Friday, 31 October 2014

சென்னை ஆட்டோக்காரர்கள்-2

பல வருடங்களாக மெட்ராஸில் ஆட்டோவை உபயோகப்படுத்துவதை கூடிய வரை நான் தவிர்த்து வருகிறேன். இன்று எனக்கு ஏற்பட்ட அனுவங்கள் சற்றே வித்யாசமானவை.
இதை படிக்கும் முன் எனக்கு சில வருடங்கள் முன்பு ஏற்பட்ட அனுபவங்களை முதலில் இங்கே படிக்கலாம். இதற்கு பிறகு வீட்டில் ஸ்கூட்டர் வாங்கி விட்டதால் கூடுமான வரை ஆட்டோவில் செல்வதை தவிர்த்து வந்தேன். நீண்டதூரம் செல்ல வேண்டியதாக இருந்தால் பேசாமல் வாடகை காரை கூப்பிட்டு உபயோகிக்க ஆரம்பித்தேன். 

சில மாதங்கள் முன்பு தமிழ அரசுக்கு நீதிமன்றத்தில் இருந்து ஆணை வந்ததால், வேறு வழி இன்றி அனைத்து ஆட்டோக்களிலும் திருத்தப்பட்ட மீட்டர்கள் பொருத்தப்பட்டன. ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இவர்களுக்கு மக்களுடைய ஆதரவு சிறிதும் இல்லை. முக்கியமாக, ஆங்காங்கே காவல் துறையினரின் திடீர் அதிரடி சோதனைகளால் ஆட்டோ ஓட்டுனர்கள் கதி கலங்கி போனார்கள் என்பது நிதர்சனம். 

ஒரு இரண்டு மாதங்கள் உண்மையிலேயே ஆட்டோ ஓட்டுனர்களின் கொட்டம் அடங்கி தான் இருந்தது என்றே சொல்லலாம். 

மக்களும் சிறிது சிறிதாக மூச்சு விட ஆரம்பிக்க ஆரம்பித்தனர். இந்த இரண்டு மாதங்களில் தான் தாங்கள் எவ்வளவு தூரம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது பொது மக்களுக்கு சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது. எல்லா ஆட்டோக்களும் மீட்டர் படி ஓட்ட ஆரம்பித்து விட்டதால், 150 ரூபாய் கொடுத்த இடத்தில் வெறும் 60 ரூபாய் கொடுக்க ஆரம்பித்தனர். 

அதற்கு பிறகு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.  தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களினாலா அல்லது வேறு என்ன காரணம் என்று சரியாக தெரியவில்லை. மெல்ல மெல்ல ஆட்டோ ஓட்டுனர்கள் பழைய வழக்கம் போல "மீட்டருக்கு மேலே" கேட்க ஆரம்பித்தனர். சொல்லி வைத்தாற்போல காவல் துறையினரும் சோதனைகளை நடத்தாமல் கண்டு கொள்ளாமல் விட்டு விட ஆரம்பித்தனர்.

இப்போது நிலைமை என்னவென்றால் முன்பை விட மிக மோசமாக இருக்கிறது. எந்த ஆட்டோவில் ஏறினாலும் மீட்டருக்கு மேல் கேட்காமல் இருப்பதில்லை. 

இன்று காலை கோடம்பாக்கத்தில் இருந்து மெளண்ட் ரோடில் ஆனந்த் தியேட்டர் அருகே அவசரமாக செல்ல வேண்டி இருந்தது. பல ஆட்டோக்கள் என் அருகே வந்து நின்றன. ஒருவன் கூட மீட்டர் போடவே இல்லை. 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வாய் கூசாமல் கேட்டார்கள். இதை யார் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. பெட்ரோல் விலை ஏறி விட்டது என்ற இத்து போன லாஜிக்கை ஏற்று கொண்டால் கூட ஏதோ 5 அல்லது 10 ரூபாய் அதிகமாக கேட்டால் நானும் கொடுத்து விட்டு போய் இருப்பேன். ஆனால் பல ஓட்டுனர்கள் என்னை திட்டி கொண்டே சென்றது தான் வருத்தமாக இருந்தது. ஒருவன் என்னை "சாவு கிராக்கி" என்று 'அந்த' ஆத்தா வார்த்தையை திட்டி விட்டு சென்றான் ((இப்போது இது மெட்ராஸ் பாஷையின் ஒரு அங்கமாக மாறி விட்டதால் பழகி விட்டது). 

