Monday 5 January 2015

செருப்பு

தலைப்பை பார்த்து பயந்து விடாதீர்கள். அடிக்க மாட்டேன்! நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வேறு என்னவென்று சொல்வது? 



நேற்று மாலை எனது மனைவியுடன் அருகில் இருக்கும் வினாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். இந்த கோவில் வாசலில் இருக்கும் நடைபாதையில் பூ விற்கும் சில பெண்கள் எப்போதும் இருப்பார்கள். ஒரு பூக்காரியின் கடையில் எனது செருப்பை விட்டுவிட்டு அவரிடம் தேங்காயை வாங்கி கொண்டு கோவில் உள்ளே சென்று விட்டேன். கடை என்றால் வெறும் ஒரு மர மேஜை தான். அதன் அடியில் பல செருப்புகள் இருந்தன. கோவிலுக்கு வருபவர்கள் தங்களது செருப்புகளை அங்கே விட்டு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி விட்டு செல்கிறார்களோ என்னவோ.

சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. நானும் செருப்பை மாட்டி கொண்டு உறவினர் வீடு வரை வந்து விட்டேன். ஸ்கூட்டரில் வீடு திரும்பும் போது காலை கடிப்பது போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது. வீட்டுக்கு வந்து செருப்பை அவிழ்க்கு போது தான் அது எனது செருப்பே அல்ல என்பதை உணர்ந்தேன். இருட்டில் வேறு யாருடைய செருப்பையோ நான் அணிந்து கொண்டு வந்து விட்டேன். 

இப்போது என்ன செய்வது? உறவினர் வீட்டுக்குள் வேறு நுழைந்து விட்டேன். சரி, வந்தது வந்து விட்டோம், திரும்பி போகும் போது பார்த்து கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். ஒரு அரை மணி நேரம் கழித்து அவர்களது வீட்டிலிருந்து வெளியேறும் போது எனது மனைவியிடம் விஷயத்தை கூறினேன். கோவிலில் ஒரு அர்ச்சனை, மனைவியிடம் மற்றொரு அர்ச்சனை! 

மீண்டும் அந்த கோவிலுக்கே திரும்ப சென்றோம். வழி முழுவதும் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எனது செருப்பு விலை உயர்ந்தது. வாங்கி மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. வேறு யாருடைய செருப்பையோ போட்டு கொள்ள மனம் இல்லை. "ஒரு வேளை எவனாவது என்னுடைய செருப்பை லவட்டி கொண்டு போயிருப்பானோ? எனக்கு சொந்தமான செருப்பை எவனாவது இந்நேரம் கண்டிப்பாக சுருட்டிக்கொண்டு போய் இருப்பான். கடங்காரப்பயல்கள்.  ஃப்ரீயாக கிடைத்தால்  ஃபினாயிலை கூட குடிப்பார்கள்". இப்படி எனது மனம் முழுவதும் என்னுடைய செருப்பை பற்றியே நினைத்து கொண்டு இருந்தது. 

ஒரு வழியாக கோவிலை வந்து அடைந்தோம். அவசரம் அவசரமாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு அந்த பூக்காரியின் கடைக்கு சென்றேன். அப்பாடா! என்னுடைய செருப்பு அங்கேயே இருந்தது. நான் அணிந்து கொண்டிருந்த செருப்பை கழற்றி விட்டு என்னுடைய செருப்பை மாட்டி கொண்டேன். 

யாராவது நான் செய்வதை பார்க்கிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்தேன். ஆனால், நான் ஒருவன் அங்கு நிற்பதை யாரும் கவனிக்க கூட இல்லை. அவரவருக்கு ஆயிரம் கவலைகள், பல்லாயிரம் சிந்தனைகள். ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா! - கண்ணதாசன் அனுபவித்து தான் பாடியிருக்கிறார்.

