Wednesday, 6 May 2015

சலாம் பம்பாய் - 8

பம்பாய் நகரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கை பாடமாக அமைந்தன என்றால் மிகையாகாது. சில நினைவுகள் மறக்க முடியாதவை. சிந்திக்க வைப்பவை. எனது நண்பன் சாமியுடன் ஏற்பட்ட நட்பும் அந்த வகையை சார்ந்தது தான்.

(இதன் முந்தைய பதிவுகளை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்). சாமியின் உண்மை பெயர் சுப்ரமணியன். எதற்காக அவனுடைய பெயர் சாமி என்று மாறியது என்று எனக்கு தெரியாது. ஆனால் மற்ற நண்பர்கள் அனைவரும் அவனை சாமி என்று கூப்பிட்டதால், காலப்போக்கில் சுப்ரமணியன் என்ற பெயர் மறைந்து சாமி என்பதே அவனுடைய‌ பெயராகி விட்டது.

மாட்டுங்கா பார்வதி நிவாஸில் வசித்த காலம் மறக்க முடியாத ஒன்று. என்னை போன்று பம்பாய்க்கு பிழைக்க வந்தவர்களுக்கு paying guest வசதி ஒரு வரப்பிரசாதம். மாட்டுங்காவில் சாப்பாட்டுக்கு பிரச்னையே கிடையாது. Concernsல் எட்டு ரூபாய்க்கு சாப்பாடு போடுவார்கள் (இது எண்பதுகளில்). சாப்பிட்டு விட்டு கீழே நண்பர்களுடன் அரட்டை அடிப்பது ஊரிலிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கு ஒரு வடிகால். பல நண்பர்கள் கிடைத்தார்கள். அங்கு தான் சாமியை சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்கும் பல நாட்கள் பழகியதை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

பார்வதி நிவாஸில் இருந்து இரண்டு கட்டிடங்கள் தள்ளி சந்தானம் என்ற இன்னொரு நண்பன் இருந்தான். மாடி வீட்டு மாது மாதிரி உண்மையிலேயே மாடிப்படியின் கீழ் இருந்த இடத்தில் (landing) அவன் paying guestஆக இருந்தான். அவனுடைய வீட்டுக்காரனும் தமிழன் தான். "சார், ராத்திரி தூங்கும் போது மூட்டை பூச்சி கடிக்கிறது, அதற்கு ஏதாவது செய்யுங்கள்" என்று சந்தானம் ஒரு முறை வீட்டுக்காரனிடம் சொல்ல அதற்கு அவன் "நீ குடுக்குற 60 ரூவாய் வாடகைக்கு ஹேமமாலினியா வந்து டான்ஸ் ஆடுவா?" என்று கேட்க ஒரே காமெடி. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்.

எனது வீட்டுக்காரன் 400 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக வாடகையை உயர்த்தியவுடனே நான் வீட்டை காலி செய்து விட்டேன். நான் அப்போது வாங்கிய இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் கட்டுப்படி ஆகவில்லை. எதேச்சையாக சாமியும் வீடு தேடிக்கொண்டிருந்த போது இருவரும் ஸி.ஜி.எஸ். காலனியில் 500 ரூபாய்க்கு (ஆளுக்கு 250 ரூபாய்) ஒரு அறையில் paying guestஆக குடி பெயர்ந்தோம்.

சாமிக்கு ஒரு பழக்கம் இருந்தது. திடீரென்று இரவு தூங்கும் போது உளற ஆரம்பித்து விடுவான். அது என்னவென்று தெரியாது. ஆழ் மனதின் வெளிப்பாடுகளா என்றும் தெரியாது. எனக்கோ, தூக்கத்தில் இருந்து ஒரு முறை எழுந்து விட்டால் மீண்டும் தூக்கம் வராது. இப்படி அவனால் பல இரவுகள் தூக்கத்தை இழந்திருக்கிறேன். காலையில் அவனிடம் கேட்டால் அவனுக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியாது. பார்த்தால் பாவமாக இருக்கும். இப்படி நடக்கும் நாட்களில் எல்லாம் மாலையில் ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுப்பான். சில நாட்கள் "டேய், நேத்திக்கு கூட நீ உளறின" என்று கூறி ஐஸ்க்ரீம் சாப்பிட்ட அனுபவமும் உண்டு.

