Tuesday, 3 March 2015

வேலை இங்கே, ஆள் எங்கே?

மெட்ராஸில் என் வீட்டில்  இரண்டு மூன்று அறைகளில் மின் அழுத்தம் காரணமாக விளக்குகள் திடீரென்று  பழுதாகிவிட்டன. இரண்டு முறை 'ட்யூபை' மாற்றிய பிறகும் எரியவில்லை. ஆனால் கடையில் வாங்கும் போது மட்டும் நன்றாக எரிந்தன. எவ்வளவு முயற்சி செய்தும் பிரயோஜனமே இல்லை. சரி ஏதோ பிரச்னையாக இருக்கும், ஒரு நல்ல எலெக்ட்ரீஷியனை அழைத்து வரலாம், என்று நினைத்தேன். அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.


வீட்டின் அருகிலேயெ இருக்கும் ஒரு எலெக்ட்ரிகல் கடையை அணுகினேன். கடைக்காரனிடம் விஷயத்தை கூற, ஏனோ தெரியவில்லை, அவன் என்னிடம் ட்யூபை விற்பதில் தான் குறியாக இருந்தானே தவிர, வீட்டுக்கு எலக்ட்ரீஷியனை அனுப்ப உற்சாகம் காட்டாமல் இருந்தான். மிகவும் வற்புறுத்திய பிறகு மாலையில் வருவதாக கூறி என்னை அனுப்பினான். ஒரு இரண்டு மூன்று மாலைகள் கடந்தும் யாருமே வரவில்லை. கடையில் மீண்டும் போய் கேட்டால், 'இதோ, இப்போதே அனுப்புகிறேன் சார்' என்றான். அவ்வளவுதான். அதன் பிறகு ஆளையே காணோம்.

சரி, இவனுக்கு விருப்பம் இல்லை போல இருக்கிறது, வேறு யாரையாவது அழைக்கலாம் என்று தெருவில் விசாரித்து கொண்டே நடந்தேன். ஒரு வீட்டின் வாசலில், 'எலெக்ட்ரிக்கல் வேலைகளுக்கு அணுகவும்' என்று ஒரு போர்டு போட்டிருந்தார்கள். சரி இங்கே கேட்டு பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்து விசாரித்தால், 'அவர் வெளியே இருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் அவருக்கு போன் செய்து பாருங்கள்' என்று அவரது வீட்டு பெண்மணி கூறினார். அந்த எண்ணுக்கு போன் செய்தேன். மறுமுனையில் எனது விபரங்களை கேட்ட பிறகு "சார், எனக்கு இப்போது நேரமில்லை. வேண்டுமென்றால் அடுத்த திங்கட்கிழமை அன்று வந்து பார்க்கிறேன். எதற்கும் நீங்கள் எனக்கு ஞாயிறன்று போன் போட்டு கேளுங்கள்' என்றான். நான் கோபத்தில் போனை வைத்து விட்டேன்.

என்ன அக்கிரமமாக இருக்கிறது? இவனிடம் நான் எதற்கு அப்பாயின்மெண்ட் வாங்க வேண்டும் என்று எனது மனதில் பலவித எண்ண அலையோட்டம். இப்போது என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில், நான் போனில் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரன், "சார், என்னுடன் வாருங்கள். எனக்கு தெரிந்த ஒரு எலக்ட்ரீஷியன் பக்கத்து தெருவில் இருக்கிறான். அவனிடம் அழைத்து செல்கிறேன்" என்றான். யாராக இருந்தால் எனக்கென்ன, எனது வேலை முடிந்தால் சரி என்று அவனுடன் சென்றேன்.

ஒரு மிக குறுகிய தெருவிற்குள் சென்றான். எனக்கு என்னவோ போல இருந்தது. அதை உணர்ந்து கொண்ட அவன், 'நீங்கள் வேண்டுமானால் இங்கேயே இருங்கள், நான் அவனை இங்கு அழைத்து வருகிறேன்' என்று கூறி ஒரு குடிசைக்குள் சென்று யாரையோ அழைத்தான். உள்ளே இருந்து வந்த ஆளிடம் எனது விபரத்தை கூறினான். அந்த ஆளோ, என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, 'டேய், என்னிடம் டூல்ஸ் இப்போ இல்லை. அப்புறம் பார்க்கிறேன்' என்று என்னை அழைத்து வந்தவனிடம் கூறினான். அவனுக்கு என்னவோ போலாகி விட்டது. என்னை அழைத்து வந்தவனுக்கு இது ஒரு பெரிய தன்மான பிரச்னையாகிவிட்டது. 

