Friday, 20 December 2013

மெரீனா மாலைகள்

உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு தனித்துவமான அழகும் வசீகரமும் இருக்கும் இடம் ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக மெட்ராஸ் மெரீனா கடற்கரை என்பதில் சந்தேகமில்லை. நான் பிறந்து வளர்ந்த மெட்ராஸில் மெரீனா ஒரு மறக்க முடியாத அங்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறையும் மெரீனா கடற்கரையை கடக்கும்போது நினைவலைகள் பசுமையாக என் மனதை ஆட்கொள்கின்றன.

எழுபதுகளில் தொலைக்காட்சி என்றால் என்னவென்று தெரியாத வயது. வீட்டில் திரைப்படங்களுக்கு மிக அரிதாகவே கூட்டி செல்வார்கள். எனது தந்தை எங்களை அடிக்கடி கூட்டி செல்லும் இடம் இந்த மெரீனா கடற்கரைதான்.

வானொலி நிலையத்தின் முன் இருக்கும் கலங்கரை விளக்கம் (லைட் ஹெளஸ்) அப்போது கட்டப்படவில்லை. அப்போதெல்லாம் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் கூரையில் தான் லைட் ஹெளஸ் இருந்தது. மண் எண்ணெய் ஊற்றி தான் அதன் விளக்கை ஏற்றுவார்கள். வாகனங்களும் மெரீனாவில் குறைவாக இருந்ததால் அதன் வெளிச்சம் பிரகாசமாகவே இருந்தது. அந்த பிரகாசமான வெளிச்சமே அந்த லைட் ஹெளஸுக்கு வினையாகி விட்டது. முதலாம் உலக போரின் போது எம்டன் என்ற ஜெர்மானிய கப்பல் மெட்ராஸில் குண்டு வெடித்தார்கள் அல்லவா, அப்போது இந்த லைட் ஹெளஸை தான் தாக்கினார்கள். சீராக அணைந்து எரியும் அந்த வெளிச்சத்தை பார்க்கவே பரவசமாக இருக்கும். 

மெரீனாவுக்கு சென்று வருவதே எங்களுக்கு ஒரு குதூகலமான அனுபவமாக இருந்தது. இப்போது உள்ளது போல குப்பை மேடாக இல்லாமல் உண்மையிலேயே சுத்தமாக இருந்தது. பட்டாணி, சுண்டல், முறுக்கு போன்றவற்றை விற்கும் பையன்கள்,  குறி சொல்லும் குறத்தி, ஐஸ்க்ரீம் விற்பவன் என்று அப்போதும் இருந்தார்கள். இப்போது கடிகாரம் இருக்கும் இடத்தில், ஐ.ஜி. அலுவலகத்தின் எதிரில் அழகிய தாமரை சிற்பம் ஒன்று இருந்தது. மணலில் உட்கார்ந்து எனது அப்பா, அம்மா இருவரும் எதையாவது அரட்டை அடித்து கொண்டிருப்பார்கள். நானும் எனது உடன் பிறந்தவர்களுடன் கடற்கரை ஓரத்தில் நின்று கொண்டு அலைகளில் கால்களை நனைத்து கொண்டிருப்போம். ஒவ்வொரு அலையும் வந்து கால்களை தொடும்போதும் மனம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று வரும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.





எங்கள் வீட்டில் சிவப்பு நிறத்தில் பழைய ஹெரால்டு கார் இருந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த அந்த காரை விற்று விட்டு புதிதாக ஒரு ஃபியட் காரை எனது தந்தை வாங்கினார். புதிய கார் வாங்கி ஒரு வாரம் இருந்திருக்கும். 


ஒரு நாள் மாலை குடும்பத்தினர் அனைவரும் மெரீனாவுக்கு சென்றோம். போகும் வழியில் லஸ் கார்னரில் உள்ள பாலத்தின் மேல் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று அருகில் சென்று பார்த்தால் எங்களுக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. எங்கள் வீட்டில் பல வருடங்கள் இருந்து யாரிடமோ ஒரு வாரத்துக்கு முன்பு விற்ற அந்த ஹெரால்டு கார் திகுதிகுவென்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 

என்னவென்று விசாரித்ததில், காரை வாங்கிய நபர் ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றாமல் ஒரு வாரமாக ஓட்டியதால் இஞ்ஜின் சூடாகி தீ பற்றி கொண்டது தெரிய வந்தது. பல வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்த கார் (இப்போது விற்று விட்டாலும்) எங்கள் கண் முன் எரிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் எங்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அங்கிருந்து புறப்பட்டு மெரீனாவுக்கு சென்றோம். அன்று வெகு நேரம் எரிந்து போன அந்த காரை பற்றியே அனைவரும் பேசி கொண்டிருந்தோம். 

எங்களது பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது நாங்கள் மணலில் ஒரு சிறிய மலையை கட்டி கொன்டிருந்தோம். அப்போது தான் விதி விளையாடியது. பேசி கொண்டிருந்த எனது தந்தை, பேச்சு வாக்கில் தனது கையில் இருந்த தங்க‌ மோதிரத்தை கழற்றி மறுபடியும் விரலில் போட்டு மாற்றி மாற்றி எடுப்பது போடுவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் நன்றாக இருட்டி விட்டிருந்தது. நாங்கள் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப எழுந்திருக்கும் போது தான் திடீரென்று எனது தந்தை தனது விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை என்று கூறினார். அந்த இடத்தை கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் தேடியும் கிடைக்கவில்லை. மணலில் எங்கோ புதைந்து போயிருந்தது. கடைசியில், எங்களை அந்த இடத்தில் காவலுக்கு வைத்து விட்டு, வீட்டுக்கு சென்று ஒரு பெரிய சல்லடையையும் முறத்தையும் டார்ச் லைட் ஒன்றையும் எனது பெற்றோர் எடுத்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த மணலை சல்லடை போட்டு (!) தேடி கடைசியில் ஒரு வழியாக மோதிரத்தை கண்டு பிடித்தபின் தான் உயிர் வந்தது. ஒரே நாளில் இப்படி இரண்டு வித்யாசமான அனுபவங்கள்!