சாலையில் இருந்து பார்த்தால் வினாயகர் தெரியும். கிளம்பும் முன் வினாயகரை ஒரு முறை சாலையில் இருந்தே தரிசனம் செய்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். திடீரென்று எனது மனம் குறுகுறுக்க ஆரம்பித்தது. "இத்தனை நேரம் நான் என்னுடைய செருப்பை பற்றி தானே கவலைப்பட்டு கொண்டிருந்தேன். நான் அணிந்து கொண்டிருந்த மற்றொருவரின் செருப்பை பற்றி சிறிது கூட யோசிக்கவே இல்லையே. இது தான் மனித மனமோ? பாவம், அந்த மனிதர் தனது செருப்பை காணாமல் எங்கெல்லாம் தேடி இருப்பாரோ? சே!" என்று எண்ணினேன்.

"நான் சாபம் விட்டதை போல அந்த மனிதரும் ஒரு வேளை சாபம் விட்டிருப்பாரோ? அல்லது கோவிலுக்கு சென்றவர் இன்னும் வெளியே வராமல் இருந்திருப்பாரோ? இல்லை, இல்லை, நான் உறவினர் வீட்டுக்கு போய் அரை மணி நேரத்து மேல் ஆகி விட்டதே. நிச்சயம் அவர் தனது செருப்புக்காக தேடி அலைந்திருப்பார். எனது செருப்பை பற்றி நான் கவலைப்பட்டது போல அவரும் தனது செருப்பை பற்றி கவலைப்பட்டிருப்பாரே" என்றெல்லாம் மனசாட்சி அடித்து கொண்டது. 

வீட்டுக்கு வந்து வெகு நேரம் ஆகியும் இந்த சம்பவம் என் மனதை விட்டு விலகவில்லை. எனக்கு சொந்தம் என்று நினைத்த எனது செருப்பு ஒரு வேளை கிடைக்காமல் போய் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? வெறும் காலுடன் இருந்திருக்க முடியாது அல்லவா? வேறு செருப்பு வாங்கி இருப்பேன். அதை விட முக்கியம், 'எனக்கு சொந்தம்' என்று நினைத்த அந்த தொலைத்த செருப்பை பற்றி நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன். 

'சொந்தம்' என்று நினைத்த ஒரு பொருளுக்கு இவ்வளவு தான் மதிப்பா? சற்றே யோசித்து பார்த்தால் நாம் வாழ்க்கையில் 'சொந்தம்' என்று எதை எல்லாம் நினைக்கிறோமோ, அவை ஒன்று கூட நிரந்தரமும் இல்லை, நிலைப்பதுமில்லை என்பதே நிதர்சனம். நாம் பிறக்கும் போது ஒன்றுமே இல்லாமல் தானே பிறந்தோம்? அனைத்துமே பிறகு வந்தவை தானே? இவற்றில் சொந்தம் கொண்டாடுவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அப்போது நமக்கு சொந்தம் இல்லாத இந்த ஜாதி மதத்துக்காகவா உலகில் இத்தனை சண்டை சச்சரவு? மனிதன் ஒருவனை ஒருவன் அடித்து கொல்வதற்கு இது தானா காரணம்?

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ பணத்துக்காக ஆன்மாவை விற்று வேலை செய்து வாழும் இந்த‌ வாழ்க்கையில் நமக்கு என்று சொந்தம் எதுவுமே இல்லை. அது செருப்பாக இருந்தாலும் சரி, நிரந்தரமில்லாத இந்த சரீரமாக இருந்தாலும் சரி. இந்த உடம்பும் நானில்லை, நானே நானில்லை, பிறகு நான் யார்? நீங்கள் தான் யார்? 



17 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் உணர்ந்து கொண்ட தத்துவமும் அருமை...! உண்மையும் கூட...!

Expatguru said...

நன்றி, தனபாலன்.

Unknown said...

well we feel happy to receive our thing which was lost and found again. so philosophy follows in our talk.... that is all....

துளசி கோபால் said...

