Monday, 19 August 2013

கூழுக்கும் ஆசை

ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை  நமக்கு அதன் மதிப்பு  தெரியாது என்பது எவ்வளவு உண்மை!

வேறு ஒன்றுமில்லை. கருகருவென்று வீரப்பன் அளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு ஓரளவுக்கு பெரிய  மீசை இருந்தது. அதில் தொங்கு மீசை வேறு விசேஷம். ஒரு மனிதன் எதை  வேண்டுமானாலும் விட்டு கொடுத்து  விடலாம். ஆனால் மீசையை விட்டு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய தியாகம்! நான் போற்றி பாதுகாத்து வந்த பொக்கிஷத்தின் மேல் எந்த சிருக்கனுடைய (சிருக்கிக்கு ஆண் பால் என்ன?) கண் பட்டதோ தெரியவில்லை. கண் பட்ட இடத்தில் புண் பட்டது போல, ரோஜா பூந்தோட்டத்தின்  நடுவில் முளைத்த கள்ளிச்செடி போல திடீரென்று ஒரு வெள்ளை முடி முளைத்து விட்டது.

Who is the white sheep என்று அலறி அடித்து கொண்டு கத்திரியால் லாவகமாக வெட்டினேன். சோதனை மேல் சோதனையாக சில வாரங்களில் மீண்டும் அந்த காளான் முளைத்து. அதுவும் அதே இடத்தில். பட்ட இடத்திலேயே பட்டால் ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவது? மீண்டும் எடு கத்திரியை. இப்படியே கத்திரிக்கும் மீசைக்கும் நடந்த போட்டா போட்டியில்  ஒரு கட்டத்தில் ஒற்றுமை ஓங்குக என்று ஒன்றுக்கு பதில் இரண்டு மூன்று என்று வெள்ளி திரிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

போகிற போக்கை பார்த்தால் உதட்டுக்கு மேல் ஒரு வெள்ளை புரட்சியே ஏற்பட்டு விடும் போல இருந்தது. ஒரு நாள் தெரியாத்தனமாக சவரம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன்.  எதேச்சையாக கண்ணாடியில் முகத்தை பார்த்தால் தாடியிலும் லேசாக புற்றீசல் போல வெள்ளை ஒற்றர்கள் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். Disaster Management என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீக்கிரமாக ஏதாவது  செய்தே ஆக  வேண்டும். பேரிடர் என்பது மனிதனுக்கு மீண்டும் மீண்டும் வந்தால் என்னதான் செய்வது? இப்படி நொந்து நூடுல்ஸாகி இருந்த போது தான் 'பொறுத்தது போதும் போர் வாளை எடு' என்று எனது மகள் எந்த ஆண் சிங்கத்திடமும் கேட்க கூடாத அந்த வசனத்தை கூறி விட்டாள்.

நான் இத்தனை ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து வளர்த்த, என் உயிரினும் மேலான, ரத்தத்தின் ரத்தமான, உடன்பிறப்பான, எனது ஆசை மீசையை எடுத்து விடுமாறு கூறினாள். உள்ளம் பதை பதைத்தது. மீசை துடி துடித்தது. "என்ன சொன்னாய்?" என்று சிவாஜி கணேசன் மாதிரி கர்ஜிக்க முற்பட்ட போது மகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டு தங்கமணி "இப்படி தாண்டி என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் தொங்கு மீசையோட போட்டோவை அனுப்பினார். நான் அப்பவே reject செய்திருக்கணும்" என்று சந்தடி சாக்கில் சிந்து பாடினாள்.

"அப்பா, ப்ளீஸ் அப்பா" என்று எனது மகள் கெஞ்சிய பொழுது அதன் பின் விளைவுகள் எனக்கு தெரியவில்லை. முன் விளைவுகள் தான் தெரிந்து விட்டதே! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை Dye. வேறு வழியே இல்லை. விழித்தாலும் மழித்தாலும் என்னுடைய முகம் என்னுடையது தான். அதனால் அந்த சுபயோக சுபதினத்தில் - சொல்லவே மனம் துடிக்கிறது -  எனதருமை மீசையை எடுத்து விட்டேன்.

