Monday 2 June 2014

சலாம் பம்பாய்-6

1993ம் வருடம். சூரத்திலிருந்து பம்பாய்க்கு என்னை மாற்றியிருந்தார்கள். (இதற்கான முந்தைய பதிவை இங்கே படிக்கலாம்).

இது ஒரு தற்காலிகமான மாற்றம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். அதனால், சூரத்தில் நான் குடியிருந்த வீட்டை காலி செய்ய சொல்லாமல் புதிய பம்பாயில் வாஷி பகுதியில் ஒரு சிறிய வீட்டை எனது நிறுவனத்தினர் எனக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நான் வேலை செய்தது ஒரு தனியார் குஜராத்தி நிறுவனம். அதன் முதலாளி ஆற அமர மதியம் தான் தினமும் வேலைக்கு வருவார். ஆனால் இரவு வீடு திரும்ப 11 மணி ஆகிவிடும். அதனால் தன் நிறுவனத்தில் உள்ள அனைவரும் தினமும் வேலை நேரத்தையும் தாண்டி பல மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார். ஆனால் காலையில் 10 மணிக்கு எல்லோரும் வந்து விடவேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்.

நரிமன் பாயிண்ட்டில் இருந்து வீ.டி. வரை பஸ்ஸில் வந்து அங்கிருந்து இரயில் பிடித்து புதிய பம்பாயில் உள்ள வாஷிக்கு வருவதற்குள் 2 மணி நேரம் ஆகிவிடும். அதனால் தினமும் வீட்டுக்கு வந்து சேரும் போதே கிட்டத்தட்ட இரவு 11 மணி ஆகிவிடும். சாப்பிட்டு விட்டு அசதியில் மரக்கட்டை மாதிரி படுத்தால் போதும் என்றாகி விடும்.

இந்த அடிமை வேலை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் என்ன செய்வது, பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே.

இதில் கொடுமை என்னவென்றால், வேலை இருக்கிறதோ இல்லையோ அனைவரும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று என்னுடைய மேலதிகாரிகள் எதிர்பார்ப்பார்கள். நிறுவனத்தின் கலாச்சாரம் அப்படி இருந்தது. வேடிக்கை என்னவென்றால், இரவு ஒரு 9 மணி வாக்கில் எங்களது மேலதிகாரி நிறுவன முதலாளிக்கு ஏதாவது ஒரு உப்பு பேறாத‌ காரணத்துக்காக போன் செய்வார். அதாவது தானும் இரவு 9 மணி வரை அலுவலகத்தில் இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக தான். அப்போது தான் அவருக்கு முதலாளியிடம் நல்ல பெயர் வருமாம். என்ன எழவோ! டாமேஜர் இருந்தால் அவருக்கு கீழ் வேலை செய்பவர்களும் இருந்து தொலைக்க வேண்டுமே, அதனால் நாங்களும் வேறு வழி இல்லாமல் கடனே என்று 9 மணி வரை உட்கார்ந்து கொண்டிருப்போம்.

நான் தற்காலிகமாக மாற்றலாகி இருந்ததால் எனக்கு இந்த கலாச்சாரம் சுத்தமாக பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை. மேலதிகாரியை காக்காய் பிடிக்கும் பழக்கமும் எனக்கு இல்லாததால் பிழைக்க தெரியாதவன் என்று பெயர் பெற்றிருந்தேன். சில மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தேன். பிறகு வந்தது வரட்டும் என்று ஒரு நாள் ஒரு முடிவுக்கு வந்தேன்.

கூடிய வரை எல்லா வேலைகளையும் அலுவலக நேரத்துக்குள் முடித்து விட்டு மாலை 5 மணிக்கு வீட்டுக்கு போக ஆரம்பித்தேன். அலுவலக நேரம் காலை 10லிருந்து மாலை 5 வரை தான். ஓரிரு நாட்களுக்கு பிறகு எனது மேலதிகாரி என்னை தனது அறைக்கு கூப்பிட்டார். இதை நான் ஏற்கனவே எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.

