை சோமன் தனது அலுவலகத்திலேயே தங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார் (கணேஷ் அந்த நிறுவனத்தின் மேலாளர் என்பதால் இன்னும் வசதியாகிவிட்டது).
சோமனுக்கு கையில் பணமே இல்லை. இவருக்கு பேசியபடி 800 ரியால் தராமல் மிக மிக குறைந்த சம்பளத்தை 5 வருடங்களுக்கு கணக்கு பார்த்து ஒட்டுமொத்தமாக செளதி கொடுத்தான். எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று சோமனும் அதற்கும் ஒப்புக்கொண்டார்.ஒரு 10 நாட்களில் சோமனுடைய விசா கணேஷுடைய நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. அன்று தான் அவரும் எனது நண்பரது அலுவலகத்தில் சேர்ந்திருந்தார்.
அவரது அனுபவங்களை கேட்ட பிறகு எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது. நானும் எனது நண்பரும் பேசிக்கொண்டிருக்கும் போதே சோமன் இரு கோப்பைகளில் எங்களுக்கு தேனீரை கொண்டு வந்து வைத்தார். பிறகு அங்கேயே ஒரு ஓரமாக தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.
எனது நண்பர் "என்னப்பா?" என்று கேட்க, சோமன் மிகவும் தயங்கி தயங்கி , "நான் ஊருக்கு பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தயவு செய்து என்னுடைய ஊருக்கு போன் போட்டு கொடுக்கிறீர்களா" என்று பரிதாபமாக கேட்டார். உடனே கணேஷ் தன்னுடைய கைப்பேசியிலிருந்தே அவருடைய கிராமத்துக்கு போன் செய்தார். அப்பொழுதெல்லாம் கைப்பேசி இப்போது இருப்பதை போன்று அனைவரிடமும் இல்லை. இவரது வீட்டுக்கு 5 வீடு தள்ளி ஒரு வீட்டில் போன் இருந்தது. "செளதியிலிருந்து சோமன் பேசுகிறேன், என்னுடைய மனைவியை கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? நான் 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் போன் செய்கிறேன்" என்று கூறினார்.
வாழ்க்கையிலேயே மிக நீண்ட 5 நிமிடங்கள் அதுவாகத்தான் இருந்திருக்கும். சோமனுக்கு கை நடுங்க ஆரம்பித்து விட்டது. மீண்டும் அதே எண்ணுக்கு போன் செய்தார்.
"சாந்தா..." என்று மிகவும் சன்னமான குரலில் ஆரம்பித்தார். அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஒரு நிமிடம் முழுவதும் இங்கே இவரும் ஊரில் அவரது மனைவியும் 'ஓ' வென்று விடாமல் அழ ஆரம்பித்தனர்.அந்த ஒரு நிமிடத்துக்கு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வெறும் அழுகை தான். கூடி இருந்த எங்கள் அனைவருக்குமே கண்கள் கலங்கிவிட்டன. 5 வருடங்களாக இவர் தன் மனைவி மக்களிடம் பேசவே இல்லை. இவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என்றே தெரியாமல் அவரது குடும்பம் இத்தனை நாட்கள் தவித்து கொண்டு இருந்திருக்கிறது.
இப்படியும் கூட மனிதர்களா? இவரை மாதிரி எத்தனையோ இந்தியர்கள் இங்கு செளதியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மீன்பிடி தொழிலில் இருப்பவர்கள், பெட்ரோல் பங்க்குகளில் வேலை செய்பவர்கள், தினக்கூலி வேலை செய்பவர்கள், சாலை போடுபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுடைய பாடு மிக மிக பரிதாபகரமானது. பலருக்கு சம்பளம் கொடுத்து மாதக்கணக்காகிறது. பிச்சைக்காரர்களை போல பிறரை நம்பி வாழ வேண்டிய நிலைமை இவர்களுக்கு.
இந்திய தூதரகமும் இவர்களை கண்டுகொள்வதில்லை என்று ஒரு புகார் உள்ளது. ஒரு முறை இதை பற்றி தூதரக அதிகாரி ஒருவரிடம் நேரேயே கேட்டுவிட்டேன். "பிரிட்டன், அமெரிக்க தூதரகங்கள் தங்களது குடிமக்களை எப்படி பாதுகாக்கின்றன? ஒரு வெள்ளைக்காரனைக்கூட நீங்கள் சிறையில் அடைக்க முடியாது. அந்த அளவுக்கு அவர்களது தூதரகம் மிக மிக பலமானது. இந்தியர்களை மட்டும் ஏன் இப்படி நீங்கள் பாதுகாக்க முடியவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் கூறியது வியப்பாக இருந்தது. "செளதியில் இந்தியர்கள் மட்டுமே 5 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இதில் 90% மிக மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். இத்தனை பேருக்கு நாங்கள் எப்படி சேவை செய்ய முடியும்? எங்களால் முடிந்த வரை உதவி செய்கிறோம்" என்றார்.
இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது மக்களுக்கு முதலில் செளதியை பற்றி விபரங்களை தெரிந்தவர்கள் எடுத்து கூற வேண்டும். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்து ஏஜெண்ட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாவது செளதியில் வேலை வாங்கி சென்று விடவேண்டும்" என்று நினைப்பவர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது.
"எப்படியாவது செளதிக்கு வந்து விட வேண்டும், அது எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை" என்று நினைப்பவர்களுக்கு இங்கு உள்ள நிலைமையை எடுத்து கூற வேண்டும். நமது அரசாங்கத்தை நம்பி பயனில்லை. முதலில் நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம்.
இப்படி ஏமாற்றப்படுபவர்கள் ஒன்றுமே அறியாத அப்பாவிகள் தான். நம்முடைய பாமர மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி செளதிக்கு வர தயாராக இருப்பவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஊரிலேயே அந்த ஒரு லட்சம் ரூபாயை முதலீடாக போட்டு ஒரு சிறிய பெட்டிக்கடை ஆரம்பிக்க கூடாது? கிராமங்களில் போணி ஆகவில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இப்போதெல்லாம் தச்சு வேலை செய்பவர்கள், பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள் போன்றவர்களுக்கு ஏக கிராக்கி. இதில் ஏதாவது ஒரு தொழிலை செய்யலாம். கார் மெக்கானிக்குகள் எவ்வளவு பணம் செய்கிறார்கள் தெரியுமா(குறை கூற வரவில்லை, அந்த அளவுக்கு அவர்களுக்கு Demand இருக்கிறது). அட ஒன்றுமே தெரியாதவரா? சென்ட்ரல் இரயில் நிலையத்திலோ கோயம்பேடிலோ சென்னை துறைமுகத்திலோ சுமை தூக்கலாமே. கெளரவமாகவும் நேர்மையாகவும் வாழ ஆயிரம் வழிகள் உள்ளனவே.
14 comments:
உள்ளம் கலங்குகிறது; சோமன் நம் அனுதாபத்துக்கு உரியவர்.
இங்கு மலேசியாவில் பாலைநிலம் இல்லை; ஒட்டகங்கள் இல்லை; ஆனால் `இந்திய சோமன்'களின் கதைகள் இங்கும் உண்டு. அவ்வப்போது நாளிதழ்களில் செய்தி வரும். அத்தனையும் பரிதாபக் கதைகள்.
கட்டுரையின் கடைசிப் பத்தியில் நீங்கள் சொல்லி இருப்பது மிக முக்கியமானது; பின்பற்றினால் பயன் கிட்டும்.
இங்கே சவுதியில் ஏகப்பட்ட சோமன்கள் இருக்கின்றனர். படிக்காதவர்கள் மட்டுமில்லை, படித்த பலருக்கே இந்த நிலை தான். இதில் முதலில் ஏமாற்றுவது இந்தியாவில் இருக்கும் ஏஜெண்டுகள் தான்.
என் நண்பனின் உறவினர் ஒருவர் இங்கே டிப்ளமோ முடித்து CAD engrஆக வேலைப் பார்க்கும் கனவோடு இந்தியாவில் வந்திருக்கிறார். ஆனால் அவர் பார்க்கும் வேலையோ செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பணி. சவுதிக்காரன் ஏஜெண்டிடம் செங்கல் அறுக்க ஆள் கேட்க ஏஜெண்டோ CAD முடித்தவனை அனுப்பி இருக்கிறான். இவர்களுக்கு இடையில் மாட்டித் தவிப்பது என் நண்பனின் உறவினர் தான்.
வெளிநாடுகளில் நல்ல கம்பெனியில் வேலைப் பார்ப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள், அவ்வளவே...
நம்பி ஐயா, மலேசியாவில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை, குறிப்பாக தமிழர்களை காவல் துறையினர் படுத்தும் பாடு ஊரறிந்ததே. என்ன செய்வது, மனிதனுக்கு மனிதன் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதை கூட சில இடங்களில் கிடையாது போலிருக்கிறது.
வருகைக்கு நன்றி, ராஜா. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இதற்கெல்லாம் மூல காரணமே இந்த ஊரை பற்றிய அறியாமை என்றே கூறுவேன். இந்தியா, இந்தோனேஷியா போன்றைய நாடுகள் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு தடை விதித்துள்ளதால் செளதிக்காரர்கள் இப்போது நேபால், வியட்னாம் போன்றைய நாட்டு பெண்களை நாடுகிறார்களாம்.