சிறப்பான சென்னைத்தமிழின் அந்த 'ஆத்தா' வார்த்தையை உபயோகித்து, 'என்னடா பெரிய டூல்ஸு? ஒரு டெஸ்டர் போதும்டா இந்த வேலையை பாக்க' என்று அவனை திட்டினான். அவன் மசியவில்லை. கடைசி வரை எவ்வளவோ போராடியும் வர மறுத்து விட்டான். அதற்கு மேல் எனக்கு தாங்க முடியவில்லை. 'பரவாயில்லைப்பா, நான் வேறு யாரையாவது பார்க்கிறேன்' என்று கூறி விடை பெற்றேன்.

இப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒவ்வொருவனும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்து கொண்டிருந்தனர். ஒருவனிடம், 'ஏம்ப்பா, நான் தான் பணம் தருகிறேனே, ஏன் இந்த வேலையை செய்ய வரமாட்டேன் என்கிறாய்?' என்று அப்பாவியாய் கேட்டேன். அதற்கு அவன், "சார், இந்த மாதிரி சின்ன பல்பு மாத்தற வேலையை எவன் செய்வான்? ஏதாவது பெரிசா இருந்தா சொல்லு" என்றான். எனக்கு அப்போது தான் புரிந்தது. ட்யூப் லைட் பிரச்னையை சரி செய்ய யாருக்கும் இஷ்டம் இல்லை. இதில் பண வரவு மிக குறைவு. வீடு முழுவதும் வயரிங்கை மாற்றுவது போன்ற பெரிய வேலைகளுக்கு தான் மவுசு போல இருக்கிறது. அதில் தான் பணமும் கூட. ஒரு நாள் வேலை செய்தால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும். எனது ட்யூப் வேலையை பார்த்தால் ஐம்பதோ நூறோ தான் கிடைக்கும். அதனால் யாருமே இது போன்ற வேலைகளை செய்ய வருவதில்லை என்று புரிந்தது.

அதற்கு நான் என்ன செய்வது? வெறுப்பில் சோர்ந்து போய் விட்டேன். எதேச்சையாக வீட்டுக்கு வந்திருந்த எனது உறவினரிடம் புலம்பி தள்ளி விட்டேன். அதற்கு அவர் தனக்கு தெரிந்த எலக்ட்ரீஷியனின் எண்ணை கொடுத்தார். அவர் வந்து கண்டிப்பாக செய்வார் என்றும் கூறினார். ஆனால் போகும்போது ஒரு வார்த்தை கூறிவிட்டு சென்றார் "ஒரு முறை அழைத்தால் இவர் வர மாட்டார், பல முறை அவருக்கு போன் செய்து புடுங்கி வாயில் போட்டு கொள்ள வேண்டும். அப்போது தான் வருவார்" என்று கூறினார். என்ன எழவுடா இது, சே!

உறவினர் கூறியதை போல, பல முறை போன் செய்து கேட்டு கொண்டதன் பிறகு நடு வயதை தாண்டிய ஒருவர் வந்தார். மின் அழுத்தத்தால் choke எல்லாம் பழுதாகி விட்டதால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்றார். ட்யூபில் பிரச்னை இல்லை, choke தான் பிரச்னை என்றும் கூறினார். எதில் பிர்ச்னையாக இருந்தால் எனக்கென்ன, எனக்கு விளக்கு எரிய வேண்டும் அவ்வளவுதான். கடைசியில் எல்லா choke களையும் புதிதாக மாற்றியபின் 820 ரூபாய்க்கு பில்லை கொடுத்தார். நான் மயங்காத குறைதான்.

அவரிடம், 'ஏன் சார் இந்த வேலையை செய்ய யாருமே வரவில்லை?' என்று கேட்டேன். அப்போது ஒரு மிக பெரிய உண்மையை கூறினார்.

அதாவது, இந்த காலத்து இளைஞர்களுக்கு எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், கார்பெண்ட்டர் போன்ற வேலைகளை செய்வதில் விருப்பம் இல்லை. அவைகள் எல்லாம் தரக்குறைவான வேலைகள் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நல்ல எலக்ட்ரீஷியனோ, நல்ல ப்ளம்பரோ கிடைப்பது மிக அபூர்வமாக இருக்கிறது. இருப்பவர்கள் அனைவரும் நடு வயதுக்காரர்களாக இருக்கிறார்கள். இப்போது தான் தெருவுக்கு நான்கு பொறியியல் கல்லூரிகள் வந்து விட்டனவே. அதனால் எல்லோரும் பி.ஈ. படித்து விட்டு இஞ்ஜினியராக இருக்கத்தான் விரும்புகிறார்கள். பிறப்பில் இருந்து இறக்கும் வரை அனைத்துமே இலவசமாக கிடைக்கிறது. எதற்கு உடலை வறுத்தி உழைக்க வேண்டும் என்ற நினைப்பு வந்து விட்டது இவர்களுக்கு.