பிரளயம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல் பிடுங்கிய பாம்பு, கொடுக்கை பிடுங்கிய தேள், வாலறுந்த நரி (ச்சீ வேறு உவமையே கிடைக்கவில்லையா) அது போல தான் மீசை இல்லாத ஆண் என்பதை அதை எடுத்த அடுத்த கணம் உணர்ந்தேன். என்னை பார்த்த என் பெண்ணின் முதல் reaction - தாங்க முடியாமல் சிரித்து விட்டாள். அவள் சிரிக்க சிரிக்க எனக்கு கோபமும் அழுகையும் பொத்திக்கொண்டு வந்தது. இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வெளியே கடைக்கு சென்றால் பின்னால் நாய் துரத்துவது போல ஒரு பிரமை. அலுவலகத்துக்கு சென்றால் அனைவரும் முதலில் ஒரு மாதிரி என் முகத்தை பார்த்தார்கள். எனக்கு பின்னால் அவர்கள் சிரித்தது என் காதுகளில் துல்லியமாக கேட்டது. நான் என்னதான் செய்வது? வடிவேலு மாதிரி 'இருக்கிறவன் வெச்சுக்கிறான், இல்லாதவன் வரஞ்சுக்கிறான்' என்று பென்சிலால் மீசையை வரைந்து கொள்ளவா முடியும்? இல்லை டோப்பாவா வைத்து கொள்ள முடியும்? நெருங்கிய நண்பர்கள் "பார்க்க சகிக்கலைடா" என்று கலாய்த்தார்கள். சிலர் "மோசமா இருந்த மூஞ்சி இப்ப படு மோசமா இருக்குடா" என்றார்கள்.

வீட்டுக்கு வந்து டி.வியை போட்டால் என்னை வெறுப்பேற்றவே போட்ட மாதிரி வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தூர்தர்ஷனில் ஓடிக்கொண்டிருந்தது. மீசை துடிதுடிக்க சிவாஜி வசனம் பேசிக்கொண்டிருந்தார். செய்திகள் பார்க்கலாம் என்று சேனலை மாற்றினால் இலங்கை ஜனாதிபதி ஏதோ பேசி கொண்டிருந்தார். அட, இந்த சிங்களவர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லையா? ஒபாமாவுக்கும் தான் மீசை இல்லை. பரவாயில்லை. எல்லா ப்ரொபஸர்களும் தாடி வைத்து கொள்வார்கள் இல்லையா, அது போல உலகில் பெரிய மனிதர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

 நாட்கள் செல்ல செல்ல எல்லோருக்கும் எனது புதிய முகம் பழகிவிட்டது. இப்போதெல்லாம் முகத்தை சவரம் செய்யாமல் இருந்தால் தான் நோயாளி மாதிரி இருக்கிறது. ஆகையால் நண்பர்களே, மீசை மேல் ஆசை வைக்காமல் ஓசைப்படாமல் மழித்துவிடுங்கள். உயிரா போச்சு....? 

10 comments:

Anonymous said...

வணக்கம்
ஆணாக இருந்தால் மீசைதான் அவனுக்கு ஒரு கம்பீரத்தை கொடுக்கும் அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் முயற்சி செய்து பார்ப்போம்
உங்கள் வலைப்பூ பக்கம் வருவது இதுதான் முதல்முறை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...


என்ன செய்யலாம்...?

Expatguru said...

முதல் வரவுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ரூபன்.

Expatguru said...

என்ன செய்யலாமா? அதான் சொல்லிட்டேனே தனபாலன். 'கசாக்' தான், வேறு என்ன? இதே அமெரிக்காவாக இருந்தால் வெள்ளை மீசையே புதிய நாகரிகமாக மாறி "Cool Man" என்று மார் தட்டி கொள்வார்கள். ஹூம் :)

G.M Balasubramaniam said...


”அறிந்த அளவு” பதிவில் உங்கள் கருத்து கண்டு வந்தேன். உங்கள் வருகைக்கு நன்றி. நான் என் இளவயதில் அரும்பு மீசை வைத்திருந்தேன். நாளாவட்டத்தில் வெள்ளிமுடி தலை தூக்கவே முற்றிலும் மழித்து விட்டேன். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. என் மகனுடைய திருமண வீடியோவில் என்னைப் பார்த்து எனக்கே பாவமாக இருந்தது. பிறகென்ன மீசை வளர்க்க ஆரம்பித்து விட்டேன்.இப்போது மீசை இல்லாமல் இருப்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நன்றாக நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

Expatguru said...

நன்றி ஐயா

charu said...

hello. very nice blog. Laughed my heart out.

Expatguru said...

நன்றி சாரு.

smcube said...

"இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?" என்ற வார்த்தைப் பிரயோகத்தின் அர்த்தம் தேடி Google இல் உலா வந்த போது உங்களது இந்த பதிவை காணக்கிடைத்தது. மிகவும் சுவாரஷ்யமாக இருந்தது. :)

Expatguru said...

நன்றி smcube