Friday, 17 October 2014

கவியரசனின் பாட்டு சரித்திரம்

பாரதிக்கு பிறகு தமிழில் அதிகம் நேசிக்கப்பட்ட, வாசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது கண்ணதாசனாக தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 'கவியரசர்' என்று எத்தனை பேர் தன்னைத்தானே கூறிக்கொண்டாலும், உண்மையான கவியரசர் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை பின்பற்றி எழுதப்பட்டது என்று கூறுவார்கள்.  அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். படித்து ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


ஒரு முறை பாவமன்னிப்பு படத்திற்கு இயக்குனர் பீம்சிங், எம்.எஸ்.வி - ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் ஆகியோர் படத்தின் பாடல்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று கண்ணதாசனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிவிட்டு திரும்பி வந்தவரின் முகம் வாடி இருந்தது. எம்.எஸ்.வி அவரிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, அவர் "ஒன்றும் இல்லை" என்று சொல்லிவிட்டு ஒரு காகிதத்தை எடுத்து கடகடவென்று பாட்டு எழுத ஆரம்பித்து விட்டாராம். அந்த பாடல் பிறகு ஒரு சூப்பர்ஹிட் பாடல் ஆனது வேறு விஷயம். பாடலை எழுதி கொடுத்துவிட்டு சன்மானத்தை வாங்கிக்கொண்டு அவசரம் அவசரமாக வீட்டுக்கு கிளம்பி சென்றாராம். அன்று மாலை ஆர்வம் தாங்காமல் எம்.எஸ்.வி. கண்ணதாசன் வீட்டுக்கு சென்று விசாரித்த போது தான் உண்மை வெளியே வந்ததாம்.

காலையில் தொலைபேசியில் வந்த தகவல் என்னவென்றால், கண்ணதாசனிடம் கடன் கொடுத்து அவரால் அதை திரும்ப கட்ட முடியாத காரணத்தால் அவருடைய வீட்டை ஜப்தி செய்து சீல் வைக்க நீதிமன்றத்திலிருந்து வந்திருந்தார்களாம். மாலைக்குள் பணத்தை கொடுத்து விடுவதாக கூறியதால் அவர்களும் இவருக்காக வீட்டிலேயே காத்திருந்தார்களாம்.  பாட்டு எழுதிய பணத்தை அவர்களிடம் கொடுத்து மானத்தை காத்து கொண்டாராம் கவிஞர். அவர் எழுதிய பாடல் - "சிலர் அழுவார், சிலர் சிரிப்பார், நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்". அந்த பாடலில் ஒரு இடத்தில், "வந்ததை எண்ணி அழுகின்றேன், வருவதை எண்ணி சிரிக்கின்றேன்" என்று வரும். அதாவது, தன் வீட்டை ஜப்தி செய்ய அமீனா வந்திருப்பதை எண்ணி மனதுக்குள் தான் அழுவதையும், பணத்தை செலுத்தி மீட்கப்போவதை எண்ணி சிரிப்பதையும் இப்படி எழுதியிருக்கிறார்!
==================================================================
'அவன் தான் மனிதன்' படத்தின் படப்பிடிப்பு 1973ம் வருடம் மே மாதம் சிங்கப்பூரில் நடக்க இருந்ததாம். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட தயாரிப்பாளர் கண்ணதாசனை 'மே மாதம் ஷூட்டிங்' என்று ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேல் ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தாராம். பாடல்களை சீக்கிரம் தருவதற்காக நச்சரித்து கொண்டே இருந்தாரம். ஒரு கட்டத்தில் எல்லா பாடல்களையும் எழுதி கொடுத்து விட்டு எம்.எஸ்.வி.யிடம் கண்ணதாசன், "அந்த ஒரு பாடலை கூர்ந்து கவனி" என்று சொல்லி கிளம்பிவிட்டாராம். அந்த பாடல் "அன்பு நடமாடும் கலைக்கூடமே" என்ற பாடல். மிகவும் உன்னிப்பாக கவனித்த எம்.எஸ்.வி.க்கு அதன் உள் அர்த்தம் புரிந்து விட்டது. அதாவது, அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் 'மே' என்று முடியும்! தயாரிப்பாளரை எப்படி பழி வாங்கி விட்டார் பாருங்கள் கவிஞர்!
==================================================================
'நாடோடி மன்னன்' படத்தை எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்தார். பாடல்களை எழுத கண்ணதாசனை தினமும் ஸ்டுடியோவிற்கு காலதாமதம் செய்யாமல் வருமாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாராம். ஆனால் கண்ணதாசன் தான் இரவு முழுவதும் மப்பில் இருப்பாரே! எவ்வளவு சொல்லியும் தினமும் மிக மிக தாமதமாக வருவாராம். எம்.ஜி.ஆர். கடுப்பாகி, 'இந்த படம் வெளி வந்த பிறகு ஒன்று நான் மன்னனாவேன் அல்லது நாடோடியாகி விடுவேன்' என்றே கூறிவிட்டாராம். ஒரு வேகத்தில், கண்ணதாசனுக்கு பதிலாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை கூப்பிட்டு பாட்டு எழுத சொன்னாராம். அந்த பாடலை கண்ணதாசன் ஜென்மத்துக்கும் மறக்காமல் இருக்குமாறு எழுத சொன்னாரம். அப்படி வெளிவந்த பாடல் தான் "தூங்காதே தம்பி தூங்காதே". இந்த பாடலை கேட்ட கண்ணதாசன் திருந்திவிடவில்லை. வழக்கம் போல சிரித்து கொண்டே, "நான் எல்லாரை பற்றியும் பாடுவேன். இந்த பாடல் என்னை பற்றியது" என்று கூறினாராம்!
==================================================================
'உரிமைக்குரல்' படத்தில் வரும் 'விழியே கதை எழுது' என்ற பாடலை எழுதியது கண்ணதாசன் தான். ஆனால் அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் அரசியல் காரணங்களால் கருத்து வேறுபாடு இருந்தது. எம்.ஜி.ஆர். கோபப்பட்டு விடுவார் என்று நினைத்து இயக்குனர் ஸ்ரீதர் பட டைட்டிலில் பாடல்களை எழுதியவர் வாலி என்று போட்டு விட்டார். இதை எப்படியோ அறிந்த எம்.ஜி.ஆர் ஸ்ரீதரை அழைத்து "எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக எவ்வளவு கருத்து வேறுபாடு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவர் எழுதிய பாடலை வேறொருவர் எழுதியதாக காண்பிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதை உடனடியாக மாற்றுங்கள்" என்று கூறினார். ஆனால் அதற்குள் ப்ரிண்ட்டுக்கு சென்றுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படத்தில் 'வாலி' என்றே வந்து விட்டது. கண்ணதாசன் இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். 