அறையின் உள்ளே நான் நுழைந்த உடனேயே, "ஏன் நீ தினமும் சீக்கிரம் வீட்டுக்கு செல்கிறாய்?" என்று கேட்டார். நான் "சார், என்னுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அலுவலக நேரம் முடிந்த பிறகு தான்  செல்கிறேன். வேலையே இல்லாமல் சும்மா எதற்காக உட்கார்ந்திருக்க வேண்டும்? அப்படி என்றைக்காவது அவசர வேலை இருந்தால் நீங்கள் சொல்லவே வேண்டாம், நானே அதிக நேரம் உட்கார்ந்து அதை முடித்து கொடுத்து விட்டு செல்வேன் சார்" என்று பவ்யமாக தான் கூறினேன். அதை கேட்டது அவருக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 "இங்கு இருப்பவர்கள் அனைவரும் கேனையன் என்று நினைத்தாயா? நாங்கள் எல்லோரும் வெட்டியாக உட்கார்ந்திருக்கிறோம் என்கிறாயா?" என்று கன்னாபின்னாவென்று கத்தினார். நான் "சார், மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் என்னை பற்றி மட்டும் தான் சொன்னேன்" என்று கூறிவிட்டு அவரது அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். இதை 'இளம்கன்று பயமறியாது' என்று சொல்வதைவிட இவர் எனக்கு தற்காலிக மேலதிகாரி தானே, எப்படியும் சில மாதங்களுக்கு பிறகு என்னை மீண்டும் சூரத்துக்கு மாற்றி விடுவார்கள். அதனால் எனது வருடாந்திர அதிகப்படியில் இவரால் கை வைக்க முடியாது என்கிற 'அசட்டு தைரியம்' தான் என்று கூறலாம்.

இந்த நிகழ்வுக்கு பிறகு அந்த மேலதிகாரி என்னை கண்டாலே வெறுக்க ஆரம்பித்தார். அவருக்கு என்னை கண்டால் ஒருவிதமான இளக்காரமாகவே இருந்தது. தினமும் ஒரு முறையாவது மற்றவர்கள் எதிரில் என்னை அவமானப்படுத்துவார். இத்தனைக்கும் அவரும் தமிழர் தான். "பெட்டியை தூக்கி கிட்டு கிளம்பிட்டான்யா" என்று மாலை 5 மணிக்கு நான் வெளியே செல்லும் போது மற்றவர்களிடம் பரிகாசமாக எனக்கு எதிரிலேயே கூறுவார். நான் என்ன கொலை குற்றமா செய்து விட்டேன்? எனது பணிகளை முடித்து விட்டு தானே செல்கிறேன்? ஒவ்வொரு 'மீட்டிங்கிலும்' என்னை மட்டம் தட்டி ஏதாவது ஒரு கமெண்ட் அடிப்பார். நான் எதற்கும் பதிலே சொல்லாமல் மெளனமாக இருந்து விடுவேன். ஒரு முறை எனக்கு அழுகையே வந்துவிட்டது. 'சரி, சில நாட்கள் தானே' என்று நான் என்னையே தேற்றி கொண்டேன். மற்ற நண்பர்கள் அவர் இல்லாத சமயத்தில் அவரை திட்டி தீர்த்து விடுவார்கள். "சரியான முசுடன்யா. உனக்கு பரவாயில்லை, சீக்கிரமே சூரத்துக்கு சென்று விடுவாய். எங்கள் பாடு தான் திண்டாட்டம்" என்று கூறுவார்கள்.

எனது வீட்டின் அருகே தான் அந்த மேலதிகாரியின் வீடும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அன்று எதேச்சையாக அவரை மார்கெட்டிலோ வேறு எங்காவது சந்தித்தாலோ அவர் ஒன்றுமே நடக்காத மாதிரி சாதாரணமாக நடந்து கொள்வார். எனக்கு தான் மனது உறுத்திக்கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு பிறகு பம்பாயில் எனக்கு கொடுக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு என்னை மீண்டும் சூரத்துக்கு மாற்றினார்கள். இவரிடம் எனக்கு  ஜென்ம பகை ஒன்றும் இல்லையே. அதனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுமுகமாக நானும் கை குலுக்கி விட்டு சூரத்துக்கு சென்று விட்டேன். பம்பாயில் இருந்த போதே நான் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அது போலவே, எனக்கு செளதியில் ஒரு அரசாங்க நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நானும் 1998ம் வருடம் செளதிக்கு சென்று விட்டேன்.

இதற்கிடையில் நிறுவன முதலாளிக்கும் இந்த அதிகாரிக்கும் ஏதோ ஒரு கசமுசாவாகி விட்டிருந்தது. இவர் வீராப்பாக அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்வதாக சொல்லி ராஜினாமா செய்துவிட்டார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியான நிறுவன முதலாளிக்கு இது ஒரு பெரிய தன்மான பிரச்னையாகி விட்டது. அந்த அமெரிக்க நிறுவனம் எங்களது நிறுவனத்திடம் வியாபார ரீதியாக தொடர்பு வைத்திருந்தது. அதனால் அந்த நிறுவனத்துக்கு பல கோடி டாலர்கள் லாபம். எங்களது குஜராத்தி முதலாளி அந்த நிறுவனத்துக்கு காட்டமாக ஒரு கடிதம் எழுதினார்.