1975ம் ஆண்டில் சென்னையில் அடை மழை பெய்தது. அந்த ஆண்டு அடித்த புயலில் சென்னை கடற்கரையின் மணல் முழுவதும் தண்ணீரில் மூழ்கி போய் கடல் அலைகள் விவேகானந்தர் இல்லம் வரை அடித்தது. நானும் எனது அண்ணனும் அதை பார்க்க கிளம்பி சென்றோம். அங்கே பார்த்தால் எங்களை போலவே நூற்றுக்கணக்கான மக்கள்  மழையில் நனைந்தபடியே மெரீனா கடற்கரை சாலையில் அடிக்கும் அலைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தார்கள். காணக்கிடைக்காத காட்சி அல்லவா? அதற்கு பிறகு சுனாமி அடித்த போது தான் அதே போல அலைகள் சாலை வரை வந்தன. 

1977ல் புதிய லைட் ஹெளஸை கட்டிய பிறகு பழைய லைட் ஹெளஸில் இருந்து விளக்கு ஏற்றுவதை நிறுத்தி விட்டார்கள். அதே போல அந்த அழகிய தாமரை சிற்பத்தையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் கடிகாரத்தை வைத்து விட்டனர். நிரந்தரமாக அழிந்துவிட்ட நமது  பல பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. ஐ.ஜி. அலுவலகத்தையும் இப்போது வேறு எங்கோ மாற்றி விட்டார்கள். நல்ல வேளை அந்த அழகிய வெள்ளை கட்டிடத்தை இடித்து அடுக்கு மாடி வீடுகளை கட்டவில்லை.

எண்பதுகளில் காந்தி சிலையை சுற்றி பூங்காவை அமைத்தனர். காலை வேளையில் முக்கியஸ்தர்கள் நடை பயில நடை பாதையை சீரமைத்தனர். 1987ம் வருடம் மெட்ராஸில் மிக கடுமையான வறட்சி. தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் தவித்தபோது மெரீனா கடற்கரையில் புதிதாக கிணற்றை தோண்டினார்கள். அதிலிருந்து வற்றாத குடிநீர் கிடைத்தது. தாகம் தீர்த்த அந்த கிணற்றை அழகு செய்கிறேன் பேர்வழி என்று இப்போது மூடி விட்டார்கள். 


இப்போது மெரீனாவை பார்த்தால் குப்பை மலையாக காட்சி அளிக்கிறது. பானி பூரி, பேல் பூரி என்று நாற்றம் எடுத்த எண்ணெயில் வறுத்த தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு மக்கள் அதே இடத்தில் கை கழுவி காகித குப்பைகளையும் அங்கேயே போட்டு விட்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. மணலில் வண்ணமயமான கிளிஞ்சல்கள் முன்பு கிடைக்கும். இப்போது சர்வ சாதாரணமாக ஆணுறைகள் தட்டுப்படுகின்றன. கால்களை  மணலில் வைப்பதற்கே கூசுகின்றது. போகிற போக்கை பார்த்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்றே தோன்றுகிறது. நான் வளர்ந்த மெட்ராஸ் கண்டிப்பாக இதுவல்ல. நான் நேசித்த மெரீனா நிச்சயமாக இதுவல்ல. 

தொலைத்து விட்ட நல்ல‌ நினைவுகளுக்காக மனம் ஏங்குகிறது. எனது மெரீனா திரும்ப கிடைக்குமா?

Thursday, 5 December 2013

கண்ணன் அந்தாதி

அரிந்தோடும்        செல்வத்தை                ஓயாது              தினம்தேடித்
திரிந்திங்கே          தவிக்குமென்               மனமே!              - நடப்பது
அரியின்                  ஆட்டம்தான்              அறிவாயே        உனதுயிரும்
பிரியியுமுன்      அவன்பாதம்                   பற்று.

பற்றறுத்து           அரிப்பாதம்                   பற்றிடும்             நல்லடியார்க்கு
குற்றம்                  குறையேது                   மனமே!               - என்றும்
சற்றேயும்            தளராது                          நாராயணன்         நாமத்தை
ஒற்றிப்                  பணிந்து நீ                      செல்.

செல்வமும்          ஞானமும்                     கல்வியும்            ஓங்கிடவே
வல்வினையை  அழிப்பாயே                   மனமே!              - நாவின்
சொல்லாலே         பாடிடுவாய்                 கண்ணபிரான்    திருநாமம்
நல்வழியை          காட்டிடுவான்              அவன்.

அவன்நாமம்        நினைத்திட்டால்        நற்கதியும்          கிட்டிடுமே
சிவனும்                 அன்றுரைத்தானே    மனமே!              -  மனிதர்
தவம்செய்ய          வேண்டாமே             முக்தியையும்    தந்திடுவான்
எவனும்                  நினைத்திட்டால்     அவனடி.

அடிபணியும்         அடியார்க்கு                 தடையதனை        தகர்த்திடுவான்
முடிப்பீலி               மயிலிறகோன்         மனமே!                    -  பாதம்
பிடித்தோர்க்கு      பதமலரின்                அருளுண்டாம்       அடியோர்க்கு
மடிப்பிச்சை          தந்திடுவான்             முரளி.

முரளியவன்         பாதத்தை                     பற்றுடனே           பற்றிட்டால்
வரமாயிரம்           வழங்கிடுவான்          மனமே!                -அருளை
கரமதனால்           பொழிந்திடுவான்      கருத்துள்ளே     காத்திட்டு
சிரம்தாழ்ந்தால்   சென்றிடுமே                வினை.

வினையாவும்      வீழ்ந்திடுமே               வாமனனின்        நாமத்தை
நினைத்தாலே      நற்கதியாம்                 மனமே!                 - மாந்தர்
தனைத்தானே     அறிந்திட்டால்           சத்தியமாய்         கேட்டிடுமே
மனையாவும்       மங்கலத்தின்              ஒலி.

ஒலியாவும்           கேட்பதுவே               அவன்கருணை    மழையாலொப்
பிலியப்பன்           அருளால்தான்         மனமே!                   - ஞாலக்
கலிவினைகள்     களைந்திடுமே        திருமாலின்             திருக்கரச்சங்
கொலியதனை     கேட்டாலே               சுகமே.