கண்ணதாசன் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது அவருடைய அத்தனை மருத்துவ செலவுகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அந்த காலத்தில் இருந்த அரசியல் நாகரிகம் இன்று இல்லாமல் போய்விட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
==================================================================
அரசியல் காரணங்களால் காமராஜருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு காங்ரஸில் திரும்பி வர விருப்பப்பட்ட கண்ணதாசன், பாடல் மூலமாக அவருக்கு ஒரு தூது விட்டார். அந்த பாடல் - "அந்த சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்க‌ சொல்லடி". சிவகாமி காமராஜரின் தாயார் பெயர்!
==================================================================
தயாரிப்பாளர் பாலாஜி ஹிந்தி படமான 'துஷ்மன்' லிருந்து தழுவி 'நீதி' என்ற படத்தை எடுத்தார். அதில் கண்ணதாசன் ஒரு பாடலை எழுதினார். "நாளை முதல் குடிக்க மாட்டேன்" என்று வரும். பாலாஜி தனது நெருங்கிய நண்பரான கவிஞரை கூப்பிட்டு "குடிகார கதாநாயகன் குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த போவதாக சத்தியம் செய்வதாக காட்சி. அதனால் 'நாளை' என்பதை 'இன்று' என்று மாற்றி விடுங்கள்" என்று கூறினாராம். அதை கேட்ட கண்ணதாசன், "டேய், நானும் குடிகாரன் நீயும் குடிகாரன். எந்த காலத்தில்டா குடிகாரன் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறான்?" என்று கேட்டாராம். அதை ஒப்புக்கொண்ட பாலாஜி மாற்றம் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டாராம். அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது!
==================================================================
தீபாவளிக்கு குழந்தைகளுக்கு துணி வாங்க கூட பணம் இல்லாமல் இருந்தார் கண்ணதாசன். எல்லாம் குடித்து குடித்தே அழித்து விட்டார். தனது அண்ணன் ஏ.எல்.நாராயணனிடம் சென்று பணம் கேட்க அவர் இவரை தூற்றி விரட்டி விட்டார். உடனே கிடுகிடுவென்று மொட்டை மாடிக்கு சென்று ஒரு பாடலை எழுத ஆரம்பித்தார். அது தான் "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே"!
========================================================================
ஒரு பாடலுக்கு சரியான வரிகள் கிடைக்காமல் வெகு நாட்கள் தாமதித்து கொண்டே இருந்தாராம் கண்ணதாசன். திடீரென்று மதுரையிலிருந்த தனது தங்கையை பாம்பு கடித்து மருத்துவமனையில் உள்ளார் என்று தகவல் வந்தது. காரில் மதுரைக்கு சென்றுகொண்டிருந்த போது தனது உதவியாளரிடம் கடகடவென்று ஒரு பாடலை கண்ணதாசன் எழுத சொன்னாராம். அந்த பாடல்தான் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்"
==================================================================
தீவிர நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன், ராமனை திட்டுவதற்காக கம்ப ராமாயணத்தை படிக்க ஆரம்பித்து அதில் லயித்து தீவிர ஆன்மீகவாதியாக மாறிவிட்டிருந்த காலம். தனது மகளின் திருமணத்துக்காக ஒருவரிடம் பணம் ஏற்பாடு செய்திருந்தார். பணம் கொடுப்பதாக கூறியவர் கடைசி நிமிடத்தில் வாக்கு தவறி விட்டார். திருமணம் நடக்க வெறும் மூன்றே நாட்கள் தான் இருந்தன. அப்போது 'தெய்வம்' என்ற படத்துக்கு பாடல் எழுதி கொண்டிருந்தார் கண்ணதாசன். மனமுருக கடவுளிடம் வேண்டிக்கொண்டு தேவர்களை அசுரர்களிடமிருந்து காத்த முருகனை பற்றி ஒரு பாடல் எழுத ஆரம்பித்தார். "மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா..". பக்கத்து அறையில் இருந்து சின்னப்ப தேவர் உடனே ஓடி வந்து அந்த பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் படித்தாராம். தனது குலத்தை தான் கண்ணதாசன் கூறினார் என்று நினைத்து அகமகிழ்ந்து உடனே ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கவிஞரிடம் கொடுத்து விட்டாராம். கடவுளை நம்பியதால் கிடைத்த பலன் என்று கண்ணதாசன் பூரிப்புடன் அதை வாங்கி மகளின் திருமண செலவுகளுக்கு வைத்து கொண்டாராம்!

