நான் கூறப்போகும் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது அல்ல, சூரத்தில் என்னுடன் பணி புரிந்த நண்பன் ராவுக்கு ஏற்பட்டதாகும். இருந்தாலும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலே படியுங்கள்.
1990வது வருடம். ராவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் அருகில். அப்போதெல்லாம் சென்னையிலிருந்து சூரத்துக்கு நேரிடையாக செல்லும் ஒரே இரயில் நவஜீவன் எக்ஸ்ப்ரெஸ் என்ற வண்டி தான். ஒரே ஒரு வண்டி என்பதால் அதில் பல நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டும், இல்லயென்றால் உறுதியான இருக்கை கிடைக்காது. அதனால் குறிப்பாக ஆந்திராவிலிருந்து வரும் பலர் பூனா வரை ஒரு இரயிலில் வந்து பிறகு அங்கிருந்து வடக்கே செல்லும் வேறு இரயில்கள் மூலம் சூரத்துக்கு வருவது வழக்கமாக இருந்தது.
சூரத் செல்பவர்களுக்கு பூனா ஒரு transit இரயில் நிலையமாகதான் இருந்தது. ராவும் ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவ்வாறே பூனாவுக்கு செல்லும் இரயிலில் வந்தான். அவன் வந்த இரயில் வழக்கம் போல தாமதமாக பூனாவுக்கு வந்து சேர்ந்தது. அப்போது இரவு 3 மணி இருக்கும். பொதுவாக பூனாவில் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் காத்திருந்தபின் சூரத்துக்கு செல்லும் இரயில் வரும். இந்த இரயில் வேறு எங்கிருந்தோ வருகிறது. இதில் ஏதாவது ஒரு பெட்டியில் ஏறி உட்கார்ந்தால் சூரத் சென்றடைவதற்கு ஒரு 4 அல்லது 5 மணி நேரம் ஆகும். (இப்போது route எல்லாம் மாற்றி விட்டார்கள், நான் கூறுவது 1990ல்).
ராவ் பூனா வந்து சேர்வதற்கு தாமதமாகி விட்டது என்று கூறினேன் அல்லவா? அவனுடைய அதிர்ஷ்டம் சூரத் வழியாக அஹமதாபாத் செல்லும் இரயில் மற்றொரு தடத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அவசரம் அவசரமாக இறங்கி சூரத் செல்லும் இரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டான். இரயிலும் கிளம்பி விட்டது. அப்பாடா, அவன் ஏறிய பெட்டியில் உட்கார இடம் கிடைத்து விட்டது. காலையில் ஊர் போய் சேர்ந்து விடலாம். இரவு 3 மணி என்பதால் மற்ற பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். இரயில் கிளம்பி ஒரு 10 அல்லது 15 நிமிடம் தான் ஆகியிருக்கும். தான் கொண்டு வந்த suitcase பெட்டியை எங்காவது ஜாக்கிரதையாக வைக்கலாம் என்று எண்ணினால், திடீரென்று ஒரு அதிர்ச்சி! அப்போது தான் suitcase பெட்டியை தவற விட்டு விட்டதை உணர்ந்தான்! அடக்கடவுளே! அதில் தானே அவனுடைய துணி மணிகள் எல்லாமே உள்ளன. இரவு படுக்க போகும் முன் அவனுடைய purseஐ கூட அதில் தானே வைத்திருந்தான் (pantல் purseஐ வைத்திருந்தால் ஜேப்டிக்காரர்கள் எடுத்து விடுவார்கள் என்று பயந்து இவன் அதை suitcase பெட்டியில் வைத்துள்ளான். எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா போல தான்!) இப்போது அதுவும் கோவிந்தா! என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு உந்துதலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துவிட்டான். இரயிலும் சிறிது தூரம் சென்ற பின் நின்று விட்டது. அவசரம் அவசரமாக இரயிலில் இருந்து கீழே குதித்து பூனா இரயில் நிலையம் நோக்கி இருப்பு பாதை ஓரமாக நடக்க தொடங்கினான். இரவு நேரம் என்பதால் ஒரே கும்மிருட்டு. ஒரு பக்கம் பணமும் suitcaseம் தொலைந்த வருத்தம். மற்றொரு பக்கம் தூக்க கலக்கம் / அசதி. சரி இப்படியே இருப்பு பாதை வழியாக நடந்து போனால் பூனா சென்றடைவதற்குள் விடிந்து விடுமே என்ன செய்வது?