நாங்கள் சுற்றாத இடமே இல்லை. அரோரா தியேட்டரில் தமிழ் படம் பார்க்க போய் திருநங்கைகளிடம் மாட்டி கொண்ட அனுபவம், சனிக்கிழமை இரவிலிருந்து வயிறை காய போட்டு ஞாயிறு மதியம் பெரிய உடுப்பி ஹோட்டலில் சாப்பாடை முட்ட முட்ட சாப்பிட்டு, நடக்க முடியாமல் share taxiல் ஏறி வந்தது, ஆஸ்திக ஸமாஜம் குருவாயூரப்பன் கோவில் வாசலில் காஸெட் விற்கும் பிளாட்ஃபார கடையில் ஓசியில் ஏசுதாஸ் பாடல்களை கேட்டது என்று மிக ஜாலியாக வாழ்க்கை ஓடி கொண்டிருந்தது.

சாமி ஒரு நிறுவனத்தில் software programerஆக வேலையில் இருந்தான். மிக புத்திசாலி. ஆனால் பாவம் வாய்ப்பு கிடைக்காததால் குறைந்த சம்பளத்தில் இருந்தான். வாழ்க்கையில் சாதித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கூறுவான். ஒரு வேளை அதன் வெளிப்பாடு தான் இரவில் அவனுடைய உளறல்களோ என்னவோ.

காலத்தின் போக்கை யாரால் மாற்ற முடியும்? எனக்கு பம்பாயில் இருந்து சூரத்துக்கு மாற்றலாகி விட்டது.  நண்பனை பிரிகிறோமே என்று மிகவும் மனது கஷ்டப்பட்டது. என்ன செய்வது? பிழைப்பு என்று ஒன்று உள்ளதே. உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் என்று வாலி அன்றே எழுதி விட்டாரே. அந்த காலத்தில் கைப்பேசி கூட கிடையாது. அங்கங்கே மஞ்சள் நிறத்தில் எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி, பி.ஸி.ஓ என்று பூத்கள் திறந்திருப்பார்கள். அங்கு சென்று தான் பேச முடியும். சூரத்துக்கு சென்ற பிறகு சில நாட்கள் சாமியுடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தேன். சில நாட்களில் சாமிக்கு மஸ்கட்டில் வேலை கிடைத்து விட்டது. ஒரு வழியாக அவனது வாழ்வில் வசந்தம் வீசப்போகிறது என்பதை நினைத்து எனக்கு சந்தோஷம் தான்.

அந்த காலத்தில் வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்றால் மிக மிக அதிகமாக பணம் செலவாகும். மாதத்துக்கு ஒரு முறை எனக்கும் சாமிக்கும் கடித போக்குவரத்து இருக்கும். ஏரோக்ராமில் தான் எழுதுவேன். அவனும் அதற்கு தவறாமல் பதில் போடுவான். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் உருண்டோடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது. திடீரென்று சாமி ஒரு நாள் மஸ்கட்டில் இருந்து எனது அலுவலகத்துக்கு போன் செய்தான்.

ஒரு மாதம் கழித்து தான் இந்தியாவுக்கு வரப்போவதாகவும் பம்பாய் விமான நிலையத்தில் தன்னை வந்து சந்திக்குமாறும் கேட்டுக்கொண்டான். எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பல மாதங்களுக்கு பிறகு நண்பனை பார்க்க போகிறோம் அல்லவா? கண்டிப்பாக வருவதாக உறுதி அளித்தேன். அன்றே இரயில் நிலையத்துக்கு சென்று முன் பதிவும் செய்து விட்டேன்.

நாட்கள் நெருங்க நெருங்க நண்பனை பார்க்கும் ஆவல் அதிகரித்து கொண்டே சென்றது. அவனுக்கு ஒரு நல்ல பரிசு ஏதாவது வாங்கி செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

நான் சூரத்தில் shiftல் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த தனியார் நிறுவனத்தில் சட்டம் என்னவென்றால், shiftல் இருக்கும் ஒருவர் அடுத்த shiftல் வருபவர் வரும் வரை இடத்தை விட்டு நகரக்கூடாது. அப்படி அடுத்த shiftல் யாரும் வரவில்லை என்றால் இரண்டு shiftகள் செய்து தீர வேண்டும். பல நாட்கள் மூன்று shiftகள் கூட செய்திருக்கிறேன்.