மனம் கனக்கிறது. நான் பக்ரைனில் தன் இருக்கிறேன்
இங்கும் அக்டந்த வாரம் ஒருவரி சந்தித்தேன். அவர் அவரது நிலயை சொல்ல சொல்ல எனக்கு கண்ணேர் வந்து விட்டது. திருமணம் முடித்து ௬ மாதங்களில் இங்கு வந்தாராம். இங்கு ஒரு பூக்கடையில் வேலை செய்கிறார். ஆனான் இங்கு வருவதற்கு முன்பு கேரளாவில் ஒரு நகை கடையில் வேலை பார்த்ததாகவும் சொன்னார்
அங்கும் இங்கும் ஒரே சம்பளம் தான்.
எட்டாயிரம் ருபாய்
இங்கு என்பது தினர். நமக்கு தெரியாமல் எத்தனயோ பேர் கஷ்ட படுகிறார்கள்
very touching one... following ur blog and waiting for an article for almost three weeks.... hope u r busy...
in saudi, everything is followed as per the paper rules... they dont think that the rule is applied on a human being...
as you mentioned in one of ur earlier articles, commitments one after the other, makes people to stay here for longer time...this actually gives the employers here an additional advantage of unnecessary domination... endru ingu manathigarlai manithargalaga nadhuthuvaargalo...
people in good organisations also getting treated as resources... (even indian bosses are not exceptions)...
guru,
vediceye.blogspot.com
if u get a chance...pls read this blog...
i jus browsed thru sites and found this...this one is very good...
jus thought of sharing with you...
cheers...vijay
வருகைக்கு நன்றி, தமிழண்ணன். வளைகுடா முழுவதும் இந்த நிலைமை தான். என்ன செய்வது?
வாருங்கள் விஜய். உங்களது உற்சாகமான ஊக்கத்துக்கு நன்றி. வேலை பளு அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை.
செளதி ஏதோ சொர்கபுரி என்று ஊரில் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் வறுமையாக இருப்பது அவனது தலை எழுத்தாக இருக்கலாம். ஆனால் முட்டாள்தனமாக இருப்பது அறியாமையால்தான் அல்லவா? ஊரில் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அடிமைகளாக இல்லையே.
எனக்கும் இந்த வலைத்தளம் ரொம்ப பிடிக்கும் விஜய். அதே போல, www.nanavuhal.wordpress.com மற்றும் www.jeeveesblog.blogspot.com இரண்டும் எனக்கு பிடித்தமான வலைத்தளங்களாகும்.
Guru....
Waiting for your post since last month... pls post an article....
Cheers...
vijay.
விஜய்,
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வேலை பளு மிக அதிகமாக இருப்பதால் அடிக்கடி எழுத முடிவதில்லை. கண்டிப்பாக வெகு சீக்கிரத்தில் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்.
அயல்நாட்டு மோகம்(ஆசை)
குழந்தை பருவம் கொண்டே , பொதுவாக இந்த குணம் ஆசையாக வளரும்.பள்ளியில் படிக்கும் செல்வந்தாது
குழந்தைகளை பார்த்து நடுத்தர வர்க்க குழந்தைகள் அவர்களது நடையுடை பாவனைகளை கண்டு தனக்கும்
அவை வேண்டும் என ஆசைப்படும்.இதை தவிர்க்கவே பள்ளியில் சீருடை திட்டம் வந்தது.பின்னர் அவர்கள்
வளர்ந்து வந்தபின் ,அடி மனதில் இருந்த ஆசை வளர்ந்து விஸ்வரூபமெடுத்து விடுகிறது.குடும்ப நிலையை
மீறி அயல்நாடு செல்ல ஆசைப்படுவர் அதனால்,குடும்பப்பாசம்,பொருளாதாரம்,நாட்டுப்பற்று போன்றவைகளை
மறந்து,சுயநலத்தையே பெரிதாக மதித்து அங்கு சென்று அளவில்லா அல்லல்கள் படுகின்றனர்.காந்திஜி,
வ.ஊ.சிதம்பரம் பிள்ளை,பாரதியார்,சுப்பிரமணிய சிவா இவர்கள் நம் நாட்டிற்கு ஆற்றிய தொண்டையும்,இயற்றிய
தேச பக்தி பாடல்களையும் மறந்து,உடல் நலம் இழந்து,மன அமைதி இழந்து,கற்ற கல்வி கற்பித்த ஒழுக்கத்தையும்
மறந்து,தை நாட்டிற்கு, நன்றி மறந்த துரோகியாகிவிடுகின்றனர் .சுதேசியாக இருப்பது மறந்து விதேசியாகி
மாறிவிடுகின்றனர்.
ஆகவே நம் நாட்டில் உள்ள இயற்க்கை வளங்கள்,கனி வளங்கள்,பொருளாதார நிலைமைகள் ஆகியவைகளை அறிந்து,
மென்மேலும் யாவி வளர்ச்சி பெற்று தழைத்து ஓங்கி வல்லரசு நாடாக நம் நாடு மிளிர,இளைஞர்கள் தாங்கள் கற்ற
கல்வியை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்பது இந்நிகழ்ச்சி மூலம் உணருகிறோம்
.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி பட்டம்மாள் அவர்களே.
Post a Comment