Monday, 5 August 2013

ஒரு வார்த்தை

மனித இனத்தின்  எழுச்சியும்  வீழ்ச்சியும் ஒரு வார்த்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று  நினைக்கிறேன். "அவன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். அது தான் தாங்கி கொள்ள முடியவில்லை". இப்படி எத்தனை பேர் எத்தனை முறை கூறி இருப்பார்கள்? ஒரு வார்த்தையினால் எத்தனை உறவுகள் முறிந்திருக்கும்? எத்தனை மாமன்னர்கள் போருக்கு சென்றிருப்பார்கள்?

காதலன் காதலியின் ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். மனதில் அடிபட்டவன் ஆதரவாக  ஆறுதலான ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறான். தேர்வு எழுதிய மாணவன் ஆசிரியரின் மதிப்பீடு என்ன என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். ஆஸ்பத்திரியில் மருத்துவரின் ஒரு வார்த்தைக்காக நோயாளி  ஏங்குகிறான்.  ஜோதிடரிடம்  ஜாதகத்தை கொடுத்த பெண்ணை பெற்றவன் 'பொருந்தியது' என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். வாழ்க்கையில் இப்படி எல்லாமே ஒரு வார்த்தை தானோ?


நந்தா சக்கரவர்த்தி  அவதூறாக ஒரு வார்த்தை சொல்லி  அவமானப்படுத்தி விட்டான்  என்றதால்  சாணக்கியர் என்ற அந்தணர் சபதம் எடுத்து சந்திரகுப்த மெளரியாவுடன் கை கோர்த்து நந்தா சாம்ராஜ்யத்தையே அழித்து விட்டார். அபிராமி பட்டர் அமாவாசைக்கு பதில் தவறாக பெளர்ணமி என்று ஒரு வார்த்தை கூறியதால் அபிராமி அந்தாதி என்ற அருமையான பொக்கிஷம் பிறந்தது. சிவபெருமானின் தலையை பார்த்ததாக ஒரு வார்த்தை பொய் சொன்னதால் பிரமனுக்கு உலகில் கோவிலே இல்லாமல் போய்  விட்டது.

 பல வருடங்களுக்கு முன் எனது உறவுக்காரன் ஒருவன் (பெயர் வேண்டாமே) பட்ட படிப்பை முடித்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்த போது அவனது தந்தை சொற்களால் அவனை மிகவும் புண்படுத்தி கொண்டே  வந்தார்.ஒரு கட்டத்தில் 'தண்டச்சோறு" என்று ஒரு வார்த்தை திட்டி விட்டார். அவ்வளவுதான். அவனால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை.
சான்றிதழ்களை எடுத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டான். கண் போன போக்கிலே கால் போக, கால் போன போக்கிலே மனமும் போக வீதியில் நடந்து கொண்டிருந்த போது அவன் கண்களில் ஒரு மிக பெரிய விளம்பரம் தென்பட்டது.

 'இந்திய இராணுவம் உங்களை அழைக்கிறது' என்ற வாசகத்தை பார்த்து விட்டு உள்ளே சென்றால் இராணுவத்துக்கு ஆள் எடுத்து  கொண்டிருந்தார்கள். உடனே இவன் தனது பெயரை கொடுக்க இவனது சான்றிதழ்களையும் எடை உயரம் இத்யாதிகளையும் பரிசோதித்து உடனடியாக  சேர்த்துக்கொண்டார்கள்.  அடுத்த இரயிலிலேயே நாகாலாந்துக்கு புறப்பட்டான்.

அவனுடைய அம்மா சில நாட்கள் அழுது பிரண்டாள். அவனது தந்தை 'கோபத்தில் மகனை திட்டி விட்டோமே, எங்கு இருக்கிறானோ' என்று பல நாட்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தார். இராணுவத்தில் இருந்த அவன் சும்மா இருக்காமல் இராணுவ செலவிலேயே post graduation வரை படித்து விட்டான். வீட்டுக்கு கடித போக்குவரத்து கூட வைத்து கொள்ளாமல்  இருந்தான், பல வருடங்களுக்கு பிறகு  அறிவிப்பு இல்லாமல் திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு கிளம்பினான். 'நான் இப்போது தண்டச்சோறு இல்லை அப்பா' என்று தந்தையை பார்த்து கூற வேண்டும் என்று கறுவிக்கொண்டே வந்தான்.