இரவு நிசப்தத்தில் எங்கோ தூரத்தில் வாகனங்கள் செல்லும் சத்தம் கேட்டது. சரி, அங்கு ஏதோ சாலை இருக்கும் போலிருக்கிறது. லாரியோ ஏதாவது வாகனமோ கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டு பூனா இரயில் நிலையம் வரை சென்று விடலாம் என்று இருப்பு பாதையிலிருந்து திசையை மாற்றி சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கும்மிருட்டில் எங்கே நடந்தால் என்ன - மிதிப்பது நாயின் வாலாகவோ அல்லது பாம்பாகவோ இல்லாமல் இருந்தால் சரி!
கிட்டத்தட்ட ஒரு 25 நிமிடம் நடந்த பின் சாலையை வந்தடைந்து விட்டான். அப்பாடா, ஏதாவது ஒரு வாகனம் கிடைக்காதா? சட்டை pocketஐ தொட்டு பார்த்தான். முந்தைய இரவு தேனீர் அருந்தி விட்டு மீதி இருந்த பணம் 4 ரூபாய் இருந்தது. சரி, வந்தது வரட்டும் என்று சாலையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு 35 நிமிடங்கள் கடந்த பின் ஒரு கிராமத்தை வந்தடைந்தான்.
அதற்குள் மணி 4.30 ஆகியிருந்தது. அங்கு பார்த்தால் ஒரு ஆட்டோ தென்பட்டது. ஆட்டோவினுள் அதன் ஓட்டுனர் தூங்கிக்கொண்டிருந்தான். சரி, இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அவனை ராவ் தூக்கத்திலிருந்து எழுப்பினான். "எப்படியாவது என்னை பூனா இரயில் நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிடு" என்று அந்த ஓட்டுனனிடம் ராவ் கெஞ்சினான். ஆட்டோகாரன் உடனே எழுந்து ராவை ஏற இறங்க பார்த்தான். "சரி சரி, இன்று நமக்கு வேட்டைதான், வசமாக கிராக்கி சிக்கியிருக்கிறது" என்று நினைத்திருப்பான் போல். ஒரு ஊதுபத்தியை ஏறி ஆட்டோவினுள் இருந்த ஷிர்டி சாய்பாபா படத்துக்கு முன் ஏற்றிவிட்டு ஆட்டோவை கிளப்பினான். ஒரு 15 நிமிடத்துக்குள் பூனா நகரம் வந்து விட்டது.
வீடுகள் எல்லாம் தெரிகின்றன. ஆனால் இரயில் நிலையம் தான் வரவில்லை. சந்து பொந்துகளில் எல்லாம் ஓட்டிக்கொண்டு பூனா நகரத்தையே வலம் வந்தான். ஒரு வேளை இந்த ஓட்டுனன் நம் சென்னை ஆட்டோகாரன் எவனுக்காவது சொந்தக்காரனாக இருந்திருப்பானோ? கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரத்துக்கு பிறகு பூனா இரயில் நிலையம் வந்தே விட்டது. இப்போது தானே பிரச்னையே ஆரம்பமாக போகிறது! ஆட்டோவிலிருந்து இறங்கிய ராவ் ஓட்டுனனிடம் தன்னிடம் இருந்த 4 ரூபாயை கொடுத்து விட்டு "இதோ பாருப்பா, என்னிடம் இருக்கும் பணம் இவ்வளவுதான். தலைகீழாக புரட்டி போட்டாலும் இதற்கு மேல் ஒரு பைசா கூட கிடையாது. என்னுடைய suitcase தொலைந்து விட்டது" என்று அவனுடைய சட்டை மற்றும் pant pocket அனைத்தையும் காண்பித்தான்! ஆட்டோக்காரனுக்கு வந்ததே கோபம். ராவை தர்ம அடி அடிக்காத குறை தான்! "வந்து சேந்தான் பார் சாவு கிராக்கி" என்று சென்னை செந்தமிழில் நமது ஆட்டோக்காரர்கள் திட்டுவது போல் மராத்தியில் திட்டி தீர்த்தான்.