"இந்த மனிதரை நீங்கள் வேலைக்கு சேர்த்து கொண்டால் நமது இரு நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவு பாதிக்கப்படும்" என்று கூறினார். அமெரிக்கர்களுக்கு பணம் தான் முக்கியம். ஒட்டாவது உறவாவது, தங்களது வியாபார லாபத்துக்காக பிற நாடுகளில் போர்  மூட்டி விடக்கூட தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு தேவை வெறும் பணம் மட்டுமே. இந்த நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்படி ஒரு கடிதம் வந்த உடனே, இந்த ஒரு ஆளுக்காக நாம் ஏன் பல கோடி டாலர்கள் மதிப்பிலான வர்த்தக உறவை முறித்து கொள்ள வேண்டும் என்று கொடுத்த 'அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை' திரும்ப வாங்கி கொண்டு விட்டார்கள். இப்போது அந்த அதிகாரிக்கு திரிசிங்கு சொர்க்கம் மாதிரி அங்கும் இல்லை இங்கும் இல்லை என்ற நிலை ஆகிவிட்டது.

இருந்தாலும் அவர் சில வாரங்களில் அமெரிக்காவில் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை தேடிக்கொண்டு சென்று விட்டார். குஜராத்தி நிறுவனத்தில் இவரது 'பிராவிடண்டு ஃபண்டு' பணத்தை கூட திருப்பி தராமல் நிறுத்தி வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அது ஒரு பத்து வருடங்களில் மிக அபார வளர்ச்சி பெற்று பங்கு சந்தையில் முன்னணியில் வந்து விட்டிருந்தது. பாவம், இன்று வரை அந்த பணம் அவருக்கு கிடைக்கவில்லை.

அமெரிக்கா சென்ற பிறகு அவர் அங்கேயே செட்டிலாகி அமெரிக்க குடிமகனாக மாறிவிட்டார். என்னதான் என்னை அவமானப்படுத்திய அதிகாரி என்றாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் நானும் மரியாதை நிமித்தமாக அவரிடம் அவ்வப்போது மின் அஞ்சலில் தொடர்பு வைத்திருந்தேன். பொங்கல், தீபாவளி போன்ற‌ விசேஷங்களுக்கு வாழ்த்து அனுப்புவதோடு சரி. அவரும் பதிலுக்கு வாழ்த்து அனுப்புவார். அத்துடன் சரி. சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இதுவும் அடியோடு நின்று விட்ட‌து. நானும் எனது மனைவியும் எப்போதாவது எங்களது பம்பாய் அனுபவங்களை நினைவு கூறும்போது இவரை பற்றியும் பேசுவோம். அவ்வளவுதான்.

சில வருடங்களுக்கு பிறகு திடீரென்று ஒரு நாள் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. யாரென்று பார்த்தால் இவரிடமிருந்து தான் வந்திருந்தது. நான் அதை படிக்க படிக்க எனக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. அதன் சாராம்சம் என்னவென்றால், "எனக்கு அவசரமாக செளதியில் ஒரு வேலை தேவைப்படுகிறது. உன்னால் ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று கேட்டு எழுதியிருந்தார். அதை எனது மனைவியிடம் காட்ட அவரும் வியப்பில் ஆழ்ந்து விட்டார். பிறகு மிகவும் யோசித்து அவருக்கு பதில் எழுதினேன்.
 
"நீங்கள் என்னை விட மிக மிக உயர்ந்த பதவி வகித்தவர். கண்டிப்பாக உங்களது அனுபவத்துக்கு செளதியில் வேலை கிடைக்கும். ஆனால் நான் இருப்பதோ அரசாங்க நிறுவனம். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி கண்டிப்பாகவே உங்களுக்கு கிடைக்காது. ஒரு சாதாரண இஞ்ஜினியராக வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால், இங்கு மானேஜர் பதவி எல்லாம் செளதிகளுக்கே. ஆனால் நல்ல சம்பளம் தருவார்கள். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு இருந்தால் சொல்லுங்கள், நான் முடிந்தவரை உதவி செய்கிறேன்" என்று எழுதினேன்.

வளைகுடா நாடுகளில், 'நான் இந்தியாவில் இந்த பதவியில் இருந்தேன், அதனால் எனக்கு அதே பதவியை கொடு' என்று கேட்க முடியாது. பணம் என்று சொந்த நாட்டை விட்டு வெளியே வந்த பிறகு பொறியாளனா, பிச்சைக்காரனா, எல்லாம் ஒன்று தான். மத்திய கிழக்கு நாடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் நிலை இது தான்.
 