இந்த பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே நேரில் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல் தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாறாம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".
==================================================================
எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடு இருந்த காலத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக முதலில் வாலி பாடல்களை எழுதினாராம். ஆனால் அவரின் வரிகள் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. கண்ணதாசனை விட்டு பாடல் எழுத சொல்லுமாறு இயக்குனர் பந்துலுவிடம் கூறினாராம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்தே பந்துலு கண்ணதாசனுக்கு போன் செய்தாராம். போனிலேயே கண்ணதாசன் பாடலின் முதல் இரண்டு வரிகளை கூறிவிட்டாராம். அந்த பாடல் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்". பாடலின் மீத வரிகளை ஸ்டுடியோவுக்கு வந்து கூறுவதாக சொன்னாராம். இதில் எம்.ஜி.ஆர். மிகவும் சந்தோஷமாகி அந்த படத்தில் எல்லா பாடல்களையும் இவரை விட்டே எழுத சொல்லி விட்டாராம். 

"அதோ அந்த பறவை போல" பாடலில் மொழி பெயர்ப்பில் சிறிது மாற்றம் செய்து விட்டு இன்று வியட்நாம் நாட்டின் தேசிய கீதமாக அது விளங்குகிறது.
==================================================================

கடைசி வரை எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் இணை பிரியாத ஆத்ம நண்பர்களாக இருந்தனர். அவர் எழுதிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாடல் பட்டி தொட்டியெல்லாம் பாடப்பட்டது.  மருத்துவ பயணமாக அமெரிக்கா செல்லும் முன் எம்.எஸ்.வியிடம் கண்ணதாசன், "நான் இருக்கிறேனோ இல்லையோ, நீ எந்த மேடையில் இசை அமைத்தாலும் இந்த பாடலை மட்டும் மறக்காமல் பாடு" என்று கூறினாராம். அவரது வாக்கு அப்படியே பலித்து விட்டது. அமெரிக்கா சென்ற கண்ணதாசன் அங்கேயே மறைந்து விட்டார். இதை எம்.எஸ்.வியினால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

இன்று கூட அவர் எங்காவது மேடை ஏறி இசை நிகழ்ச்சி நடத்தினால் இந்த பாடலை பாடிவிட்டு கடைசி வரியில் " புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்" என்றே பாடுகிறார்.

கண்ணதாசன் போல இனி ஒரு கவிஞன் நமக்கு கிடைப்பானா என்பது சந்தேகம் தான், இல்லையா நண்பர்களே?

12 comments:

காரிகன் said...