சுகமிங்கு          நிலைத்திடவே    நாராயணன்     நாமத்தை
அகமகிழக்       கேட்டிடுவாய்       மனமே!             - கண்ணன்
புகழினையே   பைந்தமிழில்       பாடவந்தேன்  அந்தாதி
இகம்காக்க      இயம்பிடுவாய்     அரி.




Wednesday, 23 October 2013

தேடல்

மெட்ராஸில் லாயிட்ஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தான் நான் படித்தேன். கோபாலபுரத்தில எங்கள் வீடு இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு சென்னையின் வேறு ஒரு பகுதியில் சொந்த வீட்டுக்கு குடி புகுந்தோம். அதனால் தினமும் இரண்டு பஸ் மாறி பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கான பஸ் பாஸ் சற்றே விசித்திரமாக இருக்கும். பாஸின் இரு முனைகளிலும் மேலிருந்து கீழ் வரை 1 முதல் 31 வரை தேதி இருக்கும். தினமும் நடத்துனரிடம் இந்த பாஸை காண்பித்தால் ஒவ்வொறு முறை பயணம் செய்யும் போதும் பாஸில் அந்த குறிப்பிட்ட தேதியின் மேல் ஒரு ஓட்டை போட்டு விடுவார். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் அந்த பாஸில் செல்ல முடியாது.

நான் ஆழ்வார்பேட்டை வரை ஒரு பஸ்ஸில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் பிடித்து லாயிட்ஸ் சாலை வரை சென்று அங்கிருந்து கோபாலபுரம் வரை நடந்து செல்வேன். நடுவில் வரும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் சில நாட்கள் 30 நிமிடங்கள் வரை  காத்திருந்த அனுபவம் கூட உண்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த அனைவருமே பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நானும் எனது நண்பனும் மட்டும் அந்த பஸ் ஸ்டாப்பில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களாக இருந்தோம். தினமும் அதே நேரத்தில் இறங்கி அதே நேரத்தில் அடுத்த பஸ்ஸை பிடிப்பதால் பல முகங்கள் பரிச்சயமானவையாகவே இருந்தன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், யாருமே மற்றொருவரிடம் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள். ஏன், ஒரு புன்முறுவல் கூட இருக்காது. அவரவருக்கு ஆயிரம் கவலைகள். எனது அடுத்த பஸ் வந்த உடன் நானும் நண்பனும் ஏறி சென்று விடுவோம். இது தினமும் நடக்கும் விஷயம்.

இப்படி இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் அந்த பஸ் ஸ்டாப்புக்கு ஒரு பிச்சைக்காரன் வந்தான். கண்கள் இரண்டிலும் பார்வை இல்லை. கூட ஒரு நாய் மட்டும் அவனுக்கு துணையாக இருந்தது. கையில் தடியும், தோளில் ஒரு ஜோல்னா பையும் இருந்தன. பஸ் ஸ்டாப்பில் தரையில் அப்படியே உட்கார்ந்து பையிலிருந்து எதோ ஒரு விசித்திரமான கருவியை எடுத்தான். ஒரு கிழிந்த துண்டை விரித்து அதன் மேல் அந்த கருவியை வைத்தான். அது ஏதோ ஒரு வாத்தியம் போல கம்பிகளுடனும் பல பொத்தான்களுடனும் வித்யாசமாக இருந்தது. செய்தி தாள்களை படித்து கொண்டிருந்த சிலரும் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் இவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

அவனது பக்கத்திலேயே அந்த நாயும் ஏதோ சொல்லுக்கு கட்டுப்பட்டது போல உட்கார்ந்து விட்டது. பிச்சைக்காரன் இப்போது அந்த கருவியில் உள்ள கம்பிகளை ஒரு கையால் திருகிக்கொண்டே மற்ற கையால் பொத்தான்களை அமுத்த ஆரம்பித்தான். 'டொய்ங் டொய்ங்' என்று சத்தம் வந்தது. "இது என்ன கருவி" என்று பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். "புல்புல் தாரா" என்று சொன்னார். ஓஹோ, இப்படி கூட ஒரு வாத்தியம் இருக்கிறதா என்ன?

தொண்டையை கனைத்துக்கொண்டே பிச்சைக்காரன் கணீரென்று பாட ஆரம்பித்தான்.

'நீயல்லால் தெய்வம் இல்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை - முருகா....'

அது வரை அப்படி ஒரு கணீர் குரலை நான் கேட்டதே இல்லை. ஒரு கட்டத்தில் இவன் பிச்சைக்காரனா பின்னணி பாடகனா என்றே தெரியாத அளவுக்கு அவ்வளவு பிரமாதமாக பாடி முடித்தான். அவ்வளவுதான். அந்த துண்டில் சில்லரை மழை பொழிந்தது. அதற்குள் எனது பஸ் வந்து விட்டதால் நான் ஏறி சென்று விட்டேன். 

மறு நாள் ஆழ்வார்பேட்டையில் நான் பஸ்ஸில் வந்து இறங்கியபோது அதே பிச்சைக்காரன் அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்தான். இப்போது வேறு ஒரு பாட்டு. அந்த பஸ் ஸ்டாப்பில் ஒவ்வொருவரும் அவனுடைய குரலின் இனிமையில் திளைத்திருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. பஸ்ஸுக்காக காத்திருக்கும் அந்த பத்து நிமிடங்களுக்குள் அங்கு நிலவிய இருக்கமான சூழல் தளர்ந்து அனைவருமே அவனது பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். தினமும் ஒர ரம்மியமான பாடல். தூய தமிழில் பிசிறே இல்லாத குரல். ஆஹா, இதை கேட்பதற்கு உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும் . இவ்வளவு அற்புதமான குரலை இவனுக்கு கொடுத்த கடவுள் கண் பார்வையை ஏன் எடுத்து கொண்டாரோ! 