நானே அந்த நிறுவனத்தில் ஒரு பொறியாளனாக தான் வேலையில் இருந்தேன். ஆனால் என் கீழ் வேலை செய்த செளதிகள் எனக்கு மேலதிகாரியாக ஆகி விட்டிருந்தார்கள் (செளதி அரசாங்க சட்டம் அப்படி). இருந்தாலும் என் மேல் நிறைய மரியாதை (இப்போதும்) வைத்துள்ளனர். வாழ்க்கையில் நான் சேர்த்த நிலையான சொத்து இது ஒன்றுதான்.

நான் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்தாவது நிமிடம் எனக்கு அவர் பதில் அனுப்பினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அதில் எழுதியிருந்தார். அதை படித்த பிறகு எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
 
நல்ல வேளையாக அவர் செளதிக்கு வரும் திட்டத்தை கடைசியில் கைவிட்டு விட்டார். இந்தியாவுக்கே திரும்பி சென்று ஓய்வு பெற்றுவிட்டார். அவர் மட்டும் செளதிக்கு வந்திருந்தால் எனக்கு கீழ் வேலைக்கு சேர்ந்திருக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைமை ஆகியிருக்கும். ஏனென்றால், செளதி அரசாங்க விதிகளின் படி எனக்கு சில வருடங்களுக்கு பிறகு 'முதன்மை பொறியாளன்' என்ற பதவி உயர்வு கிடைத்திருந்தது.

சுழலும் வாழ்க்கை சக்கரத்தில் நாம் தினமும் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு விதம். ஒரு 5 ஆண்டுகளில் கீழே இருப்பவன் எங்கோ மேலே சென்று விடுகிறான். அதுவரை தூற்றியவர்கள் எல்லாம் போற்ற ஆரம்பித்து விடுகிறார்கள். மேலே இருப்பவன் நினைத்து கூட பார்க்க முடியாத பாதாளத்துக்கு போய்விடுகிறான். அப்போது 'உதவி செய்வார்கள்' என்று நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள். வாழ்க்கையில் நாம் வகிக்கும் பட்டம், பதவி, அந்தஸ்து எல்லாம் நிலைத்து நிற்கும் என்ற எண்ணத்தில் மனிதன் ஆட்டமாய் ஆடுகிறான். கடைசியில் எல்லாமே புஸ்வாணம் தான் என்பதே நிதர்சனம். வாழ்க்கையில் ஒன்றுமே நிலையானது இல்லை. வாழ்க்கையே நிலையானது இல்லை. பம்பாய் கொடுத்த பல‌ அனுபவங்களில் இதுவும் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.











 

6 comments:

G.M Balasubramaniam said...

அலுவலக வேலை நேரம்முடிந்தும் வேலை பார்ப்பவர்கள் பற்றிய இன்னொரு அபிப்பிராயமும் வர வாய்ப்பிருக்கிறது. கொடுத்த வேலையை கொடுத்தநேரத்தில் செய்யத் திறமை இல்லாதவர் என்பதே அது. ஆனால் நீங்கள் குறிப்பிட்டபடி நேரம் பார்க்காமல் உழைப்பவன் என்னும் பெயரும் கிடைக்கலாம்.சமயோசிதமாக நடப்பதே சிறந்தது. வாழ்த்துக்கள்.

Expatguru said...

ஜி.எம்.பி. சார், பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் அதிக நேரம் வேலை செய்தால் கடின உழைப்பாளி என்ற தவறான தத்துவத்தை கடைபிடிக்கிறார்கள். Hard working is not the same as Smart working.

காரிகன் said...

வாழ்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களை ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து செல்வது உகந்தது. ஏனென்றால் அவர்களை நாம் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கலாம். உங்களின் பதிவு இதைதான் உணர்த்தியது. சீரான நடையில் தரமான பதிவை வெளியிட்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்கள் நல் எழுத்து தொடரட்டும்.

Expatguru said...

காரிகன்,

உங்களது மனமார்ந்த பாராட்டுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

அப்பாதுரை said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு.
காலத்தோடு மனமும் முதிரும் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். பத்து வருடங்களுக்கு ஒரு முறை புதியவனாகியிருக்கிறேன் என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு. இருபது வயதில் என்னை அறிந்தவர்கள் இப்பொழுது என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

உங்கள் மேலதிகாரியின் முதலாளி போலவே அச்சாக ஒருவர் என் வாழ்க்கையில் விளையாடினார். அவரை பிறகு ஒரு நாள் சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது.

அமெரிக்க நிறுவனத்தின் போக்கு ஆச்சரியப் படுத்தியது. நான்றிந்த நிறுவனங்கள் அப்படியல்ல.

Expatguru said...

பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் நல்லவை தான் அப்பாதுரை. ஆனால் பல மில்லியன் டாலர்கள் வியாபாரம் என்று வரும்போது எந்த கொம்பனாக இருந்தாலும் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை இந்த அனுபவம் எனக்கு கற்று கொடுத்தது. அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயரை சொன்னால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?