ஒரு வழியாக பூனா இரயில் நிலையத்துக்குள் நுழைந்து நேராக Station Masterன் அறைக்கு சென்றான். நடந்தவை அனைத்தையும் கூறி "என்னிடம் சல்லி காசு கூட கிடையாது. நீங்கள் தான் எப்படியாவது எனக்கு ஊர் போய் சேர உதவ வேண்டும்" என்று கூறினான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட station master, பெட்டியின் அடையாளங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார். பிறகு, ஒரு புன்சிரிப்புடன் தன் மேஜைக்கு அடியிலிருந்து ஒரு suitcaseஐ தூக்கி காண்பித்து "உன் suitcase இது தானா பார்" என்றார்.
ராவுக்கு இன்ப அதிர்ச்சி. காணாமல் போன பெட்டி கிடைத்து விட்டது! ராவ் பூனாவுக்கு ஒரு இரயிலில் வந்தான் இல்லையா? அவன் பயணம் செய்த அந்த இரயில் பெட்டியை கழற்றி விட்டு மீதி இரயில் பம்பாய் நோக்கி சென்று விட்டிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம், ஆந்திராவில் இருந்து வந்த இந்த இரயில் பெட்டிக்கு இது தான் கடைசி நிறுத்தம். இந்த பெட்டியை கழற்றி விட்டவுடன் அதை சுத்தம் செய்வதற்காக இரயில் ஊழியர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் இந்த suitcase அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை station masterஇடம் கொடுத்திருக்கிறார்கள்.
என்ன நண்பர்களே, உழைத்து சம்பாதித்த பொருளை என்றுமே நம்மிடமிருந்து யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமோ? ராவினுடைய விதி அவனுக்கு அந்த suitcase பெட்டி கிடைக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. பெட்டி மட்டுமா கிடைத்தது- மறக்க முடியாத ஒரு அனுபவமும் அல்லவா கிடைத்தது?
Showing posts with label இரயில் பயணங்களில்.... Show all posts
Showing posts with label இரயில் பயணங்களில்.... Show all posts
Tuesday, 21 April 2009
Wednesday, 21 May 2008
மீண்டும் இரயில் பயணங்களில்-II
1998ம் ஆண்டு. செளதி அரேபியாவில் எனக்கு வேலை கிடைத்ததால் பம்பாயில் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டேன். வீட்டு சாமான்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு மீதம் உள்ள சில சாமான்களை இரயிலிலேயே சென்னைக்கு சரக்கு பெட்டியில் கொண்டு செல்ல முடிவு செய்தேன். இது எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.
என்னுடைய போதாத காலம் முன்பதிவு கிடைக்கவில்லை. யாரோ கூறினார்கள் என்று ஒரு 'ஏஜெண்ட்டை' பிடித்தேன். ஒரு பயணச்சீட்டுக்கு 150 ரூபாய் மேலே கொடுத்தால் உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைத்துவிடும் என்று கூறினான். எனக்கோ கட்டாயம் அந்த தேதியில் செல்ல வேண்டிய அவசரம். 'சரி' என்று ஒப்புக்கொண்டு பணத்தை அவனிடம் அழுதேன். அவனோ அடுத்த நாளே 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் உள்ள பயணச்சீட்டை என்னிடம் கொடுத்து விட்டு 'நீங்கள் புறப்படும் நாளன்று இரயில் நிலையத்தில் கண்டிப்பாக இது உறுதி செய்யப்பட்டு விடும்' என்று கூறினான். நான் அதை வேறு நம்பி தொலைத்தேன்.
பம்பாயில் நுழையும் எல்லா சாமான்களுக்கும் 'octroi' என்ற கலால் வரி கட்ட வேண்டியிருந்தது. நானோ புதிய பம்பாயில் இருந்தேன். இரயில் நிலையமோ பம்பாயில் உள்ள வீ.டீ.யில் இருந்தது. சாமான்களை எல்லாம் ஒரு லாரியில் போட்டு விட்டு நான் மட்டும் லாரியின் முன்னே எனது 'ஸ்கூட்டரை' ஓட்டிக்கொண்டு சென்றேன் (அதையும் லாரியில் போட்டால் கலால் அதிகமாக கட்ட வேண்டி வருமே என்றுதான்!). பம்பாயில் நுழைந்த உடனேயே வழக்கம் போல 100 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டர் பின்னால் வந்த லாரியை 'ஆக்ட்ராய்' காரன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். பிறகு, ஸ்கூட்டரை லாரியில் ஏற்றி நான் லாரியின் முன் இருக்கையில் வீ.டீ. வரை வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகுதான் எனது போதாத காலமே ஆரம்பித்தது!