நாட்கள் செல்ல செல்ல இவனது பாடல்கள் மிகவும் பிரபலமாகிவட்டன. அந்த 10-15 நிமிடங்களில் அந்த பஸ் ஸ்டாப்பில் இருந்த அனைவரும் முன் போல விரைப்பாக இல்லாமல் சற்றே சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். சிலர் அவனிடம் சென்று 'இந்த பாட்டை பாடு', 'அந்த பாட்டை பாடு' என்று நேயர் விருப்பம் போல‌ சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவனும் பிரமாதமாக‌ அந்த பாடல்களை வாசித்து கொண்டே பாடியதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டது போல இருந்தார்கள். தினமும் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இவனை சுற்றி ஒரு கூட்டமே கூட ஆரம்பித்து விட்டது.

அவன் அந்த பஸ் ஸ்டாப்பில் எவ்வளவு நேரம் இருப்பான் என்று தெரியவில்லை. எனது பஸ் வந்ததும் நான் கிளம்பி விடுவேன். இது போலவே மற்றவர்களும் என்பது எனது யூகம். நாட்கள் பல நகர்ந்தன.

ஒரு நாள் வழக்கம் போல அவன் அடுத்த பாடலை "உள்ளம் உருகுதையா..." என்று பாட ஆரம்பித்தான். அனைவரும் உண்மையிலேயே அந்த பாடலில் சொக்கி விட்டோம்.  பாடலின் ஆரம்பத்தில் கணீரென்று இருந்த குரல் அடுத்தடுத்த வரிகளில் சற்றே பிசிறினாற்போல இருந்தது. திடீரென்று அவனது குரல் கம்மியது.  ஒரு கட்டத்தில் "பாவி என்று இகழாமல் முருகா ஓடி வருவாயப்பா" என்று பாடும்போது அதற்கு மேல் அவனால் பாட முடியவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை. ஒரு கணம் திடீரென்று மெளனம் காத்தான். பஸ் ஸ்டாப்பில் அனைவரும் ஸ்தம்பித்து விட்டனர். ஏன் திடீரென்று பாடுவதை நிறுத்தி விட்டான் என்றே தெரியவில்லை. அதற்குள் எனது பஸ் வந்து விட்டபடியால் நான் அதில் ஏறி விட்டேன்.

அடுத்த நாள் அந்த பஸ் ஸ்டாப்பில் அவனை காணோம். 'என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! உடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் திடீரென்று அன்று பாடுவதை நிறுத்தினான்? ஏன் இன்று வரவில்லை?' என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்தேன். பஸ் ஸ்டாப்பில் இருந்த மற்றவர்கள் அனைவரும் அவன் வழக்கமாக உட்காரும் இடத்தையே பார்த்து கொண்டிருந்தனர். அவன் அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. எங்கு சென்றான், ஏன் சென்றான் என்றும் தெரியவில்லை.

பஸ் ஸ்டாப்பில் மீண்டும் பழைய நாட்களை போல அனைவரும் மெளனம் காக்க ஆரம்பித்து விட்டனர். 

ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை. ஒரு தேடல். பள்ளி தேர்வு என்ன ஆகுமோ என்று மாணவனுக்கு தேடல். அலுவலகத்தில் பிரமோஷன் கிடைக்குமா என்று வேலை செய்பவனின் தேடல். படிப்பை முடித்த பையனுக்கு வேலை கிடைக்குமா, பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்குமா என்று தந்தையின் தேடல். யார் செருப்பாவது அறுந்து நம்மிடம் வருவார்களா என்று அந்த பஸ் ஸ்டாப்பிலேயே உட்கார்ந்திருக்கும் செருப்பு தைப்பவனின் தேடல். இப்படி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆயிரம் கவலைகள் ஆயிரம் தேடல்கள். சும்மாவா கண்ணதாசன் பாடினார் "ஒருவன் மனதில் ஒன்பதடா, அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா" என்று!

'ஒரு வேளை இவன் வேறு ஏதாவது பஸ் ஸ்டாப்புக்கு சென்று விட்டானோ? போலீஸ்காரர்கள் பிடித்து கொண்டு போய் விட்டார்களோ? அல்லது விழும் சில்லரையை பார்த்து கேடிகள் திருடிக்கொண்டு சென்று விட்டார்களோ? என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே' என்று எனது நண்பனிடம் கூறினேன். அவன் ஒரு நீண்ட‌ மெளனம் காத்து விட்டு என்னை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் "விடுடா, பிச்சைக்காரன் தானே",














Sunday, 6 October 2013

காப்பாய் தாயே !

ஆடியநர்த்       தனகளிருனை       ய‌கத்தினுள்       வைத்திட்டு
நாடிப்ப             ணிந்திங்கு               பாட்டிசைக்க      நான்வந்தேன்
கோடிட்டு        காட்டிடுவாய்         கணநாதா            என்நாவில்
பாடிடுவேன்  தீந்தமிழில்              தாயுமையின்        பாசுரமே! 

நாதனுடன்             நெஞ்செனதில்        நீயருளும்            நற்பொழுதில்
வேதத்தின்             தலைவனிட            மெம்மின்னல்    உரைத்திடுவாய்
பாதத்தை                பிடித்திட்டேன்       அம்பிகையே      காத்தருள்வாய்
பேதையெனக்      குனையன்றி           வேறேது               கதிதாயே!

கயல்விழியால்      கருணைமழை    பொழிந்திடுவாய்   அம்பிகையே
மயிலேறி                 வந்திடுமென்         மால்மருகன்          மலர்த்தாயே
ஜெயமாதுன‌           தருளாலே              வேண்டுவரம்         கிடைத்திடுமே
பயமேது                   பதமலரை                பணிந்தோர்க்கு      பூரணியே !    

நோய்நொடியின்       நாவெனைதீண்     டிடுகிறதே                 என்செய்வேன்
தாயுனையே               நாடிட்டேன்            தாங்கியெனை         யணைத்திடுவாய்
சேயெனைநீ               தள்ளிட்டால்          கதியெங்கே               சொல்தாயே?
நாயேனின்                 பிழைதன்னை        பொருத்தள்வாய்     பார்வதியே !