மறுநாள் பம்பாய்க்கு செல்ல வேண்டும். எனக்கு அதற்கு முந்தைய இரவு night shift. காலை 6 மணிக்கு வேறு ஒருவர் வந்து என்னை செய்த பிறகு வீட்டுக்கு சென்று குளித்து விட்டு உடனே பம்பாய்க்கு கிளம்ப வேண்டும். இரவு முழுவதும் எனக்கு இருப்பே கொள்ளவில்லை.

காலையில் தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. 6 மணிக்கு வர வேண்டியவன் உடல்நலம் சரி இல்லாததால் வர முடியாமல் போய்விட்டது. அதனால், அன்று பகலிலும் நான் duty செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி விட்டேன்.

நண்பனை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற வெறுப்பில் இருந்தேன். இரவு முழுவதும் தூக்கம் இல்லை, பகலிலும் வேலை என்று மிகவும் அசதியில் வீட்டுக்கு சென்ற உடனேயே தூங்கி விட்டேன்.

சாமியின் சொந்த ஊர் ஊட்டி. அவன்  வீட்டு முகவரியோ, தொலைபேசி எண்ணோ என்னிடம் இல்லாததால் அவனிடம் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

சில நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் ஒரு இன்லண்ட் லெட்டர் எனக்கு வந்தது. எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. யார் அனுப்பினார்கள் என்று முகவரி எழுதாமல் வந்திருந்தது. அதை பிரித்து பார்த்தேன். சாமி தான் அதை எழுதியிருந்தான்.

ஆரம்பமே அதிரடியாக இருந்தது. "துரோகி" என்று ஆரம்பித்து சரமாரியாக என்னை திட்டி தீர்த்திருந்தான். நான் விமான நிலையத்துக்கு வருவேன் என்று தான் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததாகவும் இப்படி நம்பிக்கை துரோகம் செய்வேன் என்று தான் சிறிதும் நினைக்கவில்லை என்றும் கன்னாபின்னாவென்று ஏதேதோ எழுதியிருந்தான். 

"நீ வரமாட்டாய் என்று கூறி இருந்தால் நான் என் வேலையை பார்த்து கொண்டு சென்றிருப்பேனே, ஏன் இப்படி என்னை அலைய வைத்தாய்" என்றெல்லாம் என்னை திட்டி தீர்த்திருந்தான். கடைசி வரியை படித்த போது என்னால் நம்பவே முடியவில்லை.

"இப்படி ஒருவனின் நண்பனாக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன். இத்துடன் நமது நட்பு முடிந்தது. Goodbye" என்று எழுதியிருந்தான்.

ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னதான் என் மேல் கோபம் இருந்தாலும் இப்படியா நட்பை முறித்து கொள்வது?  நான் வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை என்று அவனுக்கு எப்படி புரிய வைப்பது? பல நாட்கள் இதை நினைத்து மனம் மிக மிக வருந்தியது. என் தரப்பில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே இப்படி எழுதியிருக்கிறானே. அதுவும் உப்பு சப்பு பெறாத ஒரு காரணத்துக்காக நட்பையே முடித்து கொள்கிறானே என்று மனம் வருந்தினேன்.

புண்பட்ட மனதுக்கு காலத்தை போன்ற ஒரு மருந்து எதுவும் கிடையாது. அதற்கு பிறகு பல முறை பம்பாய்க்கு சென்றிருக்கிறேன். பழைய நல்ல நினைவுகள் எல்லாம் வரும். என்ன செய்வது?

இந்த அனுபவம் எனக்கு பல பாடங்கள் கொடுத்தன. யார் மீதும் அதீதமாக அன்பு வைத்தலே தவறோ என்னவோ. ஆழ்ந்த நட்பு என்று உலகில் ஒன்றுமே கிடையாது. எல்லாமே இரயில் பயண நட்பை போன்றது தான். பயணம் முடிந்த பின் நமது பாதையும் மாறி விடும், அது போல தான் இந்த "ஆழ்ந்த நட்பு" என்பது. நான் சொல்வது சிலருக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் உண்மை அதுதான். ஏன் சொல்கிறேன் என்றால், எதிர்பாராமல் ஒரு பிரிவு ஏற்பட்டால் மனதை மிகவும் பாதித்து விடுகிறது. 