இரயில்வே சட்டப்படி ஸ்கூட்டரை சரக்கு பெட்டியில் ஏற்ற வேண்டுமென்றால் அதிலுள்ள பெட்ரோலை முதலில் முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டுமாம். அதற்கு பிறகுதான் அதை வைக்கோல் வைத்து pack செய்து சரக்கு பெட்டியினுள் ஏற்றுவார்களாம். அடக்கடவுளே! இதை ஏன் யாரும் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. இஞ்ஜின் உள்ளே உள்ள பெட்ரோலை எப்படி நான் வெளியே எடுப்பேன்? இதை சொன்ன இரயில்வே ஊழியன் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் கூறிவிட்டான். வேறு என்ன, எல்லாம் பணம் தான்! நான் உள்ளூர அழுதுகொண்டே அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன். ஒரு வழியாக சரக்கு பெட்டியில் ஸ்கூட்டரையும் மற்ற வீட்டு சாமான்களையும் ஏற்றி விட்டு நான் எனது இருக்கைக்கு சென்றேன்.
எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது இருக்கை இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. 'ஏஜெண்ட்' என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருந்தான். என்ன செய்வது, ஊருக்கு போய்தானே ஆக வேண்டும். இரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தன. கூட்டம் பின்னி எடுத்து விட்டது. சரி, வந்தது வரட்டும் என்று நான் இரயிலில் ஏறிக்கொண்டேன்.
இரயில் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார்.அவரை சுற்றி ஒரு பட்டாளமே மொய்த்து கொண்டிருந்தது. நானும் முண்டி அடித்துக்கொண்டு விடாப்பிடியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கெஞ்சு கெஞ்சென்று அவரை விடாமல் துளைத்து எடுத்து விட்டேன். கடைசியில், பயணச்சீட்டு விலையை விட இரண்டு மடங்கு கொடுத்தால் உட்கார மட்டும் இடம் கொடுக்கும்படி செய்து தருவதாக கூறினார். இது RAC இருக்கை என்றும் மிகவும் கஷ்டப்பட்டு என் மேல் பரிதாபப்பட்டு கொடுப்பதாகவும் வேறு கூறினார். என்ன செய்வது? வேறு வழியில்லாமல் பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் ஒரு இருக்கை எண்ணை கொடுத்து அங்கே சென்று உட்காரும்படி கூறினார். அந்த எண்ணுக்கு சென்றால், என்னை போலவே இன்னும் மூன்று பேர் அதிலே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். படுபாவி, அனைவரிடமும் அவன் இது போல வசூல் செய்திருக்கிறான்! Sideல் இருக்கும் இரண்டு இருக்கைகளை மடக்கி நாங்கள் 4 பேரும் உட்கார்ந்து கொண்டே அன்றைய பொழுது முழுவதையும் கழித்தோம்.
வழியில் அரவாணி தொல்லை வேறு இருந்தது. ஒருத்தி என் முன்னே வந்து 10 ரூபாய் கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் இருந்து நகர மாட்டேன் என்று கூறினாள். நானோ, ஏற்கனவே நொந்து போயிருந்தேன்.
கோபத்தில்,"உனக்கு ஒரு பைசா கூட கிடையாது, முதலில் இங்கிருந்து போ" என்று கத்தி விட்டேன். அவ்வளவுதான், இவள் எங்கிருந்தோ ஒரு அரவாணி கூட்டத்தையே கொண்டு வந்து விட்டாள். எனக்கு பயமாகி விட்டது. ஒவ்வொறுத்தியும் WWF வீராங்கனை போல இருந்தாள். ஏதாவது ஏடாகூடமாக ஆவதற்கு முன் அவளிடம் ஒரு பத்து ரூபாய் தாளை கொடுத்தேன். அவளோ, வெற்றிக்களிப்புடன் 'இதை முதலிலேயே கொடுத்திருக்கலாமில்ல' என்று என் மோவாயில் ஒரு இடி இடித்து விட்டு சென்றாள். அப்பாடா, பிழைத்தேன்!