பரமனென                 தப்பனினி                 டமிருக்கும்                ஈஸ்வரிநீ
வரமதனை               பொழிவாயே           பாகீஸ்வரி                யுமையாளே
சிரம்தாழ்ந்து            பணிந்திட்டோம்    பரமேஸ்வரி           ஜெகன்மாதா
அரன்மனைவி       அம்பிகையே            அருள்தருவாய்      எனதம்மா

திக்கெட்டும்          உனதருளில்                 திகட்டாது              திளைத்திட்டோம் 
சக்திச்சர                வணன் தாயே               எனைக்காக்க       வந்தருள்வாய்
பக்தியுடன்           பேர்சொன்னோம்        உன்கோவில்        வாசலிலே
முக்தியையே      தந்தெமைநீ                   காத்திடுவாய்       மகமாயீ 

வேல்தந்த              ழகனுக்கோர்                ஜெயந்தந்த          ஜெகன்மாதா
கோலாட்ட            மீனாக்ஷி                        நானுமுன்             பாலகனே
நூல்தந்து                தமிழதனை                  யெனக்குள்ளே    அளிப்பாயே 
தோல்போர்த்த    பரமனின்பத்                 தினிதாயே            எமைகாப்பாய் !     

Wednesday, 2 October 2013

மீண்டும் இரயில் பயணங்களில்....

பல வருடங்களுக்கு முன்பு நடந்த  சம்பவம். கல்லூரியை முடித்த பின் பம்பாயில் முதன்  முதலில் வேலை கிடைத்தது. ஒரு நான்கு நாட்கள் வரிசையாக விமுறை கிடைத்தால் ஊருக்கு சென்று விடுவேன். 

பம்பாயில் இருந்து மெட்ராஸுக்கு இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மெய்லில் வந்தால் இரண்டு இரவுகள் பயணம் செய்ய  வேண்டும்.   களைப்பான பயணம், ஆனால் சரியான நேரத்துக்கு மெட்ராஸுக்கு வந்து சேர்ந்து விடும் என்பதால் பலர் இந்த இரயிலில் செல்வதையே  விரும்பினர். 
 
இது போன்ற நீண்ட பயணங்களில் சில எதிர்பாராதவிதமாக நண்பர்களாகி விடுவது உண்டு. இன்னும் சிலருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களும் அனுபவங்களும் நடந்து விடுகின்றன. எனக்கும் அது போன்ற ஒரு அனுபவம் தான் ஏற்பட்டது.நீண்ட பயணம் என்பதால் சிலர் சக பயணிகளுடன் அரட்டை அடித்து கொண்டும், சிலர் சீட்டு விளையாடி கொண்டும் நேரத்தை போக்கி கொண்டிருந்தனர். 

குல்பர்கா அருகே வண்டி வந்தபோது ஒரே குப்பையும் சத்தையுமாக இருந்தது. அப்போது ஒரு சிறுவன்-பத்து வயது கூட நிறைவடைந்திருக்காது-வண்டியில் ஏறினான். உடலில் சட்டை இல்லை. கிழிந்த அரை டிராயர் மட்டும் இருந்தது. நாங்கள் பயணம் செய்த கம்பார்ட்மெண்ட்டின் ஒரு மூலையில் இருந்து இரு கைகளால் குப்பைகளை அள்ளி ஒரு பெரிய செய்தி தாளில் போட்டுக்கொண்டே, ஒவ்வொறு இருக்கையின் அடியிலும் நகர்ந்து கொண்டே வந்தான். இருக்கையின் அடியில் இருந்த குப்பைகளை அள்ளிய பிறகு சிலர் சில்லரை காசுகளை போட்டார்கள். சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரி முகத்தை திருப்பி கொண்டார்கள். ஆனால் சிறுவனோ எதற்கும் கவலைப்படாமல் கையில் கிடைத்த காசுகளை தனது அரை டிராயருக்குள் இருந்த சுருக்கு பையில் போட்டுக்கொண்டே அடுத்த இருக்கைக்கு சென்றான்.  அவனை பார்க்கவே பாவமாக இருந்தது. இத்தனை வறுமையிலும் அவன் பிச்சை எடுக்காமல் உழைத்து அதற்கான கூலியை கேட்கிறானே, அவனது தன்மானத்தை என்னவென்று சொல்வது?

கடவுளின் செயல்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பால் மணம் மாறாத சிறுவர்களை படைத்து விட்டு அவர்களை வறுமையிலும் பசியிலும் ஏன் உழல விடுகிறான்? கோடிக்கணக்கில் ஊழல் செய்யும் பெருச்சாளிகள் எல்லாம் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது போன்றவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். என்னிடம் இருந்த பணத்தில் சிறிது அவனுக்கு கொடுத்தேன். ஆனால் அது அந்த வேளை உணவோடு சரியாகிவிடுமே. அவனது வாழ்க்கையே இப்படி இரயிலில் குப்பை கூட்டுவதோடு முடிந்து விடுமோ? இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண ஓட்டங்கள் நெடுநேரம் அலை பாய்ந்து கொண்டே இருந்தன. சில மணி நேரங்களுக்கு பிறகு இரயில் ஆதோனி என்ற ஊரில் நின்றது. சிறுவன் இறங்கி சென்று விட்டான்.

அலுவலகம் விடும் நேரம் என்று நினைக்கிறேன். திபுதிபுவென்று சிலர் எங்களது கம்பார்ட்மெண்ட்டில் ஏறினார்கள். அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விடுகிறேன் என்று ஒருவர் எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டார். இது போன்று முன்பதிவு செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட்களில் இப்படி நடப்பது சகஜம். டிக்கெட் பரிசோதகர் இவர்களை கண்டுகொள்வதே இல்லை. ஏனென்றால் இவர்கள் தினமும் இதே வண்டியில் வீட்டுக்கு திரும்பி செல்வார்கள். அதே போல காலையில் வேறு ஒரு வண்டியில் இப்படி ஏறி உட்கார்ந்து கொண்டு வருவார்கள். 

சரி, பரவாயில்லை ஒரு மணி நேரத்தில் இறங்கி விடுவார் என்று நானும் எனது இருக்கைக்கு அருகில் அவருக்கு உட்கார இடம் கொடுத்தேன். அது தான் நான் செய்த தவறாகி விட்டது. 