கதவை திறந்த அவனது வயதான தந்தை அவனை பார்த்ததும் சட்டென்று திகைத்து நின்று விட்டார். அவனது தாய் அவனை கட்டி அணைத்துக்கொள்ள தந்தை இப்போது ஒரு வார்த்தை கூட பேச முடியாமல்  கண்ணீர்  விட்டார். அதை பார்த்த இவனது வைராக்கியம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. என்ன இருந்தாலும் தந்தை அல்லவா?  ஒரு பெண் விம்மி அழும் போது வெளி வரும் சோகத்தை விட ஒரு ஆண் மெளனமாக விடும் கண்ணீர் கல்லையும் உருக்க வல்லது. ஒரு வார்த்தை செய்த வினையால் வாழ்க்கையில்தான்  எத்தனை சோகங்கள், எத்தனை மாற்றங்கள்.

மிருகங்களுக்கு இந்த பிரச்னையே இல்லை. அவைகளால் நம்மை போல ஒரு வார்த்தை கூட பேச முடியாது. ஆனால் அவைகளிடம்  பொறாமை,வக்கிரம், வெறுப்பு போன்றவை எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு படைத்து மிருகங்களிடம் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.

ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள்  உருவாகிறார்கள்.அந்த ஒரு வார்த்தையை கூறாததால் இருந்த நண்பர்கள் 'நன்றி கெட்டவன்' என்று கூறி விலகுகிறார்கள். செய்த தவறை ஒப்புக்கொண்டு 'மன்னிக்கவும்' என்று ஒரு வார்த்தை கூறி விட்டால் பல பிரிவுகளை தவிர்த்திருக்க முடியுமே. பல விவாகரத்துகள் இல்லாமல் போயிருக்குமே. பேச்சிலும் மூச்சிலும் 'நான்' என்ற வார்த்தையை தவிர்த்து 'நாம்' என்ற வார்த்தையை உபயோக படுத்தினால் அன்பை வளர்க்கலாமே.


5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள் உருவாகிறார்கள்.

சிறப்பான ஆக்கம் ..!

Expatguru said...

நன்றி இராஜராஜேஸ்வரி !

sury Siva said...

//நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள் உருவாகிறார்கள்//

நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்னும் வள்ளுவனின் வார்த்தைகளும்
நினைவுக்கு வருகின்றன.
உங்கள் பதிவினை சுட்டிக்காட்டிய திரு அப்பா துறைக்கு
முதல் நன்றி.
துரை என்று எழுதுவதிற்கு பதிலாக துறை என்று தவறாக
எழுதிவிட்டேனே என்று நினைத்தேன்.
எல்லா துறைகளிலுமே அப்பனாக விளங்குகிறார் அவர்.

எத்தனை உதாரணங்கள் ஒரு வார்த்தையினால் ஒரு சரித்திரமே
துவங்குகிறது என்பதற்கு ?

எனக்கும் பொருந்துகிறது. சிறிய அளவிலே. !!

நன்றி பல.
சுப்பு தாத்தா.

www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
www.movieraghas.blogspot.com

Expatguru said...

மிக்க நன்றி சுப்பு தாத்தா

G.M Balasubramaniam said...


அன்பின் மெட்ராஸ் தமிழனுக்கு, எப்படி திரு அப்பாதுரையின் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் உங்களை என் பதிவு பார்க்க வைத்ததோ, அதே போல் இன்னொரு பதிவையும் பார்க்க அழைக்கிறேன். காரணம் வார்த்தை என்னும் தலைப்பில் நான் முன்பு எழுதிய பதிவு, இந்த உங்கள் பதிவை நான் வாசித்தவுடன் என் நினைவுக்கு வந்த்து. வாருங்கள் ஐயா
gmbat1649.blogspot.in/2011/09/blog-post_30.html பதிவின் தலைப்பு ‘வார்த்தை’ நன்றி