உண்மையில் செருப்பு தொலைந்து போனால் ரொம்ப நல்லதுன்னு பெரியவங்க சொல்வாங்க. நம்மைப் பிடித்த பீடை அத்தோடு போச்சுன்னு எங்க பாட்டியும் சொல்லக் கேட்டிருக்கேன்.

ஆனால் புத்தம்புது செருப்பை வாங்கி அரைமணிக்குள் தொலைச்சுட்டு வீட்டுக்கு வந்தப்ப,அதே பாட்டியின் பாட்டு கேட்கும்படி ஆச்சு!!

தத்துவம் நல்லாத்தேன் இருக்கு. அதுக்காகக் கஷ்டப்பட்டுச் சம்பாரிச்சு வாங்குன பொருளை... அது என்னதில்லைன்னு விட முடியுதா என்ன?

Expatguru said...

உண்மை தான். மனித மனதின் குறைபாடே இது தானோ?

G.M Balasubramaniam said...

உங்கள் செருப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் உங்களுக்குக் கிடைத்த அதே செருப்பை நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் வாய்ப்பே அதிகம். அதுதான் சராசரியரின் குணம்

Expatguru said...

இல்லை ஜி.எம்.பி. சார். என்னுடைய செருப்பு கிடைக்கிறதோ, இல்லையோ, நான் தவறாக அணிந்து வந்த செருப்பை அங்கே கழற்றி விட எண்ணி தான் திரும்பவும் கோவிலுக்கு சென்றேன். என்னுடைய செருப்பே கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. நல்ல வேளையாக யாரும் அதை எடுக்கவில்லை.

காரிகன் said...

நண்பர் குரு,

விலை கொடுத்து வாங்கிய ஒரு செருப்பே நமக்கு சொந்தமாக முடியாதபோது மற்றவைகளைப் பற்றி என்ன சொல்ல? மனதில் உறையும் தத்துவத்தை தெளிவாக சொல்லியதற்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு. அதற்குப் பாராட்டுக்கள்.

Expatguru said...

மிக்க நன்றி, காரிகன்.

சார்லஸ் said...

ஹலோ குரு

கிடைக்கிறது கிடைக்காமல் போகாது. கிடைக்காமல் போவது கிடைத்து விடும் . தொலைத்ததை தொலைத்த இடத்தில் தேடி விட்டீர்கள் . பொருளுக்கு அது சரி . அன்பு ,அமைதி, நிம்மதி தொலைத்தால் எங்கு போய் தேடுவது?

Expatguru said...

உண்மைதான் சார்ல்ஸ்.

msuzhi said...

எங்கிருந்து எங்கே தாவியிருக்கிறீர்கள்! உண்மையிலேயே "சொந்தம்" கொண்டாடினீர்களா என்பது உங்கள் செருப்பு கிடைக்காமல் போயிருந்தால் மட்டுமே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தத்துவ விசாரம் நன்று. பற்றறுக்க வேண்டும். காணி நிலமும்..

msuzhi said...

அற்புதமான கேள்வி சார்லஸ். தொலைந்து போன பின்பே இருந்தது தெரியவரும் சமாசாரங்கள் பல. அம்மாவின் அன்பு இந்தப் பட்டியலில் முதலிடம்.

சார்லஸ் said...

என்ன சார், உங்கள் அடுத்தப் பதிவு வரவில்லையே ! ? வேலைப் பளுவா?

Expatguru said...

ஆமாம் சார். வெகு விரைவில் உங்க‌ளை படுத்த வருகிறேன் :)

geethasmbsvm6 said...

நல்ல தத்துவம், அப்பாதுரையின் கவிதையைப் படித்துவிட்டு வந்தேன். :)

Expatguru said...

மிக்க நன்றி, கீதா சாம்பசிவம். வேலை பளுவால் பல நாட்கள் ஆயிற்று வலைப்பக்கம் வந்து. நானே நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன். I feel honoured and humbled.