இரவு வந்தது. பகல் முழுவதும் நான்கு பேரும் உட்கார்ந்து கொண்டே பயணம் செய்ததால் உடம்பெல்லாம் வலி. இரவு 11.30 மணிக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு செய்தி தாளை கீழே விரித்து அதற்கு மேலேயே படுத்துக்கொண்டேன். படுத்த உடனே தூக்கம் தான். கண்களை மூடி உறங்கி விட்டால் ஏழை, பணக்காரன், பொறியாளன், பிச்சைக்காரன் எல்லோரும் ஒன்று தானோ! கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மிக பெரிய வரம் இந்த தூக்கம். இதில் நமது போலி கெளரவங்கள் அனைத்தும் அடி பட்டு போய் விடுகின்றன அல்லவா?
மறு நாள் பகல் முழுவதும் பயணம் செய்து பல மணி நேரம் தாமதத்துக்கு பிறவு ஒரு வழியாக இரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 1.30. உடம்பு முழுவதும் ஒரே வலி. சரி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். இப்போது சரக்கு பெட்டியிலிருந்து ஸ்கூட்டரை வெளியே எடுத்து விட்டால் போதும் என்று நினைத்தேன்.
சக பயணிகள் அனைவரும் சென்று விட்டனர். நான் மட்டும் இரயிலின் கடைசியில் உள்ள சரக்கு பெட்டிக்கு நடந்து சென்றேன். அங்கே பார்த்தால் உள்ளே இருந்த சாமான்களை இரயில்வே ஊழியர்கள் சரமாரியாக பிளாட்பாரத்தில் விசிறி எரிந்து கொண்டிருந்தார்கள் உடையக்கூடிய சாமான்கள் (fragile) எத்தனையோ! ஒருவன் தரதரவென்று என்னுடைய ஸ்கூட்டரை standடுடன் இழுத்துக்கொண்டிருக்கும் போதே ந்ல்ல வேளையாக நான் அங்கு சென்று விட்டேன். என்னை பார்த்தவுடன் திடீரென்று அங்கு இருந்த ஒரு 5 இரயில்வே ஊழியர்களும் மிக மிக பவ்யமாக என்னுடைய ஸ்கூட்டரை மிக மெதுவாக பூ போல எடுத்து பிளாட்பாரத்தில் வைத்தனர். பிறகு ஒருவன், "சார், நீங்கள் முதலில் counterக்கு சென்று ரசீதை வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றான். கவுண்ட்டரோ இரயில் நிலையத்தின் வாசலில் இருந்தது. மீண்டும் இரயிலின் கடைசியில் இருந்து பிளாட்பாரம் முழுதும் நடந்து கவுண்ட்டரை தேடிக்கொண்டு வந்தடைந்தால் அங்கே ஆள் இல்லை. ஒரு 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நான் மீண்டும் லோ லோ வென்று பிளாட்பாரம் முழுவதும் நடந்து சரக்கு பெட்டியை வந்தடைந்தேன்.
என்ன ஆச்சரியம், அந்த 5 ஊழியர்களும் அதே இடத்தில் இன்னும் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். என்னிடம் முதலில் பேசியவன், "சார், நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க. பணத்தை பாய்ச்சிக்கிட்டே போங்க, எல்லாம் சரியா ஆய்டும்" என்றான். 5 பேருக்கு 700 ரூபாய், கவுண்ட்டரில் ரசீது எழுதுபவனுக்கு 200, trolley கொண்டு வருபவனுக்கு 100 என்று மொத்தம் ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டான். அதற்கு பிறகுதான் வேலையே ஆரம்பித்தது. ஒரு வழியாக நொந்து நூடுல்ஸாகி வீடு வந்து சேர அதிகாலை 4 மணி ஆகிவிட்டது.
'மணல் கயிறு' படத்தில் விசு, 'இனிமேல் வாழைப்படம் சாப்பிடுவியா, சாப்பிடுவியா' என்று தூணில் தலையை முட்டிக்கொள்வாரே, அது போல நானும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது!
இதில் வேடிக்கை பாருங்கள். பணம் வாங்கிய யாருக்குமே தாம் ஒரு தவறான காரியத்தை செய்கிறோம் என்ற ஒரு உணர்வே இல்லாமல் இருந்தார்கள். மனசாட்சி என்பதெல்லாம் வெறும் பொய்யா? நல்ல வேளை என்னிடம் பணம் இருந்தது. பிழைத்தேன். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தை இழந்தேன், ஆனால், இப்படி ஒரு வித்யாசமான அனுபவத்தை பெற்றேன்.
Subscribe to:
Posts (Atom)