வண்டி நகர ஆரம்பித்த உடனேயே அவர் தனது பையிலிருந்து ஒரு பொட்டலத்தை திறந்தார். அதை பிரித்து அதில் இருந்த வறுத்த வேர்க்கடலைகளை ஒவ்வொன்றாக கொறிக்க ஆரம்பித்தார். அது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. வாயில் கடலைகளை போட்டுக்கொண்டே தோலிகளை இருக்கைக்கு அடியில் போட ஆரம்பித்தார். என் கூட வந்த சக பயணிகள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். எல்லோர் மனதிலும் சற்று முன்பு இருக்கையை தன் கைகளால் சுத்தம் செய்த சிறுவனின் முகம் வந்து போயிருப்பதை நான் கண்டேன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லோரும் முகம் சுளித்தார்களே தவிர‌ யாருமே அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு கையளவு நிறைய வேர்க்கடலை தோலியை இருக்கைக்கு அடியில் போட்டார். எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தை அடக்கி கொண்டே அவரிடம், "சார், தயவு செய்து இங்கே அசுத்தம் செய்யாதீர்கள். தோலியை உங்களிடம் உள்ள பொட்டலத்திலேயே கொட்டிவிட்டு சாப்பிட்டு முடித்த பின் ஜன்னல் வெளியே எறிந்து விடுங்கள்" என்றேன். அதற்கு அவர் என்னை ஒரு ஈன பிறவி மாதிரி பார்த்து தெலுங்கில் ஏளனமாக "அவன்னி நீக்கு எந்துகுரா வெதவா" என்றார். அதாவது, " உன் வேலையை பார்த்து கொண்டு போ" என்று பொருள் படும் விதத்தில் கேவலமாக பேசினார். 

எனக்கு கோபம் தலைக்கு மேல் ஏறி விட்டது. அவரை உடனடியாக எனது இருக்கையை விட்டு எழுந்திருக்க சொன்னேன். அவரோ எழுந்திருக்காமல் தெலுங்கில் என்னை திட்டி கொண்டே இருந்தார். மற்ற பயணிகள் வெறும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டே இருந்தனர். இந்த ஆளை இப்படியே விட கூடாது என்று எனது உள் மனது கூறியது. டிக்கெட் பரிசோதகரை காணோம். ஒரு வேகத்தில் இருக்கைக்கு அடியில் இருந்த தோலிகளை எனது கைகளால் அள்ளினேன். அப்படியே அந்த நபரின் தலையில் கொட்டி ஆங்கிலத்தில் "வெளியே போடா நாயே" என்று திட்டினேன். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த கணத்தில் நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைத்தாலும் தெரியவில்லை. ஏதோ மனதுக்கு தோன்றி விட்டது, அதனால் செய்து விட்டேன். இள இரத்தம் என்பார்களே, அது இது தானோ என்னவோ.

ஒரு நிமிடத்தில் அந்த ஆள் நிலை குலைந்து போய் விட்டான். என்னை அடிக்க வருவதற்கு கையை ஓங்கினான். அதற்குள் மற்ற இருக்கைகளில் இருந்த, காலையில் இருந்து என்னுடன் அரட்டை அடித்து நண்பர்களாகிவிட்ட சக பிரயாணிகள் இவனது காலரை பிடித்து கத்த ஆரம்பித்தனர். 

அவ்வளவுதான். தனக்கு எதிராக கூட்டம் சேர்வதை உணர்ந்து கொண்டவன் மரியாதையாக எழுந்து அவமானம் தாங்க முடியாமல் மற்றொருறு பெட்டிக்கு vestibule வழியாக சென்று விட்டான். 

இவன் சென்ற பிறகு சக பிரயாணிகள் அனைவரும் நான் ஏதோ பெரிய விஷயத்தை சாதித்து விட்ட மாதிரி சிலாகித்து ரொம்ப நேரம் பேசிக்கொன்டிருந்தார்கள். நான் அவர்களிடம் எனக்கு உதவியாக இருந்தமைக்கு நன்றி கூறினேன்.

நமது நாட்டில் படிக்காத பாமரர்களை விட இது போன்ற படித்து அகங்காரத்தோடு மூடர்களாக இருப்பவர்களால் தான் முன்னேறாமல் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு அப்படி செய்கிறோம் என்ற ஒரு சுரணையோ வெட்கமோ இல்லாமல் இருக்கிறார்களே, அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. இப்படி இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்கு என்ன முன் உதாரணம் வைக்க போகிறார்கள்? அப்பன் திருடனாக இருந்தால் அதை பார்த்து பையனுக்கும் திருட தோன்றும் அல்லவா?

இதை எல்லாம் முன் கூட்டியே அறிந்து தான் பாரதி அன்றே பாடி சென்று விட்டான் என்று நினைக்கிறேன்.

பாதகம் செய்பவரை கண்டால் நீ
பயம் கொள்ளல் ஆகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!

Friday, 6 September 2013

மெளனத்தின் மொழிகள்

சமீபத்தில் எனது உறவினர்  ஒரு அருமையான பொன்மொழியை அனுப்பியிருந்தார். அது என்னவென்றால், "உலகிலேயே மௌனம் தான் அதிக முறை தவறாக மொழி பெயர்கபட்டிருகிறது!". சற்றே சிந்தித்து பார்த்தால், உலகிலேயே மெளனம் தான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.

ஒன்றுமே பேசாமல் இருந்தால் அதற்கு பேர் தான் மெளனமா? அப்படி பார்த்தால் மெளனத்திற்கு மொழி இல்லையா? ஊமைகள் பேச முடியாது என்று யார் சொன்னார்கள்? சொல்ல போனால் பேச தெரிந்தும் கண்டதை பேசுபவர்களை விட பேசாமல் பேசும் ஊமைகள் எவ்வளவோ மேல்.