மீட்டர் போடும்படி நான் கேட்டு விட்டேனாம். அதற்கு தான் இந்த அர்ச்சனை. நமது சமுதாயம் இந்த அளவுக்கு ஏன் தரம் தாழ்ந்து விட்டது? மனிதனுக்கு மனிதன் தரும் மிக சாதாரணமான மரியாதையை கூட இவர்கள் ஏன் தர மறுக்கிறார்கள்? சென்ற மாதம் கோயம்புத்தூருக்கு சென்றிருந்தேன். அங்கு சாதாரண மனிதர்கள் கூட "வாங்க, போங்க" என்று முன் பின் தெரியாதவர்களிடம் மரியாதை கொடுத்து பேசுகிறார்கள். நான் பிறந்த மெட்ராஸுக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு?

கடைசியில் ஒரு ஆட்டோக்காரர் நான் "மெளண்ட் ரோடு" என்று சொன்ன உடனே மீட்டரை போட்டு விட்டார். நான் எதையும் பேசாமல் உடனே ஏறி உட்கார்ந்து கொண்டேன். நான் இறங்கும் வரை என் மனதில் ஏதோ ஒரு உறுத்தல். ஏன் இந்த ஆள் மட்டும் என்னிடம் பேரம் பேசவே இல்லை? இறங்கும் போது தகராறு செய்வானோ என்றெல்லாம் யோசித்தேன். கடைசியில் மீட்டர் 75 ரூபாய் தான் காண்பித்தது. நான் சரியாக 75 ரூபாயை அவனிடம் கொடுத்தவுடன் அவன் அதை வாங்கி கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்டான். என்னால் நம்பவே முடியவில்லை. 

எனது வேலையை முடித்து கொண்டு எதிர் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். காலையில் ஏற்பட்ட அனுபவம் மனதில் பசுமையாக இருந்ததால் ஒவ்வொரு ஆட்டோ  ஓட்டுனரும் என் அருகே வந்தவுடன் நான் "கோடம்பாக்கம்" என்று சொன்ன மறு கணமே பதில் கூட பேசாமல் சென்று விட்டனர். நல்ல வேளை இந்த முறை யாரும் சிறப்பான சென்னை தமிழில் என்னை வசை பாடவில்லை. அதன் பிறகு தான் அந்த அதிசயம் நடந்தது.

 'நம்ம ஆட்டோ' என்ற பலகையுடன் ஒரு ஆட்டோ காலியாக வந்து கொண்டிருந்தது. நான் கையை நீட்டியவுடன் எங்கே செல்ல வேண்டும் என்று கூட கேட்காமல் உடனே மீட்டரை போட்டு விட்டார். நான் உள்ளே உட்கார்ந்த பிறகு தான் செல்ல வேண்டிய இடத்தை கூறினேன். அவர் பதில் ஏதும் பேசாமல் வண்டியை ஓட்டி கொண்டே சென்றார். நான் இறங்கும் போது மீட்டரை பார்த்தால் வெறும் 62 ரூபாய் தான். அவர் உடனே மீட்டரில் இருந்து சரியாக 62 ரூபாய்க்கு ப்ரிண்ட் அவுட் வேறு கொடுத்தார். என்னால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பு நிறைய பேர் இந்த 'நம்ம ஆட்டோ' வை பற்றி கூறியிருக்கிறார்கள். எனக்கு இது தான் முதல் அனுபவம்.

ஒரே நாளில் இந்த இரண்டு விதமான அனுபவங்கள் என் மனதில் பல கேள்விகளை எழுப்பின. ஒரு ஆட்டோ ஓட்டுனர் நான் சென்ற இடத்துக்கு 62 ரூபாய் மட்டுமே வாங்குகிறார். கண்டிப்பாக அவர் நஷ்டத்தில் ஓட்டி இருக்க மாட்டார். அப்படி இருந்திருந்தால் என்னை ஆட்டோவிலேயே ஏற்றி இருக்க மாட்டார். அப்படி இருக்கும் போது, ஏன் மற்ற ஆட்டோக்காரர்கள் 120லிருந்து 150 ரூபாய் வரை எதிர்பார்கிறார்கள்? இதை பேராசை என்பதா அயோக்கியத்தனம் என்பதா? மீட்டர் பணம் தான் தருவேன் என்று சொல்பவர்களை ஏன் இப்படி வாய்க்கு வந்தபடி வசை பாடுகிறார்கள்? இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது?  மெட்ராஸை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற அடாவடித்தனத்தை நான் பார்த்ததே இல்லை.