இந்த பொறியியல் கல்லூரிகளின் நிலைமை பரிதாபம். பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது. இந்த கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பொறியாளர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இருந்தாலும் யாரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ' நான் உடலை வறுத்தி வேலை செய்ய மாட்டேன், ஆனால் மற்றவர்களை வேலை வாங்கும் supervisor வேலையை மட்டும் செய்வேன்' என்ற எண்ண போக்கு வந்து விட்டது இவர்களுக்கு.

இது ஒரு பக்கம் இருக்க, மெட்ராஸில் எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் வெயிட்டர்கள், க்ளீனர்கள் எல்லோரும் வட இந்தியர்களாகவும், நேப்பாலிகள், பங்களாதேஷ்காரர்கள் என்றும் இருக்கிறார்கள். உண்மையிலேயே இவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். மெட்ரோ ரெயில் வேலையில் முக்கால்வாசி தொழிலாலர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நமது தமிழக இளைஞர்களோ, டாஸ்மாக் மதுக்கடையில் மயங்கி கிடக்கிறார்கள். இவர்களோ, உழைத்து வாழ்க்கையில் முன்னேருகிறார்கள்.

தஞ்சையில் நிலம் வைத்திருக்கும் எனது நண்பர், கூலிக்கு ஆள் கிடைக்காமல் விவசாய தொழிலையே விட்டு விடலாம் என்ற நிலையில் இருக்கிறார். யாருமே வயலில் உழுது வேலை பார்க்கும் தொழிலுக்கு வர மாட்டேன் என்கிறார்களாம். ஆனால் எல்லா சாராயக்கடைகளும் நிரம்பி வழிகின்றன, அதுவும் காலை 6 மணி முதல்.

இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. ஆனால் கண் முன்னே தமிழ்நாட்டின் ஒரு தலைமுறையே நாசமாகி கொண்டிருக்கிறது என்பது தான் வெட்கக்கேடான நிதர்சனம். யார் சொன்னது வேலை இல்லை என்று, வேலை செய்யும் மனப்பான்மை தான் இங்கு இல்லை. மற்றவனை ஏமாற்றி பணம் பறிக்கும் வழியை தான் இங்கு யோசிக்கிறார்கள். உழைக்காமல் சீக்கிரம் பணக்காரன் ஆவதை பற்றி நமது இளைஞர்கள் யோசிக்கிறார்கள். கூத்தாடிகளின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய தயங்காத இவர்கள், உழைத்து முன்னேறும் வழியை ஏன் தேட மறுக்கிறார்கள்? இன்றைய தேதியில் நல்ல எலக்ட்ரீஷியன், நல்ல ப்ளம்பர், நல்ல கார் மெக்கானிக், நல்ல ஏ.சி. மெக்கானிக், ஏன் நல்ல சமையற்காரர் கிடைப்பது கூட மிக மிக அபூர்வமாகி விட்டது. இந்த தொழில்களுக்கு என்ன குறைச்சல்? உண்மையிலேயே, ஒரு எலக்ட்ரிக்கல் இஞ்ஜினியர் வாங்கும் சம்பளத்தை விட ஒரு நல்ல எலக்ட்ரீஷியன் நிறைய வாங்குவார்  என்றே தோன்றுகிறது. ஏனென்றால், அவர்களுக்கு தான் இப்போது கிராக்கி.

விழித்துக்கொள்ளுங்கள் தமிழக இளைஞர்களே! இல்லையென்றால் உங்களது வேலைகளை பீகாரிகளும் நேப்பாலிகளும் அபகரித்து கொண்டு அவர்கள் நாளை பெரிய தொழில் அதிபர்களாகி விடுவார்கள்.


13 comments:

Siva said...

பரிச்சை நேரத்தில் ரிலீஸாகும் படம் பப்படமாகும் என்பது போல தவறான டைமிங்கில் அறிவுரைப் பதிவு எழுதிவிட்டீர்கள் சார்.

டமில் இளைஞர்கள் எல்லோரும் "குட்டிதல" ஹாஸ்டேகை உலக லெவலில் கொண்டு போய் சாதனை செய்ய டிவிட்டரில் பிஸியாக உள்ளார்கள்.அதை விடுத்து இந்த மாதிரி சின்ன விடயங்களுக்கு அவர்களுக்கு இப்போதைக்கு டைமில்லை மன்னிக்கவும். அடுத்து இந்த மாதிரி தமிழகத்துக்கு "தலை" போகிற பிரச்சனை இல்லாத நேரத்தில் அறிவுரை சொல்ல முயற்சிக்கவும்.

Anonymous said...

thoughtful post.

Ramesh Vinayagam
USA

காரிகன் said...

