Tuesday, 21 April 2009

இரயில் பயணங்களில்

நான் கூறப்போகும் இந்த‌ அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல,  சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள்.

1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், இல்லயென்றால் உறுதியான இருக்கை கிடைக்காது. அதனால் குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் பலர் பூனா வரை ஒரு இரயிலில் வந்து பிறகு அங்கிருந்து வடக்கே செல்லும் வேறு இரயில்கள் மூலம் சூரத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது.

சூரத் செல்பவர்களுக்கு பூனா ஒரு transit இரயில் நிலையமாகதான் இருந்தது. ராவும் ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவ்வாறே பூனாவுக்கு செல்லும் இரயிலில் வந்தான். அவன் வந்த இரயில் வழக்கம் போல தாமதமாக பூனாவுக்கு வந்து சேர்ந்தது. அப்போது இரவு 3 மணி இருக்கும். பொதுவாக பூனாவில் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்தபின் சூரத்துக்கு செல்லும் இரயில் வரும். இந்த இரயில் வேறு எங்கிருந்தோ வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் சூரத் சென்றடைவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். (இப்போது route எல்லாம் மாற்றி விட்டார்கள், நான் கூறுவது 1990ல்).

ராவ் பூனா வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது என்று கூறினேன் அல்லவா? அவனுடைய அதிர்ஷ்டம் சூரத் வழியாக அஹமதாபாத் செல்லும் இரயில் மற்றொரு தடத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அவசரம் அவசரமாக இறங்கி சூரத் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டான். இரயிலும் கிளம்பி விட்டது. அப்பாடா, அவன் ஏறிய பெட்டியில் உட்கார இடம் கிடைத்து விட்டது. காலையில் ஊர் போய் சேர்ந்து விடலாம். இரவு 3 மணி என்பதால் மற்ற பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இரயில் கிளம்பி ஒரு 10 அல்லது 15 நிமிடம் தான் ஆகியிருக்கும். தான் கொண்டு வந்த suitcase பெட்டியை எங்காவது ஜாக்கிரதையாக வைக்கலாம் என்று எண்ணினால், திடீரென்று ஒரு அதிர்ச்சி! அப்போது தான் suitcase பெட்டியை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அடக்கடவுளே! அதில் தானே அவனுடைய துணி மணிகள் எல்லாமே உள்ளன. இரவு படுக்க போகும் முன் அவனுடைய purseஐ கூட அதில் தானே வைத்திருந்தான் (pantல் purseஐ வைத்திருந்தால் ஜேப்டிக்காரர்கள் எடுத்து விடுவார்கள் என்று பயந்து இவன் அதை suitcase பெட்டியில் வைத்துள்ளான். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல தான்!) இப்போது அதுவும் கோவிந்தா! என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஏதோ ஒரு உந்துதலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டான். இரயிலும் சிறிது தூரம் சென்ற பின் நின்று விட்டது. அவசரம் அவசரமாக இரயிலில் இருந்து கீழே குதித்து பூனா இரயில் நிலையம் நோக்கி இருப்பு பாதை ஓரமாக நடக்க தொடங்கினான். இரவு நேரம் என்பதால் ஒரே கும்மிருட்டு. ஒரு பக்கம் பணமும் suitcaseம் தொலைந்த வருத்தம். மற்றொரு பக்கம் தூக்க கலக்கம் / அசதி. சரி இப்படியே இருப்பு பாதை வழியாக நடந்து போனால் பூனா சென்றடைவதற்குள் விடிந்து விடுமே என்ன செய்வது?

இரவு நிசப்தத்தில் எங்கோ தூரத்தில் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. சரி, அங்கு ஏதோ சாலை இருக்கும் போலிருக்கிறது. லாரியோ ஏதாவது வாகனமோ கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டு பூனா இரயில் நிலையம் வரை சென்று விடலாம் என்று இருப்பு பாதையிலிருந்து திசையை மாற்றி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கும்மிருட்டில் எங்கே நடந்தால் என்ன - மிதிப்பது நாயின் வாலாகவோ அல்லது பாம்பாகவோ இல்லாமல் இருந்தால் சரி!

கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடம் நடந்த பின் சாலையை வந்தடைந்து விட்டான். அப்பாடா, ஏதாவது ஒரு வாகனம் கிடைக்காதா? சட்டை pocketஐ தொட்டு பார்த்தான். முந்தைய இரவு தேனீர் அருந்தி விட்டு மீதி இருந்த பணம் 4 ரூபாய் இருந்தது. சரி, வந்தது வரட்டும் என்று சாலையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு 35 நிமிடங்கள் கடந்த பின் ஒரு கிராமத்தை வந்தடைந்தான்.

அதற்குள் மணி 4.30 ஆகியிருந்தது. அங்கு பார்த்தால் ஒரு ஆட்டோ தென்பட்டது. ஆட்டோவினுள் அதன் ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். சரி, இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அவனை ராவ் தூக்கத்திலிருந்து எழுப்பினான். "எப்படியாவது என்னை பூனா இரயில் நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடு" என்று அந்த ஓட்டுனனிடம் ராவ் கெஞ்சினான். ஆட்டோகாரன் உடனே எழுந்து ராவை ஏற இறங்க பார்த்தான். "சரி சரி, இன்று நமக்கு வேட்டைதான், வசமாக கிராக்கி சிக்கியிருக்கிறது" என்று நினைத்திருப்பான் போல். ஒரு ஊதுபத்தியை ஏறி ஆட்டோவினுள் இருந்த ஷிர்டி சாய்பாபா படத்துக்கு முன் ஏற்றிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஒரு 15 நிமிடத்துக்குள் பூனா நகரம் வந்து விட்டது.