நண்பரே,

இப்போதுதான் என் தளத்தில் உங்களுக்கு பதில் எழுதினேன். எழுதிவிட்டு இங்கே வந்தால் உங்களின் இந்தப் புதிய அருமையான பதிவுக் காண நேர்ந்தது. மிகவும் ரசித்துப் படிப்பதற்குரிய தகவல்களைச் சொல்லி உங்களின் இயல்பான அழகான எழுத்தில் அசத்திவிட்டீர்கள். பாராட்டுக்கள். அதிலும் அந்த அவன்தான் மனிதனின் அன்பு நடமாடும் கலைக்கூடமே பாடலின் பின்னே இருக்கும் உள்குத்து படிப்பதற்கு ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. இசை பற்றி நீங்கள் இன்னும் கூட அதிகம் எழுதலாம் என்று தோன்றுகிறது.

sury siva said...

நீங்கள் நினைவூட்டி இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும்
நெஞ்சை உருகச் செய்கின்றது.
கண்ணதாசன் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம்
என்பதே நமக்குள்ள பெருமை.

அந்த " மலர்ந்தும் மலராத ...."
பாட்டு கடந்த நாற்பதுக்கும் மேலான வருடங்களில்
எத்தனை எத்தனை தமிழ் வீடுகளில்
எத்தனை எத்தனை லட்சங்கள் தடவை
தாலாட்டாக ஒலித்த்திருக்கும்

நானே ஒரு ஆயிரம் தடவை பாடி இருப்பேன்.

சுப்பு தாத்தா.

Expatguru said...

உண்மைதான் சுப்பு தாத்தா. பாசமலர் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிவாஜி கணேசன் கண்ணதாசனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். அதில் அவரை கட்டி பிடித்து "கவிஞன் என்றால் நீதாண்டா கவிஞன்" என்று உணர்ச்சி வசப்பட்டு தழுவிக்கொண்டார். இந்த படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட அடுத்த 10 வருடங்களுக்கு சிவாஜியின் படங்கள் அனைத்துக்கும் கண்ணதாசன் தான் பாடல் எழுதினார்.

சிவகுமாரன் said...

மெய் சிலிர்த்துப் போனேன். காலத்தால் அழிக்க முடியாத கவிஞன் அவன். நிரந்தரமானவன் அழிவதில்லை.

Expatguru said...

நன்றி, சிவகுமாரன்.

Amudhavan said...


\\எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேறுபாடு இருந்த காலத்தில் 'அடிமைப்பெண்' படத்திற்காக முதலில் வாலி பாடல்களை எழுதினாராம். ஆனால் அவரின் வரிகள் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. கண்ணதாசனை விட்டு பாடல் எழுத சொல்லுமாறு இயக்குனர் பந்துலுவிடம் கூறினாராம். எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்தே பந்துலு கண்ணதாசனுக்கு போன் செய்தாராம். போனிலேயே கண்ணதாசன் பாடலின் முதல் இரண்டு வரிகளை கூறிவிட்டாராம். அந்த பாடல் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்".\\

திரு காரிகன் அவர்கள் சொல்லி தங்கள் தளத்திற்கு வந்தேன். எல்லாச் செய்திகளுமே சுவையானவை. சிலவற்றுக்கு பாடபேதம் உண்டு. வெவ்வேறு வகையான சம்பவங்களுடனும் கதைகளுடனும் அவை வழங்கப்படும். மிகவும் பிரசித்திபெற்ற சில விஷயங்கள் அப்படித்தான். ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு மாதிரி வழங்கப்படும்.

மேலேயுள்ள பாடல் இடம்பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். அடிமைப்பெண் அல்ல.ஆயிரத்தில் ஒருவனுக்கு விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை. அடிமைப்பெண்ணுக்கு கேவிஎம். தவிர, அடிமைப்பெண் எம்ஜிஆரின் சொந்தப்படம். ஆயிரத்தில் ஒருவன்தான் பந்துலுவின் படம்.

ஸ்ரீதர் விஷயத்தில் பாடல் டைட்டிலில் அல்ல, வடநாடு சென்று திரும்பி வந்த எம்ஜிஆர் பாடலைக் கேட்டவுடன் "பாட்டு எழுதியது யார்?" என்று கேட்க, "வாலி" என்றிருக்கிறார் ஸ்ரீதர். "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே..மஞ்சள் வானம் தென்றல் சாட்சி உனக்காகவே நான் வாழ்கிறேன்" இந்த வரிகளை வாலியால் எழுதமுடியாதே. இது கண்ணதாசன் எழுதினதுதானே?" என்று கேட்டார் எம்ஜிஆர்............என்று திரு ஸ்ரீதரே தமது திரைப்பட அனுபவங்களை கல்கியில் எழுதினபோது குறிப்பிட்டிருக்கிறார்.