முதலில் நான் 75 ரூபாய் கொடுத்து ஏறிய ஆட்டோக்காரர் அத்தி பூத்தாற்போல மிக நல்லவராக அமைந்தது எனது அதிர்ஷ்டமே. ஆனால் நான் பார்த்தவரை பெரும்பாலானவர்கள் அநியாயமாக தான் நடந்து கொள்கிறார்கள். காவல் துறையினர் இவர்களை கண்டு கொள்வதே இல்லை. ஏனென்றால், பல ஆட்டோக்களின் சொந்தக்காரர்களே காவல் துறையினர்தானாம். அவர்களுக்கு சவாரி இருக்கிறதோ இல்லையோ, தினமும் ஒரு குறிப்பிட்ட பணத்தை குத்தகையாக கொடுத்து விட வேண்டுமாம். இதை எனக்கு சொன்னதே ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான். 

கண்டிப்பாக என்னை போன்றே உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அல்லவா? இதற்கெல்லாம் முடிவு தான் என்ன?  நியாயப்படி நேர்மையாக இருப்பவர்கள் ஏன் அபூர்வமாகி விட்டார்கள்? அவர்கள் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்? இன்னும் எத்தனை நாட்கள் தான் நாம் இவற்றை சகித்து கொண்டு இருக்க வேண்டும்? ஒவ்வொரு பிரச்னைக்கும் நீதிமன்றம் மூலமாக தான் தீர்வை எதிர்பார்க்க வேண்டுமா? பிறகு அரசாங்கம் எதற்கு, காவல் துறை எதற்கு? 9 comments:

மதுரைக்காரன் said...

நல்ல அனுபவம். எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு.

வடுவூர் குமார் said...

ஒரே வழி இவர்களை வழிக்கு கொண்டு வர....
பஜாஜ் & டிவிஸ் கம்பெனிகளில் ஆட்டோ உற்பத்தியை தடைசெய்ய வேண்டும்.நம்ம ஆட்டோ ஏன் அதிகமாக வரவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.
ஆட்டோகளினால் கட்டணம் ஒரு தொந்தரவு என்றால் போக்குவரத்து விதி.மாசுத்தொல்லை எல்லாம் மறுபக்கம்.எந்த அரசியல் கட்சியும் இதைப்பற்றி கேள்வி எழுப்பாதது கூட இணையத்தில் வர ஆரம்பித்துவிட்டது.

தி.தமிழ் இளங்கோ said...

அந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களும் நியாயமாக நடந்து கொண்டது ஆச்சரியமாக உள்ளது. ஒருவேளை இவர்களுக்காகத்தான் நல்ல மழை போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் தோழர்கள் ஆட்டோ கட்ட்ண அநியாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் கடைசியில் கேட்ட கேள்விகளை அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

G.M Balasubramaniam said...

சட்டமும் விதிகளும் அவற்றை மீறப்படும்போதுதான் தெரிகிறது. ஆட்டோக்களை அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும்.இரண்டு கி.மீ. தூரம் கூட நடக்க முடியாதவர்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைக்கும் நிலைமை இவற்றைச் சுட்டிக்காட்டினால் நாம் ஒன்றும் தெரியாதவ்ர் என்ற பெயரை வாங்கிக் கொள்ள வைக்கும்.பெங்களூருவில் எவ்வளவோ தேவலாம்

Unknown said...

the author speaks well of coimbatore people but coimbatore autos are also charging heavily no metre.

ப.கந்தசாமி said...

எல்லா ஆட்டோக்காரர்களும் பெரும்பாலும் ரவுடிகள்தான்.

Unknown said...

automen earn lots of money drink daily heavily dies at the age of thirtythree.

msuzhi said...

ஆட்டோவில் ஏறாமல் இருப்பது தானே? அரசியல் வாதிகளைப் போலத்தான் ஆட்டோக்காரர்களும். நாம் தான் இந்தப் பிரச்சினையை வளர்த்தோம்.

Expatguru said...

வீட்டில் மூட்டை பூச்சை பூச்சி இருந்தால் வீட்டையே எரிப்பதா?

இரண்டு மாதங்கள் காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுனர்களை பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். காவல் துறையினர் இது போல எப்போதும் கண்டிப்பாக இருந்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.