Monday 11 August 2014

கண்ணன் வெண்பா

கண்மூடி      குழலூதும்        கலிவரதா         மாந்தர்க்கிம்
மண்ணதனில்  உனையன்றி கதியேது?     தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ   ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!


விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா   வரதா!  -   கூட்டை 
மற‌ந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்

பரந்தாமா எனைக் காக்கவா !


கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா   னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!

கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே

நரனென்னை காத்திடுவாய் நீ!


பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!


சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும்  மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக  - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.

கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன‌
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்  
விண்டைநீ விடா திரு!

நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!






9 comments:

G.M Balasubramaniam said...

முதலில் எழுத நினைத்ததை எழுதிவைத்துக் கொண்டு வெண்பா எழுதுவீர்களா. .?இல்லை நேராகவே முயற்சி செய்வீர்களா? எனக்கு வெண்பா வரிகளுக்க்காக வார்த்தைகள் தேடுவது சிரமம் என்று தோன்றுகிறது. கடவுளைப் பற்றி எழுத அதிகம் சிந்திக்கத் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

Expatguru said...

நன்றி, ஜி.எம்.பி. சார். எழுதி எல்லாம் வைத்துக்கொள்வதில்லை. கடவுள் அருளால் தானாகவே வருகிறது. எழுத வைப்பதும் இறைவன் செயலே.இதில் இலக்கணப்பிழை, கருத்துப்பிழை இருக்கிறதா என்று தெரியவில்லை. வெண்பா எழுதுவதில் அப்பாதுரை போன்ற ஜாம்பவான்கள் முன் நான் வெறும் கத்துக்குட்டி தான்.

அப்பாதுரை said...

நல்லாயிருக்குங்க.

பற்றுற்றேன் அல்லது பற்றிட்டேன் ஏறக்குறைய ஒரே பொருள். பற்றிற்றேன் என் கட்சி ;)

அப்பாதுரை said...

இலக்கணப்பிழை இருந்தால் என்ன?

Expatguru said...

அப்பாதுரை, உங்களுடைய ஐடியாவும் நன்றாக இருக்கிறதே! "பற்றிற்றேனை" "பற்றிட்டேன்" என்று மாற்றிவிட்டேன். பற்றை அவன் பாதத்தில் இட்டு விட்டேன் என்ற பொருளும் நன்றாக தான் இருக்கிறது இல்லையா (பற்று + இட்டேன் = பற்றிட்டேன்?

அப்பாதுரை said...

பற்றிட்டேன்: பிடித்தேன், பற்று வைத்தேன் (இட்டேன்).

மகன் மேல் பாசம் வைக்கும் தாய், கணவன் மேல் பற்று வைப்பாள்.

தூயது பாசம். எதிர்பார்ப்பு கலந்தது பற்று.

அமுதிட்டேன் முத்தமிட்டேன் வளையிட்டேன் என்ற வழங்கினேன் பொருளில் வருவது என்றாலும் நீங்கள் சொல்வது போல் சம்ர்ப்பித்தேன் துறந்தேன் என்ற பொருளிலும் இட்டேன் எனலாம். நன்றாகவே உள்ளது.

பற்றிட்டேன் என நான் சஜெஸ்ட் செய்தது பற்றினேன் என்பதன் அழுத்தமான வெளிப்பாடு.

அப்பாதுரை said...

எனினும் பற்றினேன் என்பது எளிமையாகவும் பொருத்தமானதாகவும் படுகிறது.

அருணா செல்வம் said...

ஐயா.... வெண்பாவின் இலக்கணத்தைப் படித்துவிட்டு வெண்பா எழுதுங்கள்.

அல்லது.... கண்ணன் பாடல் என்று தலைப்பை மாற்றி விடுங்கள்.

இதை வெளியிட வேண்டாம்.

Expatguru said...

நன்றி, அருணா. எனக்கு தமிழ் இலக்கணமோ வெண்பா இலக்கணமோ சுத்தமாக தெரியாது. நான் தமிழ் பண்டிதனும் அல்ல. நான் ஒரு மிக மிக சாதாரணமானவன். இதை எழுதுவதால் தமிழ் இலக்கணத்துக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. எனது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எழுதுகிறேன். எங்காவது பிழை இருந்தால் சொல்லுங்களேன், அதை திருத்திக்கொள்கிறேன்.