வார்த்தை வராவிட்டால் என்ன, பொருள் புரியாதா என்ன? மெளனத்தின் பெருமையை நமது முன்னோர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் தொடர்ச்சியாக மெளன விரதத்தில் இருப்பார். குரு பகவானே மெளனமாக இருந்து அருள் பாலிப்பவர் என்று புராணம் கூறுகிறது. குரு பகவானை சுற்றி ராஜ ரிஷிகள் சூழ்ந்து இருப்பார்களாம். சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்க வல்ல இந்த ரிஷிகள் தங்களது சந்தேகங்களை குரு பகவானிடம் கேட்க அவர் மெளனமாகவே அதற்கான விடைகளை கூறி ஞான உபதேசம் செய்வாராம். அதனால் அவருடைய பெயரே மெளனகுரு என்று கூறுவார்கள்.

மெளனம் காக்க வேண்டிய நேரத்தில் பேசுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் மெளனமாக இருப்பதாலும் தான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. திரெளபதியை துகிலுறிக்கும் போது "ஞானி" என்று அழைக்கப்படும் பீஷ்மர் நடக்கும் அநியாயத்தி தட்டி கேட்காமல் மெளனம் காத்ததால் தான் மஹாபாரத போர் அறிவிக்கப்பட்டது. அதே போல‌ மெளனமாக இருக்க வேண்டிய போது பேசி காரியத்தை கெடுத்தவர்கள் சரித்திரத்தில் ஏராளம்.

இராமன் சீதையை முதன்முதலில் பார்த்த போது ஒருவருக்கு ஒருவர்  "ஐ லவ் யூ" என்று சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் வாய் திறந்து இருவரும் எதையுமே கூற‌வில்லை. அண்ணலும் அவளும் நோக்க அந்த தருணத்தில் கண்கள் மட்டும் பேசின. நாணம் பேசும்போது பேசும் சொல்லுக்கு என்ன பயன்?

வேலைக்கு காத்திருப்பவனை கேளுங்கள். யாராவது நமக்கு வேலை தரமாட்டார்களா, யாராவது மெளனத்தை உடைத்து நல்ல சேதியை கூற மாட்டார்களா என்று ஏங்கும் ரணம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும் . பெண் பார்த்து விட்டு எதையுமே கூறாமல் மெளனாக இருக்கும் பிள்ளை வீட்டார்களை என்னவென்று சொல்வது? அந்த வலி பெண்ணை பெற்றவனுக்கு தான் தெரியும்.


நமது நாட்டில் பெண்கள் பல சிரமங்களை மெளனமாகவே எதிர்கொள்கின்றனர். அவர்கள் மெளனம் காப்பதனால் தான் பல குடும்பங்கள் சிதறாமல் இருக்கின்றன என்பதே உண்மை. வாய் திறந்து கூறி விட்டால் ஒரு சொல்லுக்கு மதிப்பே கிடையாது. பேசாமல் பேச வல்ல ஒரு பொருள் உலகத்தில் உள்ளது என்றால் அது மெளனம் மட்டுமே.

சொல்லாமல் சொல்லும் சொல்லுக்கே என்றும் மதிப்பு. மெளனம் பேச ஆரம்பித்து விட்டால் அதை எதிர்கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்று அதனால் தான் கூறுகிறார்கள்.

இன்று நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை சாதாரண மக்கள் எதிர்க்க முடியாமல் மெளனம் காக்கின்றனர். அதனால் தான் அக்கிரமக்கார அரசியல்வாதிகளுக்கு துளிர் விட்டு போய் விட்டது. 1975 முதல் 1977 வரை இந்தியாவின் இருண்ட காலம் என்றே கூறலாம். இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்து நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டிருந்த நேரம். பேச்சு உரிமை கூட இல்லாத அந்த கால கட்டத்தில் மக்கள் பொறுமையாக மெளனம் காத்திருந்தனர். பல கொடுமைகளை மக்கள் சந்தித்தனர். தேர்தல் வந்த போது கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது சக்தியை சாதாரண மக்கள் நிரூபித்து விட்டனர்.

மெளனம் ஒரு மிக பெரிய ஆயுதம். ஒருவன் வாய் திறந்து கூறிவிட்டால் அவனது மனதின் எண்ண ஓட்டங்கள் என்னவென்பதை யூகிக்க முடியும். அதனால் தான் ஒற்றர் படையினருக்கு அந்த நாட்களில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்: Keep your eyes and ears open, and mouth shut !

நாட்டின் பிரதமர் மெளனத்தை கலைத்து ஏதாவது ஒரு வார்த்தையை கூறிவிட்டால்  பொருளாதார சந்தையில் அதன் எதிரொலி கேட்கிறது. கெட்ட செய்தியை கூறுவதற்கு பதில் மெளனமாகவே இருக்க பலர் விரும்புகின்றனர். இது ஒரு தவறான அணுகுமுறை என்றே நான் நினைகிறேன். மெளனம் காக்காமல் சொல்ல வந்ததை நேரிடையாக கூறிவிட்டால் பிற்காலத்தில் வலி தெரியாமல் இருக்கும்.

மெளனத்தை உண்மையாகவே புரிந்து கொள்பவன் யோகி. வெளியே வராத வரை வார்த்தையும் உள்ளே போகாத வரை விஷமும் யாருக்கும் தெரியாதவையே. சொல்லாத சொல்லின் சிறப்பை மெளனம் கலைத்து கூறிவிட்டேன். நீங்களும் படித்து விட்டு வழக்கம் போல மெளனம் காக்காமல் பின்னூட்டத்தில் ஏதாவது எழுதிவிட்டு போங்களேன்!



Monday, 19 August 2013

கூழுக்கும் ஆசை

ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை  நமக்கு அதன் மதிப்பு  தெரியாது என்பது எவ்வளவு உண்மை!

வேறு ஒன்றுமில்லை. கருகருவென்று வீரப்பன் அளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு ஓரளவுக்கு பெரிய  மீசை இருந்தது. அதில் தொங்கு மீசை வேறு விசேஷம். ஒரு மனிதன் எதை  வேண்டுமானாலும் விட்டு கொடுத்து  விடலாம். ஆனால் மீசையை விட்டு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய தியாகம்! நான் போற்றி பாதுகாத்து வந்த பொக்கிஷத்தின் மேல் எந்த சிருக்கனுடைய (சிருக்கிக்கு ஆண் பால் என்ன?) கண் பட்டதோ தெரியவில்லை. கண் பட்ட இடத்தில் புண் பட்டது போல, ரோஜா பூந்தோட்டத்தின்  நடுவில் முளைத்த கள்ளிச்செடி போல திடீரென்று ஒரு வெள்ளை முடி முளைத்து விட்டது.