பார்க்க போனால், வாழ்க்கையில் ஒன்றுமே நிரந்தரமில்ல. வாழ்க்கையே நிரந்தரமில்லை. நாம் எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம் என்று நினைக்கிறேன். "ஆழ்ந்த" நட்பை விட "நல்ல" நட்பே உயர்ந்தது. இருக்கும் வரை புன்முறுவலோடு யார் மனதையும் புண்படுத்தாமல் ஆரோக்கியமாக இருக்கும் நட்பே உண்மையான நட்பு. நாம் கஷ்டத்தில் இருக்கும் போது நமக்கு தன்னலம் பாராமல் உதவுபவர்களின் நட்பு தான் உண்மையான நட்பு. மற்றபடி, சிலர் கூறுவதை போல, "அவனும் நானும் 40 வருட காலமாக நண்பர்களாக இருக்கிறோம்" என்று யாராவது சொன்னால் - சொல்வதற்கு என்ன இருக்கிறது, வாழ்க வளமுடன் - அவ்வளவுதான். நான் நேசிக்கும் பம்பாய் தந்த பல பாடங்களில் இதுவும் ஒன்று.

"பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா" என்று கண்ணதாசன் சும்மாவா எழுதியிருக்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


10 comments:

ப.கந்தசாமி said...

எனக்கும் சமீபத்தில் இந்த மாதிரியான ஒரு நட்பு முறிவு ஏற்பட்டது. இந்த மாதிரி நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சார்லஸ் said...

குரு சார்

உங்கள் அனுபவம் பெரும்பாலும் எல்லோருக்கும் நடந்திருக்கும் . எனக்கு இந்த மாதிரியான நட்பு முறிவுகள் ஏராளம். நீங்கள் அதன் பிறகு அந்த நண்பரை பார்க்கவேயில்லை. நான் நட்பு முறித்த நண்பர்களை அடிக்கடி சந்திப்பேன். பார்வையை விலக்கிக் கொள்வார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. உங்களின் அனுபவம் சில நினைவுகளை மீட்டெடுக்கிறது.

காரிகன் said...

குரு,

பாராட்ட வார்த்தைகளே வரவில்லை. அத்தனை இயல்பான நெகிழ்ச்சியூட்டும் எழுத்து. மிக மென்மையான மனதை வலிக்கச் செய்யும் பதிவு. நீங்கள் எழுதியிருக்கும் ----"ஆழ்ந்த" நட்பை விட "நல்ல" நட்பே உயர்ந்தது. இருக்கும் வரை புன்முறுவலோடு யார் மனதையும் புண்படுத்தாமல் ஆரோக்கியமாக இருக்கும் நட்பே உண்மையான நட்பு. ----என்ற கருத்து அபாரம்.

சில சமயங்களில் நம்மை நன்றாக அறிந்தவர்களே நம்மை உதாசீனப் படுத்தும் குரூரம் ஒரு நிஜம். நண்பர்கள் எல்லோருமே நம் வாழ்வின் கடைசி வரை வருவதில்லை என்ற எண்ணத்தில் நான் நம்பிக்கை கொண்டவன். நட்பு அவசியம்தான் ஆனால் அதுவே வாழ்கையின் மிக முக்கிய அம்சம் கிடையாது என்பதை உங்களின் இந்தக் கட்டுரை மெய்ப்பிக்கிறது.

என்னை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்ற பல நண்பர்களின் நினைவை ஏற்படுத்திய ஒரு ஆழமான பதிவு.

saamaaniyan said...

நண்பரே...

காரிகன் தனது பின்னூட்டத்தில் உங்களை பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டிருந்தார். காரிகனின் பாராட்டு சரியானதாக இருக்கும்...

இந்த பதிவினை படித்து கலங்கிவிட்டேன்... காரணம்,

சமீப காலமாக நான் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று... " நிலையான நட்பென்பது நிரந்தரமாய் கிடையாது ! " என்பது ! நீங்கள் குறிப்பிட்டதை போல பலர் இதில் வேறுபாடு கொள்ளலாம் ஆனால் என் அனுபவம் உங்களுடையதை ஒத்ததே !