வாழ்த்துக்கள் குரு,

இன்றைய தேதிக்கு மிக அவசியமான விழிப்புணர்வை கொடுக்கும் பதிவு. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். படிப்பதை பாதியில் நிறுத்தமுடியாத எழுத்து.உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் இதுபோன்ற சமூக அக்கறை அடிநாதமாக இருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. அதற்காக இதோ பிடித்துக்கொள்ளுங்கள் எனது பாராட்டை.

உழைப்பில்லாமல் வாழும் சுகம் அறிந்துவிட்டால் பின் அதிலிருந்து வெளியேறுவது போதையிலிருந்து மீண்டு வருவது போலத்தான். சிறிய வயதிலேயே சில சிரமங்களுக்கு அறிமுகம் ஆகாவிட்டால் வாழ்க்கை தரும் மிகப் பெரிய அதிர்சிகளை எப்படி எதிர்கொள்ள முடியும்?

பகட்டான வாழ்க்கை முறை, சினிமா (நடிகர்கள்) காட்டும் செயற்கை உலகம், இந்த நிமிட சுகம், எல்லாவற்றையும் குறுகிய காலத்திலேயே வசப்படுத்தும் வேகம்... ஒருவேளை இந்த காலத்தில் பிறந்திருந்தால் நாமும் இப்படித்தான் இருப்போமோ?

உங்கள் கேள்விகள் இன்று அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சாதாரன நிகழ்வை விவரிக்கும் போக்கில் நீங்கள் தொட்டுச் சென்றிருக்கும் சமூக சாடல் அபாரம். வாழ்த்துக்கள்.

Expatguru said...

மிக்க நன்றி, காரிகன். நான் எழுதுவது இருக்கட்டும், அதை நீங்கள் அராய்ந்து அழகாக கருத்து வெளியிட்டிருக்கும் நடைதான் ரசிக்க‌ வைக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

"வேர்வையே வரக்கூடாது... சுகவாசியாக இருக்க வேண்டும்... " இது தான் இன்றைய.........


........ பெற்றோர்களின் முடிவு...

முடிவில் நீங்கள் சொல்வது நடக்கக் கூடும்... பிழைக்கத் தெரிந்தவர்கள்...

Rajakamal said...

true, true, true, whatever you written here all are true. I also had same experience, if we workers we have to get other state people, same situation because all are educated people. if any political part call, thousands of peoples coming from where, still wondering about this. any done a good job, I don't know it will reach the peoples or not.

Unknown said...

A GOOD ARTILE.THIS SITUATION PREVAILS IN ALL CITIES. CARPENTERS ALSO DO NOT COME FORWARD TO DO A SMALL REPAIR IN THE KITCHEN...

Unknown said...

WELL ONE COULD NOTICE THAT CARPEMTERS PLUMBERS ALSO ARE NOT PREPARED TO DO SIMPLE REPAIRS LIKE LEAKING OF A TAP... A SMALL CARPENTER WORK IN THE KITCHEM\N....

G.M Balasubramaniam said...

பொறி இயல் கல்லூரிகளில் படித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்களில் பலருக்கும் ஒர் ஃப்யூஸ் கூட மாற்றத்தெரியாது. இந்த மாதிரியான சின்ன வேலைகளுக்கு பொருட்களின் விளை கூட ஒருமுழுநாள் சம்பளம் கிடைப்பதானால் சிலர் வரலாம்.எல்லோருக்கும் உடை அலுங்காமல் வேலை செய்யவே பிடிக்கும்.

msuzhi said...

கழகங்களின் கைவேலை.

Expatguru said...

தமிழ் மக்களை கழகங்கள் குட்டிச்சுவராக்கிய கைவேலை என்பது தான் நிதர்சனம், துரை.

சார்லஸ் said...

குரு சார்

இன்றைய இளைஞர்கள் உழைக்கத் தயங்குகிறார்கள். 30 வயதுக்குள் ஒழுங்கான ஒரு வேலை தேடிக் கொள்ளவில்லை என்றால் கடைசிவரை தேடல் என்பதையே தொலைத்து விடுகிறார்கள். வாழ்க்கை தானாகவே தொலைந்து விடுகிறது. வேலை பார்க்காமலேயே வாழ்க்கையை ஓட்டும் சொந்த பந்தங்களை பார்த்திருக்கிறேன் . அவர்களுக்கு நாம் அறிவுரை சொன்னாலும் பிடிக்காது. ஆனால் வேலை ஆயிரம் கொட்டிக் கிடக்கிறது. பார்க்கத்தான் அவர்களுக்கு மனசில்லை. பயனுள்ள வாழ்க்கை வாழும் வழிமுறையை பள்ளிக்கூடங்கள் சொல்லித் தருவதில்லை.

Expatguru said...

சரியாக சொன்னீர்கள் சார்ல‌ஸ்.