Who is the white sheep என்று அலறி அடித்து கொண்டு கத்திரியால் லாவகமாக வெட்டினேன். சோதனை மேல் சோதனையாக சில வாரங்களில் மீண்டும் அந்த காளான் முளைத்து. அதுவும் அதே இடத்தில். பட்ட இடத்திலேயே பட்டால் ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவது? மீண்டும் எடு கத்திரியை. இப்படியே கத்திரிக்கும் மீசைக்கும் நடந்த போட்டா போட்டியில்  ஒரு கட்டத்தில் ஒற்றுமை ஓங்குக என்று ஒன்றுக்கு பதில் இரண்டு மூன்று என்று வெள்ளி திரிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

போகிற போக்கை பார்த்தால் உதட்டுக்கு மேல் ஒரு வெள்ளை புரட்சியே ஏற்பட்டு விடும் போல இருந்தது. ஒரு நாள் தெரியாத்தனமாக சவரம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன்.  எதேச்சையாக கண்ணாடியில் முகத்தை பார்த்தால் தாடியிலும் லேசாக புற்றீசல் போல வெள்ளை ஒற்றர்கள் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். Disaster Management என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீக்கிரமாக ஏதாவது  செய்தே ஆக  வேண்டும். பேரிடர் என்பது மனிதனுக்கு மீண்டும் மீண்டும் வந்தால் என்னதான் செய்வது? இப்படி நொந்து நூடுல்ஸாகி இருந்த போது தான் 'பொறுத்தது போதும் போர் வாளை எடு' என்று எனது மகள் எந்த ஆண் சிங்கத்திடமும் கேட்க கூடாத அந்த வசனத்தை கூறி விட்டாள்.

நான் இத்தனை ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து வளர்த்த, என் உயிரினும் மேலான, ரத்தத்தின் ரத்தமான, உடன்பிறப்பான, எனது ஆசை மீசையை எடுத்து விடுமாறு கூறினாள். உள்ளம் பதை பதைத்தது. மீசை துடி துடித்தது. "என்ன சொன்னாய்?" என்று சிவாஜி கணேசன் மாதிரி கர்ஜிக்க முற்பட்ட போது மகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டு தங்கமணி "இப்படி தாண்டி என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் தொங்கு மீசையோட போட்டோவை அனுப்பினார். நான் அப்பவே reject செய்திருக்கணும்" என்று சந்தடி சாக்கில் சிந்து பாடினாள்.

"அப்பா, ப்ளீஸ் அப்பா" என்று எனது மகள் கெஞ்சிய பொழுது அதன் பின் விளைவுகள் எனக்கு தெரியவில்லை. முன் விளைவுகள் தான் தெரிந்து விட்டதே! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை Dye. வேறு வழியே இல்லை. விழித்தாலும் மழித்தாலும் என்னுடைய முகம் என்னுடையது தான். அதனால் அந்த சுபயோக சுபதினத்தில் - சொல்லவே மனம் துடிக்கிறது -  எனதருமை மீசையை எடுத்து விட்டேன்.

பிரளயம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல் பிடுங்கிய பாம்பு, கொடுக்கை பிடுங்கிய தேள், வாலறுந்த நரி (ச்சீ வேறு உவமையே கிடைக்கவில்லையா) அது போல தான் மீசை இல்லாத ஆண் என்பதை அதை எடுத்த அடுத்த கணம் உணர்ந்தேன். என்னை பார்த்த என் பெண்ணின் முதல் reaction - தாங்க முடியாமல் சிரித்து விட்டாள். அவள் சிரிக்க சிரிக்க எனக்கு கோபமும் அழுகையும் பொத்திக்கொண்டு வந்தது. இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வெளியே கடைக்கு சென்றால் பின்னால் நாய் துரத்துவது போல ஒரு பிரமை. அலுவலகத்துக்கு சென்றால் அனைவரும் முதலில் ஒரு மாதிரி என் முகத்தை பார்த்தார்கள். எனக்கு பின்னால் அவர்கள் சிரித்தது என் காதுகளில் துல்லியமாக கேட்டது. நான் என்னதான் செய்வது? வடிவேலு மாதிரி 'இருக்கிறவன் வெச்சுக்கிறான், இல்லாதவன் வரஞ்சுக்கிறான்' என்று பென்சிலால் மீசையை வரைந்து கொள்ளவா முடியும்? இல்லை டோப்பாவா வைத்து கொள்ள முடியும்? நெருங்கிய நண்பர்கள் "பார்க்க சகிக்கலைடா" என்று கலாய்த்தார்கள். சிலர் "மோசமா இருந்த மூஞ்சி இப்ப படு மோசமா இருக்குடா" என்றார்கள்.

வீட்டுக்கு வந்து டி.வியை போட்டால் என்னை வெறுப்பேற்றவே போட்ட மாதிரி வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தூர்தர்ஷனில் ஓடிக்கொண்டிருந்தது. மீசை துடிதுடிக்க சிவாஜி வசனம் பேசிக்கொண்டிருந்தார். செய்திகள் பார்க்கலாம் என்று சேனலை மாற்றினால் இலங்கை ஜனாதிபதி ஏதோ பேசி கொண்டிருந்தார். அட, இந்த சிங்களவர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லையா? ஒபாமாவுக்கும் தான் மீசை இல்லை. பரவாயில்லை. எல்லா ப்ரொபஸர்களும் தாடி வைத்து கொள்வார்கள் இல்லையா, அது போல உலகில் பெரிய மனிதர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

 நாட்கள் செல்ல செல்ல எல்லோருக்கும் எனது புதிய முகம் பழகிவிட்டது. இப்போதெல்லாம் முகத்தை சவரம் செய்யாமல் இருந்தால் தான் நோயாளி மாதிரி இருக்கிறது. ஆகையால் நண்பர்களே, மீசை மேல் ஆசை வைக்காமல் ஓசைப்படாமல் மழித்துவிடுங்கள். உயிரா போச்சு....?