கண்ணதாசன் மட்டும்தான் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பாடலாக்கியவர்.அந்த தகவல்கள் வெளியானபோது அவற்றுக்கு ஒரு மதிப்பும் இருந்தது. மற்றவர்கள் தங்கள் அனுபவங்களை எழுதினார்கள் என்றால் "ஐயா நீங்கள் படத்து சீனுக்குப் பாடல் எழுதினால் போதுங்க" என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுமே சொல்லிவிடுவார்கள்.
கவிஞரின் 'ஆளுமை' அத்தகையது.

Expatguru said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி அமுதவன் சார். படத்தின் பெயரை தவறுதலாக 'அடிமைப்பெண்' என்று எழுதிவிட்டேன். இப்போது திருத்தி விட்டேன். மற்ற தகவல்கள் அனைத்தும் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டி தொகுக்கப்பட்டவையே. அதனால் அவற்றின் நம்பகத்தன்மையை என்னால் நிரூபிக்க முடியாது. நான் சேகரித்த தகவல்கள் உண்மை என்று நம்பியே இங்கு வெளியிட்டேன். இதை எனது பதிவில் ஏதாவது ஒரு இடத்தில் disclaimerஆக எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எனது தவறே. குன்னக்குடி வைத்தியனாதன் பற்றிய தகவல் மட்டும் என்னிடம் அவர் நேரிடையாக கூறியது.

இது ஒரு புறம் இருக்கட்டும். கண்ணதாசன் என்ற மாபெரிய கவிஞனை பற்றி உங்களிடம் இன்னும் தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன். இங்கே வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அடிக்கடி இங்கு வருகை தாருங்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு அபூர்வக் கவிஞரைப் பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை. கண்ணதாசன் ஒரு அதிசயம்

Expatguru said...

நன்றி, முரளிதரன்.

msuzhi said...

தனக்குத் தானே இரங்கல் பாட்டு எழுதிய கவிஞன், என்றைக்கும் இறக்காதவன்.

எம்ஜிஆர் கண்ணதாசனை 'ஆஸ்தான கவி' என்று ஒரு பதவி கொடுத்து கௌரவித்தாரென்று நினைக்கிறேன்.

சார்லஸ் said...

நண்பருக்கு

வணக்கம் . கண்ணதாசனைப் பற்றிய அற்புத தருணங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள். எனக்குத் தெரிந்த செய்தி ஒன்றும் சொல்கிறேன் .
எம். எஸ். வி . க்கும் கண்ணதாசனுக்கும் ஒருமுறை சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது . ஒரு படத்திற்கு பாடல் எழுத வேண்டி கண்ணதாசனுக்காய் நீண்ட நேரம் எம்.எஸ்.வி காத்திருந்ததால் கோபமுற்று 'என் முகத்தில் விழிக்காதே ' என்று கண்ணதாசனிடம் தொலைபேசியில் எம்.எஸ்.வி அவர்கள் சொல்லிவிட்டாராம் . தாமதமாய் வந்து சேர்ந்த கண்ணதாசன் பேசாமலேயே அமைதியாக இருந்திருக்கிறார் .

படம் : நெஞ்சி ஓர் ஆலயம் . புற்று நோயால் அவதியுறும் நாயகன் நாயகியைப் பார்த்து ' நான் இறந்து போனால் நீ இன்னொரு திருமணம் புரிய வேண்டும் ' என்று சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நாயகி வருத்தமுற்று பாடல் ஒன்று பாடுவதாக சூழல் கொடுக்கப்பட்டது .

அமைதியாக இருவரும் இருந்திருக்கிறார்கள் . திடீரென கண்ணதாசன் கடகடவென பாடல் எழுதி கொடுத்திருக்கிறார். வாங்கிப் பார்த்த எம்.எஸ். வி அவர்கள் கண்ணீர் பொங்க கண்ணதாசனைக் கட்டித் தழுவினார் .

அந்தப் பாடல் ' சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே '.

Expatguru said...

அருமையான தகவல், சார்ல்ஸ். இதை படித்தவுடன் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. உண்மையிலேயே, பாரதியாருக்கு பிறகு தமிழுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் கண்ணதாசன் தான் என்பதில் சந்தேகமே இல்லை. யார் யாருக்கெல்லாமோ விருது கொடுக்கிறார்கள், கண்ணதாசனுக்கு ஏன் ஒரு தேசிய விருது கொடுக்கவில்லை?