வீடுகள் எல்லாம் தெரிகின்றன. ஆனால் இரயில் நிலையம் தான் வரவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டிக்கொண்டு பூனா நகரத்தையே வலம் வந்தான். ஒரு வேளை இந்த ஓட்டுனன் நம் சென்னை ஆட்டோகாரன் எவனுக்காவது சொந்தக்காரனாக இருந்திருப்பானோ? கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு பூனா இரயில் நிலையம் வந்தே விட்டது. இப்போது தானே பிரச்னையே ஆரம்பமாக போகிறது! ஆட்டோவிலிருந்து இறங்கிய ராவ் ஓட்டுனனிடம் தன்னிடம் இருந்த 4 ரூபாயை கொடுத்து விட்டு "இதோ பாருப்பா, என்னிடம் இருக்கும் பணம் இவ்வளவுதான். தலைகீழாக புரட்டி போட்டாலும் இதற்கு மேல் ஒரு பைசா கூட கிடையாது. என்னுடைய suitcase தொலைந்து விட்டது" என்று அவனுடைய சட்டை மற்றும் pant pocket அனைத்தையும் காண்பித்தான்! ஆட்டோக்காரனுக்கு வந்ததே கோபம். ராவை தர்ம அடி அடிக்காத குறை தான்! "வந்து சேந்தான் பார் சாவு கிராக்கி" என்று சென்னை செந்தமிழில் நமது ஆட்டோக்காரர்கள் திட்டுவது போல் மராத்தியில் திட்டி தீர்த்தான்.

ஒரு வழியாக பூனா இரயில் நிலையத்துக்குள் நுழைந்து நேராக Station Masterன் அறைக்கு சென்றான். நடந்தவை அனைத்தையும் கூறி "என்னிடம் சல்லி காசு கூட கிடையாது. நீங்கள் தான் எப்படியாவது எனக்கு ஊர் போய் சேர உதவ வேண்டும்" என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட station master, பெட்டியின் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் தன் மேஜைக்கு அடியிலிருந்து ஒரு suitcaseஐ தூக்கி காண்பித்து "உன் suitcase இது தானா பார்" என்றார்.

ராவுக்கு இன்ப அதிர்ச்சி. காணாமல் போன பெட்டி கிடைத்து விட்டது! ராவ் பூனாவுக்கு ஒரு இரயிலில் வந்தான் இல்லையா? அவன் பயணம் செய்த அந்த இரயில் பெட்டியை கழற்றி விட்டு மீதி இரயில் பம்பாய் நோக்கி சென்று விட்டிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம், ஆந்திராவில் இருந்து வந்த இந்த இரயில் பெட்டிக்கு இது தான் கடைசி நிறுத்தம். இந்த பெட்டியை கழற்றி விட்டவுடன் அதை சுத்தம் செய்வதற்காக இரயில் ஊழியர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த suitcase அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை station masterஇடம் கொடுத்திருக்கிறார்கள்.

என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? ராவினுடைய விதி அவனுக்கு அந்த suitcase பெட்டி கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டி மட்டுமா கிடைத்தது- மறக்க முடியாத ஒரு அனுபவமும் அல்லவா கிடைத்தது?

9 comments:

கோவி.கண்ணன் said...

//என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? //

ஆட்டோகாரனை தேடிப் பிடித்து மீதம் பணத்தைக் கொடுத்தாரா இல்லையா ?

madrasthamizhan said...

அதற்குள் விடிந்து விட்டிருந்ததால் ஆட்டோக்காரன் வேறு சவாரிக்காக கிளம்பி விட்டான். பேராசை பெரு நஷ்டம்? எனது நண்பன், தான் அடி வாங்காமல் தப்பித்தோமே என்று சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்.

டக்ளஸ் said...

இப்ப‌ சூரத்துலயா இருக்கீங்க..?
நானும் சூரத்துலதான் இருக்கேன்..!
எந்த கம்பெனியில் வேலை செஞ்சீங்க!

madrasthamizhan said...

வருகைக்கு நன்றி டக்ளஸ். நான் 11 வருடங்களுக்கு முன்பே சூரத்தை விட்டு சென்று விட்டேன். இப்போது செளதியில் வேலை செய்கிறேன்.

அ.நம்பி said...

ஏறத்தாழ ஒரு திங்களுக்குப் பிறகு எழுதினாலும் நண்பரின் நல்ல அனுபவத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

madrasthamizhan said...

வருகைக்கு நன்றி, நம்பி ஐயா.

Manaswini said...

எனக்கும் படித்து முடித்தவுடன் ஆட்டோக் காரன் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தான் தோன்றியது.ஆமாம்ஏன் இவ்வளவு நீண்ட break?

madrasthamizhan said...

வருகைக்கு நன்றி மனஸ்வினி. ஆட்டோக்காரன் பாவம்தான். ஆனால் என்ன செய்வது? யோக்கியமானவாக இருந்திருந்தால் நேராக இரயில் நிலையத்துக்கு வண்டியை கொண்டு வந்திருப்பான் இல்லையா? வெளியூர்காரன் என்று தெரிந்து கொண்டே பூனாவை சுற்றி காண்பித்திருக்கிறான்.நல்ல வேளை, பெட்ரோல் விலை ஏறுவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது!

அலுவலகத்தில் ஆணி பிடுங்குகிற வேலை தான். ஆனால் இந்த முறை கொஞ்சம் ஆணிகள் அதிகமாகிவிட்டன, அதனால் தான் நீ...ண்ட இடைவெளி!

vijay said...

uzhaitha kaasu veenagathu... nalla sambavam moolam inoru murai nirupanamaanathu...

ellarukum officela oray mathiri velai poguthunu nenaikum bothu oru chinna aruthal....

inga vacation edukarathula irukara problem pathi oru article podunga guru.....