மிக சரளமான, நீரோட்ட எழுத்துநடை !

தொடருவோம்

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


( என் பதிவு பற்றிய உங்களின் கருத்தினை அறிய மிகவும் ஆவலாக உள்ளேன். எனது வலைப்பூ பட்டியலில் உங்கள் தளத்தையும் இணைத்துள்ளேன். )

Expatguru said...

மிக்க நன்றி சாம். பல நாட்களாக வலைப்பக்கமே வராமல் இருந்தேன். உங்களை போலவும் காரிகன் போன்ற அன்பர்கள் கொடுக்கும் உற்சாகத்தினால் எழுதவதை நான் நிறுத்தக்கூடாது என்ற எண்ணம் வருகிறது.

saamaaniyan said...

குரு...

நீங்கள் தான் சென்னை தமிழன் என்பதை இப்போதுதான் அறிந்தேன் ! இனிய அதிர்ச்சி...

நீங்கள் என் தளத்தில் பதிந்த பின்னூட்டத்தில் உங்கள் பெயரை சுட்டிய போதெல்லாம் உங்கள் தளத்தினுள் நுழைய முடியாததால் உங்களை யார் என்று அறிய முடியவில்லை !

மூத்த பதிவாளரும் மிக தரமான எழுத்துக்கு உரியவருமான நீங்கள் சோர்வடையவோ எழுதுவதை நிறுத்துவதோ கூடாது நண்பரே !

எனது எழுத்தின் முயற்சிக்கு நண்பர் காரிகன் கொடுக்கும் ஊக்கமும் ஒரு காரணம் என்பதை எங்கும் சொல்வேன் !

தொடருவோம்...

காரிகன் said...

குரு மற்றும் சாம்,

நான் எப்போதுமே எனக்குப் பிடித்தமானவர்களின் வலைப்பூவுக்கு சென்று வருவதுண்டு. அதைப்போல ஒரு சமயத்தில்தான் இங்கு வந்தபோதுதான் சாம் என்னைப் பற்றி சொல்லியிருந்தைக் கண்டேன். ஆச்சர்யப்பட்டேன். சாம் பதிவை முதலில் படித்த போதே எனக்கு உங்களின் நினைவுதான் வந்தது. இருவருமே ரசிக்கத்தக்க வகையில் அலுப்பு தட்டாத நடையில் உங்களின் அனுபவங்களை வெகு இயல்பாக எழுதுகிறீர்கள். இதைதான் சாம் இங்கு குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். என்னைக் கவர்ந்த எழுத்து எதுவாக இருந்தாலும் அதை நான் உடனே மற்றவர்களுக்கு சொல்லிவிடுவேன். சிலரே இதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். சாம் ஒரு அருமையான மனிதர். என்னைப் பற்றி இங்கே சொல்லவேண்டிய அவசியமே இல்லாத போது என்னைக் குறிப்பிட்ட அவரது பெருந்தன்மையை நான் வியக்கிறேன்.

குரு, நீங்கள் எழுதுவதை குறைத்துக் கொள்ளவேண்டாம். அபாரமான எழுத்து உங்களுடையது. ஒரு காலத்தில் நாம் என்னதான் அற்புதமாக எழுதினாலும் பத்திரிகைகள் அவற்றை பிரசுரம் செய்ய விரும்பியதில்லை. இன்றோ நமக்கு இணையம் இலவசமாக இந்தக் கொடையை வழங்கியிருக்கின்றது. அதை புறக்கணிக்கவேண்டாம். இப்போதும் எழுதாவிட்டால் பின்பு எப்பொழுதுமே முடியாது. எனவே நிறைய எழுதுங்கள். இணையம் உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல் வெறும் இரண்டு மூன்று வரிகள் கொண்ட பதிவுகளுடன் உலா வருகிறது, அது ஆரோக்கியமானதல்ல.

Expatguru said...

உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி காரிகன். கண்டிப்பாக நீங்கள் கூறியதற்காகவாவது விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

saamaaniyan said...

வணக்கம்

தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

நன்றி
சாமானியன்

saamaaniyan said...

வணக்கம்

இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

நன்றி